Thursday, June 02, 2005

சிருஷ்டிகளிடம் கேட்பதால் விளையும் தீமைகள்


எதையும் சிருஷ்டிகளிடம் கேட்பதற்கு மூமின் முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறிப்பாக நபிமார்கள் யாரிடமும் கேட்க கூடாது. அவர்களிலும் குறிப்பாக பெருமானார் (ஸல்) அவர்கள் யாரிடமும் எதையும் கேட்கக் கூடாது. நபிமார்கள் மதிப்பாலும், கண்ணியத்தாலும் பொதுவாக மேலானவர்கள். எதையும் அல்லாஹ்விடம் கேட்பார்கள். அவர்களின் எல்லாத் தேவைகளுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

படைப்பினங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்பதில் மூன்று தீமைகள் விளைகின்றன. ஒன்று: அல்லாஹ் அல்லாதவற்றிடம் தேவைப்படுதல். இதனால் ஷிர்க்கின் ஓர் அம்சம் தலைதூக்குகிறது. இரண்டு: கேட்டல் என்ற காரணத்தினால் கேட்கப் பட்டவனுக்குத் தொந்தரவு கொடுத்தல் ஏற்படுகிறது. இது பிறருக்குத் தீங்கு விளைவித்தல் என்ற இனத்தைச் சார்ந்தது. மூன்று: கேட்பவன் தன்னை இழிவு படுத்திக் கொள்ளல். இது தனக்குத் தானே தீங்கிழைத்தலின் வகையில் சேரும். இப்படி மூன்று விதமான கெடுதல்களைக் கேட்பவன் சம்பாதித்துக் கொள்கிறான். நபிமார்களைப் பொறுத்த வரையில் அவர்கள் எல்லா இழிவிலிருந்தும் , குற்றங்களிலிருந்தும் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள். ஆகவே பிறரிடம் கெஞ்சும் இழிவில் இவர்கள் சேர மாட்டார்கள்.

நபியவர்கள் தம் உம்மத்துகளிடம் தமக்காக துஆச் செய்ய ஏவியிருக்கிறார்களென்றால் தம் உம்மத்திடம் தேவைப்பட்டார்களென்பது கருத்தல்ல. மாறாக தம் சமூகத்தார்கள் ஏராளமான பலாபலன்களைப் பெற வேண்டுமென்பதே நபிகளாரின் இலட்சியமாகும். மக்கள் மிகுந்த பிரதி பலன்களை பெறும் வழிகளை நபிகள் காட்டித் தந்திருக்கிறார்கள் என்பதையும் அதன் தாத்பரியமாகக் கருதலாம். கடமைகள் யாவை? ஸுன்னத்துகள் யாவை? என்பவற்றை தம் உம்மத்துகளுக்கு விளக்கி பொதுவாக மக்கள் பயனடைய வேண்டிய அனைத்து வழிகளையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பிரதிபலன் அதிகமாக உம்மத்துகளுக்குக் கிடைக்க வேண்டுமென்ற ஒரே எண்ணத்தால் தமக்காக பிரார்த்தனைச் செய்ய மக்களை ஏவினார்கள். மக்களின் பிரார்த்தனைகளினால் ஒருவேளை நபிகளும் பயன்பெறக் கூடும். ஆனால் மக்களிடம் தேவைகளைக் கேட்டுக் கெஞ்சியிருக்கிறார்கள் என நினைத்து விடலாகாது. ஏனெனில் நாயகத்தின் ஏவலின்படி மக்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த காலமெல்லாம் நபிகளுக்கும் அதனுடைய கூலியும், பயனும் சேர்ந்து கொண்டே இருக்கும். நபிகளின் உம்மத்துகள் செய்யும் ஒவ்வொரு வணக்க வழிபாட்டுக்கும், நற்செயலுக்கும் உரிய கூலிகள் நபி (ஸல்) அவர்களுக்கும் உண்டு என ஹதீஸும் கூறுகிறது. இந்த உலகம் நீடித்திருக்கும் காலம் வரையிலும் அவற்றின் கூலிகள் நபிக்குச் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஒருவன் நேர்வழியின் பால் மக்களை அழைத்தால் அழைப்பைக் கேட்டு செயல்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற அதே கூலிகள் அழைத்தவனுக்கும் மறுமையில் கிடைக்கின்றன. இவ்விருவரின் கூலிகளில் எவ்வித வித்தியாசமும், குறைபாடும் இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களைப் பொறுத்த வரையில் முஸ்லிம் சமூகத்தையே முழுமையாக நேர்வழியில் திருப்பி இருக்கிறார்கள். இச்சமூகம் அன்றிலிருந்து இன்றுவரை, இன்னும் மறுமை நாள் வரையிலும் செய்து கொண்டிருந்த, இனிமேலும் செய்யப் போகின்ற அத்தனை நல்ல செயல்களுக்கும் நபிகள் நாயகம் தான் காரணமாக இருந்திருக்கிறார்கள். ஆகவே மக்கள் கோடிகளிலுள்ள முஸ்லிம்கள், மூமின்களுக்கு வழங்கப்படும் அதே கூலிகள் நபி (ஸல்) அவர்களுக்கும் குறையாமல் கிடைத்து விடும் என்பதில் சந்தேகமில்லை.

ஆகவே மூதாதையர்களான ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் தமது வழிபாட்டின் நன்மைகளை நபிக்கு நன்கொடையாக அளிப்பதில்லை. திருமறையை ஓதியும், மற்ற அமல்களைப் புரிந்தும் நபிகளுக்கு 'ஈஸால் ஸவாப்' செய்வதில்லை. ஏனெனில் இவர்களுடைய வழிபாடுகளின் கூலிகள் முழுமையாக நாயகத்திற்குத் தானாகச் சேரும்போது நாம் ஏன் சேர்க்க வேண்டும்? ஆனால் தாய்-தந்தையர்களைப் பொறுத்த வரையில் இப்படி அல்ல. அவர்களுக்காக நன்மைகளைப் புரிந்து அவற்றிற்குரிய கூலிகளை பிறருக்குச் சேர்த்து விடல் (ஈஸாலுஸ் ஸவாப் செய்தல்) வேண்டும். நன்மைகள் புரிந்து அவற்றின் பிரதிபலன்களைப் பெற்றோர்களுக்காகச் செலுத்த வேண்டும். பிள்ளைகள் செய்கின்ற அனைத்து நற்கிரியைகளின் பிரதிபலன்களை அப்பிள்ளைகள் பெறுவதுபோல் பிள்ளைகளின் பெற்றோர்களும் பெறுவார்களென்று யாராலும் சொல்ல முடியாது. தகப்பன் தன் மகனின் பிரார்த்தனைகளால் அதிக நன்மைகளைப் பெறுகிறான். மகனின் இத்தகைய பிரார்த்தனையும், வேறு ஒருசில அமல்களும் மட்டுமே தகப்பனுக்குச் சேருகிறது. அதல்லாது மகன் புரிகின்ற அமல்களின் கூலிகள் யாவும் தகப்பனுக்கு அப்படியே குறையாமல் கிடைத்து விடாது.

ஹதீஸில் நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ' மனிதன் மரணமடைந்து விட்டால் அவனுடைய எல்லா அமல்களும் நின்று விடுகின்றன. மூன்று அமல்களின் பலாபலன்கள் மாத்திரம் இறந்த பின்னரும் நிரந்தரமாக மனிதனுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். எப்போதும் ஓயாமல் பலன் தரும் தர்மம் (ஸதகதுல் ஜாரியா), மாண்ட பின்பும் பிரயோசனமளிக்கும் கல்வி, பிரார்த்தனை செய்யும் பிள்ளைகள். இம்மூன்றின் பிரதிபலன்கள் காலஞ்சென்ற பின்னரும் பயனளிக்கும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. இந்த ஹதீஸில் மகன் தகப்பனுக்குக் கேட்கும் துஆ மரணமடைந்த பின் தகப்பனுக்குப் பயன்படுமென்று நபியவர்கள் கூறினார்களே ஒழிய மகன் புரியும் நற்கிரியைகளின் அனைத்து பலாபலன்களும் தகப்பனுக்குக் கிடைக்குமென நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே ஒருசில நல்ல அமலின் கூலிகளையும் பெற்றோருக்காகச் செலுத்துவது அனுமதிக்கப் பட்டுள்ளது. நபியவர்களுக்கு வேண்டிய நல்லமல்களின் கூலிகளை ஹதியாவாக செலுத்தப்பட மாட்டாது. இதை மட்டும் ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் தடுத்திருக்கிறார்கள்.

ஆகவே நபிகள் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடம் தமக்காக துஆச் செய்யுங்கள் என்பது போன்ற ஒரு விஷயத்தைக் கூறினால் அவர்கள் தம் உம்மத்திடம் கோரிக்கை விடுத்தார்கள் என்று கருதுவது தவறாகும். நபிகள் தம் உம்மத்துகளை நன்மைகளின் பால் பிரேரணை நல்குவதற்காக அவற்றின்பால் தம் உம்மத்துகளை தூண்டி விடுவார்கள். தம் மீது ஸலவாத்துகள் சொல்லும்படி பணிப்பார்கள். இதுவும் நன்மைகளை ஏராளம் செய்வதற்காக காட்டித் தந்த ஒரு வழியே. தவிர நம்மிடம் ஸலவாத்துக்களைக் கொண்டு கோரிக்கை விட்டதல்ல. ஸலவாத்தைப் பொறுத்த வரையில் நபிகளை விட அல்லாஹ்வே ஏவியிருக்கிறானல்லவா? "நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். ஆகவே விசுவாசிகளே நீங்களும் அவர்கள் மீது ஸலாத்தும், ஸலாமும் கூறுங்கள்". (33:56)

இன்சா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }