Saturday, October 01, 2005

வஸீலாவின் மூன்றாவது வகை*


வஸீலாவின் மூன்றாவது வகை அனுமதிக்கப்படாத வஸீலாவாகும். அதுவே நபிமார்கள், ஸாலிஹீன்கள் இவர்களைப் பொருட்டாக வைத்தும், மேலும் இவர்களைக் காரணம் காட்டியும், இவர்களை கொண்டு ஆணையிட்டும் அல்லாஹ்விடம் வஸீலா தேடுதல். இத்தகைய வஸீலா முழுக்க முழுக்க விலக்கப்பட்டிருக்கிறது. இந்த வஸீலாவிற்கு திருமறையும், ஸஹீஹான ஹதீஸும் ஸஹாபாக்களின் தீர்ப்புகளும் இமாம்களின் கொள்கைகளும் எதுவுமே சான்றாகாது. இதை அனுமதித்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில உலமாக்கள் மட்டுமே. பெரும்பாலான அறிஞர்கள் சிருஷ்டிகளைக் கொண்டு பிரமாணம் செய்து, ஆணையிட்டுப் பிரார்த்தித்தலை அனுமதிக்கவில்லை.

நபிமார்களாகவும், அவர்களைப் போன்ற சிருஷ்டிகளுக்காகவும் நேர்ச்சை நேர்தல், அந்த சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிடுதல், சத்தியம் செய்தல் போன்ற செய்கைகள் விலக்கப்பட்ட வினைகள் என அனைத்து அறிஞர்களும் ஏகோபித்துக் கூறியுள்ளனர். இந்த சத்தியம் நிறைவேறாதது போல நேர்ச்சை கடனையும் நிறைவேற்ற தேவையில்லை. இது விஷயத்தில் நேர்மையான தீர்ப்பும் இதுவே. ஏனெனில் இது ஷிர்க்கான நேர்ச்சையல்லவா. மேற்படி சத்தியத்திற்கு ஒப்ப நடக்காதவனுக்கு குற்றபரிகாரமும் வேண்டியதில்லை. அது நபியவர்களைக் கொண்டு சத்தியம் செய்தாலும் சரியே. இமாம்களான அபூஹனீபா, மாலிக், ஷாஃபிஈ, மேலும் அஹ்மத் பின் ஹன்பலின் ஒரு அபிப்பிராயம் இவை அனைத்தும் இந்த அபிப்பிராயத்தைக் கூறுகின்றன. ஒருசில ஆலிம்கள் இதற்கு வித்தியாசமாக சொல்கிறார்கள். சிருஷ்டிகளைக் கொண்டு அதுபோன்று மற்றொரு சிருஷ்டியின் மீதே சத்தியம் செய்ய கூடாது என்றால் சிருஷ்டிகளைக் கொண்டு அவற்றை படைத்த அல்லாஹ்வின் மீது எப்படி ஆணையிட முடியும்? என்பதை சிந்திக்க வேண்டும்.

சிருஷ்டிகளைப் பொருட்டாக வைத்து பிரார்த்திப்பவனுடைய விஷயத்திலும் இப்படி கூற முடியும். இவற்றை பொருட்டாக வைத்து பிரார்த்திப்பவர்கள் அவற்றை வழிபாடு, வணக்கம் என்று கூறியே செய்கின்றனர். அதனால் தம் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் என்றும் உறுதி கொள்கின்றனர். வணக்கம், வழிபாடு என்றெல்லாம் நினைக்க வேண்டுமானால் அவை வாஜிப், அல்லது ஸுன்னத் என்ற விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இத்தகைய விதிகளை விதித்தவர்கள் நபி (ஸல்) அவர்களாகவும் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தம் சமூகத்திற்கு இத்தகைய விதிகளை விதிக்கவில்லை என்றால் அவை வாஜிப், ஸுன்னத் என்ற தீர்ப்புகளுக்கு உட்பட்ட வணக்கமாக கருதப்பட மாட்டாது. இவை வணக்க, வழிபாட்டு இனத்தைச் சார்ந்தவையுமல்ல. பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப் படுவதற்குரிய காரணங்களாகவும் இல்லை. இதற்கு மாறாக எவர்கள் செயல்பட்டாலும் வழிகெட்டவர்களாக ஆகி விடுகின்றனர். இவர்களின் செய்கை நூதன அனுஷ்டானமாகவும் (பித்அத்தாகவும்) திரும்பி விடுகிறது. நூதன அனுஷ்டானங்கள் அனைத்தும் எக்காலமும் ஷரீஅத்தில் இடம்பெற்ற வணக்கமாகக் கருதப்பட மாட்டாதல்லவா.

ஒன்றைப் பொருட்டாக வைத்துக் கேட்கும் விஷயத்தில் (உயிருள்ள, உயிரற்ற சிருஷ்டிகள் அனைத்தும் சமமாக இருக்கின்றன.) கஃபாவை முன்னிருத்தியும், பொதுவாக இறையில்லங்களையும், தூர்ஸீனா மலையையும், அல்லாஹ்வின் அர்ஷையும் (சிம்மாசனத்தையும்) இவற்றையெல்லாம் ஏதுவாக வைத்து பிரார்த்திப்பதும், மேலும் எத்தனை பெரிய படைப்பானாலும் சரியே. அவற்றை ஏதுவாகக் காட்டிப் பிரார்த்தித்தல் விலக்கப்பட்டுள்ளது. முன்னர் நாம் விளக்கியதுபோல மனிதர்களின் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப் படுவதற்குப் பொருத்தமானவற்றை எடுத்துக் கூறி பிரார்த்திக்க வேண்டும்.

சிருஷ்டிகளைப் பொருட்டாகக் காட்டி அவற்றின் உரிமைகள் மீது ஆணையிட்டுப் பிரார்த்திக்கலாம் என அனுமதிப்போர் அறிஞர் சிலரின் சொற்களை ஆதாரமாகக் கொண்டிருக்கிறார்களே தவிர நபிகளுடைய ஸஹீஹான ஹதீஸை இவர்கள் காட்டவில்லை. கீழ்வரும் ஒரு ஹதீஸைப் போல பலவீனமான ஹதீஸ்களையே இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அந்த ஹதீஸை இமாம் அஹ்மதும், இப்னு மாஸாவும், அதாவது, 'பிரார்த்திப்பவர்களுக்காக உன்மீதுள்ள கடமையைக் கொண்டும், (ஹக்கைக் கொண்டும்) நான் நடந்துச் செல்லும் இந்த நடைப்பாதையின் பொருட்டாலும்' என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

இதை ஆதாரம் காட்டி சிருஷ்டிகளின் பொருட்டால் கேட்கலாம் என அனுமதிப்பவர்களுக்கு கூறிக் கொள்கிறேன். இதை அறிந்தவர்களின் பெயர் பட்டியலில் அனைத்து அறிஞர்களாலும் பலவீனமானவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட அதிய்யத்துல் ஊஃபி என்பவர் இடம் பெறுகிறார். இவருடைய உரைகள் சான்றாக எடுக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஹதீஸின் உரை எடுத்து விளக்கப்பட்டால் கூட அவர்களுக்குச் சான்றாக இந்த ஹதீஸில் எதையும் காண முடியாது. ஏனெனில் பிரார்த்திப்பவர்களுக்காக அல்லாஹ்வின் மீதுள்ள கடமை என்னவென்றால் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரிப்பதாகும். (அதாவது இஜாபத் துஆ). வணக்க வழிபாடுகள் செய்கிறவர்களுக்காக வேண்டி அல்லாஹ்வின் மீதுள்ள கடமை அவர்களுக்காக நற்பலன் (ஸவாப்) அருள்வதாகும்.

இப்படி துஆவை அங்கீகரித்தல் (இஜாபத் துஆ), வணங்குவோருக்கு நற்பலன் நல்குதல் (இஜாபத்துல் ஆபிதீன்) போன்ற கடமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் ஸிஃபாத்து (தன்மை)களாகும். இவற்றை அல்லாஹ் தன் மீதுள்ள ஹக்குகளாக அமைத்து மெய்யாகவே தன் அடியார்களின் மேற்கூறிய அமல்களுக்குப் பிரதிபலனாக கொடுப்பதாகவும் வாக்களித்துள்ளான். எனவே இந்த மாதிரியான துஆக்களைக் கொண்டு மனிதன்ன் பிரார்த்தித்தால் கூட இறைவனின் ஸிஃபாத்துகளை (தன்மைகளை) பொருட்டாகக் கொண்டு பிரார்த்தித்தல் என்ற துஆக்களில் தான் சேர்க்கப்படும். அன்றி மனிதர்களின் ஹக்குகளை முன்னிருத்திக் கேட்டால் தான் என்பதற்கு இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. இது அறிஞர்கள் இந்த ஹதீஸுக்கு தரும் விளக்கமாகும்.

குகைக்குள் அகப்பட்ட மூவரில் ஒவ்வொருவரும் தான் செய்த நற்கிரியைகளை எடுத்துக் கூறி பிரார்த்தித்தனர். அவர்களது அப்பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு குகையில் இருந்து விடுதலை பெற்றனர். இத்தகைய நற்கிரியைகள் செய்யுமாறு அல்லாஹ் மனிதர்களைப் பணித்திருக்கிறான். அவற்றை செய்தவருக்கு நல்ல பல கூலிகள் இருப்பதாக வாக்களித்தும் இருக்கிறான். எனவே அவர்கள் தாம் செய்த நற்கிரியைகளை எடுத்துரைத்துப் பிரார்த்தித்தனர். அதனால் வெற்றி பெற்றனர். அல்லாஹ் தனது வாக்குறுதியை அவர்கள் விஷயத்தில் நிறைவேற்றும் போது அவர்கள் வெற்றி பெருகின்றனர்.

"எங்கள் இறைவா! உங்கள் இறைவனை நம்புங்கள் என்று எங்களை நம்பிக்கையின் பால் அழைத்தோரின் அழைப்பை திட்டமாக நாங்கள் செவியுற்று விசுவாசம் கொண்டோம். ஆதலால் எங்கள் நாயனே! நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, பாவங்களிலிருந்து எங்களை விடுவித்து நல்லோர்களுடன் எங்களை மரிக்கச் செய்வாயாக!" (3:193) எனும் திருவசனம் இவ்வுண்மையை புலப்படுத்துகிறது.

மற்றொரு ஆயத்தில் அல்லாஹ் கூறுகிறான்; "என்னுடைய அடியார்களில் ஒரு வகுப்பார் 'இறைவனே! உன்னை நாங்கள் விசுவாசிக்கின்றோம். நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து எங்கள் மீது அருள் செய்வாயாக! அருள் செய்வோர்களில் எல்லாம் நீயே மிக்க மேலானவன்' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்" (23:109).

"நபியே! நீர் கூறும். 'இவற்றை விட மேலான ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? யார் (இறைவனுக்கு) பயந்து நடக்கிறார்களோ அவர்களுக்கு தம் இறைவனிடம் சுவனபதிகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் சதா ஓடிக்கொண்டே இருக்கும். அவற்றில் என்றென்றும் தங்கி விடுவார்கள். பரிசுத்தமான துணைகளும் உண்டு. அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கியவனாக இருக்கிறான்" (3;15-16).

ஸஹர் வேளையில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் 'இறைவா! நீ என்னை அழைத்தாய். இதோ வந்திருக்கிறேன். நீ என்னைப் பணித்தாய். எனவே உன் வணக்கத்திற்கென கண் விழித்து விட்டேன். இது ஸஹர் வேளை. என்னை நீ மன்னித்து அருள் செய்" என்று கூறுவார்களாம்.

சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிடுவதும், அவற்றைப் பொருட்டாக வைத்துக் கேட்பதும் வாஜிப், முஸ்தஹப் என்ற ஏவல்களுக்கோ அல்லது முபாஹ் என்ற அனுமதிக்கோ உட்பட்டிருத்தல் வேண்டும். சிருஷ்டிகளைப் பொருட்டாகக் கொண்டு கேட்பதற்கு அனுமதி உண்டு என்றால் படைப்பினங்களுக்கு இடையில் வேற்றுமை காட்டாமல் எல்லாச் சிருஷ்டிகளைக் கொண்டும் கேட்க அனுமதியுண்டு என்று சொல்லப்பட வேண்டும். அப்படி சொல்லப்பட்டால் எல்லா படைப்பினங்களைக் கொண்டும் கேட்க வேண்டும். அவற்றுள் சிறிது பெரிது என்று பிரிக்கவோ, வேறுபடுத்தவோ கூடாது. ஜின்கள், ஷைத்தான்கள் இவை அனைத்தைக் கொண்டும் வஸீலா தேட வேண்டுமென்று இவர்கள் அனுமதிக்க வேண்டியது அவசியமாகி விடும்.

ஆனால் சிருஷ்டிகளைக் கொண்டு வஸீலா தேடலாம் என்று அனுமதித்தவர்கள் மதிப்பிற்குரிய மாபெரும் படைப்புகளைக் கொண்டு மட்டுமே வஸீலா தேடுவதை அனுமதித்தோம் என்று கூறினால் அல்லாஹ் தன் திருமறையில் எவற்றைக் கொண்டெல்லாம் சத்தியம் செய்தானோ அவற்றைக் கொண்டெல்லாம் துஆ கேட்கலாம் என்பதையும், சத்தியம் செய்யலாம் என்பதையும் இவர்களின் வாதத்திற்கொப்ப ஏற்க வேண்டியது வரும். திருமறையில் இறைவன் இரவு, பகல், வானம், பூமி, சந்திரன், சூரியன், ஆத்மா இன்னும் எத்தனை எத்தனையோ சிருஷ்டிகளை மதித்து கண்ணியமான படைப்புகளாகக் கருதி அவற்றைக் கொண்டு சத்தியம் செய்து பற்பல விஷயங்களைக் கூறுகிறான். சிருஷ்டிகளைக் கொண்டு கேட்கலாம் என்று அனுமதித்தவர்கள் மேற்கூறப்பட்ட வற்றையெல்லாம் எடுத்து அவற்றைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கலாம் என்றோ, சத்தியம் செய்யலாம் என்றோ கூற முடியவில்லை. ஒரு முஸ்லிமால் இதைக் கூறவும் முடியாது.

வானம், பூமி, சூரியன், சந்திரன், இரவு, பகல், கடல், மலை இவை அனைத்தும் அல்லாஹ்வின் மாபெரும் படைப்புகளாகும். இவை அவனுடைய ஏகத்துவத்தையும், பரிபாலனத்தையும் எடுத்தியம்பும் பெரும் அத்தாட்சிகள். அகில உலகமனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற தன்மையை (ருபூபிய்யத்) எடுத்துக் காட்டும் மாபெரும் ஆதாரங்கள். அவனுடைய ஞானத்தையும், ஆற்றலையும், நாட்டத்தையும், அருளையும், நுணுக்கத்தையும், கம்பீரத்தையும், மரியாதையையும், மகத்துவத்தையும் வெளிப்படுத்திக் காட்டுகின்ற மேன்மைக்குரிய சிருஷ்டிகளாக இவை இருப்பதனால் அல்லாஹ் இவற்றைக் கொண்டு சத்தியம் செய்து ஆணையிட்டுக் கூறுகிறான். இவற்றிற்கு இறைவன் மதிப்பையும் அளித்ததனால்தான் இப்படி இவற்றைக் கொண்டு சத்தியம் செய்கிறான்.

ஆனால் சிருஷ்டிகளாக உள்ள நமக்கு இதுபோன்ற எத்தனை பெரிய படைப்பானாலும் சரியே. அதைக்கொண்டு சத்தியம் செய்வதற்கு அனுமதியில்லை. இது தெளிவான சான்றாகும். அனைத்து அறிஞர்களாலும் நிரூபிக்கப்பட்ட ஒரு சட்டமுமாகும். இதில் எந்த முஸ்லிமுக்கும் மாறு செய்ய இயலாது. மாறு செய்தால் விலக்கப்பட்ட ஷிர்க்கில் நுழைந்து விடுவான். அதுமட்டுமல்ல. படைப்புகளில் மேற்கூறப்பட்டவற்றைக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பவன் எதை எடுத்தாலும் அதைக் கொண்டு ஆணையிடத் தயங்க மாட்டான். ஆண், பெண், மலக்கு, நபி, ஜின், காற்று, மழை, மேகம், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், வானம், பூமி, இரவு, பகல், மரம், அத்தி, ஸைத்தூன் (ஒலிவம்), மலை, கடல், தூர்ஸீனா மலை, அரஃபா, முஸ்தலிஃபா, ஸஃபா, மர்வா, மக்கா, மற்றும் வணக்கம் செலுத்தப்படும் சாமிகள், ஈஸா நபி, மேலும் உஸைர் அனைவருமே இம்மனிதனுக்கு சத்தியம் செய்யப்படும் கருவிகளாக இருக்கும். இதனால் அவன் சன்மார்க்கத்தை விட்டும் வெளியேற வேண்டிய நிலைமையும் வந்து சேருகிறது. இவை அனைத்தும் தீனுல் இஸ்லாமில் வெறுக்கப்பட்ட பயங்கரமான பாவச் செய்கைகளும், பித்அத்துகளுமாகும். எல்லோருக்கும் இதன் தீமைகள் வெளிப்படையாகத் தெரிந்து விடும். ஏனெனில் சிருஷ்டிகளில் மேற்கூறப்பட்டவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய அனுமதிப்பவன் எதைக் கொண்டும் சத்தியம் செய்வான். தரீக்காக்களின் ஷைகுமார்களும், பீர்மார்களும் கொடுக்கின்ற தஃவீஸுகளையும், காப்பு நூல்களையும் வைத்து சத்தியம் செய்வான். இதனால் குஃப்ரிய்யத்தும், ஷிர்க்கும் வந்து அனைத்து நபிமார்களும் பின்பற்றிய சத்திய இஸ்லாத்திலிருந்து மனிதனை அப்புறப்படுத்தி விடுகிறது.
*தவஸ்ஸுல், வஸீலாவை மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம். ஒன்று: பெருமானாரைக் கொண்டு அவருக்கு வழிபட்டு (அல்லாஹ்வின்பால் நெருங்குவதை) வஸீலா தேடுதல். இந்த தாத்பரியத்திற்குட்பட்ட வஸீலாவைத் தேடுதல் அனைவர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. இரண்டு: நபியின் பிரார்த்தனையையும், ஷபாஅத்தையும் கொண்டு வஸீலா (அல்லாஹ்வை சமீபிக்கத்) தேடுதல். இதுவும் பயனளிக்கின்ற வஸீலாவாகும். மூன்றாவது வகை மேலே விவரிக்கப்படுகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }