Sunday, April 10, 2005

இணை வைப்பவர்களும் ஷபாஅத்தும்

இறைவனுக்கு இணைவைப்போர் மலக்குகளையும், நபிமார்களையும், மற்றும் நன்மக்களின் பிம்பங்களையும் அமைத்து அவற்றிடம் சிபாரிசை வேண்டினார்கள். இப்பிம்பங்களைக் கொண்டு வெளிப்படையில் நாங்கள் சிபாரிசைத் தேடினாலும் உண்மையில் நேரடியாகவே இவர்களிடம் கேட்கிறோம் என்று வாதாடினார்கள். இந்தப் படைப்பினங்களுக்கு கல்லறைகளை அமைத்து வேண்டி நின்றார்கள். அவற்றுக்கு முன் மண்டியிட்டு விழுந்து சிபாரிசை வேண்டி வணக்கங்களும் புரிந்தார்கள். இம்மாதிரியான சிபாரிசை இறைவன் அழித்து இல்லாமலாக்கி விட்டான். இந்த ஷபாஅத்தை நம்பிய முஷ்ரிக்குகளை இழிவானவர்கள் என கண்டித்தான். இவர்கள் அல்லாஹ்வை முழுக்க முழுக்க நிராகரித காஃபிர்கள் என்றும் இறைவன் இவர்களை வர்ணித்தான்.

திருமறையில் ஸுரத்து நூஹ் அத்தியாயம் 23-24ம் திருவசனங்களில் வருகிற வத்தூ, ஸுவாஉ, யகூது, யஊகு, நஸ்ர் போன்ற விக்ரகங்களுக்கு விளக்கங்கள் தரும்போது இந்த விக்ரகங்கள் நூஹ் நபியின் சமூகத்தில் வாழ்ந்திருந்த நல்ல மக்களாவர். இந்நன்மக்கள் இறந்த பிறகு இவர்களுக்குச் சமாதிகள் கட்டி அந்தச் சமாதிகளின் மீது குப்புற வீழ்ந்து வழிபாடுகள் செய்தார்கள். அதன் பிறகு இந்தச் சமாதியில் புதைக்கப் பட்டவர்களுக்கு சிலைகள் அமைத்து அவற்றை வணங்கலானார்கள் என்று அறிஞர் இப்னு அப்பாஸும் மற்றும் பல வியாக்கியானிகளும் விளக்கமளிக்கின்றனர். இந்த விளக்கங்களை திருமறை வியாக்கியான நூற்களிலும், ஸஹீஹுல் புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளிலும் காணலாம். இத்தகைய சிபாரிசுகளை நபி (ஸல்) ஒழித்துக் கட்டினார்கள். இத்தகைய சிபாரிசுகளை நாடும் எல்லா வழிகளையும் முழுக்க ஒழித்துக் கட்டினார்கள். நபிமார்கள் மற்றும் நன்மக்கள் ஆகியோரின் சமாதிகளை மசூதியாக்கியவர்களை நபியவர்கள் சபித்தார்கள். அத்தகைய மசூதிகளில் (சிபாரிசை வேண்டாமலே) ஏக இறைவனை மட்டும் வணங்கினால் கூட அதுவும் விரும்பத்தக்கதல்ல எனக் கூறி கப்ருகளை நோக்கித் தொழ வேண்டாமென்றும் விலக்கினார்கள்.

அலி (ரலி) அவர்களை அனுப்பி பூமியின் மட்டத்தை விட உயர்த்தப்பட்ட எல்லா சமாதிகளையும் தரைமட்டத்திலாக்கும்படி ஏவினார்கள். பிம்பங்களைக் கண்டால் உடைத்தெரியும்படிக் கட்டளையிட்டார்கள். உருவங்கள் வரைபவனை (படைப்பவனை) சபித்தார்கள். அபுல் ஹயாஜுல் அஸதீ என்பவர்கள் அலி (ரலி) அவர்கள் கூறியதாக விளக்கும் ஹதீஸில் கீழ்வருமாறு காணப்படுகிறது: 'நபிகள் எந்தப் பொறுப்பைத் தந்து என்னை அனுப்பினார்களோ, அந்தப் பொறுப்பை நான் உம்மிடம் ஒப்படைத்து அனுப்புகிறேன். எந்த சிலைகளைக் கண்டாலும் விட்டு வைக்காதீர் உயர்ந்திருக்கும் சமாதிகளைக் கண்டால் அவற்றை பூமி மட்டத்தில் உடைத்து விடும்.

இன்சா அல்லாஹ் தொடரும்...

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }