Thursday, March 03, 2005

பாடம் - 7

ருகா (மந்திரம் ஓதல்), தாயத்து, துஆக் கூடு முதலியவைகளை அணிதல்.

அல்லாஹ்வின் தூதருடன் (ஸல்) ஒரு பயணத்தில் சென்ற போது வில்கயிறு அல்லது வேறெவற்றையும் கொண்டு ஒட்டகங்களின் கழுத்தில் கட்டப்படும் மாலைகள் யாவும் வெட்டியெறியப்பட வேண்டும் என் அறிவிக்குமாறு ஒருவரை நபி (ஸல்) அனுப்பினார்கள். என் அபு பஷிர் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம் அல் புஹாரி, முஸ்லிம்.

'அர்ருகா, அத்திமாயிம், அத்திவாலா, ஆகிய அனைத்தும் ஷிர்க்கான காரியங்களாகும்' என முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அஹ்மத், அபுதாவுத்.

அர் ருகா அல்லது அஸாயிம் என்பது மந்திரம் ஓதல், துஆ ஓதல், போன்ற காரியங்களை குறிக்கும் செயலாகும். ஷிர்க்கை காட்டும் காரியங்கள் சம்பந்தபடாத விஷயங்களில் இவை அனுமதிக்கப் பட்டுள்ளன. விஷப் பிராணிகள் கடித்தல், கண் திருஷ்டியின் காரணமாக ஏற்படக்கூடிய கஷ்டங்கள் முதலிய துன்பங்களில் நின்றும் நிவாரணம் நாடி குர்ஆன் ஓதலை முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுமதித்திருக்கிறார்கள்.

அத்திமாயிம் என்பது கண் திருஷ்டியிலிருந்து பாதுகாப்புத் தேடி சிறு பிள்ளைகளின் கழுத்தில் போடப்படும் தாயத்து ஆகும். இந்த தாயத்துகளில் குர்ஆன் வசனங்கள் அல்லது அல்லாஹ்வின் திருநாமங்கள் என்பன எழுதப்பட்டிருந்தால் சில முன்னோர்கள் இவற்றை அனுமதித்திருக்கிறார்கள். ஆயினும் இவற்றிற்கு அனுமதி வழங்காதவர்களில் இப்னு மஸ்ஊத் (ரலி) ஒருவராவார்.

அத் திவாலா என்பது கணவன் மனைவிக்கிடையில் பிணைப்பை (தாபம்) அதிகரிக்கக் கூடிய வழி தமக்குத் தெரியும் எனக்கூறி சிலர் செய்யும் செயல்களாகும்.

யாரேனும் ஒருவர் ஒரு தாயத்தை உபயோகித்தால், அல்லது அணிந்து கொண்டால் அத்தாயத்தின் பொறுப்பில் அவர் விடப்படுவார் என மர்பு ஹதீஸ் ஒன்றை அப்துல்லாஹ் பின் உகையிம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், - ஆதாரம்: அஹ்மத், திர்மிதி.

'ஓ ருவைபி! எனக்குப் பிறகு நீண்ட காலம் நீங்கள் உயிரோடு இருக்கக்கூடும். ஆகையால் யாரேனும் தன் தாடியில் முடிச்சிப் போட்டுக் கொண்டால், அல்லது ஒரு நூலை (பாதுகாப்பு நாடி) அணிந்துக் கொண்டால், அல்லது (சிறுநீர் கழித்தப்பின்) மிருகங்களின் எழும்பு, சாணி ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்துக் கொண்டால் அவர் உறவை விட்டும் முஹம்மத் (ஸல்) நீங்கி விட்டதாக (சகல சம்பந்தங்களையும் துண்டித்து விட்டதாக) மக்களுக்கு அறியப்படுத்துங்கள்.' என நபி (ஸல்) கூறியதாக ருவைபி (ரலி) தெரிவித்தார்கள். ஆதாரம்: அஹ்மத்.

யாரேனும் ஒரு தாயத்தை அல்லது துஆ கூட்டை ஒருவரிடமிருந்து வெட்டியெறிந்தால் அச்செயல் ஒரு அடிமையை விடுதலை செய்த காரியத்துக்குச் சமமாகும் என ஸஈத் பின் ஜுபைர் அறிவிக்கிறார்.

குர்ஆன் வசனங்கள் எழுதியிருப்பினும், இல்லாவிடினும் எல்லாவிதமான தாயத்து, துஆக்கூடு முதலியவற்றை முற்றாக வெறுத்ததாக இப்ராஹீம் நஃஹியிடமிருந்து வகீ அறிவிக்கிறார். இவ்விருவரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் தோழர்களாவர்.

இப்பாடம் காட்டும் முக்கிய அம்சங்கள்:

மேல் குறிப்பிட்ட மூன்று செயல்களும் சந்தேகமின்றி ஷிர்க்கை சார்ந்தவைகளாகும்.

"ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்" என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்னும் வரும்.

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }