Sunday, July 03, 2005

இறைவனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு

பகுத்தறிவு படைத்தவன் தன்னைப் படைத்த இறைவனுக்கும், படைக்கப்பட்ட படைப்புகளுக்கும் இடையிலுள்ள பல வித்தியாசங்களை விளங்கிக் கொள்வான். ஒன்று: அல்லாஹ் பிறரின் வணக்க வழிபாடுகளில் இருந்தெல்லாம் தேவையற்றவன். அவன் ஒருபோதும் தன் அடியார்களை வேண்டி நிற்க மாட்டான். பிறரை வேண்டி நிற்பது மனிதப் பண்பல்லவா! எத்தனைப் பெரிய மாமன்னரானாலும் பிறரின் உதவி ஒத்தாசைகளை விட்டு விலகி நின்று வாழ முடியாது.

இரண்டு: நற்கருமங்களை அல்லாஹ் விரும்புகிறான். அவற்றால் திருப்தியடைகிறான் என்பவையெல்லாம் உண்மைதான். பாவமன்னிப்புக் கோரி மீள்கிறவர்களைப் பெரிதும் நேசிக்கிறான். இதுவும் உண்மையான விஷயம்தான். ஆனால் இவற்றை அவன் தேவைப்படுகிறவன் என்று நினைக்கக் கூடாது. அவன் ஒரு செயலை விரும்புதல் அவன் தேவைப்படுவதினால் அல்ல. அடியார்களது நற்செயல்களில் அவனுக்கென்ன தேவை வந்து விடப் போகிறது? அப்படி ஒன்றுமே இல்லை. இவை எதுவுமே அல்லாஹ்வுக்கு தேவையுமில்லை. ஏன்? அவன்தான் இந்நல்லமல்களைச் செய்ய வேண்டும், தவ்பாச் செய்து மீள வேண்டும் என்றெல்லாம் எண்ணத்தையே மனிதர்களின் இதயங்களில் பிறக்கச் செய்கிறான். அப்படியானால் அவை அவனுக்குத் தேவைப்படுகின்றன என எந்த பகுத்தறிவுடையோனும் நினைக்க முடியாதல்லவா! விசுவாசம் என்ற ஈமான் அல்லாஹ் அளித்த மிகப் பெரிய அனுக்கிரகமாகும். இதைவிடப் பெரிய அனுக்கிரகத்தை அல்லாஹ் அடியார்களுக்கு அருள் புரியவில்லை. சுன்னத் வல் ஜமாஅத்தினர்களின் அபிப்பிராயமும் இப்படித்தான். விசுவாசம் (ஈமான்) என்ற பெரும் அனுக்கிரகத்தையே படைப்பினங்கள் மீது அவன் அருள் புரிந்திருக்கும் போது இனி அவனால் அருள் புரியப்படாதவை ஒன்றுமில்லை. அல்லாஹ் தான் விரும்பும் அனைத்தையும் தானே படைத்துக் காத்து பரிபாலிக்கும் அருகதை அவனுக்கிருக்கும் போது அவற்றில் அவனுக்குத் தேவையுண்டு என்று எவரும் கூற முடியாது. மனிதனைப் பொறுத்த வரையில் மனிதன் ஒன்றை விரும்பினால் அவன் அதை சிருஷ்டித்து விட முடியாது.

மூன்று: மனிதர்களுக்குப் பயன்தரும் செய்கைகளைக் கொண்டு மட்டுமே அவர்களை அல்லாஹ் பணித்துள்ளான் என்று கூறினோம். அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றவற்றை விட்டும் அவர்களைத் தடுத்துள்ளான். கதாதா (ரலி) அவர்கள் இதை அழகாக எடுத்துரைக்கிறார்கள்: 'செய்ய வேண்டுமென மனிதனை இறைவன் பணித்திருக்கும் ஏவல்கள் அடங்களிலும் அவர்களின் நலம்தான் கருதப்படுகிறதேயல்லாது அல்லாஹ்வுக்கு அவ்ற்றில் தேவை இருப்பதினால் அல்ல'. அல்லாஹ் தடுத்திருக்கும் விலக்கல்களும் இப்படித்தான். அவற்றில் மனிதர்களுக்குக் கெடுதி இருக்கிறதினால் மட்டுமே அவற்றை விட்டும் மனிதர்களை விலக்கி இருக்கிறானேயொழிய வேறொன்றினாலுமல்ல. ஆனால் இவற்றை மனிதனால் செய்ய முடியுமா? மனிதனால் இத்தகைய அந்தரங்க மர்மங்களை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மனிதன் மற்றவனை நோக்கி பணிக்கின்ற ஏவல்களிலும், தடுக்கின்ற விலக்கல்களிலும் தனது சுய நலத்தையே உள்ளே மறைத்து வைத்திருப்பான்.

இப்பொழுது நாம் விளக்கிய உண்மையைத்தான் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த அறிஞர்கள் அனைவருமே ஏற்றிருக்கிறார்கள். அல்லாஹ்வின் ஏவல்கள், விலக்கல்கள் அனைத்தும் மனிதர்களின் நலனையும், தீமையையும் அடிப்படையாகக் கணிக்கப்பட்டுத் தீர்மானம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அல்லாஹ்வின் கிருபையும், நுட்பமான தத்துவத்தையும் வெளிப்படுத்த முடிகிறது. 'ஜபரிய்யா' போன்ற சுன்னத் வல் ஜமாஅத்திற்கு அப்பாற்பட்ட சில பிரிவினர் இதற்கு நேர்மாறான அபிப்பிராயத்தைக் கூறி வழி கெட்டார்கள். மனிதன் பலாத்காரமாக நடத்தப்படுகிறானென அவர்கள் கூறியிருக்கிறார்கள். மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களை அல்லாஹ் அவன் மீது பணித்திருக்கிறான் போலும். அவனுக்கு நன்மை தரும் செய்கையை விட்டும் அவனை அல்லாஹ் விலக்கியிருப்பதாக இப்பிரிவினர் நம்புகிறார்கள். எனவே இவர்களுக்கு ஜபரிய்யா என்று சொல்லப்படுகிறது. மனிதர்களுடன் பெரிதும் இரக்கம் உள்ள இறைவன் இப்படி ஒன்றும் செய்ய மாட்டான் என்பதை இப்பிரிவினர்கள் மறுத்து விட்டார்கள். எத்தனையோ திருத்தூதர்களை அனுப்பி வைத்து, வேதங்களை இறக்கித் தன் படைப்பினங்கள் மீது அல்லாஹ் இரங்கியிருக்கிறான். பற்பல புலன்களையும் எண்ணற்ற ஆற்றல்களையும் அடியார்களுக்கு அனுக்கிரகமாக அளித்தான். மனித சமூகத்தை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றினான். தன் அடியார்களுக்குச் சாதகமான (நேர்) வழியைக் காட்டி அவர்களை நன்மக்களாக வாழ வைப்பதில் அல்லாஹ்வை விட இரக்கமானவன் யார் இருக்க முடியும்? சக்திகளெல்லாம் அவனுக்கே சொந்தமானவை.

இதைத் தெரிந்து கொண்டு சுவனத்தில் இருப்பவர்கள் மறுமையில் சொல்வார்களாம்" "இந்த நேரான வழியில் எங்களைச் செலுத்திய அல்லாஹ்வுக்கே புகழெல்லாம் உரித்தாகும். எங்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தியிருக்காவிடில் திட்டமாக நாம் நேர்வழியை அடைந்திருக்க மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்". (7:45)

இத்தகைய புகழுக்குரிய சாதனைகளை மனிதனால் செய்ய முடியுமா?

நான்கு: அல்லாஹ் மனிதனுக்கு அளித்த அனுக்கிரகங்களைக் கணக்கிட்டு எண்ணிவிட முடியாது. மனிதர்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுவதையும், வணங்குவதையும் அனுக்கிரகங்களுக்கு நன்றி செலுத்து பாங்கில் (இந்த எண்ணத்துடன்) புரிவார்களானால் அல்லாஹ் அருளிய அனுக்கிரகங்களில் ஒருசில அம்சங்களுக்குக் கூட இவ்வணக்க வழிபாடுகள் ஈடாகாது. மனிதன் ஆயுள் முழுவதும் புரிந்த இபாதத்தின் நிலை இப்படியானால் இறைவனுக்குக் கீழ்படியாதவனின் நிலை என்ன? சுருங்கக் கூறின் மனிதன் புரிகின்ற இபாதத்துகள் கூட அல்லாஹ்வின் அனுக்கிரகமாகவே கருதப்படல் வேண்டும். அப்படியானால் இந்த இபாதத் (வணக்கம்) எனும் அனுக்கிரகத்துக்கு எதை நன்றியாக இறைவனுக்கு சமர்பிக்க முடியும?

ஐந்து: மனிதர்கள் என்றுமே அல்லாஹ்வின் பால் தேவையுள்ளவர்கள். அவர்களிடமிருந்து நிகழும் குறைபாடுகளை சரிப்படுத்தும் பொருட்டு என்றுமே மனிதர்கள் அல்லாஹ்வின் மன்னிப்பை வேண்டி நிற்கிறார்கள். மனிதர்கள் அனைவரும் தன் வழிபாட்டினால் மட்டும் சுவனத்தில் பிரவேசித்திட முடியாதல்லவா? அப்படி எவரும் நினைக்கவும் வேண்டாம். மனிதர்களுள் பாவத்தை விட்டு விலகியவர்கள் நபிமார்களைத் தவிர எவருமில்லை. அப்படியானால் அல்லாஹ்வின் மன்னிப்பை விட்டு நீங்கி அதில் தேவையற்றிருப்பவர்களும் இருக்க முடியாது. இறைவன் திருமறையில் கூறுகிறான்: "மனிதர்கள் தேடிக் கொண்ட தீவினைக்காக உடனுக்குடன் அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் யாதொரு ஜீவனையும் விட்டு வைக்க மாட்டான்". (35:45)

எனவே மனிதன் அல்லாஹ்விடமிருந்து பெறப்போகிற நற்கூலிகள் அவன் புரிந்த நற்கிரியைகள் காரணமாக மாத்திரமல்ல. இருப்பினும் இந்த நற்கிரியைகள் அல்லாஹ்விடமிருந்து நற்கூலிகளைப் பெறுவதற்குரிய ஒரு சின்ன ஏதுவாகவும், ஒரு சின்னக் காரணமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அல்லாஹ்வினால் தன் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றி விட்டதனால் இறைவனின் மன்னிப்புத் தேவையில்லை என்று மனிதன் கருதிக் கொண்டால் அவனைப் போன்ற முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: 'உங்களுள் எவரும் தாம் செய்த நல்லமல்களால் மட்டும் ஒருபோதும் சுவனத்தில் பிரவேசிக்க முடியாது'. இதைக் கேட்ட ஸஹாபாக்கள் 'நாயகமே! தாங்களும் அப்படித்தானா? என்று கேட்டார்கள். அதற்கு 'நானும் அப்படித்தான். அல்லாஹ்வின் அருளும், கிருபையும், மன்னிப்பும் என்னைச் சூழ்ந்து கொள்ளவில்லையானால் நானும் சுவனத்தில் நுழைய முடியாது' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். வேறொரு ஹதீஸில்: 'வானங்களிலும், தன் பூமியிலுமுள்ள உயிரினங்கள் அனைத்தையும் சேர்த்து இறைவன் வேதனைப் படுத்தினால் கூட அவன் அவற்றுக்குத் தீங்கிழைத்தவனாக ஆகி விட மாட்டான். மாறாக அவற்றை இறைவன் தன் அருளால் அணைத்துக் கொண்டால் அவற்றின் வணக்க வழிபாடுகளைவிட இந்த அருள் தான் மேன்மைக்குரியதாக மிகைத்திருக்கும்' என்று நபியவர்கள் கூறினார்கள்.

மனிதர்களுக்காக அல்லாஹ்வின் மீது சில ஹக்குகள் பாத்தியதைகள் உண்டு என்று கூறுகிறவர்கள் பாத்தியதை என்ற வார்த்தையின் தாத்பரியத்தில் 'இறைவன் வாக்களித்துள்ள வாக்குறுதிகள்' என்ற கருத்தை நாடினால் அது குற்றமில்லை. ஏனெனில் இறைவனின் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறியேயாகும் என அவனே உறுதியளித்துள்ளான். அவன் என்றும் மெய்யுரைப்பவன் அல்லவா? ஒருபோதும் வாக்குறுதி பிறழ மாட்டான். அவன் தன் கிருபையாலும், நுண்ணிய ஞானத்தாலும் வாக்களித்ததற்கொப்பச் செயல்படுவதைத் தன்மீது கடமையாக்கி வைத்துள்ளான். 'வாக்குறுதி' என்ற கருத்துக்குட்பட்ட பாத்தியதையை (ஹக்கை) எடுத்துக் கூறி, அதன் பொருட்டால் பிரார்த்தனை செய்தால் அந்த பிரார்த்தனையின் சாரம் அல்லாஹ் நமக்களித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும்படி அவனை வேண்டுதலாகும். இதனால் குற்றமேற்படாது. நல்ல அமல்களை முன்வைத்துப் பிரார்த்தித்தாலும் குற்றமில்லை. ஏனெனில் நல்ல அமல்கள் என்பது அல்லாஹ்வின் நற்கூலிகளையும், மன்னிப்பையும் பெறுவதற்குரிய ஒரு காரணமாகும். அக்காரணத்தைக் குறிப்பிட்டுப் பிரார்த்தனை செய்தலும் அனுமதிக்கப் பட்டுள்ளது.

மேலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். மேற்கூறப்பட்ட ஹக்கு (பாத்தியதை) என்பதற்கு இறைவனின் வாக்குறுதி என்ற கருத்தைக் கண்டோம். இக்கருத்தை உள்ளடக்கிய பாத்தியதையைப் பொருட்டாக வைத்து துஆ கேட்கலாம் என்றும் கூறினோம். ஆனால் அத்துடன் அல்லாஹ்வின் வாக்குறுதி எவருக்குக் கிடைக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். துஆவின் போது இவற்றை மனதால் சிந்தித்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் வழிபட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படியென்றால் தானே அவனுடைய வாக்குறுதிகள் கிடைக்க முடியும்? அக்கிரமிகளுக்கும், பாவிகளுக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதிகள் ஒருபோதும் கிடைக்காது. இவர்கள் இந்த வாக்குறுதியைப் பொருட்டாக வைத்துப் பிரார்த்திப்பதற்குரிய அருகதையை இழந்து விடுகிறார்கள். இதனால் இவர்களின் பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுவது இல்லை. ஏனெனில் இவர்கள் தமக்குப் பொருந்தாத ஒன்றை எடுத்துக் கூறி அதன் பொருட்டாலல்லவா கேட்கிறார்கள். அப்படியானால் கேட்பது எங்கே கிடைக்கப் போகிறது?

ஒரு விஷயத்தை முன்னிறுத்தி அதைப் பொருட்டாகக் கொண்டு கேட்கப்படும் துஆக்களில் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும், அவனுடைய மேன்மைக்குரிய தன்மைகளையும், குணங்களையும் பொருட்டாகக் கொண்டு அதன் நிமித்தம் இறைவனிடம் கேட்டால் அந்த துஆவுக்கு பெறும் மதிப்பு இருக்கிறது. அங்கீகரிக்கப்படுவதற்கான அருகதையையும் இந்த துஆ அடைகிறது. ஏனெனில் 'இறைவா! நீ நேர்வழியில் செலுத்துகிறவ்ன், கொடைவள்ளல், உதவி ஒத்தாசைகள் புரிகிறவன், இப்படியெல்லாம் நீ இருப்பதின் பொருட்டால் என்னை நேர்வழியில் செலுத்துவாயாக! எனக்கு நீ அள்ளி வழங்குவாயாக! எனக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்தருள்வாயாக! எனக்கூறி நாம் பிரார்த்திக்கும்போது நமக்கு என்னென்ன விஷயங்கள் தேவையோ அவையனைத்துமே அல்லாஹ்வின் தன்மைகளுல் உட்பட்டவையாக இருக்கின்றன என நாம் ஏற்றுக் கொள்கிறோம். அத்தன்மைகளால் அல்லாஹ் வர்ணிக்கப்பட்டவனாகவும் நாம் விசுவாசிக்கிறோம். இதனால் நம் பிரார்த்தனைகளை விரைவில் அங்கீகரிப்பதற்குரிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டோமல்லவா!

அல்லாஹ்வின் மீதுள்ள பாத்தியதைகள் என்பதற்கு 'மனிதனுக்கு அவன் வாக்களித்திருக்கும் வாக்குறுதிகள்' எனும் விளக்கத்தைக் கண்டோம். இத்தகைய வாக்குறுதியின் நிமித்தம் பிரார்த்தனை செய்தல் அனுமதிக்கப்படுகிறது. வழிப்பட்டவர்களுக்கு நல்ல கூலி கொடுப்பதாகவும், கலப்பற்ற தூய்மையான நெஞ்சத்துடன் பிரார்த்தனை செய்பவர்களுடைய பிரார்த்தனைகளை அங்கீகரிப்பதாகவும் அவன் வாக்களித்துள்ளான். அவனுடைய இத்தகைய சொல்லுறுதியையும், சொல்நாணயத்தையும் தவிர வேறெந்த வகையான பாத்தியதைகளும் மனிதர்களுக்காக இறைவன் மீது இல்லை. அல்லாஹ் எக்காலமும் சொல்லுறுதிக்கு மாறு செய்யாதவன். இது பற்றி அவனே திருமறையில் கூறுகிறான்: "உம் இரட்சகன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்" (6:54). இன்னும் அல்லாஹ்வுடைய வாக்குறுதி முற்றிலும் உண்மையானது. அல்லாஹ்வை விட உண்மை சொல்பவர் யார்?" (4:122) என்று கூறியிருக்கிறான்.

மற்றொரு இடத்தில்: "இது அல்லாஹ்வுடைய வாக்குறுதி. அவன் தன் சொல்லுறுதியிலிருந்து பிறழுவதில்லை. எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்". (30:6) என்று கூறுகிறான்.

இன்னுமொரு இடத்தில் "அல்லாஹ் தனது தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியில் அவன் தவறி விடுவான் என்று (நபியே!) நீர் ஒருக்காலும் எண்ண வேண்டாம்" என்று கூறியுள்ளான். (14:47)

அனைத்து அறிஞர்களாலும் இந்த உண்மை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய வாக்குறுதி நிச்சயமாக நடக்கத்தான் போகிறது என்பதில் எவரும் சந்தேகிக்கமாட்டார்கள். இவ்வாக்குறுதியைச் செயல்படுத்துவதைத் தவிர்த்து வேறு ஒரு பாத்தியதையும் யாருக்கும் அல்லாஹ்வின் மீது இல்லை. வாக்குறுதியை நிறைவேற்றுதல் என்பதைத் தவிர வேறேதேனும் கடமை (ஹக்கு) அல்லாஹ்வின் மீது உண்டா என்பதில் மூன்று மாதிரியான அபிப்பிராய பேதங்கள் வந்திருக்கின்றன. ஒன்று: வாக்குறுதியை என்பதைத் தவிர வேறு எந்த ஹக்கும் அல்லாஹ்வின் மீது இல்லை. இரண்டு: அடியார்களோடு சேர்த்துப் பார்க்கும் போது செய்ய வேண்டிய சில விஷயங்களும் செய்யக் கூடாத சில விஷயங்களும் அல்லாஹ்வின் மீது இருக்கிறது.
மூன்றாவது: அவன் தனக்கே சில விஷயங்களை ஹராமாகவும், சில விஷயங்களை வாஜிபாகவும் ஏற்படுத்தி இருக்கிறான். எனவே அவன் எதைத் தன் மீது வாஜிபாக்கினானோ அது வாஜிபாகும். எதைத் தன் மீது ஹராமாக்கினானோ அது ஹராமாகும். முன்னர் கூறிய அபூதருடைய ஹதீஸும் இதைக் காட்டுகிறது. அக்கிரமம் அவனிடமிருந்து கூடாது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் அவனுக்குச் செய்ய முடியுமான எக்காரியத்துக்கும் ஒருபோதும் அக்கிரமம் என சொல்லப்பட மாட்டாது. அக்கிரமம் என்பது பிறருடைய உடைமையில் கையாடுவது அல்லவா! கண்டிப்பாக வழிப்பட்டே ஆகவேண்டிய காரியங்களுக்கு மாறு காட்டினாலும் அக்கிரமம் எனக் கூறலாம். ஆனால் இவ்விரண்டும் அல்லாஹ்விடம் சிந்திக்கவே முடியாது. அல்லாஹ் எவருக்கும் எதிலும் அக்கிரமம் செய்யவே மாட்டான்.

இதைத் தெளிவாக இறைவன் குறிப்பிடுகிறான்: "எவன் விசுவாசம் கொண்டவனாக இருந்து நற்கருமங்களைச் செய்கிறானோ அவன் தன்னுடைய நற்கூலியின் குறைவையோ, அக்கிரமத்தையோ பயப்படமாட்டான்". (20:112)

மேலும் இறைவன் கூறுகிறான்: "நிச்சயமாக அல்லாஹ் ஒரு அணுவளவும் அநியாயம் செய்வதில்லை. ஆயினும் நன்மை இருந்தால் அதனை இரட்டித்துக் கொடுப்பான். மகத்தான கூலியையும் தன்னிடமிருந்து வழங்குவான்". (4:40) "நாம் அவர்களுக்கு அக்கிரமம் செய்யவில்லை. ஆனால் அவர்கள் தமக்குத்தாமே அக்கிரமம் செய்து கொண்டார்கள்". (11:101)

(வாக்குறுதி என்ற) இக்கருத்துக்குட்பட்ட அல்லாஹ்வின் மீதுள்ள பாத்தியதையை எடுத்துக்கூறி அதைப் பொருட்டாகக் கொண்டு பிரார்த்தித்தாலும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப் படுவதற்குரிய ஒருசிறு (ஏது) காரணமேயொழிய வேறொன்றையும் கருதி விடக்கூடாது. வணக்க வழிபாடுகள் புரிகிறவர்கள் தத்தம் பிரார்த்தனையில் இப்படித்தான் நினைத்தார்கள். அல்லாஹ் கூலி கொடுப்பதாகக் கூறியுள்ளதை எடுத்துக் கூறிக் கேட்கையில் அது தனது துஆ அங்கீகரிக்கப் படுவதற்குரிய ஓர் ஏதுவாக நினைத்துக் கொண்டே அதனைப் பொருட்டாகக் கொண்டு பிரார்த்தனைகளில் சேர்த்துக் கொண்டார்கள்.

ஆனால் ஒருவன் தன் பிரார்த்தனையில் இன்னொருவனின் பொருட்டை எடுத்துக் கூறினான் என்று வைத்துக் கொள்வோம். இவ்விரண்டாவது உள்ளவன் அல்லாஹ்விடத்தில் நல்லவனாக இருந்தான். அவனுடைய சில வாக்குறுதிகளைப் பெறுவதற்கும் அருகதை படைத்திருந்தான் என்றும் கற்பனை செய்வோம். ஏனெனில் அவன் கலப்பற்ற இறைவிசுவாசியாக இருந்தான். நல்ல செயல்களைப் புரிந்தான். ஏராளம் கூலிகள் பெறுகின்ற அளவுக்கு அல்லாஹ்வின் சொல்லுறுதிக்கு ஒத்தவனாக வாழ்ந்தான். இந்நிலையில் இந்த நல்ல மனிதனின் பொருட்டையும், அவனின் மதிப்பையும் எடுத்துரைத்து மற்றவன் பிரார்த்தனை செய்தால் இப்பிரார்த்தனையால் இவனுக்கு என்ன மதிப்புக் கிடைக்கப்போகிறது? இதில் பிரார்த்தித்தவனுக்கு ஒரு பயனுமில்லை. அல்லாஹ்வுக்கு முழுக்க வணங்கி வழிபட்டு கீழ்படிந்து நடந்தவனுக்கு மதிப்பையும், கண்ணியத்தையும் கொடுப்பதாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அவனுக்கு வேதனைகள் கொடுக்கப்பட மாட்டது என்றும், அவன் படித்தரத்தை உயர்த்துவதாகவும் கூறினான். இதன் நிமித்தம் இந்த ஹக்குகளைப் பொருட்டாகக் கொண்டு இன்னொருவன் பிரார்த்திப்பதில் பயனில்லை. இவ்வுண்மையை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிக் கொள்ள வேண்டும். இது தனக்குச் சம்பந்தமில்லாத ஏதோ ஒன்றை எடுத்துக்கூறி பிரார்த்திப்பதற்குச் சமமாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }