இறைவனுக்கு இணையுண்டு என நினைக்கின்ற முஷ்ரிக்குகள் கூறுகின்றனர்: மலக்குகளும், நபிமார்களும் எங்களுக்காக சிபாரிசு செய்ய வேண்டுமென்றே நாம் அவர்களை வேண்டுகிறோம்.வேறு எதையும் நாங்கள் கேட்கவில்லை. நபிமார்கள்,மலக்குகள், நன்மக்கள் இவர்கள் சமாதியில் வந்து நாம் கேட்பதெல்லாம் சிபாரிசு ஒன்றைத்தான். உதாரணமாகக் கூறுவதாயின்: இரக்கமுள்ள நாச்சியார் மர்யம் அவர்களே! மேன்மைக்குரிய பீட்டர் அவர்களே! ஜுர்ஜீஸ் அவர்களே! நபி மூஸாவே! அல்லது இப்ராஹீமே! எங்களுக்காக உங்கள் இறைவனிடம் சிபாரிசை வேண்டுங்கள் எனக் கூறி நாங்கள் சம்பாஷணை நடத்தும் போது அல்லது இவர்களின் சமாதிகளில் சென்று நாங்கள் அவர்களோடு உரையாடும் போது அல்லது கண் மறைவாக வாழும் எங்கள் குருவுடன் நாங்கள் பேசும்போது இப்பெரியார்கள் தம் வாழ்வில் சாதித்த அறச் செயல்களைப் பற்றி நினைப்போம். அவர்களின் நன்னடத்தைகளைப் பற்றி சிறிதளவு எங்களுடைய சிந்தைகளில் புகுத்துவோம்.
இச்சிலைகள் முழு உருவத்துடன் செதுக்கப்பட்ட பிம்பங்களாகட்டும் அல்லது வெறும் உருவப் படங்களாகட்டும் எதுவானாலும் எங்களின் நினைவுகளனைத்தும் இச்சிலைகுரியவர் யாரோ அவருடன்தானிருக்கும். இச்சிலைகள் அருகில் சென்றால் அவற்றிற்குரிய மெய்யான (உண்மை) மனிதர் யாரோ அவரையே நாம் வேண்டுகிறோமே அன்றி வெறும் கற்களால் அமைக்கப்பட்ட பிம்பங்களையல்ல என இவ்வாறு முஷ்ரிக்குகள் கூறுகிறார்கள்.
சில பாடல்களையும், சங்கீதங்களையும் சாமிகளுக்கு முன்னால் இவர்கள் பாடுவதுண்டு. எனக்காகப் பரிந்து பேசுங்கள். பெரியாரே நான் உங்கள் அருகில் இருக்கிறேன். எனக்குக் கிருபை செய்யுங்கள். எனக்கு சிபாரிசு செய்யுங்கள். விரோதிகளுக்குப் பாதகமாக நமக்கு உதவுங்கள். நாங்கள் கடும் சிக்கல்களிலே மாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சிக்கல்களை அகற்றுவதற்காக அல்லாஹ்விடம் கேளுங்கள். எங்கள் கஷ்டத்தை நீக்கி நல்ல நிலையை அல்லாஹ்விடம் கேட்டு வாங்கித் தாருங்கள். என் பாவங்களை மன்னிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா? என்றெல்லாம் சிலைகளுக்கும், சமாதிகளுக்கும் முன்னால் சென்று இரங்குவது மட்டுமின்றி திருமறையின் கருத்தையும் இவர்கள் தம் மனோ இச்சைகளுக்கொப்ப மாற்றி விடுகிறார்கள். இறைவன் கூறுகிறான்: "அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு வழிப்படுவதற்காகவே அல்லாமல் மனிதர்களிடம் நாம் எந்தத் தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே இதற்கு மாறு செய்த அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்தில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி உம்மிடம் வந்து அவர்களுக்காக அல்லாஹ்வின் தூதராகிய நீரும் பாவமன்னிப்பைக் கோரியிருந்தால் அன்பாளனாகவும், மன்னிப்புடையோனாகவும் அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள்" (4:64) இந்த ஆயத்துக்கு முரண்பட்ட கருத்தைக் கொடுத்தார்கள்.
இன்சா அல்லாஹ் தொடரும்...