அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களும் இருக்கின்றனர் எனக்கூறி இறைவனுக்கு இணை கற்பித்த முஷ்ரிக்குகள் தாம் கற்பித்த துணை கடவுள்களைப் பற்றி அவையும் சிருஷ்டிக்கப்பட்ட படைப்பு வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான் என்பதை ஏற்றிருந்தனர். இருந்தும் அவற்றிற்குக் கீழ்படிந்து வணக்க வழிபாடுகள் செலுத்துவதினால் அவை தமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்து அவனுடன் நெருங்கிய தொடர்பை பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கையில் அத்தகைய கடவுள்களைத் தமக்குப் பரிந்து பேசும் தலைவர்களாக மதித்திருந்தார்கள். இதை அல்லாஹ் கீழ்வரும் இறை வசனங்களில் விளக்குகின்றான்:
"முஷ்ரிக்குகள் தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்யமுடியாதவற்றை வணங்குவதுடன் இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை என்றும் கூறுகின்றனர். ஆகவே நபியே வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அவனோ யாவையும் நன்கறிந்தவன்) அவன் மிகத் தூய்மையானவன். அவர்கள் இணை வைப்பவற்றை விட எல்லாம் மிக்க உயர்ந்தவன் என்று கூறும்". (10:18).
"அல்லாஹ்வினால் இவ்வேதம் அருளப்பட்டது. அவன் யாவரையும் மிகைத்தோனும், எல்லாவற்றையும் அறியும் ஞானமுடையோனுமாய் இருக்கிறான். நபியே திட்டமாக முழுக்க முழுக்க உண்மையான இவ்வேதத்தை நாமே உமக்கு இறக்கியிருக்கிறோம். ஆகவே நீர் முற்றிலும் பரிசுத்த மனதுடன் அல்லாஹ்வை வணங்கி வாரும். வழிபாடு அவனுக்கே உரியது. தூய வழிபாட்டுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே! என்பதை விளக்குவீராக. யார் அல்லாஹ் அல்லாதவற்றை தம்மைக் காக்கும் தெய்வங்களாகவும், தம்மைப் பராமரிப்பவர்களாகவும் ஏற்படுத்தியிருக்கிறார்களோ அவர்கள் அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுடன் மிக்க சமீபத்திலாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி இவற்றை நாங்கள் வணங்கவில்லை என கூறுகின்றனர். இவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி திட்டமாக அல்லாஹ் மறுமையில் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவான். உண்மையை மறுத்துப் பொய் கூறுபவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவதில்லை". (39:1-3)
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிய பிறகு முழங்கப்படும் தூய்மை மிக்க சொற்களான தல்பியாவிலும் கீழ்வருமாறு கூறினார்கள்: 'இறைவா! உன் அழைப்புக்கு நாம் விடை தருகிறோம். உனக்குப் பங்காளியில்லை. ஆனால் நீ உடைமையாக்கிக் கொண்ட பங்காளிகள் மட்டும் இருக்கிறார்கள். இப்பங்காளிகளின் உடைமைகளையும் நீயே உடைமையாக்கியிருக்கிறாய்.
மேலும் இதைப்பற்றிக் கூறுகையில் அல்லாஹ் கீழ்வரும் வசனங்களில் "மனிதர்களே! உங்களில் நின்றுமே அல்லாஹ் ஓர் உதாரணத்தை உங்களுக்காகக் கூறுகிறான்: நாம் உங்களுக்களித்த செல்வங்களில் நீங்கள் உடைமையாக்கிக் கொண்ட அடிமைகளுமிருக்கிறார்களே, அவர்களில் எவரையாவது உங்களுடன் பங்காளிகளாக்கிக் கொண்டு நீங்களும், அவர்களும் சமம் என கூறிப் பாராட்டுவீர்களா? உங்களை நீங்கள் பொருட்படுத்துவதைப்போல் அவரகளை நீங்கள் பொருட்படுத்துவீர்களா? (நிச்சயமாகப் பொருட்படுத்த மாட்டீர்கள்) அவ்வாறிருக்க என்னுடைய சிருஷ்டிகளை நீங்கள் எனக்கு இணையாகவோ, பங்காளியாகவோ ஆக்கலாமா? அறிவாளிகளுக்கு நம் வசனங்களை இவ்வாறு விவரித்துக் கூறினோம். எனினும் அக்கிரமக்காரர்கள் அறிவின்றியே தங்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றி நடக்கின்றனர். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விட்டானோ, அவர்களை நேரான வழியில் திருப்பக் கூடியவர் யார்? இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை.
நபியே! நீர் உம் முகத்தை இஸ்லாத்தின்பாலே முற்றிலும் திருப்பி, அந்த இஸ்லாத்தை நிலைபெற செய்வீராக! அல்லாஹ் மனிதர்களை சிருஷ்டித்த வழியே அவனுடைய இயற்கை வழியாகும். இதுவே சரியான நிலையான வழியுமாகும். இருப்பினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்ள மாட்டார்கள்.
(மூமின்களே!) நீங்கள் யாவரும் அவன்பால் திரும்பச் செல்கிறவர்களாகவே இருக்கிறீர்கள். ஆகவே அந்த அல்லாஹ்வைப் பயந்து தொழுகையையும் கடைப்பிடித்தொழுகுங்கள். இணைவைத்து வணங்குகிறவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
அவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினையை உண்டுபண்ணி பல வகுப்பார்களாகச் சிதறி விட்டனர். அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதைக் கொண்டு சந்தோசப்படுகின்றனர்". (30:28-32).
இந்த இறைவசனங்கள் மூலமாக இறைவன் கீழ்க்காணும் உண்மைகளை விவரிக்கின்றான்:
ஒன்று: எவரும் தன் ஆதிக்கத்திலிருக்கிற அடிமைகளை தம்முடைய பங்காளியாகவோ, கூட்டாளியாகவோ எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இரண்டு: தோழர்களுக்கு மத்தியில் நடக்கின்ற விவரங்களைப் போன்று ஏதும் அடிமை எஜமான்களுக்கு மத்தியில் நடக்காது. மூன்று: மனிதர்கள் எவருமே தன் ஆதிக்கத்திலிருக்கின்ற ஓர் அடிமை தமது ஆட்சிப் பொறுப்பில் தலையிடுவதை எக்காரணத்தாலும் ஏற்க மாட்டார். இப்படியிருக்க அல்லாஹ் தன் அடிமைகளை தன் ஆட்சியின் பங்காளியாக எடுத்துக் கொள்வான் என்று யாரால்தான் கூற முடியும்? இவையெல்லாம் மூடத்தனமாகும்.
மேலும் சில இடங்களில் இவர்கள் அல்லாஹ்வைப் பற்றி பொருத்தமில்லாதவற்றைக் கூறினார்கள். அல்லாஹ்வுக்குப் பெண்மக்கள் இருக்கின்றனர் என சொன்னார்கள். இப்படிச் சொல்வோர்களே ஒருபோதும் தமக்குப் பெண்குழந்தை பெறுவதை விரும்புவதேயில்லை. இவ்வாறு முட்டாள்தனமாக அவர்கள் கூறியது பற்றி அல்லாஹ் கீழ்வரும் ஆயத்துகளில் விளக்கிக் காட்டுகிறான்:
"தாங்கள் விரும்பாத பெண்மக்களை அல்லாஹ்வுக்குக் கற்பிக்கும் இவர்கள் மறுமையில் நிச்சயமாகத் தங்களுக்கு நன்மைதான் கிடைக்குமென்று நாவால் பொய்யாகப் புகழ்ந்து கூறுகிறார்கள். நிச்சயமாக இவர்களுக்கு நரகம் தான் உண்டு என்பதிலும், நரகத்திற்கு முதலாவதாக இவர்கள்தாம் விரட்டப்படுவார்கள் என்பதிலும் சந்தேகமேயில்லை". (16:62)
"அவர்களில் ஒருவனுக்குப் பெண்குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் துக்கத்தால் கருத்து விடுகிறது. கோபத்தை விழுங்குகிறவனாகக் காட்சி தருகிறான். பெண்குழந்தை பிறந்தது என்று அவனுக்குக் கூறப்பட்ட இந்த (கெட்ட) செய்தியைப் பற்றி வெறுப்படைந்து இழிவுடன் அதை வைத்திருப்பதா அல்லது உயிருடன் அதை மண்ணில் புதைத்து விடுவதா? என்று கவலைப்பட்டு மக்கள் முன்வராது மறைந்து கொண்டே திரிவான். இவ்வாறு (தங்களுக்கு ஆண் குழந்தையும், இறைவனுக்குப் பெண் குழந்தையுமாக) அவர்கள் கூறும் தீர்மானம் மிகக் கெட்டதல்லவா? இத்தகைய கெட்ட உதாரணங்களெல்லாம் மறுமையைப் பற்றி விசுவாசமில்லாதவர்களுக்கே தகும். அல்லாஹ்வுக்கே மிக்க மேலான வர்ணணைகள் உண்டு. அவன் யாவரையும் மிகைத்தோனும் மிக்க ஞானமுடையோனுமாக இருக்கிறான்". (16:58-60).
இன்சா அல்லாஹ் தொடரும்...