Tuesday, March 22, 2005

பாடம் - 13

மரித்த ஒரு நல்ல மனிதரின் அடக்கத்தலத்தில் அல்லாஹ்வை வணங்குவது தடையாகும். அச்செயல் மரித்தவனை வணங்கும் செயலாகும்.

உம் சலாமா (ரலி) ஒருமுறை அபிசீனியாவில் கிறிஸ்தவக்கோவிலில் சிலைகளும், சித்திரங்களும் நிறைந்து இருப்பதைத்தான் கண்டதாக நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) 'அவர்களில் ஒரு நல்ல மனிதர் அல்லது இறைபக்தர் இறந்தால் அவரை அடக்கிய ஸ்தலத்தின் (கப்ரின்) மீது வணக்கத்தலமொன்றை கட்டி, அதில் சிலைகளையும், சித்திரங்களையும் வைப்பார்கள். அல்லாஹ்வின் சன்னிதானத்தில் எல்லாப் படைப்பினங்களையும் விட அவர்கள் மிகவும் கீழ்த்தரமானவர்கள்.அவர்கள் இரண்டு தீமைகளை செய்கிறார்கள். ஒன்று பிணக்குழியில் வணங்குவது, மற்றது சிலைகளும், சிற்பங்களும் வடிப்பதுமாகும்.' என பதிலளித்ததாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மரணம் நெருங்கிய போது ஒரு (போர்த்தும்) புடவையை தன் முகத்தில் போட்டுக் கொள்வார்கள். சில சமயங்களில் வேதனையின் காரணமாக அதனை நீக்குவார்கள். அப்படியான வேதனையில் இருக்கையில் ஒருமுறை 'தங்கள் நபிகளுடைய பிணக்குழிகளை வணக்கத்தலமாக எடுத்துக் கொண்ட கிறிஸ்தவர்கள் மீதும் யூதர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்' எனக்கூறி அத்தகைய செயல்களை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்தார்கள்.முஹம்மத் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை சிலர் வணக்கத்தலமாக மாற்றுவார்கள் என்ற பயம் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலமும் ஏனைய சஹாபாக்களுடைய (ரலி) அடக்கத்தலத்தைப் போன்று திறந்த நிலையில் இருந்திருக்கும்.

'உங்களில் எவரையும் ஹஃலீலாக (நெருங்கிய நண்பனாக) எடுத்துக் கொள்வதில் நின்றும் நான் அல்லாஹ்விடம் தெளிவாக மீள்கின்றேன். நிச்சயமாக இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் ஹஃலீலாக எடுத்துக் கொண்டது போல் என்னையும் தன் ஹஃலீலாக எடுத்துக்கொண்டான். நானும் அபுபக்கர் (ரலி)வை ஹஃலீலாக எடுத்திருக்கலாம். உங்களுக்கு முன்சென்ற சமூகத்தைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் தம் நபிமார்கள் அடக்கப்பட்ட ஸ்தானங்களை வணக்கஸ்தலங்களாக அமைத்துக் கொண்டார்கள். அத்தகைய செயலிலிருந்தும் உங்களை தடுக்கிறேன்.' என தன் மரணத்திற்கு ஐந்து தினங்களுக்கு முன் நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டதாக ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்வின் கடைசி நேரத்திலும் இத்தகைய செயலை தடுத்தார்கள். அடக்க ஸ்தானங்களை (பிணக்குழிகளை) வணக்கத் ஸ்தலமாக அமைத்துக் கொள்ளும் செயலில் ஈடுபடும் அனைவரையும் அதன் பின் சபித்தார்கள். அடக்க ஸ்தலங்களில் மஸ்ஜித் இருப்பினும் இல்லாவிடினும் அதன் அருகில் வணக்கம் புரிவது மேற்குறிப்பிட்ட ஒரு செயலாகும். தன் அடக்கஸ்தலம் ஒரு மஸ்ஜிதாக மாற்றப்படும் என நபி (ஸல்) பயந்தார்கள் என்ற கூற்றின் பொருள் இதுவாகும். நபி (ஸல்) அவர்களுடைய அடக்கஸ்தலத்தின் அருகில் எந்த ஒரு கட்டிடத்தையும் சஹாபாக்கள் அமைக்கவில்லை. ஒரு இடத்தில் வணக்கம் புரிந்தால் அல்லது வணக்கம் புரிய நாடினால் அந்த இடம் மஸ்ஜிதாக கருதப்பட்டதாக பொருள்படும். 'முழு உலகமும் எனக்கு மஸ்ஜிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.' என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றை கவனிக்கவும்.

'எந்த மக்கள் உயிருடன் இருக்கையிலேயே அவர்கள் மத்தியில் மறுமை நாளின் அடையாளம் இறங்குகிறதோ அவர்களும், பிணக்குழிகளை வணக்க ஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டவர்களும் மிகக் கேடு கெட்டவர்கள்.' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) மர்பு ஹதீஸ் ஒன்றை அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அஹ்மத். அபு ஹாதிம் ஸஹீஹான ஹதீஸில் இதே கருத்தை அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அஹ்மத்.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

* ஒரு நல்ல மனிதரின் அடக்க ஸ்தலத்தின் அருகில் உன்னத நோக்கத்துடன் மஸ்ஜித் கட்டும் மக்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்த எச்சரிக்கை.

* சிலைகள், சிற்பங்கள் செதுக்கும் செயலுக்குத் தெரிவித்த தடையும், அவற்றின் விளைவுகளும்.

* இந்த விஷயம் பற்றி நபி (ஸல்) அவர்கள் ஆணித்தரமாக தெரிவித்த முறை. ஆரம்பத்தில் அன்போடு மக்களுக்கு இவற்றின் விளைவுகளை விளக்கினார்கள். தன் மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன், முதலில் விளக்கியவற்றை மறுபடியும் திருப்பிச் சொன்னார்கள். தன் கடைசி மூச்சு நெருங்கும் போது முன் சொன்னவை போதாது என உணர்ந்து, மரண வேதனையின் மத்தியிலும் இவ்விஷயம் பற்றி ஆணித்தரமாக உறைத்தார்கள்.

* தன் அடக்கஸ்தலம் மஸ்ஜிதாக மாற்றப்படுவதை மரணத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் கடுமையாக தடுத்தார்கள்.

* தங்கள் நபிமார்களின் அடக்க ஸ்தலங்களை வணக்கத்தலமாக மாற்றியமைத்துக் கொள்வது கிறிஸ்தவர்களதும், யூதர்களதும் வழக்கமாகும்.

* இத்தகைய வணக்கங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் சபித்தார்கள்.

* இதன் மூலம் தன்னுடைய அடக்க ஸ்தலத்தைப் பற்றியும் நபி (ஸல்) எங்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள்.

* இக்காரணத்தால் நபி (ஸல்) அவர்களின் அடக்க ஸ்தலம் உயர்த்திக் கட்டப்படவில்லை.

* அடக்க ஸ்தலங்களை மஸ்ஜிதுகளாக அமைப்பதன் விளக்கம்.

* அடக்க ஸ்தலங்களை வணக்கத்தலமாக அமைக்கும் மக்களையும், உயிருடன் இருக்கையிலேயே மறுமை நாளின் அடையாளம் தம் மத்தியில் இறங்கும் மக்களையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள். இதன் மூலம் ஷிர்க்கான காரியம் நடைபெறுவதற்கு முன்பே அதற்கு இட்டுச் செல்லும் வழிகளையும், அவற்றின் பயங்கர விளைவுகளையும் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

* இஸ்லாத்தில் பித்ஆக்களை தீவிரமாகத் திணிக்கும் ராபிதா மற்றும் ஜஹ்மியா என்ற இரு கூட்டத்தாரும் நபி (சல்) அவர்களின் கூற்றின் காரணமாக நிராகரிக்கப்பட்டு விட்டார்கள். இவ்விரு கூட்டங்களும் ஏற்கனவே இஸ்லாத்திலிருந்து நீங்கி விட்டார்கள் என்று கூறி இஸ்லாத்தில் வழிகெட்ட 72 கூட்டங்களில் இவ்விரு கூட்டங்களையும் மார்க்க அறிஞர்கள் சேர்க்கவில்லை. இஸ்லாத்தில் ஷிர்க்கான காரியங்கள் புகுத்தப்படவும், அடக்க ஸ்தலங்களில் வணக்கம் புரியவும் ராபிதா என்ற கூட்டமே காரணம். பிணக்குழியின் மீது முதலில் மஸ்ஜித் எழுப்பியது இக்கூட்டமே.

* அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூட சகராத் என்னும் மரண வேதனைக்கு ஆளானார்கள்.

* முஹம்மத் (ஸல்) அவர்களை ஹஃலீலாக அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவருக்கு கொடுத்த உன்னத அந்தஸ்து, நெருங்கிய சினேகம் அன்பைவிட உயர்ந்தது எனக்காட்டுகிறது.

* அபு பக்கர் அஸ் ஸித்தீக் (ரலி) நபி (ஸல்) அவர்களுக்கு ஸஹாபாக்களில் மிக நெருங்கியவர் எனக்காட்டுகிறது.

* நபி (ஸல்) அவர்கள் தனக்குப்பின் அடுத்தகலீபா அபு பக்கர் (ரலி) என சுட்டிக் காட்டிய முறை.

"ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்" என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்னும் வரும்.

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }