Sunday, August 13, 2006

கப்றுகளில் பள்ளி கட்டலாமா?

(மீள்பதிவு)

கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 'நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்' என்று கூறினார்கள்.

நூஹ் நபியவர்கள் மக்கள் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட முதல் தூதராவார்கள். நூஹ் (அலை) அவர்களின் 'சமூகத்தார் (ஒருவருக்கொருவர்) நீங்கள் உங்கள் தெய்வங்களை (வணங்காது) ஒதுக்கி விட்டீர்கள். வத்து, ஸுவாஉ, எகூஸ், யவூக், நஸ்ர் (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டு விடாதீர்கள் என்று கூறிக் கொண்டனர்' (71:23) இந்த ஆயத்தின் கருத்தைப் பற்றி ஸலபுஸ்ஸாலிஹீன்களின் கருத்தாவது: இந்த ஆயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சாமிகள் அனைவருமே நபி நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தில் தோன்றிய நன்மக்கள் ஆவார். இவர்கள் இறந்ததன் பின்னர் மக்கள் இவர்களின் கப்றுகளில் மண்டியிட்டு விழுந்தனர். அதற்குப் பின்னர் மக்கள் அவற்றை வணங்கினார்கள். இவை அரபிகளின் கரங்களில் வந்து சேர்ந்தன. பிறகு அரபிகள் தம் குடும்பங்களுக்கு இந்த சிலைகளின் பெயர்களைச் சூட்டினர் என்பதாகும்.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் வாயிலாக வந்த கீழ்காணும் ஹதீஸை தந்துள்ளார்கள்: 'கப்றுகளை பள்ளிகளாக அமைப்பதைத் தடுத்து அதனால் ஷிர்க்கை ஒழித்துக் கட்ட பெருமானார் (ஸல்) அவர்கள் நாடினார்கள். ஏக இறைவனுக்குத் தொழுதாலும் அத்தொழுகையை கப்றுகளில் பள்ளிவாசல்களை அமைத்து தொழக் கூடாது' என நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்கிறார்கள். இதை அறிந்த ஸஹாபாக்கள் தம் வாழ்க்கையில் இதை தவிர்த்துக் கொண்டார்கள்.

இதனால் தான் சூரியன் உதயமாகும் நேரத்தில் தொழக் கூடாது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்திருந்தனர். ஏனெனில் இந்நேரத்தில் இறைவனுக்கென்றே கருதி தொழுதாலும் சூரியனுக்காகப் பிரார்த்திப்பவர்களின் பிரார்த்தனைக்கு ஒப்பாகி விடுகிறது. கப்றில் நின்று அல்லாஹ்வுக்காக தொழுதாலும் கப்றாளியைக் கொண்டு உதவி தேடுகின்ற ஷிர்க்கான வணக்கத்தோடு ஒப்பாகி விடுகிறது. இதையெல்லாம் அறிந்த ஸஹாபிகள் தாமாக விலகிக் கொண்டனர்.

வஸீலா விஷயத்திலும் ஸஹாபிகள் நல்ல விளக்கம் பெற்றிருந்தார்கள். நபிகளை ஈமான் கொண்டு, அவர்களுக்கு வழிபட்டு, அவர்கள் மீது நேசம் வைத்து நடப்பதைக் கொண்டு வஸீலா தேடலாம் என்றும், நபிகளின் துஆ, ஷபாஅத் இவற்றைப் பெற்று வஸீலா தேடலாம் என்றும் நன்கு அறிந்திருந்தார்கள். எனவே அவர்கள் நபி (ஸல்) அவர்களை மட்டும் கொண்டு வஸீலா தேடவில்லை. மேன்மைதாங்கிய பெருமானாரின் துஆவைக் கொண்டும், ஷபாஅத்தைக் கொண்டும் வஸீலா தேடும் வாய்ப்பு அவர்கள் மரணமடைந்து விட்டதின் காரணமாக முடியாமல் போய் விட்டது. இதனால் மேன்மையில் நபியை விட குறைந்த ஒரு மனிதரை வஸீலாவுக்கு அமைத்துக் கொண்டனர். ஸஹாபிகள் நம்மை விட எல்லா வகையிலும் சிறந்தவர்கள். மார்க்கச் சட்டங்களை பின்பற்றுவதில் அவர்களைவிட பேராவல் கொண்டவர்கள் எவருமில்லை. அல்லாஹ், ரஸூலுடைய விருப்புகள் யாவை, வெறுப்புகள் யாவை என்பதை நன்றாக அறிந்திருந்தார்கள். அல்லாஹ், ரஸூலின் ஏவல்களுக்கு தகுந்த துஆக்களையும் அறிந்திருந்தார்கள். அத்தகைய துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு மிக அருகதையுடைவையாகும்.*

கண்பார்வை இழந்த ஸஹாபியின் ஹதீஸை நபி (ஸல்) அவர்களின் துஆவால் வஸீலா தேடுவதற்கு சான்றாக கொள்ளப்படும். ஆனால் சில மக்கள் இந்த ஹதீஸ் நபிகள் வாழ்ந்திருக்கும் போதும், அவர்களின் மரணத்திற்கு பிறகும் பொதுவாக அவர்களைக் கொண்டு வஸீலா தேடுதல் ஜாயிஸ் என்பதைக் காட்டுகிறது என்று கூறினார்கள். மேலும் கண்பார்வை இழந்த ஸஹாபியும், இதர ஸஹாபாக்களும் நபியவர்கள் உயிருடனிருக்கையில் வஸீலா தேடுவதின் காரணத்தைப் பற்றி நபிகளைக் கொண்டு அல்லாஹ்வின் மீது ஆணையிட்டும், நபியைப் பொருட்டாகக் கொண்டும் அல்லாஹ்விடம் தமது தேவைகளை வேண்டுவதற்குச் சமம் என்று இவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.

நபியைக் கொண்டு வஸீலா தேடுவதற்கு இவர்கள் நபிக்கு வழிபடுவதோ, அல்லது நபிகள் இவர்களுக்கு பிரார்த்திப்பதோ தேவையில்லை என்று கருதிக் கொள்கிறார்கள். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்காக பிரார்த்திப்பதும், பிரார்த்திக்காமல் இருப்பதும் சமமே. ஏனெனில் தங்கள் எண்ணத்தில் கண்பார்வை இழந்த ஸஹாபி நபியைக் கொண்டு வஸீலா தேடியபோது அவரின் தேவை நிறைவேறியதாம். அவருக்காக நபிகள் பிரார்த்திக்கவில்லையாம். இது இவர்களின் கருத்து. இவர்களின் சொல் ஷரீஅத்தில் முழுக்க விரும்பப்படாத ஒன்றாகும். அல்லாஹ்வின் ஷரீஅத்திற்கு இவர்கள் ஒத்தவர்களே அல்லர்.

அல்லாஹ்வுடைய படைப்பின் அமைப்பிற்கும் இவர்களின் கூற்று பொருந்தாது. ஏனெனில் நபிகளின் பிரார்த்தனை பெற்றவரும், பெறாதவரும் சமமானவர் அல்லவே. கண்பார்வை இழந்த அம்மனிதருக்கு நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். எனவேதான் அம்மனிதர் நபி (ஸல்) அவர்கள் சொல்லிக் கொடுத்த ' என் விஷயத்தில் நபிகளின் பிரார்த்தனையை ஏற்றருள்வாயாக இறைவா!' என்னும் வாக்கியத்தைக் கூறினார்கள். இச்சொல் அவர் விஷயத்தில் நபியவர்கள் 'ஷஃபீஉ' ஷபாஅத் செய்கிறவர்களாக இருந்தார்கள் என்பதைக் காட்டுகிறதல்லவா!

நீர் விரும்பினால் கொஞ்சம் பொறும். இல்லையேல் நான் உமக்காகப் பிரார்த்திக்கிறேன்' என்ற நபியுரையைக் கேட்ட அம்மனிதர் தமக்காகப் பிரார்த்திக்கும்படி நபியவர்களிடம் வேண்டிக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் 'தொழ வேண்டும். தமக்காகவும் பிராத்திக்க வேண்டும்' என்றும் சொன்னார்கள்.

இந்த ஆதாரங்களைக் கொண்டு நபிகளின் துஆவினாலும், சிபாரிசினாலும் தான் வஸீலா தேடப்படும் என்பதை விளங்கப்படும்.

மழை தேடும் விஷயத்தில் உமர் (ரலி) அவர்களுடைய ஹதீஸும் இப்படித்தான் அமைந்துள்ளது. இந்த ஸஹாபிகளெல்லாம் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த பின்னர் நாயகத்திற்குப் பகரமாக இன்னொருவரைக் கொண்டு வஸீலா தேடினார்கள். நபியவர்கள் உயிருடனிருக்கும் போதும், மரணமடைந்த பின்னரும் ஒன்றுபோல் வித்தியாசமின்றி அவர்களைக் கொண்டு வஸீலா தேடப்படுமானால், அதற்கு அனுமதியும் இருக்குமானால் படைப்புகளில் அல்லாஹ்விடம் மிகச் சிறந்த கண்ணியம் வாய்ந்த ஒரு படைப்பை (நபியை) ஒதுக்கி விட்டு அவர்களைவிட தரத்தில் குறைந்த இன்னொரு படைப்பைக் கொண்டு வஸீலா தேட அவர்கள் முனைந்திருக்க மாட்டார்கள். வேறெந்த அந்தகரேனும் நபியைக் கொண்டு வஸீலா தேடினால் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு துஆச் செய்யவும் இல்லையென்றால் முன்னர் நாம் குறிப்பிட்டுள்ள கண்பார்வை இழந்த ஸஹாபி குணமடைந்தது போல் ஒருபோதும் அந்த அந்தகர் குணமடைய மாட்டார்.

அது மட்டுமல்ல. மேற்சொன்ன கண்பார்வையிழந்த ஸஹாபியின் சம்பவத்திற்குப் பிறகு ஸஹாபாக்களில் கண்பார்வையிழந்த வேறொருவரும் அப்படிச் செய்ததாக இல்லை. அவர்களோ இஸ்லாத்தில் முந்தி ஈமான் கொண்ட அன்ஸாரிகளாகவும், முஹாஜிரீன்களாகவும், அல்லாஹ், ரஸூலைப் பற்றி நம்மைக் காட்டிலும் நன்கறிந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் ஹக்குகள் யாவை, ரஸூலின் ஹக்குகள் யாவை, துஆவில் அனுமதிக்கப்பட்டது யாது, பலனளிக்காதது யாது என்றெல்லாம் நன்கறிந்திருந்தார்கள்.

அது மட்டுமல்ல. அவர்கள் மழை பெய்வதற்கும், வறட்சி நீங்கி செழிப்பு வருவதற்கும் பெரிதும் தேவைப் பட்டிருந்தார்கள். இப்படியிருந்தும் ஸஹாபாக்கள் காட்டித் தந்த வழியைத்தான் பின்பற்றினார்களேயொழிய அவர்கள் புறக்கணித்தொதுக்கிய வழிகளைப் பின்பற்றவில்லை.

மார்க்க மேதைகளான மாபெரும் புகஹாக்கள் தம் நூல்களில் மழை தேடுவதைப் பற்றிக் குறிப்பிடும் போது ஸஹாபிகள் காட்டிச் சென்ற வழிமுறைகளைத் தான் கூறியிருக்கிறார்கள். ஸஹாபிகள் செய்யாது புறக்கணித்த அமல்களைக் குறிப்பிடவில்லை. நபியவர்கள் வாழ்ந்திருக்கையில் அவர்களைக் கொண்டு வஸீலா தேடுவதின் தாத்பரியமே அவர்களின் துஆவைப் பெற வேண்டும் என்பதுதான். எனவே நாம் நபியிடம் நமக்காக பிரார்த்திக்கும்படி கூறுவதும், அவர்களைக் கொண்டு வஸீலா தேடுவதும் சமமே.

அன்று ஸஹாபாக்கள் உயிருடனிருக்கையில் நபியிடம் தமக்காக துஆச் செய்ய சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த பிறகு யாரும் துஆக் கேட்கும்படி நபியிடம் வேண்டிக் கொள்ளவில்லை. இன்று பலர் செய்வதுபோல அன்று அவர்களின் கப்றில் வந்தும் வேண்டவும் இல்லை. எங்கு வைத்தும் கேட்கவில்லை. அப்படியென்றால் ஸாலிஹீன்களின் (நன்மக்களின்) கப்றில் மக்கள் தமக்காக துஆ வேண்டும்படி எப்படி அவர்களிடம் கேட்க முடியும்? இதற்கு சில சான்றாக ஏதோ சில பிற்கால மக்களின் கதைகளையும் காட்டுகிறார்கள்.

வாழ்க்கையில் மூமின்கள் ஒருவருக்கொருவர் தமக்கிடையில் பிரார்த்திக்கும்படி மற்றவர்களை வேண்டிக் கொள்ளலாம். அதற்கு ஷரீஅத்தில் அனுமதியுண்டு. பெருமானார் (ஸல்) அவர்கள் கூட கலீஃபா உமரிடம் தமக்காக துஆச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது நினைவிருக்கும் தானே. ஒரு ஹதீஸில் வருகிறது: 'உம்ராச் செய்வதற்கு நாயகத்திடம் அனுமதி கேட்ட உமர் (ரலி) அவர்களிடம் (லா தன்ஸானா யா அகீ மின் துஆயிக) சகோதரரே! உமது பிரார்த்தனையில் எங்களை மறந்து விடாதீர்' என்றாகும்.

மேலும் நபியவர்கள் தேவைப்பட்டவருக்காக பாவமன்னிப்புத் தேடவேண்டுமென்று உவைஸ் அல் - கர்னியிடம் ஏவினார்கள். ஆனால் தேவைப்பட்டவர் உவைஸை விட மிகச் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சுருங்கக் கூறின் பெருமானார் (ஸல்) அவர்கள் தம் சமூகத்தாரிடம் தமக்காக துஆச் செய்யவும், ஸலவாத்துக் கூறவும், வஸீலா தேடவும் வேண்டினார்களென்றால் அதன் கருத்து தம் உம்மத்துகளிடம் தேவைப்படுவதல்ல. மாறாக சிருஷ்டிகளுக்கு பயன்தரும் வழிகளை கற்றுக் கொடுத்தலாகும். இதனால் சிருஷ்டிகள் மார்க்க விஷயங்களில் பெரும் பலாபலன்களை அடைகின்றனர். நபியின் போதனையைக் கேட்டு அதற்கொப்ப செயல்படும் போது அதன் காரணத்தினால் நபிக்குரிய கூலியும் அல்லாஹ்விடம் அதிகரிக்கிறது. நபிக்காக நாம் ஒரு ஸலவாத்துக் கூறினால் அதற்காக அல்லாஹ் நம்மீது பத்து ஸலவாத்துக் கூறுகிறான். நபிக்காக வஸீலாவை (சுவனத்திலுள்ள பெரியதொரு பதவியை) வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் பெருமானாரின் மாபெரும் ஷபாஅத்தே மறுமையில் நமக்காக கிடைக்கிறது. நாம் செய்யும் நற்கருமங்களுக்குரிய கூலியை எவ்வளவு அதிகமாக அல்லாஹ்விடமிருந்து பெறுகிறோமோ, அதே கூலிகள் கொஞ்சமும் குறையாமல் நபிகளுக்கும் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் 'நேரான பாதையில் (ஹிதாயத்தில்) ஒருவன் மற்றவனை அழைத்தால் அழைப்புக்குப் பதில் கொடுத்தவனுக்கு வழங்கப்படும் கூலிகளுக்கொப்ப சிறிதும் குறையாமல் அழைத்தவனுக்கும் உண்டு' என்று கூறினார்கள்.

இதன் அடிப்படையில் நோக்கினால் அனைத்து நலன்களின் வழிகாட்டியாக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். தம் சமூக மக்கள் நலவுகள் புரியும் போதெல்லாம் அந்த நலன்களுக்குரிய அதே கூலிகளைக் குறையாமல் நபிகளும் பெறுகிறார்கள். எனவேதான் அன்று ஸஹாபிகள், ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் இவர்களெல்லாம் ஏதேனும் நற்கருமங்கள் செய்து விட்டு அவற்றின் பலாபலன்களை பெருமானாருக்குச் செலுத்தவில்லை. நபிகளுக்காக திருக்குர்ஆனும் ஓதவில்லை. அவர்களுக்காக தர்மங்கள் செய்யவில்லை. இப்படியெல்லாம் செய்து இவற்றின் பலாபலன்களை நபியவர்களுக்காக ஹதியாச் செய்யவுமில்லை. ஏனெனில் முஸ்லிம்கள் புரிகின்ற தொழுகை, நோன்பு, ஹஜ், தர்மம், திருமறை ஓதுதல் போன்ற எந்த அமலாயினும் சரியே. அதன் பலாபலன்கள் அனைத்தும் பெருமானாருக்கும் குறையாமல் சேர்ந்து விடுகிறது.

ஆனால் பிள்ளைகள் புரிகின்ற நற்கருமங்களின் பலாபலன்கள் பெற்றோருக்குத் தானாகச் சேர்ந்து விடுவதில்லை. எனவே பிள்ளைகள் பெற்றோர்களுக்காகவும், ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காகவும் நற்கருமங்கள் புரிந்து அவற்ரின் நற்பலன்களை ஹதியாச் செய்து சேர்த்து விட (ஈஸாலுஸ் ஸவாப்) அனுமதிக்கப்பட்டுள்ளது.

பெருமானார் அவர்கள் அல்லாஹ்வுக்கு எப்படி வழிபட்டிருந்தார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும். "நீர் ஓய்வு பெற்றால் வணக்கத்துக்காக சிரத்தை எடுத்துக் கொள்ளும். மேலும் (இன்பத்திலும், துன்பத்திலும்) உம் இறைவனையே நேசத்துடன் சார்ந்திருப்பீராக' (94:7-8) என்று அவர்களைப் பற்றி திருமறை கூறுகிறது.

படைத்த அல்லாஹ்வைத் தவிர வேறெந்தச் சிருஷ்டியையும் அவர்கள் ஆசிக்கவில்லை. ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் 'என் உம்மத்தைச் சார்ந்த எழுபதினாயிரம் மக்கள் கேள்வி கணக்கின்றி சுவனத்தில் பிரவேசிப்பார்கள். அவர்கள் வாழ்ந்திருக்கையில் பிறரிடம் ஓதிப்பார்க்கச் சொல்லாதவர்கள். நற்குறி, துர்க்குறி பார்க்காதவர்கள். சூடு போடாதவர்கள். தம் இறைவன் மீது காரியங்களை பாரம் சாட்டி ஒப்படைப்பவர்கள்' இப்படியாக அவர்களின் இலட்சணங்களை குறிப்பிட்டார்கள். ஓதிப்பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தும் அதைப் புரியாதவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். ஓதிப்பார்த்தல் என்பது 'இஸ்திர்கா' என்பதின் வினைச்சொல் இங்கே வந்திருக்கிறது. இது ஒருவகைப் பிரார்த்தனையைக் குறிக்கும். நபியவர்கள் தமக்குத்தாமே ஓதிப் பார்த்திருக்கிறார்கள். பிறருக்கும் ஓதிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் யாரிடமும் தமக்கு ஓதிப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளவில்லை. இதிலிருந்து மனிதனிடம் எதனையுமே கேட்காமல் (அது அனுமதிக்கப்பட்டதாயினும் சரியே) அல்லாஹ்விடம் மட்டும் கேட்பவன் மனிதரிடம் கேட்பவனை விட மேலானவனாகிறான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் அனைத்து சிருஷ்டிகளிலும் மேலானவர்கள் ஆவார்கள். எனவேதான் நபியவர்கள் கலீஃபா உமரிடம் தமக்காக துஆ செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள் என்ற ஹதீஸ் குறித்துப் பற்பல அபிப்பிராய பேதங்கள் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }