Tuesday, March 29, 2005

ஆசிரியர் முகவுரை!


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

புகழெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது! அவனிடம் நாம் உதவி தேடுகிறோம். பிழைபொறுக்கத் தேடுகிறோம். நமது ஆத்மாவின் தீமைகளிலிருந்து விடுதலை பெறவும், கெட்ட செயல்களைத் தவிர்ந்து நடக்கவும் அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறோம். இறைவன் எவருக்கு நேர்வழியைக் காட்டினானோ அவர்களை வழிகெடுக்க யாராலும் முடியாது. இறைவன் எவர்மீது வழிகேட்டை விதித்திருக்கிறானோ அவர்களுக்கு நேர்வழி காட்டவும் யாருக்கும் தகுதியில்லை. அவன் இணையற்ற ஏகன். இது உண்மை என்பதற்கு நாம் சான்று பகர்கிறோம்.

நபிகள் பெருமானார் முஹம்மது ரசூல் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், உத்தமத் தூதருமாவார்கள். உண்மையான சன்மார்க்கத்தையும், நேர்வழியையும் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்து எல்லா மதங்களை விட இந்த சன்மார்க்க தீனுல் இஸ்லாத்தை மேலோங்கச் செய்வதற்கு அவர்களை நபியாகத் தேர்ந்தெடுத்து அனுப்பினான். அவர்கள் உண்மை என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியளிக்கிறான். நலவுகள் செய்கிறவர்களுக்கு சுவனமிருக்கிறது என்று நபிகள் பெருமானார் (ஸல்) நன்மாராயம் கூறினார்கள். தீமைகள் செய்கிறவர்களுக்கு நரகத்தைக் கூறி அச்சுறுத்தினார்கள். அல்லாஹ்வின் பாதையில் மக்களை அழைத்தார்கள். இருள் சூழ்ந்த சமூகத்துக்கு ஒளிவிளக்காக அனுப்பப்பட்டார்கள். அவர்களைக் கொண்டு மக்கள் நேர்வழி பெற்றனர். அகப்பார்வையில்லா உள்ளங்கள் தெளிவு பெற்றன. மூடிக் கிடந்த கண்கள் திறந்தன. செவிகள் மிளிர்ந்தன. பூட்டப்பட்டிருந்த இதயங்கள் திறக்கப்பட்டதினால் அவை சிந்திக்கத் துவங்கின.

பெருமானார் (ஸல்) அவர்கள் தமது தூதர் பொறுப்பை, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த அமானிதத்தை சரிவர நிறைவேற்றினார்கள். மக்களுக்கு நல்ல போதனைகளை போதித்தார்கள். அல்லாஹ்வின் பாதையில் போராடினார்கள். உலகைப் பிரியும் வரையில் தன் இறைவனை வணங்கினார்கள். அல்லாஹ் அவர்களுக்கு தன் சாந்தி சமாதானத்தை அருள் புரியட்டும். நீண்ட போரட்டத்துக்குப் பிறகு வெற்றிவாகை சூடினார்கள். மெய்யைப் பொய்யிலிருந்து வேறுபடுத்தினார்கள். வழிபாடு எது என்றும், வழிகேடு எப்படி என்பதையும் பிரித்துக் காட்டினார்கள். இறைநேசச் செல்வர்கள் யார்? இறைவனின் விரோதிகள் யார்? என்பதை விபரமாகக் கூறினார்கள்.

அல்லாஹ்வும் அவனது ரசூலும் எவற்றை ஆகுமாக்கினார்களோ அவையே ஆகுமானவை. எவற்றை விலக்கினார்களோ அவை ஆகாதவை என்று கூறினார்கள். அல்லாஹ்வும் ரசூலும் காட்டித் தந்தவை தான் உண்மையான மதமாகும். நபி (ஸல்) அவர்கள் மனு-ஜின் இருசாராருக்கும் தூதராக அனுப்பப் பட்டார்கள். இவ்விருசாராரும் அவர்களை நம்பி வழிபட வேண்டும். அவர்கள் இறைவனிடமிருந்து பெற்று வந்த உண்மைகளை மெய்பித்தல் வேண்டும். வாழ்வின் எல்லா நிலைகளிலும் அந்த நபிகளை முன்மாதிரியாக கொள்ளுதல் வேண்டும். இவை போன்றவைதான் உண்மையான இறைவழிபாடாகும். நேரான மார்க்கமும் இதுவேதான். இறைநேசர்களின் பாதையும் இதுவேயாகும். அல்லாஹ் தன்னடியார்களுக்கு அனுமதியளித்த வஸீலாவும் இதுவேயாகும்.

இறைவன் கூறினான்: "சத்திய விசுவாசிகளே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவனிடம் (நெருங்கிச்) செல்வதற்குரிய வணக்க வழிபாடுகளை (வஸீலாவை) த்தேடிக் கொள்ளுங்கள்" (5:35) இந்த ஆயத்து அல்லாஹ்வின் பக்கம் சேர்வதற்குரிய வஸீலா என்பதின் கருத்து அவனை நம்பி வழிபட்டு நடந்து கொள்ளுதல். நபி (ஸல்) அவர்களையும் நம்பி அவர்களின் அடிசுவட்டைப் பின்பற்றுதல், மேலும் அந்த நபிக்கு வழிபடுதல் என்பன கருமத்தையே குறிக்கின்றது. இப்படி நபியை ஈமான் கொண்டு அல்லாஹ்வை அஞ்சி வழிபட்டு நடப்பது என்ற கருத்துக்குட்பட்ட வஸீலாவைத் தேடுவது ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாகிறது. எக்காரணத்தினாலும் இத்தகைய நற்கருமங்களை (வஸீலாவை) த் தேடுவதைப் புறக்கணித்து நடக்க யாருக்கும் இயலாது. அல்லாஹ்வின் கருணையையும் வெகுமதியையும் பெற, அவனுடைய தண்டனையிலிருந்து நீங்கி நடக்க இந்த வஸீலாவைத் தேடித்தான் ஆகவேண்டும். நபிகள் பெருமானாரை நம்புதல், அவர்களுக்கு வழிபட்டு நடத்தல், நற்கருமங்கள் புரிதல் என்ற கருத்தைக் கொண்ட வஸீலாவைத் தேடுதல் எல்லா மனிதர்களுக்கும் கட்டாயமாகும்.

இன்சா அல்லாஹ் இன்னும் வரும்.

No comments:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }