Wednesday, January 21, 2015

இறைத்தூதர்கள்!

அல்லாஹ் மனிதரை நல்வழிப்படுத்த பல வேதங்களை அருளினான் என முன்னர் பார்த்தோம். அத்துடன் அவன், "நீங்கள் எப்படியும் இந்த வேதங்களை புரிந்து, எப்படி வேண்டுமானாலும் பின்பற்றுங்கள்" என்று மனிதரை நட்டாற்றில் விடவில்லை. மாறாக, இவ்வேதங்களைத் தெளிவாக புரிந்து, அவற்றுக்கேற்ப வாழ்ந்து, ஈருலக நற்பயன்களைப் பெறுவது எப்படி என்பதைக் கற்றுக்கொடுத்து, முன்மாதிரியாக வாழும் மனிதபுனிதர்களை அவர்களிலிருந்தே தோற்றுவித்தான். அவர்களையே 'இறைத்தூதர்கள்' என இஸ்லாம் அறிமுகப்படுத்துகின்றது. பொதுவாக அரபு மொழியில் 'நபி' என்றும் 'ரஸூல்' என்றும் கூறப்படும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

"அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த சமுதாயத்தினரும் (பூமியில்) இருக்கவில்லை" (அல்குர்ஆன்: 35:24)

இவ்வாறு உலகுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என மார்க்கம் வழிவந்த கருத்துக்களிலிருந்து காண முடிகின்றது. உலகில் தோன்றிய முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களே ஒரு இறைத்தூதர்தாம். இவர்கள் எல்லோரும் கொள்கையாலும், போதனையாலும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த இறைத்தூதர்கள் யாவரினதும் பெயர்களை அல்லாஹ் நமக்கு அறிவிக்கவில்லை.

அதுபற்றி அல்லாஹ்வே குறிப்பிடுகின்றான்:

"(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதுவர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தைத்தான் நாம் உமக்குக் கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்குக் கூறவில்லை" (அல்குர்ஆன்: 40:78)

இப்படித் தோன்றிய தூய இறைத்தூதர்களில் இருபத்தைந்து பேர்களுடைய பெயர்களையே அல்லாஹ் நமக்கு அறிவித்துள்ளான். அவர்களில் இறுதியானவர் முஹம்மத் (ஸல்) அவர்களாவர்.

அந்த இறைத்தூதர்களின் பெயர்களாவன:



1. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்2. நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்3. இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்4. இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்5. இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்6. இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்7. யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்8. யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்9. லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்10. ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்11. ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்12. ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்13. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்14. ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்15. தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்16. சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்17. ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்18. துல்கிஃப்லி அலைஹிஸ்ஸலாம் அவர்கள்19. யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்20. இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்21. அல்யஸஃ அலைஹிஸ்ஸலாம் அவர்கள்22. ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்23. யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்24. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்25. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள்.


பொதுவாக உலகில் தோன்றிய இறைத்தூதர்களையும், குறிப்பாக இங்கு பெயர் கூறப்பட்டவர்களையும் வாய்மை மிக்கவர்கள், தூயவர்கள், தீயன, பாவங்களிலிருந்து முற்றிலும் தூரமானவர்கள், மக்களுக்கு வழிகாட்ட வந்த மனிதப் புனிதர்கள் என நம்புவது இஸ்லாமிய நம்பிக்கைச் சார்ந்த நான்காவது அம்சமாகும். இங்கு அல்லாஹ் பெயர் குறித்துக் காட்டுபவர்களைத் தவிர வேறு எவரையும் பெயற் கூறி 'இவர் ஓர் இறைத்தூதர்' எனக் கூறுவது இஸ்லாத்தின் அங்கீகாரம் பெறாத கூற்றாகும்.

இறைத்தூதர்கள் யாவரிலும் இறுதியானவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனப் படித்தோம். மற்றைய இறைத்தூதர்கள் யாவருமே குறிப்பிட்டதொரு சமூகத்துக்கு, தேசத்துக்கு என்றே அனுப்பட்டவர்களாவர். ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களோ முழு உலகுக்கும், எல்லா மக்களுக்கும் பொதுவான இறைத்தூதராக அனுப்பப்பட்டவராவார்கள். அவர்களுக்குப் பின் உலக முடிவு வரை இனியொரு இறைத்தூதர் வருவது இல்லை.

முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முந்திய இறைத்தூதர்களது போதனைகள், வாழ்வு, மார்க்கத்தை நிலைநாட்டுவதில் எடுத்த முயற்சிகள் என்பன எக்குறையும் இல்லாது முழுமையாக பெறக்கூடிய நிலையில் அவைகள் இல்லை. அந்த அளவுக்கு அவை சிதைக்கப்பட்டுள்ளன. அதேவேளை முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்வின் சிறு அசைவுகூட சிதைக்கப்படாது அப்படியே பதிவு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்து சென்று போன ஒருவர் போலல்லாது, இன்று இப்பொழுது நம்முடன் வாழ்ந்து வழிகாட்டுபவர் போன்று நினைக்குமளவுக்குத் தூய்மையாக அவர் வாழ்வு பாதுகாக்கப்பட்டுள்ளது.* அந்த வாழ்வு தொடர்பானவற்றைப் பதிவு செய்வதிலும் பாதுகாப்பதிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவற்றையும் நீங்கள் நோக்கினால் பிரமித்து விடுவீர்கள்.

எனவே, ஏனைய எல்லா இறைத்தூதர்களையும் முன்னர் கூறியவாறு நம்பிக்கை கொள்வது அவசியம். ஆனால், மிகுந்த நம்பிக்கை வைப்பதுடன் பின்பற்றி வாழ்வதற்கான முன்மாதிரியைப் பெறவேண்டியது முஹம்மத் (ஸல்) அவர்களிலாகும். இரு ஒரு கட்டாயக் கடமை.

அல்லாஹ் கூறுகின்றான்:

"அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது" (அல்குர்ஆன்: 33:21)

*முஹம்மத் (ஸல்) அவர்களது சிறப்பு பற்றி அடுத்து வரும் அத்தியாயமொன்றில் படிக்கவும்.

குவைத் இஸ்லாமிய நிலையத்தின் (IPC) வெளியீடாகிய "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற நூலிலிருந்து. ஆசிரியர்: S.M. மன்சூர் அவர்கள்.

No comments:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }