Tuesday, May 03, 2005

முஸ்லிம்களின் கப்றுகளை ஸியாரத் செய்வது எப்படி?

கப்று (சமாதி) தரிசனம் என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அமைப்பாகும். அனுமதிக்கப்படாத நூதன முறையில் அனுஷ்டிக்கப்படும் அமைப்பு மற்றொன்று. இப்படி ஸியாரத் இரு வகைப்படும். ஷரீஅத்தில் ஆகுமாக்கப்பட்ட ஸியாரத்திற்கு நமது இஸ்லாம் விளக்கம் தரும்போது 'எந்த ஸியாரத்தினால் ஸியாரத் செய்கிறவனின் எண்ணம் கப்றாளிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்' என்று அமைகிறதோ அதுவே ஷரீஅத்தில் அனுமதிக்கப்படுகிற ஸியாரத்தாகும். மனிதன் இறந்ததன் பின் (ஜனாஸா) தொழுகை நடத்துகிறோமென்றால் அத்தொழுகையின் உட்கருத்து ஜனாஸாவுக்காக பிரார்த்தனை புரிவதாகும்.

இதுபோல ஸியாரத்திலும் இறந்தவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல் என்பதாக மட்டுமே கருத வேண்டும். அன்றி முஸ்லிமல்லாத முனாஃபிக் இறந்த பின்பு அவனுக்காக ஒருபோதும் தொழுகை நடத்தப்பட மாட்டாது. அவனின் சவக்குழியில் கொஞ்ச நேரம்கூட நின்று விட்டுப் போவதையும் தடுக்கப்பட்டிருக்கிறது. முனாஃபிக்குகளுடைய பிரேதக்குழியில் சற்றுநேரம் பாவமன்னிப்புத்தேடி நிற்பது அவனுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்குச் சமமானது என்று கூறப்படுகிறது.

முனாஃபிக் (நயவஞ்சகர்)களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்: "அந்த முனாஃபிக்குகளில் எவர் இறந்து விட்டாலும் அவர்மீது ஒருபோதும் (ஜனாஸாத்) தொழுகை தொழாதீர்கள். அவருடைய கப்றில் (மன்னிப்புக் கோரி) நிற்காதீர்கள். ஏனென்றால் திட்டமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்து விட்டதுடன் பாவிகளாகவே இறந்துமிருக்கின்றனர்". (9:24)

அந்நயவஞ்சகர்களுக்காகத் தொழ வேண்டாமென்று நபியை அல்லாஹ் விலக்கியதுடன் அவர்களுக்குப் பாவமன்னிப்பு வேண்டி சவக்குழியில் கூட நிற்கலாகாது என எச்சரிக்கை விடுத்துள்ளான். இவர்கள் அல்லாஹ்வை நிராகரித்தவர்கள், அவனது தூதரை புறக்கணித்தவர்கள். அப்படியானால் இவர்களின் கப்றருகில் நின்று இவர்களுக்காக எப்படிப் பிரார்த்திக்க முடியும்.

முஸ்லிமுக்கு மட்டும் ஜனாஸா தொழப்பட வேண்டும். அத்தொழுகையால் இந்த ஜனாஸாவுக்குப் பிரார்த்தனைகள் வேண்டப்படுகின்றன. ஜனாஸாவின் கப்றருகில் நின்று இறைவனிடம் பிரார்த்திக்கலாம். இப்படி மூமினான மய்யித்துக்கு இவற்றைப் புரிவது நபிகள் காட்டித் தந்த ஸுன்னத்தான வழிமுறையாகும். இவற்றை எல்லா ஸஹாபாக்களும், இமாம்களும், அறிஞர் பெருமக்களும் அறிந்திருந்தார்கள். நபியவர்கள் முஸ்லிமின் ஜனாஸாவைத் தொழுது தம்சமூகத்தாருக்கு இவ்வழி முறையைக் காட்டித் தந்தார்கள். ஒருவர் இறந்து அவர் அடக்கம் செய்யப்பட்டபின் கப்றருகில் நின்று கொண்டு தோழர்களை நோக்கி நபியவர்கள் கீழ்வருமாறு கூறினார்கள்: 'மக்களே! இதோ இம்மனிதரிடம் இப்பொழுது கேள்விகள் கேட்கப்படுகின்றன. உறுதிப்பாட்டையும், தளராத நிலையையும், திடமான வார்த்தைகளையும் அல்லாஹ் அவருக்கு அருள்புரிய நீங்கள் பிரார்த்தியுங்கள்'. (அபூதாவூத்)

நபியவர்கள் மதினாவிலுள்ள (அடக்கஸ்தலமான) பகீயில் அடக்கப் பட்டிருப்பவர்களையும், உஹது யுத்தத்தின் போது போராடி இறைவன் பாதையில் தியாகம் செய்த ஷுஹதாக்களின் கப்றுகளையும் சென்று ஸியாரத் செய்ததுடன் கப்று ஸியாரத்தின் போது கீழ்வரும் வார்த்தைகளைச் சொல்ல வேண்டுமென்றும் கற்றுக் கொடுத்தார்கள்: 'கப்றிலிருக்கிற மூமின்-முஸ்லிம்களே, அல்லாஹ்வின் சாந்தியும், ஈடேற்றமும் என்றும் உங்களுக்கு உண்டாகட்டும். இன்சா அல்லாஹ் நாங்கள் உங்களுடன் வந்து சேருவோம். முற்காலத்தில் மரணமடைந்த, எதிர்காலத்தில் மரணமடையப் போகின்ற சகலருக்கும் அல்லாஹ் அருள்பாலிக்கட்டும். எங்களுக்கும், உங்களுக்கும் அல்லாஹ் சுகத்தையளிக்க பிரார்த்திக்கிறோம்' என்று கூறிவிட்டு 'இறைவா! இவர்கள் கூலிகளை நீ பாழாக்கி விடாதே! இவர்களுக்குப் பிறகு எங்களை நீ குழப்பத்தில் தள்ளி விடாதே!' என்றும் பிரார்த்தித்தார்கள்.

இப்படிச் சம்பவங்களை விளக்குகிற ஸஹீஹான ஹதீஸ்கள் நிறைய வந்திருக்கின்றன. அபூஹுரைரா (ரலி) மூலம் ஹதீஸ் தொகுப்பாளரான இமாம் முஸ்லிம் (ரஹ்) தமது ஹதீஸ் தொகுப்பில் இந்தக் கருத்திற்குரிய ஒரு ஹதீஸைப் பதிவு செய்திருக்கிறார்கள். இப்படி மூமின்களான சத்திய விசுவாசிகளின் சமாதிகளை ஸியாரத் செய்வதின் ஏக இலட்சியம் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தல் என்பதாகும்.

இன்சா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }