Saturday, June 11, 2005

தவஸ்ஸுல் வஸீலாவில் ஏற்பட்ட பிசகுதல்கள்

மேற்கூறிய விளக்கங்களெல்லாம் சரிவர நாம் புரிந்து கொண்டோம். அவ்விளக்கங்களிலிருந்து 'தவஸ்ஸுல் வஸீலா' என்ற வார்த்தைகளைப் பற்றி ஓரளவுக்கு விளங்க முடிந்தது. இவ்விரு வார்த்தைகளும் அடக்கியிருக்கும் சரியான கருத்துகள் யாவை என்பதுப் பற்றி மேலும் நாம் தெரிய வேண்டியிருக்கிறது. ஏனெனில் பற்பல மாறுபட்ட பிசகுதலான கருத்துகளை மக்கள் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்கின்றனர். 'வஸீலா, தவஸ்ஸுல்' என்பதின் உண்மையான கருத்துகள் யாவை? வஸீலா என்ற வார்த்தைக்குப் பொருந்தாத பொய்யான கருத்துகள் யாவை? என்பவற்றை நன்கு பகுத்துணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் நபிமொழியும், ஸஹாபிகளின் விளக்கமும் வஸீலாவுக்கு என்ன தாத்பரியத்தை அளிக்கிறதோ அந்த தாத்பரியத்தை நாமும் பின்பற்ற வேண்டும்.

நபித்தோழர்களான ஸஹாபாக்கள் வஸீலாவுக்கு என்ன விளக்கத்தை அளித்தனர். வஸீலாவை எப்படி அவர்கள் விளங்கியிருந்தனர். ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் வஸீலாவுக்கு அன்றிலிருந்தே எப்படி விளக்கம் அளித்தனர் என்பதை நாமும் தெரிந்திருக்க வேண்டும். வஸீலாவை வைத்து எப்படி அவர்கள் செயல்பட்டு வந்தனரோ அதை நாமும் முன்மாதிரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். அன்றி பித்அத்காரர்களைப் போன்றோர் வஸீலாவின் கருத்தில் எதை வாதாடுகின்றனரோ அதை நாம் கடைப்பிடிக்கத் தேவையில்லை. பலர் வஸீலாவின் உண்மையான தாத்பரியத்தைத் தெரியாமல் இருந்து விடுகின்றனர். 'வஸீலா, தவஸ்ஸுல்' என்பது பிசகுதலுக்குரியதும், பற்பல கூட்டுக் கருத்துகள் நிரம்பிய மூடலான தெளிவற்ற விளக்கங்களுள்ள வார்த்தை என்பதை மக்கள் இன்னும் புரியவில்லை.

இவ்வார்த்தை 'மாயிதா' என்ற அத்தியாயத்தில் 35ம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது: 'சத்திய விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவனிடம் நெருங்கிச் செல்வதற்குரிய வழிமுறையைத் தேடிக் கொள்ளுங்கள்". (5:35)

"(நபியே!) இணைவைத்து வணங்குவோரை நோக்கி நீர் கூறும். அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களிருப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே, அவற்றை நீங்கள் (உங்கள் கஷ்டங்களை நீக்க) அழையுங்கள். (அவ்வாறு அழைத்தால்) அவை உங்கள் யாதொரு கஷ்டத்தையும் நீக்கி விடவோ அல்லது அதனைத் தட்டி விடவோ சக்தியற்றவை (என்பதை அறிந்து கொள்வீர்கள்). இவர்கள் கடவுளென அழைப்பவையும், தங்களுக்காக தங்கள் இறைவனிடம் சமீபிப்பதைத் தேடிக் கொண்டிருக்கின்றன. அவர்களில் இறைவனோடு மிக்க நெருங்கியவர் யார்? என்பதையும் வேண்டி அவனுடைய அருளையும் எதிர்பார்த்து, அவனுடைய வேதனைக்கும் பயப்படுகின்றனர். ஏனெனில் நிச்சயமாக உம் இறைவனின் வேதனையோ மிகப் பயப்படக்கூடியதே!". (17:56-57)

அல்லாஹ் மனிதனை நோக்கித் தன் பக்கம் சேர்த்து வைக்கின்ற வஸீலாவைத் தேடிக் கொள்ள வேண்டுமென்று கூறிய வஸீலாவும், மலக்குகள், நபிமார்கள் எல்லோருமே இறைவனிடம் வஸீலா தேடுகிறார்கள் என்று இறைவன் கூறிய வஸீலாவும் (எல்லாமே) நற்கருமங்கள் என்பதுவேயாகும். இதுவே அதன் உண்மை தாத்பரியமாகும். வாஜிபான, முஸ்தஹப்பான எல்லா நல்ல அனுஷ்டானங்களும் அதனுள் அடங்கி இருக்கின்றன. மனிதர்கள் செய்ய வேண்டுமென்று பணிக்கப்பட்டுள்ள அனைத்து நல்ல அமல்களும் இஸ்லாமிய ஷரீஅத்திற்குட்பட்ட வஸீலாக்களாகும்.

எனவே எந்தெந்த அனுஷ்டானங்கள் வாஜிப், ஸுன்னத் என்ற சட்டத்துக்குட்பட வில்லையோ அவை வஸீலா என்ற வார்த்தையில் சேராது. அப்படியானால் ஹறாமானவற்றை (விலக்கப் பட்டவற்றைச்) செய்தல் வஸீலாவாகாது. மக்ரூஹ்களைச் செய்தாலும் வஸீலாவாகாது. ஹலால்களை (ஆகுமானவற்றை)ச் செய்தாலும் அதை வஸீலாவாகக் கருதப்பட மாட்டாது. வாஜிப்கள், முஸ்தஹப்புகள் போன்ற அல்லாஹ்வும், ரஸூலும் நிர்ணயித்து ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள், அவ்விரு சட்டங்களுக்குட்பட்டதாக இறைவனின் விதிகள் அனைத்தையும் காண முடியும். இத்தகு அமல்கள் நம்பிக்கையின் (ஈமானின்) அடிப்படையில் செய்யப்பட வேண்டும். நபியவர்கள் கொண்டு வந்த அனைத்தையும் உண்மையென்று நம்ப வேண்டும். ஏனெனில் அவை அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப் பெற்றவை. நபியவர்களின் சொந்த அபிப்பிராயமல்ல. நபியவர்கள் எவற்றையெல்லாம் ஏவினார்களோ அவற்றை கடைப்பிடித்தொழுகி அதனால் அல்லாஹ்வை நெருங்குதல் என்ற கருத்தைத்தான் வஸீலாவுக்கு அறிஞர் பெருமக்கள் அளிக்கின்றனர். சிருஷ்டிகள் இத்தகைய வஸீலாவைத் தான் தேடிப் பெற வேண்டும். இந்தக் கருத்துக்குரிய வஸீலாவைத் தான் இறைவன் நம்மீது பணித்திருக்கிறான். வேறு எந்தக் கருத்தையும் வஸீலாவுக்குக் கொடுக்கக் கூடாது. ஏனெனில் அவை பொருந்தாக் கருத்துக்களாகும்.

நபியின் ஹதீஸில் வஸீலாவுக்கு என்ன அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வோம். நபியவர்களின் பொன்மொழிகளில் பற்பல இடங்களில் வஸீலா என்ற வார்த்தையைக் காண முடிகிறது. ஒருமுறை நபியவர்கள் கூறினார்கள்: 'எனக்காக நீங்கள் அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். இந்த வஸீலா என்பது சுவனத்தில் ஒரு பகுதியாகும். ஏதோ ஒரு மனிதருக்குத்தான் அது கிடைக்கும். அம்மனிதர் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். எனவே எவர் இவ்வஸீலாவை எனக்குக் கிடைக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்கிறாரோ அவர் மறுமையில் எனது ஷபாஅத்துக்கு உரியவராகிறார்'.
இன்னொரு ஹதீஸில் நபியவர்கள் கூறினார்கள்: 'எவர் பாங்கு சொல்லி முடிந்ததும் (என்றென்றும்) நிலைநாட்டப்படும் தொழுகைகளுக்கும், நிரப்பமான பிரார்த்தனைகளுக்கும் உரிய இரட்சகனே! முஹம்மத் நபியவர்களுக்கு வஸீலாவையும், ஃபளீலாவையும் கொடுத்து அருல் புரிவாயாக! நீ அவர்களுக்கு வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் மறுமையில் அவர்களை எழுந்தருளச் செய்வாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதி பிறழாதவன்' என ஓதினால் அவருக்கு என் சிபாரிசு கிடைத்து விடும்.

இங்கே ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள வஸீலா என்பது தனியாக நபியவர்களுக்கு உரியவொரு பதவியாகும். அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தித்து இப்பதவியை நபிகளாருக்குக் கிடைக்கச் செய்ய வேண்டுமென்று ஏவினார்கள். ஏதோ ஒருவருக்கு மட்டுமே இப்பதவியுண்டு. நபி (ஸல்) அவர்கள் தமக்கே இப்பதவி கிடைக்க ஆசைப்பட்டார்கள். அதனால் நாம் அல்லாஹ்விடம் வேண்டி இப்பதவியை அவர்களுக்காக வாங்கிக் கொடுக்கும்படி ஏவினார்கள். இதன் கூலியாக நபிகளின் ஷபாஅத்தையும் நம்மால் பெற முடிகிறது. நாம் நபிகளுக்கு துஆச் செய்வதினால் நபிகளின் துஆவை நாம் பெறுகிறோம். ஷபாஅத் என்பது துஆவின் வகையைச் சார்ந்தது அல்லவா! நபியவர்களுக்காக நாம் எதைப் புரிந்தாலும் அதற்கு நிகராக கூலி நமக்குக் கிடைத்து விடுகிறது.

இதற்கு இன்னுமொரு உதாரணத்தைக் கூற முடிகிறது. நாயகத்தின் மீது ஒருமுறை ஸலவாத்துக் கூறினால் அப்படிக் கூறியவனுக்கு இறைவன் பத்து முறை ஸலவாத்துக் கூறுகிறான். இதிலிருந்து நாம் எதைத் தெரிந்து கொள்கிறோம். நபி (ஸல்) அவர்களுக்காக நாம் செய்யும் அனைத்து நற்செயல்களும் சமமான பலாபலன்களையும் சில வேளைகளில் அதிகமான பலாபலன்களையும் கூலியாக நபிகளிடமிருந்து நம்மால் பெற முடியும் என்பதை விளங்குகிறோம்.

இன்சா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }