முஃதஸிலாக்கள், ஜய்திய்யாக்கள், கவாரிஜிகள் போன்ற பித்அத்துக்காரர்கள்தான் இவ்வுண்மையை ஏற்கமாட்டார்கள். நரகத்தில் அகப்பட்டவர்களுக்கு யாருடைய சிபாரிசும் பலனளிக்காது என்று அவர்கள் வாதாடுகிறார்கள். மனிதன் இரண்டே அமைப்புக்குரியவன். சுவனவாதி அல்லது நரகவாதி. நரகவாதியாக நரகில் பிரவேசித்தவனுக்கு என்றும் இருப்பிடம் நரகமே. சுவனத்தைத் தன் இருப்பிடமாக்கிக் கொண்டவனுக்கு என்றும் சுவனமே இருப்பிடமாகும். இவ்விரு இருப்பிடங்களிலிருந்தும் எக்காரணத்தாலும் இவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். தண்டனையும், நற்செய்கைக்கான நல்ல கூலியும் ஒருபோதிலும் ஒன்று சேராது. இவ்வாறு இவர்கள் வாதாடுகிறார்கள்.
ஆனால் நபித்தோழர்களோ, தாபியீன்களோ, நான்கு இமாம்களோ, மற்ற அறிஞர்களில் எவருமோ இப்படிச் சொல்லவில்லை. நரகிலிட்டு தன் குற்றத்திற்கொப்ப வேதனை கொடுக்கப்பட்டவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிபாரிசினால் வெளியேற்றப்படுகிறார்கள் என்ற உண்மையை உண்மையான ஹதீஸ்களின் வெளிச்சத்தில் மனமார ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தான் விரும்பியபடி தண்டனை வழங்குகிறான். பிறகு நபி (ஸல்) அவர்களின் சிபாரிசினால் சிலரை நரகிலிருந்து வெளியேற்றுகின்றான். வேறு சிலருக்கு நபியல்லாத மற்றவர்களைக் கொண்டு சிபாரிசு செய்யப்பட்டு நரக விடுதலை அளிக்கப்படுகிறது. எவருடைய சிபாரிசும் இல்லாமல் நரகிலிருந்து மற்றும் பலருக்கு விடுதலை அளிக்கப்படுகிறது.
நபிகளின் சிபாரிசு எந்தப் பலனையும் யாருக்கும் அளிக்காது என்று கூறி ஷபாஅத்தைப் புறக்கணிக்கின்ற முஃதஸிலாக்கள், ஜய்திய்யாக்கள், கவாரிஜிகள் கீழ்குறிப்பிடப்படும் இறைவசனங்களைத் தம் வாதத்திற்கு சான்றாக எடுத்திருக்கின்றனர். இறைவன் கூறுகிறான்: "நீங்கள் மறுமை நாளை அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள்! அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவும் மற்றவொரு ஆத்மாவுக்குப் பலனளிக்காது. எந்தவொரு ஆத்மாவும் மற்றவொரு ஆத்மாவுக்காகப் பரிந்து பேசுவதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாக) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் பெற மாட்டார்கள்". (2:48)
மேலும் இறைவன் மற்றொரு ஆயத்தில்: "எந்த நாளில் ஒரு ஆத்மா மற்றவொரு ஆத்மாவுக்கு எந்தப் பலனையும் அளிக்காதோ அந்நாளைப் பயந்துக் கொள்ளுங்கள். அந்த ஆத்மாவிடமிருந்து எந்தவொரு பரிகாரமும் அங்கீகரிக்கப்பட மாட்டாது. அதற்காக எவர் பரிந்துரைத்தாலும் பலனில்லை. அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் பெற மாட்டார்கள்". (2:123)
"அநீதி செய்பவர்களுக்கு உதவியாளர்கள் அந்நாளில் ஒருவரும் இருக்கமாட்டார்கள். அனுமதி பெற்ற சிபாரிசுகாரர்களும் இருக்கமாட்டார்கள்". (40:18)
"அவர்களுக்காகப் பரிந்து பேசுவோரின் சிபாரிசும் அன்று யாதொரு பயனும் அளிக்காது" (74:48). இ த்தகைய வசனங்களைத் தமக்குச் சான்றாக வைத்து நபியவர்களின் ஷபாஅத்தைப் புறகணிக்கிறார்கள்.
சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த அறிஞர்களின் கருத்துக்கள் (முஃதஸிலா, ஜய்திய்யா, கவாரிஜ் போன்ற) வழிகெட்ட கூட்டத்தாருக்கு பதிலடியாக அமைந்திருக்கிறது. அவர்கள் இந்த வசனங்களுக்கு இருவகையான கருத்துகளை வழங்குகிறார்கள்.
ஒன்று: இறைவனின் இவ்வசனங்களிலிருக்கும் 'நபிகளின் பரிந்துரை பலனளிக்காது' என்பது முஷ்ரிக்குகளுக்குப் பலனளிக்காது என்பதைத்தான் குறிப்பிடுகிறது என்கிறார்கள். இக்கருத்துக்குச் சான்றாக இறைவனே அம்முஷ்ரிக்குகளுக்கு ஷபாஅத்துப் பலன்தராது என கூறியிருக்கிறான். அம்முஷ்ரிக்குகளைப் பற்றி விளக்கும் போது: "சுவனத்திலிருப்பவர்கள் நரகவாதிகளைப் பார்த்து உங்களை நரகத்தில் புகுத்தியது எது? என முஷ்ரிக்குகளான குற்றவாளிகளைக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் 'நாங்கள் தொழக்கூடியவர்களில்லை. ஏழைகளுக்கு நாங்கள் ஆகாரமளிக்கவில்லை. வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் சேர்ந்து நாமும் வீணில் மூழ்கிக் கிடந்தோம். கூலிகள் வழங்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். நாங்கள் மரணித்து இதை உறுதியாகக் காணும் வரையில் இவ்வாறே இருந்தோம்' என்று கூறுவார்கள். எனவே அவர்களுக்காகப் பரிந்துரை பேசுவோரின் சிபாரிசும் அன்று யாதொரு பயனும் அளிக்காது" (74:40-48) இவர்கள் உலகில் காஃபிர்களாக வாழ்ந்ததினால் எவருடைய பரிந்துரையும் இவர்களுக்குப் பலனளிக்காது என்று கூறி 'ஷபாஅத்துச் செய்வோரின் சிபாரிசு இவர்களுக்குப் பயன் தராது' என்றே இவர்களைப் பற்றி இறைவன் குறிப்பிட்டான்.
இரண்டு: மேற்படி வசனங்களில் 'பரிந்துரை பயனளிக்காது' என்பதைக் கொண்டு நபிகளுக்குரிய ஷபாஅத்தை (பரிந்துரையை) நாடப்பட மாட்டாது. இஸ்லாம் மார்க்கத்திலில்லாத நூதன செயல்களைச் செய்கின்ற முப்ததியீன்களான முஸ்லிம்களிடமும், முஷ்ரிக்குகளிடமும், யூதர்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் அறியப்பட்டிருந்த ஒருவகையான பரிந்துரையைத்தான் இங்கே நாடப்படுகிறது.அத்தகைய ஷபாஅத் யாருக்கும் பயன் தரக்கூடியதல்ல என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும். மக்களில் சிலர் மற்றும் சிலரிடம் சென்று அனுமதி கோராமலேயே சிபாரிசு செய்யும்போது அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதுபோல் சில மனிதர்களுக்கு அல்லஹ்விடமிருக்கும் மதிப்பினால் அனுமதியின்றியே அல்லாஹ்விடம் அவர்கள் சிபாரிசை வேண்டினால் அதை அவன் ஏற்கிறான் என இம்முஷ்ரிக்குகளும் நம்பியிருந்தார்கள்.
மலக்குகள், நபிமார்கள்,வலிமார்கள், நன்மக்கள் இவர்களை விக்ரகங்களாக அமைத்து இவ்விக்ரகங்களைக் கொண்டு சிபாரிசைத் தேடினார்கள். இவ்விக்ரகங்கள் இறைவனின் சில தனிபட்ட படைப்புகள் என்றும், இவற்றை வேண்டுவதினாலும், வணங்கி வழிபடுவதினாலும் தாங்கள் அல்லாஹ்வை நெருங்க முடியுமென்றும் எண்ணி வணங்கினார்கள். மன்னர்களை நெருங்குவதற்காக அவரின் அந்தரங்கச் செயலாளரை சிபாரிசுக்காகப் பிடித்து அவர் அரசரிடம் அனுமதி வேண்டாமல் தமக்குப் பரிந்துரைத்து அரச பீடத்தை நெருங்கும் வாய்ப்பைப் பெற்று, தமது காரியங்களைச் சாதிப்பது போல இந்த விகரகங்களையும் வேண்டினால் கடவுளிடம் இவை சிபாரிசு செய்து எல்லாவற்றையும் சாதித்துத் தருவார்கள் என்றும் நம்பியிருந்தனர். எனவேதான் இந்த சிபாரிசு பலனளிக்காதென்று அல்லாஹ் கூறினான்: "அல்லாஹ்வுடைய அனுமதியின்றி அவனிடத்தில் எவருக்காக யாரால்தான் பரிந்துபேச முடியும்...?" (2:255)
இன்னும் இறைவன் கூறுகிறான்: "வானத்தில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர். அவர்கள் (எவருக்காகவும்) ஷபாஅத்துச் செய்தாலும் அது எந்தப் பயனும் அளிக்காது. ஆனால் அல்லாஹ் தான் விரும்பி திருப்திப்பட்டு எவருக்கு ஷபாஅத்துக்கு அனுமதி கொடுக்கின்றானோ (அத்தகையவர் பரிந்துப் பேசுவது பயனளிக்கும்)." (53:26)
மலக்குகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் கூறுகிறான்: "அவர்களுக்கு முன்பின் இருப்பவற்றை அவன் நன்றாக அறிகின்றான். அவன் விரும்பியவர்களுக்கன்றி மற்றெவருக்கும் இந்த மலக்குகள் சிபாரிசு செய்ய மாட்டார்கள். அவனுக்கஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள்" (21:28) "அல்லாஹ்வுடைய அனுமதி பெற்றவர்களைத் தவிர வேறெவருடைய சிபாரிசு செய்வதும் பலனளிக்காது." (34:23)
"முஷ்ரிக்குகள் தமக்கு நன்மையோ தீமையோ எதுவும் செய்யமுடியாதவற்றை வணங்குவதுடன் இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை என்றும் கூறுகின்றனர்". (10:18)
"நபியே! எவர்கள் மறுமையில் தங்கள் இரட்சகனிடம் ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்படுவோம் என்று பயப்படுகிறார்களோ அவர்கள் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தவான்களாகுவதற்காக நீர் எச்சரிக்கை செய்யும். அவர்களுக்கு (அந்நாளில்) உதவியாளனும், பரிந்து பேசுபவனும் அந்த அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை" (6:51) "அல்லாஹ் தான் வானங்கள் பூமி இவற்றுக்கிடையிலுள்ளவை அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்து பிறகு அர்ஷின் மீது ஸ்திரப்பட்டான். உங்களை இரட்சிப்பதற்கும், உங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கும் அவனை தவிர வேறு ஒருவருமில்லை. இதனை நீங்கள் சிந்திக்கவேண்டாமா?". (32:4)
"அல்லாஹ்வையன்றி எவற்றை இவர்கள் இறைவன் என அழைக்கிறார்களோ அவை இவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் ஷபாஅத்துச் செய்யும் சக்தி பெறாது. ஆனாலும் எவர்கள் உண்மையை அறிந்து அதனை பகிரங்கமாகவும் கூறுகிறார்களோ அவர்கள் அவனுடைய அனுமதி கிடைத்தால் அல்லாஹ்விடம் ஷபாஅத்துச் செய்வார்கள்". (43:86)
"(உங்களை சிருஷ்டிப்பதிலும், போஷிப்பதிலும் இறைவனுக்குத்) துணையானவர்கள் என எவர்களை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுக்கு சிபாரிசு செய்ய உங்களுடன் காணவில்லையே! (அவர்களுக்கும்) உங்களுக்குமிடையில் இருந்த சம்பந்தங்களெல்லாம் நீங்கி உங்களுடைய நம்பிக்கைகளெல்லாம் தவறி விட்டன". (6:94)
"இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எண்ணி எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே! நீர் கேளும். மேலும் நபியே! நீர் சொல்லும் 'சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய முடியாது). வானங்கள், பூமியின் ஆட்சி முழுவதும் அவனுக்குரியதே! (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்". (39:43-44)
"அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதியளித்து அவர்களின் பேச்சைக் கேட்க விரும்பினானோ அவர்களைத் தவிர மற்றெவருடைய சிபாரிசும் பயனளிக்காது." (20:109)
"என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அவனையன்றி (மற்றெதனையும், எவரையும்) இறைவானாக நான் எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கு ஏதேனும் தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு அதில் ஒன்றையுமே என்னை விட்டுத் தடுத்துவிடாது. அதிலிருந்து என்னை இவற்றால் விடுவிக்கவும் முடியாது". (36:22-23)
இன்சா அல்லாஹ் தொடரும்...
Wednesday, April 06, 2005
நபியின் ஷபாஅத்தை மறுக்கின்றவர்கள் யார்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment