Monday, June 27, 2005

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (2)

அதிய்யத்துல் ஊபி (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் வருகிறது: தொழுகைக்கு புறப்படும் ஒரு மனிதனுக்கு நபியவர்கள் கீழ்வரும் பிரார்த்தனையை சொல்ல வேண்டுமென்று கற்றுக் கொடுத்தார்கள்.

'இறைவா! உன்னிடம் பிரார்த்திப்பவர்களுக்காக உன் மீதுள்ள பாத்யதையை (ஹக்கைப்) பொருட்டாக வைத்துக் கேட்கிறேன். இதோ நான் நடந்து செல்லும் பாதையின் பொருட்டால் கேட்கிறேன். நான் வீட்டிலிருந்து அகங்காரத்தை நாடி புறப்பட்டதில்லை. அமானிதத்திற்காகவோ, பெருமையையோ, முகஸ்துதியையோ எதிர்பார்த்து நான் புறப்படவில்லை. உன் கோபத்தை பயந்தவனாகவும், உன் திருப்பொருத்தத்தை நாடியுமே நான் கிளம்பியிருக்கிறேன்' (அஹ்மத்,இப்னு மாஜா)

இந்த ஹதீஸை இமாம் அஹ்மதும், மற்றும் இப்னு மாஜா போன்றவர்கள் அறிவித்தாலும் இதன் (இஸ்னதில்) அறிவிப்பாளர் பட்டியலில் பலவீனமான அறிவிப்பாளரான அதிய்யதுல் ஊபி இடம் பெறுவதினால், இந்த ஹதீஸைப் பற்றி முஹத்திஸீன்கள் பலவீனமானதென்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். ஸஹீஹான ஹதீஸ் என்று நாம் கருதினால் கூட இந்த ஹதீஸ் பொருத்தமான விளக்கத்தைத்தான் அளிக்கிறது. அதாவது கேட்பவர்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் மீதுள்ள கடமை (ஹக்கு) அவர்களின் கேள்விக்கு பதில் கொடுப்பது, அவர்கள் பிரார்த்தனைகளை அங்கீகரிப்பது மேலும் அவர்களின் வணக்கங்களுக்கு பிரதிபலன் நல்குவது. இப்படியாக பதில் கொடுத்தல், துஆக்கள் அங்கீகரித்தல், பிரதிபலன் நல்குதல் இவை அனைத்துமே அல்லாஹ்வின் ஹக்குகளாகும். இவற்றை அல்லாஹ் தன் மீது வாஜிபாக்கிக் கொண்ட (ஸிபாத்துகள்) தன்மை எனலாம்.

அப்படியென்றால் மனிதன் அல்லாஹ்வின் ஸிபாத்துகளின் பொருட்டால் பிரார்த்தனை செய்தால் அது மேலான விரும்பத்தகுந்த பிரார்த்தனையாகிறது. இதைத்தாம் நாம் முன்னர் கூறியிருக்கிறோமே. மனிதன் விசுவாசத்தின் பொருட்டாலும், அல்லாஹ்வின் திருநாமங்கள், அவனுடைய தன்மை (ஸிபாத்து) கள் பொருட்டாலும் வேண்டப்படும் பிரார்த்தனைகள் அனைத்துமே அங்கீகரிக்கப் படுவதற்குக் காரணமாகின்றன. இறைவன் தன் திருமறையில் இதை சுட்டிக்காட்டும் போது: "விசுவாசங் கொண்டு நற்கருமங்கள் செய்தோர்களின் பிரார்த்தனைகளை அவன் அங்கீகரித்து அவர்களுக்கு தன்னுடைய அருளை மேலும் அதிகப் படுத்துகின்றான்" எனக் கூறினான். (42:26)

இதைப்போல இறைவன் வாக்களித்திருக்கும் வாக்குறுதிகளைக் கொண்டும், அவற்றின் பொருட்டாலும் பிரார்த்தனைகள் வேண்டப்பட அனுமதிக்கப்படுகிறது. ஏனென்றால் இறைவனின் வாக்குறுதி தவறாகாது அல்லவா? நிச்சயம் வாக்குறுதிகொப்ப நடைபெறத்தான் செய்யும். எனவே அந்த வாக்குறுதிகளை முன்வைத்தும் துஆக்கள் வேண்டலாம்

இந்த உண்மையைக் கீழ்வரும் இறைவசனம் மேலும் விளக்கிக் காட்டுகிறது: " (மூமின்கள் கூறுவார்கள்) இரட்சகனே! 'உங்கள் இறைவனை விசுவாசியுங்கள்' என எங்களை விசுவாசத்தின் பக்கம் அழைத்தோரின் அழைப்பை நிச்சயமாக நாங்கள் செவியேற்று நாங்களும் அவ்வாறே விசுவாசம் கொண்டோம். ஆதலால் இறைவா! எங்கள் குற்றங்களை மன்னித்து எங்கள பாவங்களிலிருந்து விடுவித்து முடிவில் நல்லோர்களுடன் எங்களை இறக்கச் செய்வாயாக!". (3:193)

இன்னொரு இடத்தில் இறைவன் குறிப்பிடுகிறான்: "நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) 'இறைவனே! நாங்கள் உன்னை விசுவாசிக்கிறோம். நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிவோரிலெல்லாம் நீ மிக்க மேலானவன் என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். ஆனால் நீங்களோ என்னை தியானிப்பதை முற்றிலும் மறந்து விட்டு, அவர்களைப் பரிகசித்து அவர்களைப் பற்றி சிரித்துக் கொண்டிருந்தீர்கள்". (23:109-110)

பத்று யுத்தம் நடந்த அன்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்றித் தந்தருள்!' என்று. இதைக்கூறி அல்லாஹ்வின் வாக்களிப்பை ஆசை வைத்துப் பிரார்த்தித்தார்கள். தௌராத் வேதத்திலும் கீழ்வரும் சம்பவம் காணப்படுகிறது: பனூ இஸ்ரவேலர்கள் மீது இறைவனின் கோபம் இறங்கிய வேளையில், நபிகள் மூஸா (அலை) அவர்கள் தம் இறைவனிடத்தில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இறைவன் முன்னர் ஒருமுறை வாக்களித்ததை முன்வைத்து, அதை எடுத்துக் காட்டி அந்த வாக்குறுதியின் பொருட்டால் மூஸா (அலை) தமக்காகப் பிரார்த்தித்தார்கள். நல்ல அமல்களின் பொருட்டாக பிரார்த்தனை செய்வது ஷரீஅத் அனுமதிக்கின்ற ஒரு பிரார்த்தனையாகும். குகையில் அகப்பட்ட மூவரின் வரலாற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வை மட்டும் நாடி கலப்பற்ற ரீதியில் புரிந்த அமல்களைப் பொருட்டாக வைத்துப் பிரார்த்தித்தனர். இதனால் பாறை தானாக விலகியது. ஆம், உண்மையான ரீதியில் நல்ல அமல்களைத் தூய எண்ணத்துடன் மனிதன் செய்யும்போது அவனை இறைவன் நேசிக்கிறான். அவனுடைய அமலைப் பொருந்திக் கொள்கிறான். இதனால் அந்த அமல்களைச் செய்தவனின் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுகின்றன. ஏனெனில் தம் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் நிலைமையில் இம்மனிதனை அவனது நல்லமல்கள் திருப்பி விட்டன. எப்போது இவன் பிரார்த்தித்தாலும் அது அங்கீகரிக்கப்பட ஏதுவாகிறது. குகையில் அகப்பட்ட மூவரில் ஒருவர் தம் பெற்றோர்களுக்காக பேருதவி செய்து கொடுத்ததைப் பொருட்டாக வைத்து பிரார்த்தனை செய்தார். மற்றொருவர் தமது சம்பூர்ண பத்தினித் தன்மையை எடுத்துக்கூறிப் பிரார்த்தனை செய்தார். மூன்றாமவர் தனது நாணயத்தையும், உபகார மனதையும் எடுத்துரைத்து துஆ இறைஞ்சினார்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் நள்ளிரவு வேளைகளில் கூறுவார்கள்: இறைவா! உனக்கு வழிப்பட வேண்டுமென்று நீ என்னைப் பணித்தாய். வழிப்பட்டேன். என்னை நீ அழைத்தாய். இதோ வந்திருக்கிறேன் இந்த நள்ளிரவு வேளையில். எனவே எனக்கு மன்னிப்பு அருள்வாயாக!. இப்னு உமர் (ரலி) அவர்கள் ஸஃபா மலைமீது ஏறி நின்று கூறினார்கள்: 'இறைவா! என்னிடம் கேட்டுப் பிரார்த்தியுங்கள். நான் தருகிறேன் என நீ கூறியுள்ளாய். இதோ உன்னை அழைக்கிறேன். நீ வாக்குறுதி பிறழாதவன்' என்று கூறிவிட்டு தம் தேவைகளைக் கேட்டு பிரார்த்தித்தார்கள்.

நபிமார்களின் அல்லது மலக்குகளின் அல்லது நல்ல மனிதர்களின் (ஹக்கால்) பொருட்டால், (ஹுர்மத்தால்) மேன்மையால் (ஜாலால்) அந்தஸ்தால் என்றெல்லாம் இவர்களின் அந்தஸ்தையும், மதிப்பையும் எடுத்துரைத்து அவற்றைப் பொருட்டாக வைத்து மனிதன் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தித்தால், இது தவறான பிரார்த்தனையாக கருதப்படும்.ஏனென்றால் இப்பிரார்த்தனையின் தாத்பரியத்தில் தவறான கருத்துக்களைக் காண முடிகிறது. நல்ல மனிதர்களுக்கு அவர்களுடைய உரிமை என்று கருதப்படக்கூடிய சில (ஹக்குகள்) பாத்யதைகள் அல்லாஹ்விடத்தில் இருப்பதாக இதிலிருந்து விளங்க முடிகிறதல்லவா? மனிதன் தன் உரிமை என்று கருதும் அளவுக்கு என்ன பாத்யதைகள் தான் அல்லாஹ்வின் மீது கடமையாகி விடப் போகின்றன? அப்படியொன்றும் அல்லாஹ்வின் மீது கடமையில்லை என்பது தானே மூமின்களின் விசுவாசம்.

நபிமார்களுக்கும் நல்ல மனிதர்களுக்கும் அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்துகளையும், நல்ல பெரிய பதவிகளையும் வைத்திருக்கிறான் என்பது உண்மைதான். குறிப்பாக நபிமார்களுக்கு நல்ல பல பதவிகள் அல்லாஹ்விடத்தில் உண்டு. இந்த நபிமார்களைப் பின்பற்றி அவர்கள் காட்டிச் சென்ற வழியை அனுசரித்து நடந்தவர்களுக்கும் நல்ல பல கூலிகளை அல்லாஹ்விடமிருந்து பெற முடியும். (நன்மக்கள்) ஸாலிஹீன்களுக்குப் பற்பல அந்தஸ்துகள் அல்லாஹ்விடத்தில் உண்டு என்பதின் தாத்பரியம் என்னவென்றால் சுவனத்தில் இவர்களின் படித்தரத்தையும், (அதுவும் இறைவன் நாடினால்) மதிப்பையும் மேன்மைப் படுத்தி விடுவான் என்பதாகும். தவிர இவர்களைப் பொருட்டாகக் கொண்டு கேட்கின்ற பிரார்த்தனைகளை கண்டிப்பாக அல்லாஹ் அங்கீகரிப்பான் என்பதல்ல அதன் தாத்பரியம். இவர்களின் மதிப்பை எடுத்துக் கூறி பிரார்த்தித்தால் ஒரு போதும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். நபிமார்களுக்குக் கூட அல்லாஹ்வின் அனுமதியின்றி சிபாரிசு செய்ய அதிகாரமில்லாமலிருக்கும் போது அவர்களை விட மதிப்பில் குறைந்தவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் என்ன உரிமை கொண்டாட முடியும்?

இறைவன் கூறுகிறான்: "அல்லாஹ்வின் அனுமதியின்றி அவனிடத்தில் யார்தான் சிபாரிசு செய்ய முடியும்? (2:255) அன்பியாக்களின் மதிப்பால் மனிதன் எப்பொழுது பயன் பெறுகிறான் தெரியுமா? அவர்களின் வழிமுறைகளைக் கடைபிடித்தொழுகும் போதுதான். அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் போதித்தவற்றை செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். அதற்கொப்ப வழிப்பட்டு நடக்க வேண்டும். அந்த நபிமார்களின் வாழ்க்கை முறைகளை மனிதன் அணுஅணுவாகப் பின்பற்ற வேண்டும். அப்படியானால் நபிமார்களின் அந்தஸ்தாலும், மதிப்பாலும் மனிதன் பயனடைந்தான் என்று கூற முடியும். இங்குதான் நபிமார்களின் அந்தஸ்தும், மேன்மையும் மனிதனுக்குப் பயனளிக்கின்றன. மூமின்களுக்கு நபிமார்கள் எவற்றையெல்லாம் காட்டிச் சென்றார்களோ அவற்றுக்கொப்ப மூமின்கள் தம் வாழ்க்கையில் செய்து காட்டினால் அன்பியாக்களின் பொருட்டாலும் மூமின்கள் வெற்றி பெற்றார்கள் என்று கூற முடியும். இதைப் போலதான் நபிமார்களின் துஆக்களும், ஷபாஅத்தும். இந்த நபிமார்கள் மற்றும் நன்மக்கள் இவர்களெல்லாம் மூமின்களுக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தித்தால், அவனிடத்தில் ஷபாஅத்துச் செய்தால் இங்கேயும் மூமின்கள் அன்பியாக்களுடைய மதிப்பாலும், அந்தஸ்தாலும் பயனடைந்தார்கள் என்று கூற முடியும். இதற்கு மாறாக நபிமார்களிடமிருந்து துஆக்கள் பெருமளவுக்கு மனிதன் நடந்து கொள்ளாமலும், அவர்களிடமிருந்து சிபாரிசு பெறும் அருகதையும் அவன் அடையாமல் இருக்கின்ற வேளையில் அந்நபிமார்களைப் பொருட்டாக வைத்துப் பிரார்த்திப்பதில் அவர்களின் அந்தஸ்தையும், மேன்மையையும் எடுத்துக் கூறி துஆச் செய்வதில் என்ன பயனிருக்கிறது? எனவே தான் கூறினோம்: நபிமார்களின் மதிப்பைக் கொண்டும், பெரியோர்களுக்குரிய அந்தஸ்தைக் கொண்டும் மனிதன் பயன்பெற வேண்டுமானால் அது அவர்களை முன்னிறுத்தியோ, அவர்களின் சிறப்பை எடுத்துக் கூறியோ துஆ கேட்பதின் மூலமாகப் பெறக் கூடியதல்ல. அவர்களின் நெறிமுறைகளை மனிதன் பின்பற்றியொழுகும் பொழுதுதான் அவர்களால் இவன் பயனடைந்தான் என்று கருதப்படும். வாழ்நாள் முழுவதும் நபியவர்களின் வழியை மீறி நடந்து விட்டு பின்பு ஒருநாள் அவர்களின் பொருட்டையும், மதிப்பையும் எடுத்துரைத்துப் பிரார்த்திப்பவன் கீழ்வரும் இம்மனிதனுக்கு ஒப்பாகிறான்: இவன் ஏதோ ஒரு மனிதரிடம் சென்று 'இன்னவர் தங்களுக்கு முழுக்கவும் கீழ்படிந்து நடப்பதின் காரணத்தினால் அவரை தாங்கள் நேசிக்கிறீர்கள். தாங்களிடம் அவருக்கு பெரும் மதிப்பு உண்டு. இம்மதிப்பின் பொருட்டால் என் தேவையை நிறைவேற்றித் தாரும்' என்று கூறி வேண்டினான்.

ஒரு மனிதனுக்கு மற்றவன் கீழ்படிந்து நடந்ததினால் இம்மனிதர் அவரை நேசிக்கிறார். இதற்கும் இவன் சென்று அம்மனிதரிடம் இன்னொருவனின் வழிபாட்டையும், அதனால் கிடைத்த அம்மனிதரின் அன்பையும் காரணம் காட்டி அதைப் பொருட்டாக வைத்து வேண்டுவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

இதைப் போலவே அன்பியாக்கள், ஸாலிஹீன்கள் இவர்கள் முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கு கீழ்படிந்ததினால், அல்லாஹ் அவர்களை நேசித்தான். அவர்களுக்கு மதிப்பையும், கண்ணியத்தையும் அளித்தான். அவர்களின் படித்தரத்தை மேன்மையாக்கினான். இப்படியிருக்க, இப்படித் தரங்களையும், மேன்மையையும் முன்வைத்து அவற்றைப் பொருட்டாகக் கொண்டு ஒரு மனிதன் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் ஏதோ தொடர்பற்ற சம்பந்தமில்லாத ஒன்றை எடுத்துக் கூறி பிரார்த்திக்கிறான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். இதனால் இப்பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்களின் கண்ணியத்தாலும், மதிப்பாலும், பொருட்டாலும் அவன் பயனடைய வேண்டுமானால் - அவனுடைய பிரார்த்தனை அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அதற்குரிய காரணங்கள் முதலில் பிரார்த்திப்பவனிடம் ஒருங்கிணைந்திருத்தல் வேண்டும். இல்லையெனில் எத்தனை நாட்கள் மண்டியிட்டுக் குப்புறவீழ்ந்து இவர்களின் பொருட்டை மட்டும் வைத்து மன்றாடினாலும் அது ஒரு பயனையும் அளிக்காது.

நபி (ஸல்) அவர்களை விசுவாசம் கொண்டு அவர்களை நேசித்து அவர்களுக்குக் கீழ்படிந்து, அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றியொழுகுவதை முன்வைத்து இவற்றைப் பொருட்டாகக் கொண்டு மனிதன் பிரார்த்தித்தால் இப்பிரார்த்தனை மிக நல்ல அமைப்பிலான பிரார்த்தனையாகும். ஏனெனில் முக்கியமான ஒரு காரணத்தை முன் வைத்தல்லவா பிரார்த்திக்கப்படுகிறது. இதனால் இப்பிரார்த்தனை அங்கீகரிக்கப் படுவதற்கே ஏதுவாகி விடுகிறது. மேற்கூறிய அமல்களைப் பொருட்டாக வைத்துக் கேட்டால் அதை நல்ல பொருத்தமான பிரார்த்தனை என்று கூறலாம். இதுவே உதவி தேடுவதில் விரும்பத் தகுந்த அமைப்பாகும்.

நபி(ஸல்) அவர்கள் 'மறுமையில் என் சிபாரிசுக்கு அருகதைப் படைத்தவர்கள் ஏகத்துவ வாதிகளான முஸ்லிம்களே. இது அல்லாத ஷிர்க்கில் மூழ்கி கிடப்பவர்களான முஷ்ரிக்குகள் அல்ல' என்று கூறினார்கள். நபிகளுக்கு வஸீலா என்ற பதவியை அல்லாஹ் அருள் புரிய அவனிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும் நபியின் சிபாரிசு கிடைக்கிறது.

நபியவர்கள் கூறினார்கள்: 'முஅத்தின் பாங்கு சொல்வதை நீங்கள் கேட்கும் போது அவர் கூறுவது போல நீங்களும் (மெதுவாகச்) சொல்லுங்கள். பின்னர் என்மீது ஸலாவாத்துச் சொல்லுங்கள். ஏனெனில் எனக்கு ஒரு விடுத்தம் யாராகிலும் ஸலவாத்துக் கூறினால் பத்து விடுத்தம் அவருக்கு அல்லாஹ் அருள் பாலிக்கிறான். அதன் பிறகு எனக்காக வஸீலாவை அல்லாஹ்விடம் கேளுங்கள். இந்த வஸீலா என்பது சுவனத்தில் உள்ள ஒரு பதவியின் பெயராகும். மக்களில் ஏதோ ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அவர் நானாக இருப்பதற்கு ஆசைப்படுகிறேன். யாராவது எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேட்டுப் பிரார்த்தித்தால் அவர் என் ஷபாஅத்திற்கு உரியவராக ஆகி விடுகிறார்'.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபியவர்களிடம்: 'யா ரஸூலுல்லாஹ்! மறுமையில் தாங்கள் சிபாரிசைப் பெற்று அதனால் மிக அபிமானம் பெறுபவர்கள் யார்? என்று வினவினார்கள். அதற்கு நபியவர்கள் 'கலப்பற்ற தூய்மையான உள்ளத்தால் மெய்யாக யார் கலிமா ஷஹாதாவை மொழிந்தாரோ அவர்தான் என் சிபாரிசினால் மிக அபிமானம் அடைவார்' எனப் பதில் உரைத்தார்கள்.

நபிகளின் சிபாரிசைப் பெற்று அதனால் பயன்பெற ஏக இறைநம்பிக்கை உள்ளத்தில் குடிகொள்ள வேண்டும். இதுவே இந்த ஹதீஸின் தாத்பரியமாகும். ஏனெனில் ஏகத்துவம் இஸ்லாத்தின் அடித்தளம். எத்தனை பெரிய பாவங்களை மனிதன் செய்தாலும் அல்லாஹ் அவனை மன்னித்தருள முடியும். ஆனால் இணைவைத்தலை எவ்வாறு மன்னிக்கப்படும்? இறைவனின் சன்னிதானத்தில் அவனுடைய அனுமதியின்றி யாருக்கும் சிபாரிசு செய்ய அனுமதியில்லை. அல்லாஹ்வின் அனுமதியைப் பெற்ற பின்னர் நபி (ஸல்) அவர்கள் சிபாரிசு செய்ய ஆயத்தமானால் கூட ஏகத்துவவாதிகளை மட்டுமே இந்த சிபாரிசினால் காப்பாற்றி சுவனத்தில் நுழைவிக்கச் செய்வார்களேயொழிய மற்றவர்களுக்கு இந்த சிபாரிசினால் ஒரு பயனுமில்லை.

இதிலிருந்து இன்னொன்றையும் புரிந்து கொள்ளலாம். நபிகள் நாயகத்திற்கு வஸீலா என்ற பதவியை அல்லாஹ்விடம் கேட்டு பிரார்த்தித்து அவர்களின் ஷபாஅத்துக் கிடைக்க வேண்டுமானால் அவர்களைக் கொண்டு முழுக்க விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும். வெறும் துஆவை மட்டும் நபிகளுக்காக வேண்டினால் அது ஷபாஅத்துக் கிடைத்து விட காரணமாகாது. அவர்களைக் கொண்டு விசுவாசமும் கொள்ள வேண்டும். அவர்கள் இறைவனிடமிருந்து கொண்டு வந்த உண்மைகளை மெய்ப்பித்து அவர்களைத் தம் வாழ்விலும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் செய்து விட்டு அவர்களுக்காக வஸீலா என்ற பதவியை அல்லாஹ் அருள்புரிய அவனிடம் பிரார்த்திக்க வேண்டும். இவை அனைத்தும் மனிதனிடம் ஒன்றிணைந்தால் மட்டுமே அவன் நபிகளின் சிபாரிசைப் பெறத் தகுதி பெறுகிறான்.

இன்சா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }