Friday, April 01, 2005

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.


நபிகள் (ஸல்) அவர்கள் எல்லா மக்களுக்கும் பரிந்து பேசி அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள். புகழுக்கு உரிய உன்னதமான ஸ்தானமும் அவர்களுக்கு உண்டு. பரிந்து பேசுகின்ற அனைத்து சிபாரிசுகாரர்களை விட மதிப்பிலும், அந்தஸ்திலும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாவார்கள். அவர்களின் அந்தஸ்தின் அருகில் எந்த நபிகளும், எந்த ரசூலும் நெருங்க முடியாது. இவர்கள் அல்லாஹ்விடம் எல்லோரையும் விட மதிப்புக்குரியவர். யார் யாருக்கு அவர்கள் இறைவனிடம் துஆச் செய்து மன்றாடி சிபாரிசு செய்கிறார்களோ அவர்கள் தாம் நபிகளாரின் சிபாரிசைக் கொண்டும், துஆவைக்கொண்டும் அல்லாஹ்விடம் நெருங்கி அவனின் திருப்பொருத்தத்தைப் பெறுகிறவர்கள்.

ஸஹாபாக்கள் (நபித்தோழர்களை)ப் பொறுத்தவரையில் அவர்களும் நபிகளைச் சந்தித்து அவர்களைக் கொண்டு அல்லாஹ்விடம் துஆக்கேட்கச் செய்து அவர்களின் ஷபாஅத்தை அல்லாஹ்விடம் வேண்டி அவன் பால் நெருங்கினார்கள். நாளை மறுமையிலும் நபிகள் (ஸல்) அவர்களின் துஆவினாலும், நபிகள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வதனாலும் தம் சமூகத்தவர்கள் அல்லாஹ்வை நெருங்க முடியும். ஸஹாபாக்கள் நபிகளோடு வைத்திருந்த தொடர்புகளிலிருந்தும், நடைமுறைகளிலிருந்தும், பழக்க-வழக்கங்களிலிருந்தும் "தவஸ்ஸுல் வஸீலா" என்ற வார்த்தைகளுக்கு இந்தக் கருத்தை விளங்க முடிகிறது.

மேலும் நபிகளின் சிபாரிசும், துஆவும் மனிதனுக்குப் பலனளிக்க வேண்டுமானால் அவர்கள் மீது ஈமான் கொண்டாக வேண்டும். நயவஞ்சகர்களுக்கும், விசுவாசமில்லாத குஃப்பார்களுக்கும் எந்த பெரியோர்களின் சிபாரிசும், துஆவும் மறுமையில் பலனற்றதாக இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் தன் தகப்பனார் அப்துல்லாஹ், பெரிய தந்தை அபுதாலிப் மற்றும் சில விசுவாசமற்றோருக்காக பிழைபொறுக்கத் தேட வேண்டாமென விலக்கப்பட்டிருக்கிறார்கள். நயவஞ்சகர்கள் (முனாபிக்)களுக்குப் பிழைபொறுக்கத் தேட வேண்டாமென அல்லாஹ் அவர்களை தடுத்தான். "நபியே! நீர் இந்த நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்பு தேடுவதும் தேடாமலிருப்பதும் சமமே. திட்டமாக அல்லாஹ் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டான்" என்று அல்லாஹ் கூறினான் (63:6)

இறை நம்பிக்கைக் கொண்ட மக்கள் தமது விசுவாசத்தில் பலதரப்பட்டிருப்பார்கள். இதைப்போன்று இறைவிசுவாசமில்லா காஃபிர்கள் தமது அவநம்பிக்கையில் (குஃப்ரியத்தில்) பலதப்பட்டவர்களாக இருப்பார்கள். இந்த உண்மையை திருமறையும் குறிப்பிடுகிறது "போர் செய்யக்கூடாதென்று விலக்கப்பட்ட மாதங்களை தாம் விரும்பியவாறு அவர்கள் முன்பின்னாக மாற்றி மறிப்பதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை) பலப்படுத்தும் செயல்களாகும்.." (9:37) என்பது இறைவாக்கு. குஃப்ரிலும் பலமான குஃப்ர், இலேசான குஃப்ர் என பலதரம் இருக்கிறது. அன்று சில நிராகரித்தவர்கள் (குஃப்பார்கள்) நபிகள் (ஸல்) அவர்களுக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்தார்கள். இவர்களுடைய அவநம்பிக்கை சற்று பலம் குன்றியிருக்கும். இத்தகைய காஃபிர்களுக்கும் மறுமை நாளில் நபிகளின் ஷபாஅத் அருளப்பட்டு இவர்களின் நரகவேதனை குறைக்கப்படுகிறது. ஆனால் நபிகளின் ஷபாஅத்தினால் ஒருபோதும் காஃபிர்களின் நரகவேதனை இல்லாமலாக்கப்பட மாட்டாது.

அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப், நபி (ஸல்) அவர்களிடம் 'யா ரசூலல்லாஹ்! அபுதாலிப் தாங்களுக்கு பல ஒத்தாசைகள் செய்திருக்கிறார். பல சந்தர்ப்பங்களில் தாங்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றினார். எனவே தாங்கள் அவர்களுக்கு ஏதாவது உபகாரம் புரிந்தீர்களா? என்று வினவியதற்கு நபி (ஸல்) 'ஆம்! அவர் இப்பொழுது நரகத்தின் மேல் ஓரத்திலிருக்கிறார். நான் அல்லாஹ்விடத்தில் மன்றாடி இதைச் செய்யவில்லையென்றால் அவர் நரகத்தின் அடித்தட்டில் இருந்திருப்பார்' என்று கூறினார்கள். (முஸ்லிம்)

அபூஸயீத் (ரலி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஒருமுறை தம் பெரிய தந்தை அபுதாலிப்பைப் பற்றி கூறப்பட்டது. அப்பொழுது நபியவர்கள் 'மறுமையில் எனது சிபாரிசு அபூதாலிப்புக்கு நல்ல பலனை அளிக்குமென்று நினைக்கிறேன். நெருப்பின் மேல்பகுதியில் அவரை நியமிக்கப்படும். அவரின் இரண்டு கரண்டைக்கால்களை நெருப்பு மூடியிருக்கும். இதனால் அவருடைய மூளை உருகி வடிந்து கொண்டிருக்கும்' என கூறினார்கள். நரகவாதிகளில் அபூதாலிப் மட்டும் நெருப்பினாலான இரு மிதியடிகள் அணிந்திருப்பார். அதிலிருந்து வெப்பம் மூளை வரையிலும் மேலே ஏறி மூளையை உருகச் செய்து கொண்டேயிருக்கும் எனக் கூறினார்கள்.

நபியவர்கள் ஷபாஅத்து சில காஃபிர்களுக்குப் பலனளிப்பது போல் காஃபிர்களுக்காக வேதனையை உலகில் அளிக்க வேண்டாமென்று இறைஞ்சுகின்ற நபிமார்களின் துஆவும் அங்கீகரிக்கப்படுகிறது. 'முன்னர் ஒரு நபி தம் சமூகத்து காஃபிர்களால் அடிக்கப்பட்ட போது அவர்கள் 'இறைவா! என் சமூகத்தைச் சார்ந்த மக்கள் அறிவீலிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நீ நேர்வழி கொடுத்தருள்வாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்' என நபிகள் (ஸல்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் 'இறைவா! காஃபிர்களை நீ மன்னிப்பாயாக! அவர்களின் வேதனையை முன்கூட்டி உலகில் வைத்து வழங்கிவிடாதே!' எனக் கூறி பிரார்த்தித்திருக்கிறார்கள்.

இறைவன் திருமறையில் "மனிதர்களை அவர்கள் தேடிக்கொண்ட தீவினைக்காக உடனுக்குடன் அல்லாஹ் தண்டிப்பதாக இருப்பின் பூமியில் எந்த ஜீவனையும் விட்டு வைத்திருக்க மாட்டான். எனினும் அவர்களைக் குறிப்பிட்ட தவணை வரையிலும் பிற்படுத்துகிறான்..." (35:45) என்று கூறியிருக்கிறான். நபியவர்கள் சில காஃபிர்களுக்காக 'இறைவா! இவர்களை நேர்வழியின் பால் திருப்புவாயாக! இவர்களுக்கு உணவும் அளித்தருள்வாயாக!' என்றும் பிரார்த்தித்திருக்கிறார்கள்.

அபூஹுரைரா என்ற நாயகத் தோழரின் தாயாருக்காக இப்படிப் பிரார்த்தித்து, அம்மூதாட்டிக்கு அல்லாஹ் ஹிதாயத்தைக் கொடுத்தான் 'தவ்ஸ்' என்ற வம்சத்தாருக்கு நேர்வழி கிடைப்பதற்காகவும், இஸ்லாத்தில் அவர்கள் சேர்வதற்காகவும் நபிகள் நாயகம் பிரார்த்தித்து இறைவனிடமிருந்து ஹிதாயத்துப் பெறச் செய்தார்கள்.

இணைவைப்பவர் (முஷ்ரிக்)கள் சிலர் பெருமானாரிடம் வந்து மழை பெய்வதற்காகப் பிரார்த்திக்க வேண்டும் எனக் கேட்ட போது அல்லாஹ்விடத்தில் நபி (ஸல்) பிரார்த்தித்தார்கள். இச்சம்பவத்தை இமாம் அபூதாவுத் அறிவிக்கிறார்கள். இப்படி நபியவர்கள் செய்து காட்டியது அனைத்துக் கல்நெஞ்சர்களான காஃபிர்களின் உள்ளங்களைக் கவரச் செய்வதற்குத்தான். எல்லா உயிரினங்களை விட மதிப்பிற் சிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காட்டிலும் அந்தஸ்தில் எவரும் உயரப் போவதில்லை. அவர்களுடைய சிபாரிசைக் காட்டிலும் உயர்ந்த ஒரு சிபாரிசை இறைவன் மறுமையில் யாருக்கும் அளிக்க மாட்டான். இப்படியிருந்தும் கூட நபிகளின் ஷபாஅத்துடையவும், துஆவுடையவும் பலாபலன்களையெல்லாம், அவர்களைக் கொண்டு நம்பி வழிபடுவதினால் கிடைக்கின்ற ஈடேற்றதோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இவர்களை நம்பி வழிபடுவதினால் மட்டும் நிச்சயமாக வெற்றி கிடைக்கிறது எனக் கூறலாம். பெருமானார் மீது ஈமான் கொண்டு அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றியொழுகுவது அனைத்து வெற்றிகளுக்கும், நரக விடுதலைக்கும் ஏதுவாகிறது. அல்லாஹ்வையும், ரசூலையும் நம்பி வழிபட்ட நிலையில் எந்த மனிதர்கள் இறந்தாலும் அவர்கள் 'அஹ்லுஸ் ஸஆதத்' என்ற பாக்கியமுடையோர் கூட்டத்தில் இருப்பார்கள் என்று கூறலாம். நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த உண்மைகளை மறுத்து அவற்றை நிராகரித்து நடக்கின்ற ஒவ்வொருவனும் 'அஹ்லுன் நார்' என்னும் நரகவாதி என உறுதியாகக் கூறலாம்.

ஆனால் நபிகளின் ஷபாஅத்தையும், துஆவையும் அருளப்பெற்ற ஒருவன் அதனால் மட்டும் நிச்சயம் பலன் பெறுவானா, இல்லையா என்பதை நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஏனென்றால் அவர்களின் ஷபாஅத்தும், துஆவும் மனிதர்களுக்குப் பயன்பட வேண்டுமென்றால் அதற்குரிய நிபந்தனைகள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் ஷபாஅத்தும், துஆவும் எந்த பலனையும் அளிக்காது. காஃபிர்கள் நரகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றோ, அவர்களின் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்றோ எத்தனை பெரிய மனிதர் வேண்டினாலும், சிபாரிசு செய்தாலும் இவற்றை இறைவன் ஏற்க மாட்டான். நபிகள் (ஸல்) அவர்களுக்குப் பிறகு அந்தஸ்தில் உயர்ந்த மனிதர்கள் இவ்வையகத்தில் இருப்பார்களானால் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைக் குறிப்பிடலாம். இப்ராஹீம் நபியவர்கள் தம் தகப்பனாருக்காகப் பிரார்த்தனை செய்து பாவமன்னிப்பும் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். இதைப் பற்றி இறைவன் "எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய்-தந்தைக்கும், மற்ற மூஃமின்களுக்கும் கேள்விக்-கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!..." (என பிரார்த்தித்தார்கள்) என்று இறைவன் கூறுகிறான் (14:41)

இப்ராஹீம் நபியவர்களைப் போன்று நபி (ஸல்) அவர்களும் தம் பெரிய தந்தை அபூதாலிப்க்காக பாவமன்னிப்புக் கோரினார்கள். இதைக்கண்ட வேறு சில முஸ்லிம்களும் (காஃபிர்களான) தம் உற்றார்களுக்காகப் பிழைபொறுக்கத்தேட முனைந்தபோது இறைவன் தன் திருத்தூதரையும், மூமின்களையும் கண்டித்து இப்படி காஃபிர்களுக்காக பாவமன்னிப்புத் தேட வேண்டாமென்று கண்டித்தான். "இணைவைத்து வணங்குவோருக்காக பாவமன்னிப்புக் கோருவது நபிக்கோ, விசுவாசிகளுக்கோ தகுமானதல்ல. அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய பந்துக்களாக இருந்தாலும் சரியே. அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்று இவர்களுக்குத் தெளிவான பின்னரும் (இது தகுமானதல்ல)". (9:113)

இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் தந்தைக்காக ஏன் பாவமன்னிப்பு கேட்டார்கள். அதற்குரிய காரணத்தை இறைவனே விளக்குகின்றான்: "இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம் அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவே அல்லாது வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்று தெளிவாகத் தெரிந்ததும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் மிக்க இரக்கமும், அடக்கமும் உடையோராக இருந்தார்". (9:114)

"ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்திய பின் அவர்கள் விலகிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவையென்பதை அவன் அவர்களுக்கு விபரமாக அறிவித்து வரும் வரையில் அவர்கள் தவறிழைக்கும்படி அவன் (விட்டு) விடமாட்டான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிக்க அறிந்தோனுமாயிருக்கிறான்" என்றும் அல்லாஹ் திருமறையில் கூறினான்" (9:115)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸில் நபிகள் (ஸல்) கூறுகிறார்கள்: இப்ராஹீம் நபியவர்கள் தம் தகப்பனார் 'ஆஸரை' மறுமை நாளில் சந்திக்கும் போது அவர் வாடிய முகத்துடன் காணப்படுவார். இந்நிலையைக் காணும் நபி இப்ராஹீம் தம் தகப்பனாரைப் பார்த்து 'எனக்கு பாவம் செய்யாதீர் என நான் அன்று உலகில் வைத்து உம்மைத் தடுக்கவில்லையா?" எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர்களின் தந்தை ஆஸர் இப்ராஹீமை நோக்கி: இன்று நான் உமக்குப் பாவம் ஏதும் செய்ய மாட்டேன்!' என பதிலுரைப்பார். இதைக்கேட்ட இப்ராஹீம் நபியவர்கள் "இறைவா! நீ மறுமையில் என்னைக் கேவலப்படுத்துவதில்லை என வாக்களித்தாயே. இதோ என் தந்தை படும்பாட்டை விட எனக்குக் கேவலமான ஒரு காட்சி இனியும் உண்டோ? எனக்கூறி அல்லாஹ்விடம் முறையிட 'இந்நேரம் காஃபிர்களுக்கு சுவனத்தை ஹராமாக்கி-விலக்கி விட்டேன்' என்று அல்லாஹ் கூறுவான். பிறகு: 'இப்ராஹீமே! கீழே நோட்டமிடுவீராக!' என சொல்லப்படும். அவர்கள் கீழே பார்க்கும்பொழுது தம் தந்தை ஆஸர் இரத்த நிறமுள்ள ஒரு கழுதைப் புலியின் வாய்க்குள் இருப்பதைப் பார்ப்பார்கள். பின்னர் அதன் கால்களைப் பிடித்து நரகில் தூக்கி எறியப்படும். (ஸஹீஹ் புகாரி)

நபிகள் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய அந்தஸ்தும், மதிப்பும் இருந்தும் கூட, முஷ்ரிக்காக இருந்த தம் தகப்பனாருக்காக செய்த பிரார்த்தனையும், கோரிய பாவமன்னிப்பும் எந்த வகையிலும் பலன் தருவதாக அமையவில்லை. மூமின்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்: 'இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் தம் ஜனங்களை நோக்கி, 'நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவற்றிலிருந்தும் விலகி விட்டோம். நிச்சயமாக நாங்கள் உங்களையும் நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரையில் எங்களுக்கும், உங்களுக்குமிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது' என்று கூறினார்கள். அன்றி இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி 'அல்லாஹ்விடத்தில் உமக்காக யாதொன்றையும் தடுக்க எனக்கு சக்தி கிடையாது. ஆயினும் உமக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்புக் கேட்பேன்' என்று கூறி 'எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்மீதே நாங்கள் பாரம் சாட்டினோம். உன்னிடமே (நாங்கள் யாவரும்) வரவேண்டியதிருக்கிறது. எங்கள் இறைவனே! நீ எங்களை நிராகரிப்போரின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீயே மிகைத்தவன் ஞானமுடையவன்' என்று பிரார்த்தித்தார்' (60:4-5)

இப்ராஹீம் நபியவர்களையும், அன்னாரைப் பின்பற்றிய நல்லவர்களையும் முன்மாதிரியாகக் கொள்ள அல்லாஹ் மூமின்களைப் பார்த்துக் கூறுகின்றான்: "தம் தந்தைக்கு பிழைபொறுக்கத் தேடுவேன் எனக் கூறிய விஷயத்தில் மட்டும் எவரும் இப்ராஹீமைப் பின்பற்ற வேண்டாம்" என்று எச்சரிக்கை செய்கிறான்.இணை வைப்பதை அல்லாஹ் ஒருபோதும் மன்னிப்பதில்லையே! எனவே முஷ்ரிக்கான பிதாவுக்காக துஆச் செய்த விஷயத்தில் அவர்களைப் பின்பற்றாதிருக்க வலியுறுத்தப்படுகிறது. இதைப் போன்ற சில சம்பவங்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது.

'என் தாயாருக்குப் பாவமன்னிப்புக் கோர அல்லாஹ்விடம் அனுமதி வேண்டியபொழுது அவன் எனக்கு அனுமதி தரவில்லை. என் தாய் இறந்த பிறகு அவர்களின் சமாதியைச் சந்தித்து (ஸியாரத்து செய்ய) அவனிடம் கேட்டேன். அதற்கு அனுமதித்தான்' என்று நபியவர்கள் கூறுவதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்). நபி (ஸல்) அவர்கள் தம் தாயார் ஆமினாவின் கப்றை தரிசிக்கச் சென்ற போது அழுதார்கள். அவர்கள் அழுவதைக் கண்ட உடனிருந்த ஸஹாபிகளும் (தோழர்களும்) கண்ணீர் வடித்தார்கள். பிறகு நபி (ஸல்) கூறினார்கள்: அல்லாஹ்விடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அவனிடமே அனுமதியும் வேண்டினேன். அவன் அதற்கு அனுமதி தரவில்லை. ஆனால் அவர்களின் சமாதியை ஸியாரத் செய்ய மட்டும் அனுமதித்தான். தோழர்களே! சமாதிகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக இந்த ஸியாரத் உங்களுக்கு இறப்பு பற்றி நினைவூட்டுகிறது' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.

அனஸ் (ரலி) அவர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸில் ஒரு மனிதர் 'நாயகமே! என் தந்தை எங்கே இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நரகத்திலிருக்கிறார்' என்று பதிலுரைத்தார்கள். இதைச் செவியுற்றுத் திரும்பிய அம்மனிதரைக் கூப்பிட்டு, 'உம் தந்தையும், என் தந்தையும் நரகில்தானிருக்கிறார்கள்' என்றும் நபி (ஸல்) அறிவித்தார்கள். "நீர் உம்முடைய நெருங்கிய பந்துக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்" (26:214) என்ற திருவசனம் இறக்கப்பட்டபோது குறைஷிகளை அழைத்து ஒன்று திரட்டி நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்பொழுது அவர்களிடம் சில பொதுவான விஷயங்களை தெரிவித்தார்கள். தனியாகவும் சிலரை கூப்பிட்டு நல்ல போதனைகளையும், உபதேசங்களையும் வழங்கினார்கள். பனூமுர்ரா, பனூ அப்துஷம்ஸ், அப்து முனாப், அப்துல் முத்தலிப் போன்ற பெரும் வம்சத்தாரை அழைத்து ஒவ்வொருவரும் தம்மை நரக வேதனையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும்படி கூறினார்கள். பின் தனியாக தன் அருமை புதல்வி பாத்திமாவுக்கும் நரகத்தைப் பற்றி எச்சரித்தார்கள். 'பாத்திமாவே! அல்லாஹ்விடத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை. அவனின் ஆதிக்கத்திலோ, பொக்கிஷங்களிலோ உரிமை செலுத்தி எதையும் நான் உனக்காகத் தேக்கி வைத்திருக்கவில்லை. அதற்குரிய சக்தியும் எனக்கில்லை. (உறவு என்ற ஒரே தொடர்புதான் நம்மையெல்லாம் ஒன்று சேர்க்கிறது) என்றார்கள்.

வேறு சில அறிவிப்பின்படி குறைஷிகளைப் பார்த்து கீழ்வருமாறு போதித்தார்கள் எனவும் சொல்லப்படுகிறது. அவர்களுக்கு நபியவர்கள்: ' குறைஷிக் கூட்டமே! அல்லாஹ்விடம் உங்களின் ஆத்மாக்களின் விடுதலைக்காக நீங்கள் வேண்டுங்கள். நான் எதையும் அவனிடம் சென்று உங்களுக்காகச் சாதித்துத் தருவேன் எனக் கருதாதீர்கள். எதற்கும் நான் இயலாதவன்' என கூறினர். பின் பல(கூட்டத்தா)ரைக் கூப்பிட்டு இப்படி நபியவர்கள் சொன்னார்கள். 'அப்துல் முத்தலிப், அப்பாஸிப்னு அப்துல் முத்தலிப், நபியவர்களின் மாமியார் ஸபிய்யா, இவர்களுக்கெல்லாம் முதலில் கூறிவிட்டு பின் தம் அருமை புதல்வி பாத்திமாவிடம் 'மகளே! எனக்குச் செல்வமிருந்தால் அதிலிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! அல்லாஹ்வின் வேதனையிலிருந்து உனக்கு விடுதலை வாங்கித்தர என்னை வேண்டாதே! நான் அல்லாஹ்வின் விஷயத்தில் எதையும் உனக்காகச் சாதித்துத்தர சக்தியற்றவன்' என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 'நபியே! தங்களின் நெருங்கிய உறவினர்களை நரகத்தைப் பயந்துக் கொள்ளும்படி எச்சரிக்கை விடுங்கள்' என்ற கருத்துள்ள வசனம் இறங்கியபோது நபிகள் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று தம் புதல்வி பாத்திமாவையும், அப்துல் முத்தலிபின் மகள் ஸபிய்யாவையும் நோக்கி: 'எனது செல்வத்திலிருந்து நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள்! ஆனால் அல்லாஹ்வின் விஷயத்தில் எதையும் என்னிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள். நான் எதையும் அல்லாஹ்விடமிருந்து உடமையாக்கி வைத்திருக்கவில்லை' என்று தெரிவித்தார்கள்.

அபூஹுரைரா அறிவிக்கும் மற்றோர் ஹதீஸில் கீழ்வருமாறு காணப்படுகிறது: 'ஒருநாள் நபியவர்கள் எங்களுக்குப் பிரசங்கம் செய்ய எழுந்து நின்று கீழ்வருமாறு சொற்பெருக்காற்றினார்கள். வஞ்சனையைப் பற்றிக் குறிப்பிடுகையில் அது அபாயகரமானது என்று கூறி விளக்கம் தந்தார்கள். மறுமை நாளில் அமளியிட்டு கோஷமிடுகின்ற கழுதை, குதிரை மற்றும் ஆடு-மாடுகளின் வடிவத்திலுள்ள மிருகங்களைத் தம் முதுகின் மீது சுமந்து என்னிடம் வந்து உதவி தேடுகிறவர்களாக (அபயம் கோருகிறவர்களாக) நீங்கள் யாரும் என்னிடம் வரக்கூடாது. இப்படித்தாம் செய்த பிழைகள் அனைத்தும் நாளை மறுமையில் உயித்தெழுந்து மிருகக் கோலங்களில் பல உயிர்ப்பிராணிகளாக மாற்றப்பட்டு, அம்மிருகங்கள் முணுமுணுத்தவாறு முதுகில் தாங்கிச் சுமந்து அவஸ்தைப்படும் அவலநிலையில் நீங்கள் வருவதை நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன். என் மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்துப் பொறுப்புகளையும் உங்களிடம் விளக்கியும் சொல்லியும், செய்தும் காட்டி விட்டேன். இறைவனிடமிருந்து பெற்ற அனைத்தையும் உங்களிடம் சேர்த்தும் விட்டேன். மீறி மறுமையில் நீங்கள் இப்படி வந்து கேவல நிலைமையில் என்னிடம் முறையிட்டால் எதையும் என்னால் செய்துதர முடியாது என்ற உண்மையைக் கூறி உங்களைத் திருப்பி விடுவேன். இப்படியெல்லாம் வருமென்று உலகத்திலிருக்கும் போதே சொல்லி விளக்கமும் தந்து விட்டேன். எந்த உதவி ஒத்தாசைகளையும் என்னிடமிருந்து அன்று பெற மாட்டீர்கள்'.

இன்சா அல்லாஹ் தொடரும்...

No comments:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }