Wednesday, April 05, 2006

சுயமதிப்பு!

மனிதன் வெறும் தசைகளாலும் எலும்புகளாலும் பின்னப்பட்ட விலங்கல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனும் உயிரோட்ட உணர்வுகளாலும் சிந்தனை பிணைப்புகளாலும் இணைக்கப்பட்டுள்ளான். ஒருவனின் புறவாழ்வில் நடைபெறும் செயல் முறைகள் அனைத்தும் அவனது சிந்தனையின் பிரதிபலிப்புகள் மாத்திரம் அல்ல. அவற்றில் உள ரீதியான காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன. அந்த வகையில் சுய மதிப்பு என்பது முக்கியமான இடத்தை வகிக்கின்றது. உள நோக்கில் கூறுவதாயின் " நான் நல்லவன் அல்லது நல்லவள்" என்ற மனோபாவமே சுயமதிப்பு எனப்படுகிறது. இன்றைய சமூகவியலில் சுயமதிப்பு "மனிதனுக்குக் கண்ணியத்தை வழங்கும் மூலபொருள்" எனக் கருதப்படுகிறது. நான் நல்லவன் என்பதை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது, சுயமதிப்பு எனப்படும் போது தான், தனது கெளரவத்தையும், ஆற்றலையும் உணரும் அதேவேளை, ஏனையோரது கெளரவத்தை மாசுபடுத்த அல்லது களங்கப்படுத்த தான் உரிமையற்றவன் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சுய மதிப்பு மானிடனாய்ப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் அவசியமாய் அமையும் போது, மனிதன் தனது ஆற்றல்கள் சுயத்தின் வரம்புகள் என்பவற்றை அறிந்துக் கொள்ளவும், தன்னைப் பற்றி நல்ல சுய உருவத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. ஏனெனில் சுய மதிப்பு ஒரு மனிதனின் சிந்தனையில் இரண்டரக் கலந்து விடும்போது அவன் தன்னைப் பற்றிய நல்லெண்ணத்தை வளர்த்து எனக்கும் சில ஆற்றல்கள் உண்டு என உணர்ந்து அவற்றை வெளிக் கொணர முன் வருகின்றான். அதே போன்று சமூகத்தில் பிறரைக் கண்ணியப்படுத்தவும், அவனது உணர்வுகளை மதிக்கவும், கருத்துக்கள், அபிலாஷைகள், அபிப்ராயங்கள் என்பவற்றை பொருட்படுத்தவும், சுயமதிப்பு சிறந்ததோர் தூண்டற் காரணியாக அமைகின்றது. இத்தகைய சுயமதிப்பைப் பெற்றவர்களே வரலாறு நெடுகிலும் பல்வேறு சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். ஏனெனில், தன்னை அளந்து பார்க்க மனிதனுக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது மனிதன் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றான். மேலும், சுயமதிப்பு மிகைத்து காணப்படும் ஒருவனில் தீய பண்புகள், கயமைத்தனம், மட்டகரமான உணர்வுகளின் வெளிபாடு என்பன மறைந்து உயர்ந்த மதிக்கத்தக்க செயற்பாடுகளை மேற்கொள்ளும் உணர்வு வளர்கின்றது, சிலர் சுயமதிப்பை மிகையாக கொண்டிருக்கின்றனர். இத்தகையோரின், தானே உயர்ந்தவன், அந்தஸ்த்துடையவன் என்ற எண்ணம் ஏனையோர்களை மதிப்பதை விட்டும், பொருட்படுத்துவதை விட்டும் தூரமாக்குகின்றது.

உண்மையில் சுயமதிப்பு என்பது தன்னைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட எண்ணம் அல்ல. இவ்வாறான எண்ணம் மனிதனைப் பிடிக்கும் போது அவனது உள்ளத்தில் கர்வம், அகம்பாவம்,மமதை போன்ற சமூக நோய்கள் வேரூன்றுகின்றன. சுயமதிப்புள்ளவர்கள் எப்போதும் சுய கட்டுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். ஏனெனில் தன்னை மதிக்கும் ஒருவர் கீழ்த்தரமான நெறிபிறழ்ந்த செயல்களில் ஈடுபட மாட்டார். தன்னைப்பற்றிய உயர்வான எண்ணம் உள்ளமையால் தாழ் மட்ட செயல்பாடுகளில் அவற்றைப் பாழாக்க முனையமாட்டார். தனது பலவீனங்களை பொருத்தமான முறையில் கையாளவும் பிறரின் நன்மதிப்பைப் பேணவும் முயல்வார். இவர் இவ்வாறு செயல்படக் காரணம் அவரது உள்ளத்தில் உருவான சுய கட்டுப்பாடும் அக்கட்டுப்பாட்டைக் கொண்டு வந்த சுயமதிப்புமாகும்.
சுயமதிப்பினை அழிப்பதில் வாழ்க்கைச் சூழலுக்கு பெரும் பங்குண்டு. சமூக ஒழுங்குகள் பேணப்படாத வாழ்விடங்கள், சேரிப்புறங்கள் போன்ற இடங்களில் வாழ்பவர்கள் சுயமதிப்பு அற்றவர்களாகவே உருவாக்கப்படுகிறார்கள்.

சுயதிறனில் அடைவின்மையும் சுயமதிப்பினை அழிக்கின்ற காரணியாக அமைகின்றது. எப்போதும் தோல்வியைத் தழுவுவதும், சுயமாகத்தேடிப் பெற்ற கணிப்பின்மையும் ஒருவர் தம்மில் மதிப்பினை எற்படுத்தாது தாழ்வான எண்ணத்தை வளர்த்துக் கொள்ளக் காரணமாக அமைகின்றது. எம்மில் அதிகமானோர் பல்வேறு ஆற்றல்களும் திறமையும் கொண்டிருந்தும் அடிப்படையில் அவரது உள்ளத்தில் வளர்ந்துள்ள தன்னைப்பற்றிய தாழ்வான எண்ணத்தாலும் தாழ்வுச் சிக்கலாலும் அவற்றை வெளிக்கொணராமல் தடுத்து விடுகின்றது. இதற்கு மூலகாரணம் உடனிருப்பவர்களின் எதிமாறான விமர்சனங்களும், அளவு கடந்த நகைப்புமாகும். இத்தகைய சுயத்துவப் பண்புகள் த்னி மனிதனில் அடிப்படையில் அமைந்திருக்கும் ஒழுக்க விழுமியங்கள், பண்பாட்டுப் பெறுமானங்கள் என்பவற்றைச் சிதைத்து சிதிலமாக்கி விடுகின்றது.ஏனெனில், இவை உளப்பாதிப்பினை ஏற்படுத்தி ஒருவன் சுயமதிப்பினை இழப்பதற்கு காரணமாக அமைகின்றது. மனித நாவுகளில் பிறக்கும் மோசமான வார்த்தைகள் ஆயுதங்களை விட கூர்மையானவை.

இத்தகைய வார்த்தைகள் தனிமனித உள்ளத்தைக் காயப்படுத்தி அவனை சமூக எதிரியாக மாற்றி விடுவதற்கு வழி செய்கின்றது. ஹிட்லர், லெனின் போன்றவர்களை வரலாறு கண்டு கொண்டதற்கு இதுவும் ஒரு மறைமுகமான காரணமாகும்.

சுயமதிப்பை தன்னில் வளர்த்துக் கொள்ள ஒரு மனிதன் அவசியம் பெற வேண்டிய ஆலோசனைகள்.......

தன்னைப்பற்றியதொரு உயர்வான எண்ணத்தை ஏற்படுத்தும் பொருட்டு தன்னைத்தானே பலம்- பலவீனம்- குறை நிறைகளோடு ஏற்றுக் கொள்ளப் பழகுதல்.

சுய ஆற்றல்கள் திறன்களை இனங்கண்டு என்னாலும் சில விசயங்களைச் செய்ய முடியும் என நம்பிக்கை கொண்டு செயலாற்றல்.

தனக்குள்ள நற்குணங்களையும், சிறந்த பழக்க வழக்கங்களையும் எண்ணிப் பார்த்து தனது உயர்வை மதித்தல்.

பிறரது தயவை அதிகம் எதிர்பாராது சுயதிறனில் நம்பிக்கை கொண்டு சுயமாகச் செயல்படல்.

அடையக்கூடிய இலக்குகளை மாத்திரம் கருத்திற்க்கொண்டு செயற்படல்.

No comments:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }