Thursday, February 23, 2006

பிரார்த்தனையின் படித்தரங்கள் (2)


முந்தைய நபிமார்களின் ஷரீஅத்துக்களிலும் ஷிர்க் அனுமதிக்கப் படவில்லை.

இறைவனுக்கு இணைவைத்தல் என்பது நபி (ஸல்) அவர்கள் மட்டும் விலக்கிய ஒரு பாவமல்ல. மாறாக அனைத்து நபிமார்களும் தம் ஷரீஅத்துகளில் இத்தகைய ஷிர்க்குகள் பரவுவதைத் தடுத்தார்கள். இறந்துப் போனவர்களைக் கூப்பிட்டு பிரார்த்திக்காதீர்கள் என்றும், ஷிர்க்கான அனுஷ்டானங்களைச் செய்யாதீர்கள் என்றும் நபி மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ரவேலர்களைத் தடுத்திருந்தார்கள் என்று தௌராத்தில் வருகிறது. மனிதன் இத்தகைய அமல்களைச் செய்வதனால் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகிறான் என்றும் அவர்கள் கூறினார்கள். ஏனெனில் அனைத்து நபிமார்களின் மார்க்கமும் ஒன்றே. ஆனால் நடைமுறை விதிகள் சில மட்டுமே ஒவ்வொரு நபிக்கும் வெவ்வேறாக இருக்கும். இந்த உண்மையை நபி (ஸல்) அவர்கள் விளக்கியபோது, 'நாங்கள் நபிமார்கள் சமூகம். எங்கள் அனைவரது மதமும் ஒன்றே' என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

இறைவனும் இதைக் குறிப்பிடுகிறான்: "(மூமின்களே!) நூஹுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் மார்க்க சட்டமாக இறைவன் விதித்துள்ளான். ஆகவே (நபியே!) நான் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததும் (ஏக தெய்வக் கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநாட்டுங்கள். அதில் பிரிவினை செய்யாதீர்கள் என்பதேயாகும். எனவே உமது இந்த அழைப்பு இணை வைத்து வணங்குவோர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும்" (42:13). மேலும் இறைவன் கூறினான்: "(நாம் அனுப்பிய தூதர்களிடம்) தூதர்களே! நீங்கள் நல்ல உணவுகளைப் புசியுங்கள். நற்காரியங்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கறிந்து கொண்டிருக்கிறேன். உங்களுடைய இந்த சமுதாயம் ஒரே சமுதாயம் என்பது நிச்சயம். நான் உங்களுடைய இறைவன். ஆகவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள். (ஆனால் யூதர்கள்) தங்களுடைய மார்க்க விஷயங்களில் பற்பல பிரிவுகளாகப் பிரிந்து கொண்டு ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோசப்படுகின்றனர்". (23:52-53)

இன்னும் அல்லாஹ் கூறுகிறான்: "(நபியே!) நீர் உம் முகத்தை இஸ்லாமிய மார்க்கத்தின் பால் முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! அல்லாஹ் மனிதர்களை சிருஷ்டித்த வழியே அவனுடைய இயற்கை வழியாகும். அல்லாஹ்வின் சிருஷ்டியை எவராலும் மாற்றி மறிக்க இயலாது. இதுவே நிலையான வழி. எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்ள மாட்டார்கள். (விசுவாசிகளே!) நீங்கள் அவன்பால் திரும்ப வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். ஆகவே அவனுக்கஞ்சி தொழுகையை கடைபிடியுங்கள். இணை வைத்து வணங்குவோரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்க்கத்தை வெவ்வேறாகப் பிரித்து பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர். ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதைக் கொண்டு சந்தோசப்படுகின்றனர்". (30:30-32)

இவ்வாறாக, திருமறை வசனங்களை ஆய்ந்தால் முற்கால மக்கள் பிற்காலத்தோரைப் போன்றே ஷிர்க்கை விட்டும் விலக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகும். எல்லா நபிமார்களும் இதைத் தம் சமூகத்தாருக்குப் போதிப்பதில் ஏகமனதாகப் பாடுபட்டிருக்கிறார்கள்.

இதுவரை நாம் கூறிய சான்றுகளிலிருந்து பொய்யையும் மெய்யையும் விளங்கிக் கொண்டோம். அல்லாஹ்வும் அவன் தூதரும் எதை ஏவியிருக்கிறார்கள் எதை விலக்கியிருக்கிறார்கள் என்பவை தெளிவாகத் தெரிந்திருக்கும். அகிலத்தின் அனைத்து சிருஷ்டிகளிலும் சிறந்தவர்களான, மேலும் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியம் வாய்ந்த இறுதிதூதர், மனித சமூகத்திலே தலைசிறந்து விளங்கும், மேலும் அனைத்து நபிமார்களில் புனிதரான, சிபாரிசு செய்யும் எல்லோரையும் விட அல்லாஹ்விடத்தில் மிக அந்தஸ்துக்குரிய நபியைக் கொண்டு அவர்களின் பொருட்டால் வஸீலா தேடுவதும், அவர்களைக் கொண்டு சத்தியம் செய்வதும் விலக்கப்படுமானால், பதவியில் குறைந்த மற்ற நபிமார்கள், ஸாலிஹீன்கள் இவர்களைக் கொண்டெல்லாம் சத்தியம் செய்து சபதமிட்டு, இவர்களின் ஹக்கைக் கொண்டும் வஸீலா தேடி, இவர்களின் கப்றுகளில் சென்று பக்தி பிரவாகத்துடன் தலைகுனிந்து வழிபட்டுப் பிரார்த்திப்பதைப் பற்றி ஷரீஅத்தின் தீர்ப்பு என்னவென்பதை ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு மய்யித்துகளைக் கொண்டு மழை தேடிப் பிரார்த்திப்பதோ, தம் தேவைகளை மய்யித்திடம் கேட்பதோ அறவே கூடாது. கண்பார்வையை விட்டு மறைந்திருக்கும் ஷெய்குமார்களைக் கொண்டு வஸீலா தேடுவதும் அறவே கூடாது. 'யா ஸய்யிதீ! எனக்குதவும். என் தேவைகளைப் பூர்த்தி செய்து தாரும்' என்றெல்லாம் கேட்பது அறவே கூடாது. அல்லாஹ்வும், ரஸூலும் இதை ஹராமாக்கியிருக்கிறார்கள். இதை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கியிருத்தல் வேண்டும்.

இப்படி சிருஷ்டிகளைக் கொண்டு கப்றருகில் நின்று உதவி தேடுகிறவர்கள் சிலை வணங்கிகளின் இனத்தைச் சார்ந்தவர்களாவர். ஷைத்தான் அவர்களை வழிகெடுக்க ஆரம்பித்தான். சிலை வணங்கிகளைப் போல இவர்களும் வழிகெட்டு விட்டார்கள். எந்த மய்யித்தைக் கொண்டு வஸீலா தேடினார்களோ அதே மய்யித்தின் உருவத்தில் ஷைத்தான் நடித்து ஆள்மாறாட்டம் செய்கிறான். சோதிடர்களிடத்தில் ஷைத்தான் உரையாடுவது போல இவர்களிடத்திலும் ஷைத்தான் உரையாடுகிறான். முகாஷபாவின் (உதயமாகுதல்) அடிப்படையில் எது எதையோ காட்டுகிறான். இவற்றுள் சில உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் பொய்யே மிகைத்து நிற்கும். ஷைத்தான் இவர்களின் சில தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கிறான். இவர்களின் சில விருப்பு, வெறுப்புகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. இதனால் இவர்கள் கப்றிலிருந்து 'ஷெய்கு' எழுந்து வந்து என்னவெல்லாமோ செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தம் ஷெய்கின் வடிவத்தில் ஒரு மலக்கை உருவாக்கி இதை செய்யப்படுகிறது என்றும் சிலர் எண்ணுவது உண்டு. இது ஷெய்கின் அந்தரங்க மர்மங்கள் என்று தமக்குள்ளே பேசிக் கொள்கிறார்கள். ஷைத்தானைக் கொண்டு உதவித் தேடிய இம்மனிதனை வழி கெடுத்து முஷ்ரிக்காக்குவதற்காக அவன் ஷெய்கின் உருவத்தில் ஆள்மாறாட்டம் செய்வதை இவர்கள் புரியவில்லை. இவையெல்லாம் சிலைவணங்கிகளை ஷைத்தான் வழிகெடுப்பது போல இருக்கிறது. இவர்களின் சில தேவைகளையும் அவன் நிறைவேற்றிக் கொடுக்கிறான் அல்லவா? இவையெல்லாம் அன்று அரபிகளிலுள்ள முஷ்ரிக்குகளிடத்தில் காணப்பட்டிருந்தன. இன்று இந்தியாவிலும், துருக்கியிலுமுள்ள முஷ்ரிக்குகளிடத்திலும். ஏனைய முஷ்ரிக்குகளிடத்திலும் காணப்படுகின்றன.

மறைவாக இருக்கையில் என்னையும், மற்றவர்களையும் உதவி தேடிப் பிரார்த்தித்த மக்கள் சிலரின் சம்பவங்கள் இதைவிட விசித்திரமானவை. நான் ஊரை விட்டு பயணமாகி வெளியூர் சென்றபோது என்னைக் கொண்டு சிலர் உதவித் தேடினார்களாம். அந்நேரம் நான் விண்வெளி மார்க்கமாகப் பறந்து வந்து அவர்களிடம் விஜயம் செய்து ஏதேதோ தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்ததாகக் கண்டார்களாம். ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதை நான் செவிமடுத்த போது அவர்களுக்கு உண்மையை விளக்கிக் கூறினேன். 'ஷைத்தான் என்னுடைய கோலத்திலும், ஷெய்குமார்களுடைய கோலத்திலும் ஆள்மாறாட்டம் செய்து உங்களுக்கு முன்னால் காட்சியளித்து எதையெதையோ காட்டி அதை நீங்கள் ஷெய்குடைய கராமத்து என்று நம்புவதற்காக இதைச் செய்தானே தவிர உண்மையில் நான் அப்படி வரவில்லை' என்று கூறினேன்.

ஷெய்குமார்களைக் கொண்டு உதவி தேடுதல் என்ற வழிகேட்டிலிருந்து கிறிஸ்தவர்களும் தப்பித்துக் கொள்ளவில்லை. 'அல்லாஸ்' என்ற ஷெய்கைக் கொண்டு உதவி தேடினால் அவர் வந்து நமது சில தேவைகளை நிறைவேற்றி வைக்கிறார் என்று நம்பியிருந்தார்கள். இப்படி காலஞ்சென்ற நபிமார்கள், ஸாலிஹீன்கள், ஷெய்குமார்கள், அஹ்லுல் பைத்துகள் (நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர்) இவர்களைக் கொண்டெல்லாம் உதவித்தேடிப் பிரார்த்திப்போரின் இலட்சியம் ஏதோதோ தம் சில தேவைகள் அவர்கள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதாகும். இத்தகைய ஏதேனும் சில விஷயங்கள் நிறைவேற்றப்பட்டால், மேற்கூறப்பட்ட ஷெய்குமார்களைக் கொண்டு உதவி தேடியதால் காரியங்கள் நிறைவேறின என்றும், அற்புதச் செய்கைகள் கருதிக் கொள்கிறார்கள். சில வேளைகளில் தாம் உதவி தேடிய ஷெய்கின் கப்றருகில் வந்துப் பிரார்த்திக்கின்ற வேளையில் விண்வெளியிலிருந்து உணவும், ஆயுதமும், மற்றும் தாம் விரும்பியவைகள் எல்லாம் இறங்குவதாகப் பார்க்கக் கூடியவர் இதையும் தம் ஷெய்கின் கராமத்துகள் என்று கருதிக் கொள்வார். இவையாவும் ஷைத்தானின் சதி மோசங்கள் என்பதில் சந்தேகமேயில்லை. விக்கிரகங்கள் வணங்கப் படுவதற்குரிய காரணங்களில் இவை முக்கியமானவையாகும்.

நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் இத்தகைய ஷைத்தானின் வித்தைகளிலிருந்து இரட்சிப்புப்பெற அல்லாஹ்வைப் பிரார்த்தித்தார்கள்: "என்னையும், என் மக்களையும் விக்கிரகங்களை வணங்காது நீ இரட்சித்துக் கொள்வாயாக! இறைவா! நிச்சயமாக இவ்விக்கிரகங்கள் மனிதர்களில் பலரை வழிகெடுத்து விட்டன". (14:35-36)

கல்லாலான விக்கிரகங்களுக்கு மனிதர்களில் பலரை வழிகெடுக்கும் சக்தியில்லை என்று ஏற்றிருந்தார்கள். மேலும் ஆகாயங்களை, பூமியைப் படைப்பதில் அவற்றுக்குப் பங்குண்டு என்றும் சிலை வணங்கிகளில் எவரும் கூறவில்லை. இருப்பினும் அக்கற்களை செதுக்கி அவற்றை வணங்குவதினால் இச்சிலைக்கு உரியவர்களான நன்மக்கள் தமக்காக அல்லாஹ்விடத்தில் நடுவர்களாக வந்து சிபாரிசு செய்வார்கள் என்று கருதினார்கள். நபிமார்கள், ஸாலிஹீன்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற அனைத்து படைப்பின் உருவத்திலும் கற்களைச் செதுக்கி அவற்றை வணங்கினார்கள். ஜின்களையும், மலக்குகளையும் வணங்கினார்கள். அவர்களுடைய வணக்கத்தின் இலட்சியம் கற்களை வணங்க வேண்டுமென்பதல்ல. இக்கற்களின் வடிவத்திற்குச் சொந்தமான நபிமார்கள், மலக்குகள், ஜின்கள் போன்றவர்களை வணங்குவது தான் இவர்களின் இலட்சியமாக இருந்தது. ஷைத்தானும் இவர்களின் இலட்சியத்திற்கொப்ப இசைந்து வழிகோரினான். மெய்யாகவே இவர்கள் ஷைத்தானுக்கு வழிபடவும் செய்தார்கள். திருமறையில் இதை இறைவன் விளக்கிக் காட்டுகிறான்: "(மலக்குகளை வணங்கிக் கொண்டிருந்தோர்) அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளில் மலக்குகளை நோக்கி 'உங்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்தானா?' என்று கேட்கப்படும் போது, 'எங்கள் இறைவனே! நீ மிகப் பரிசுத்தமானவன். நீதான் எங்கள் இரட்சகன். அவர்களல்ல. இவர்கள் ஜின்களையே வணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெருபாலோர் அவர்களையே (அந்த ஜின்களையே) விசுவாசித்துமிருந்தார்கள்' என்று பதில் அளிப்பார்கள்". (34:40-41)

சிலைகளை வணங்கி வழிபடுகிறவர்கள் தாம் ஷைத்தான்களை வணங்குவதாக ஏற்று அவற்றை வணங்குவதில்லை. தமது மன ஆறுதலுக்காக மலக்குகள், நபிமார்கள், ஸாலிஹீன்கள் என்று இவர்கள் நல்லெண்ணம் வைப்பவர்களைத் தான் வணங்குவதாகக் கருதி சாந்தி அடைகின்றனர்.

மற்றொரு சாரார் ஜின்களுக்கு வழிபடுவதை ஹராம் என்று கருதாமலிருந்தார்கள். மனிதனின் தோற்றத்தில் ஆள்மாறாட்டம் செய்த ஷைத்தானிடம் கேட்கின்ற வேளையில் தமக்கு ஸுஜுது செய்ய வேண்டுமென்றும், வெறுக்கத்தக்க பல செய்கைகள் செய்ய வேண்டுமென்றும், மது அருந்த வேண்டுமென்றும் ஷைத்தான் தேவைப்படுவதுண்டு. செத்த பிணங்களைக் கொடுக்க வேண்டுமென்றும் தேவைப்படுவான். பலர் இதைத் தெரிவதில்லை. தம்முடம் உரையாடியவர் மலக்கு என்றும் ஜின் இனத்தைச் சார்ந்தவர் என்றும் கூறி மறைவான மனிதர்கள் என்று இவர்களுக்கு பெயரும் சூட்டி விடுகிறார்கள். மறைவான மனிதர்களைப் பற்றி இவர்கள் அல்லாஹ்வின் அவ்லியாக்கள், கண்பார்வைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூறி விடுகிறார்கள். உண்மையில் இவர்கள் மனித உருவில் நடித்த ஜின்களாகும்.

மனிதன் ஜின்னிடம் இரட்சிப்புக் கோருவதுபற்றி திருமறையில் இறைவன்: "மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர் ஜின்களிலுள்ள ஆண்களில் பலரிடம் சென்றி இரட்சிக்கக் கோருகின்றனர். இதனால் அவர்களின் கர்வம் அதிகரித்து விட்டது" (72:6) என்று கூறுகிறான். அன்று ஏதேனுமொரு அச்சம் தரும் பள்ளத்தாக்கு எதிலும் ஒரு மனிதர் சென்றால், 'இந்தப் பள்ளத்தாக்கின் பெரியவனைக் கொண்டு இதிலுள்ள மடையர்களின் தீங்குகளை விட்டும் காவல் தேடுகிறேன்' என்று கூறுவாராம். மேலும் அன்று மனிதர்கள் ஜின்களை விட்டும் காவல் தேடினார்கள். இவையனைத்தும் ஜின்கள் வரம்பு மீறுவதற்குரிய காரணங்களாக அமைந்தன. எங்களைக் கொண்டு மனிதர்கள் பாதுகாவல் தேடுகின்றனர் என்று ஜின்கள் கூறுமளவிற்கு மனிதர்கள் நடந்து கொண்டனர். ஜின்களிலுள்ள சிலரின் பெயர்களைக் கையாளுகின்ற அஜமிகளின் மாந்திரீக வேலைகள், ஓதிப்பார்த்தல் எல்லாம் இப்படியே மனிதனை வழிகெடுக்கக் கோருகின்றன. மக்கள் இவர்களை அழைத்துப் பிரார்த்தித்து உதவி கோரி தாம் பெரிதாகக் கருதியவற்றைக் கொண்டெல்லாம் சத்தியம் செய்கின்றனர். இதனால் சில விஷயங்களில் இவர்களுக்கு ஷைத்தான் வழிபட்டு விடுகிறான். இவையனைத்தும் சூனியம் செய்வதைப் போன்றதாகும். இறைவனுக்கு இணை வைப்பதைப் போன்றதாகும். இறைவன் கூறினான்: "மேலும் அவர்கள் ஸுலைமானுடைய ஆட்சியைப்பற்றி ஷைத்தான்கள் ஓதிக்காட்டிக் கொடுத்தவற்றைப் பின்பற்றினார்கள். ஸுலைமான் காஃபிராக இருக்கவில்லை. அந்த ஷைத்தான்கள் தான் காஃபிர்களாக இருந்தார்கள். அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும், பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டவற்றையும் கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவ்விருவரும் 'நாங்கள் சோதனையாக இருக்கிறோம். நீங்கள் காஃபிர்களாக ஆகிவிட வேண்டாம்.' என்று கூறும்வரையில் அவர்கள் யாருக்கும் அதனைக் கற்றுக் கொடுக்கவில்லை. எனவே கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை உண்டு பண்ணக் கூடிய உபாயத்தை அவ்விருவரிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதைக் கொண்டு அவர்கள் ஒருவருக்கும் தீங்கிழைத்து விட முடியாது. அன்றி அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர அவன் எதை விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை என்பதைத் தெளிவாக அறிந்திருக்கிறார்கள். அன்றி தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது கெட்டதாகும். அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?. (2:102)

கப்றில் இருப்பவரைக் கொண்டு உதவி தேடிப் பிரார்த்திக்கும்போது கப்றருகில் பற்பல காட்சிகள் காட்டப்படுகின்றன. ஷைத்தான்கள் இவர்களைத் தூக்கி மக்காவுக்கும், மற்ற இடங்களுக்கும் கொண்டு செல்கின்றன. இந்த கப்றிலிருப்பவன் சில நேரங்களில் இறைவனை நிராகரிக்கின்ற நாஸ்திகனாகவும், தொழுகை மற்றும் அல்லாஹ், ரஸூலின் இதர கடமைகளையும் மறுத்துக் கூறியவனாகவும் இருப்பான். அல்லாஹ்வும், ரஸூலும் ஹராமாக்கியவற்றை இந்தக் கப்றிலிருப்பவன் ஹலால் எனக் கருதியிருப்பான். இத்தகைய பெரும் குற்றங்களும், பாவங்களும், குஃப்ரிய்யத்தான செயல்களும் இவனிடம் இருந்ததினால் தான் ஷைத்தான்கள் இவனிடம் அணுகினார்கள். இவர்கள் அல்லாஹ்வையும், ரஸூலையும் நம்பி இவர்களுக்கு வழிபட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் இந்த ஷைத்தான்கள் நிச்சயமாக அவனிடமிருந்து பிரிந்து விடுவார்கள். ஷைத்தான்களின் ஊசலாட்டங்கள் இவர்களிடத்தில் எந்த தீயபலனையும் அளிக்காது.

இம்மாதிரியான பலரை நான் ஷாமிலும், மிஸ்ரிலும், ஹிஜாஸிலும், யமனிலும் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். இதைவிடப் பயங்கரமான பித்அத்துகளும், ஷிர்க்குகளும் இராக்கிலும், துருக்கியிலும், குராஸானிலும் நடைபெறுகின்றன. முஷ்ரிக்குகள் வாழும் பூமிகள்தான் இம்மாதிரி வேலைகளுக்குரிய உறைவிடமாகும். நிராகரிப்பு, இறைவனுக்கு மாறு செய்தல், குற்றங்கள் அதிகம் புரிதல் போன்ற காரணங்களினால் ஷைத்தானின் சக்தியும், வழிகேடும் அதிகப்படுகின்றன. எங்கெல்லாம் ஏகத்துவம் பலமாக இருக்கிறதோ அங்கும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகள் எங்கெல்லாம் அதிகமாகப் பின்பற்றப் படுகின்றனவோ அங்கும் ஷைத்தானின் மோசடிகளும், வழிகேட்டு வித்தைகளும் பயனளிக்காது. முஷ்ரிக்குகளின் சமூகத்தில் இம்மாதிரி சம்பவங்கள் மலிவாகக் காணப்படுவதற்குரிய காரணங்களும் இதுவே. இஸ்லாத்தைத் தழுவாத புத்தர்கள், தூனியா வகுப்பார், பக் ஷியாக்கள் போன்ற முஷ்ரிக்குகள் துருக்கியிலும், இந்தியாவிலும் உள்ள காஃபிர்களின் ஷெய்குமார்கள் ஆகியோரிடம் ஷைத்தானின் மோசடிகள் அதிகமாகக் காணப்படும். இவர்களில் சிலர் விண்ணிலே பறப்பது போலக் காணப்படுவார்கள். மறைவான விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். இன்னிசைக்குப் பயன் படுத்துகின்ற கொட்டும், வாத்தியமும் விண்ணில் பறந்து செல்வதைப்போல் காணப்படும். இந்த ஷைகுமார்களின் வழியை மீறுபவர்களின் தலை அடிக்கப்படும். அடித்தவரை யாரும் காணமாட்டார்கள். முஷ்ரிக்குகளின் ஷைகுமார்களின் தண்ணீர்ப் பாத்திரம் சுற்றுவது போன்று இன்னொரு காட்சி. அதை யார் தூக்கிச் செல்கின்றார்கள் என்பது பற்றி அறியப்பட மாட்டாது. அவர்களில் ஒருவரிடத்தில் யாராவது விருந்தாளி வந்து விட்டால் பல வகையான உணவுகளைக் கொண்டு அவர் கண்ணியப்படுத்தப் படுவார். உணவு எங்கிருந்து வருகிறது என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். இவையனைத்தும் ஷைத்தான்கள் மற்றவரிடமிருந்து திருடி இவர்களுக்குக் கொடுத்ததை அறிய மாட்டார்கள். இப்படிப் பற்பல செய்திகள் முஷ்ரிக்குகளிடமும், ஈமான் குன்றிய துருக்கியரிடமும், மற்றவரிடமும் நிறையக் காணப்படும். தாத்தாரியரிடத்தில் இன்னும் பல வகையான சம்பவங்களைப் பார்க்கலாம். இஸ்லாத்தைத் தழுவியவர்கள் ஏகத்துவத்தைத் தம் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டாமலும், நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றாமலும், ஷைகுமார்களையும், கண் மறைவில் உள்ளவர்களையும் அழைத்து அவர்களைக் கொண்டு உதவித்தேடி நடப்பார்களேயானால் கணிசமான முறையில் ஷைத்தான் அவர்களைக் கெடுத்து விடுவான். அவன் இவர்களைத் தூக்கி சில வேளைகளில் அரஃபாவில் ஹாஜிகளுடன் கொண்டு நிறுத்தி விடுகிறான். இஹ்ராம் கட்டாமலும், முஸ்தலிபாவில் இரவு தங்காமலும், தவாஃப் செய்யாமலும் தாம் ஹஜ் செய்ததாக நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் தமக்குஒரு பெரிய அவ்லியா கராமத் கிடைத்து விட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள். இவை அனைத்தும் ஷைத்தானின் விளையாட்டுகள் என்பதை இவர்கள் அறிய மாட்டார்கள். இது ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட ஹஜ் என்று இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர்கூட சொல்ல மாட்டார்கள். இதை வணக்கம் என்றோ, அவ்லியா கராமத் என்றோ கூறுகிறவன் வழி கெட்டவனாகவே இருப்பான். அன்பியாக்களோ, ஸஹாபாக்களோ இத்தகைய அமல்களைச் செய்யவில்லை. அலெக்ஸாந்திரியாவிலிருந்து அரஃபாவிற்குத் தூக்கிச் செல்லப்பட்ட சிலர், வானத்திலிருந்து மலக்குகள் இறங்கி ஹாஜிகளின் பெயர்களை எழுதுவதைப் பார்த்தபோது 'என்னுடைய பெயரை எழுதினீர்களா?' என்று கேட்டார்களாம். அதற்கு மலக்குகள் 'சாதாரன மக்கள் செய்தது போல நீங்கள் செய்யவில்லையே' என்றார்களாம். மேலும் மலக்குகள் 'நீ இஹ்ராம் கட்டவில்லை. கஷ்டங்களைச் சுமந்து கொள்ளவில்லை. பிரதிபலன் கொடுக்கக்கூடிய எந்த அமல்களையும் நீ செய்யவில்லை' என்று கூறினார்களாம்.

ஒரு ஷெய்கிடத்தில் (மேற்கூறப்பட்டவர்கள்) விண்வெளி மார்க்கம் சென்று ஹஜ் செய்வதற்கு அனுமதி தாருங்கள் என்று வேண்டிக் கொண்டபோது ஷெய்க் 'அல்லாஹ், ரஸூல் சொன்னதற்கொப்ப நீங்கள் ஹஜ் செய்யாததினால் இத்தகைய ஹஜ்ஜைக் கொண்டு இஸ்லாத்தின் கடமை நிறைவேறிவிடாது' என்று கூறினார்களாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }