Wednesday, May 18, 2005

இறை நேசர்கள் (2)


வாழ்க்கையில் எப்படித்தான் சிக்கல்கள், துன்பங்கள், துயரங்கள் நேர்ந்தாலும் அவற்றிலிருந்து விடுதலை பெற அல்லாஹ் ஒருவனை மட்டும் நாட வேண்டும். எவரிடத்திலும் முஸ்லிம் தன் துயரங்களை முறையிடுதல் ஆகாது என்று குர்ஆன் விளக்கிக் காட்டுகிறது: "அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றித் திருப்தியடைந்து 'அல்லாஹ் நமக்குப் போதுமானவன், அல்லாஹ் தன் கிருபையைக் கொண்டு மேலும் அருள் புரிவான், அவனுடைய தூதரும் (அருள் புரியலாம்) நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்' என அவர்கள் கூறியிருக்க வேண்டாமா?". (9:59)

கொடுத்ததைப் பற்றிக் குறிப்பிடும்போது அல்லாஹ்வும் ரஸூலும் கொடுத்ததாகச் சொல்கிறான். அதே வேளையில் எவரைக் கொண்டு மக்கள் போதுமாக்கிக் கொள்ள வேண்டுமென்பது பற்றிக் குறிப்பிடுகையில் அல்லாஹ்வை மட்டும் குறிப்பிடுகிறான். தன்னுடன் ரஸுலையும் இணைத்து 'அல்லாஹ்வும் ரஸூலும் நமக்குப் போதுமானவர்கள்' என்று அவர்கள் கூற வேண்டாமா? என்று அல்லாஹ் சொல்லவில்லை. மக்களுக்கு மார்க்க நெறிகளை வழங்குவதில் அல்லாஹ் தன்னுடன் ரஸுலையும் சேர்த்துக் கூறுகிறான்: "(ஆகவே) நம்முடைய தூதர் உங்களுக்கு வகுத்துத் தந்த வழிமுறைகளை நீங்கள் மனமொத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனைக் கூடாதென்று தடுத்து விட்டாரோ அவற்றிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்" என்று குறிப்பிடுகிறான். (59:7)

நற்செயல்களை ஏற்றுச் செயல்பட்டும் தீய செயல்களைத் தவிர்த்துக் கொண்டும் மக்கள் அல்லாஹ்வைத் திருப்திப் படுத்துவதைப் போல ரஸுலையும் திருப்திப் படுத்த வேண்டும். அல்லாஹ், ரஸூலின் முழு திருப்தியையும் மக்கள் நாடி நின்றனர். ஆனால் துன்பங்கள், துயரங்கள் நேர்ந்தால் யாரைக்கொண்டு மக்கள் போதுமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தை விளக்கியபோது அல்லாஹ் தன்னை மட்டும் தான் கூறியிருக்கிறான். தன்னுடன் ரஸூலையும் சேர்த்துக் கூறவில்லை. மேலும் 9 : 59 வசனத்தின் இறுதியில் 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம் என்று அவர்கள் கூற வேண்டாமா? எனும் இடத்தில் அல்லாஹ்வுடன் ரஸூலும் சேர்த்துக் கூறப்படவில்லை. இதிலிருந்து மனிதன் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அஞ்சி ஒடுங்கிப் பயந்திட வேண்டுமென்பது புலனாகிறது.

ஆனால் ரஸூலைப் பொறுத்தவரையில் மக்கள் அவர்களைப் பின்பற்ற வேண்டும். அவர்களின் முன்மாதிரிகளை ஏற்க வேண்டும் என்பன போன்ற செயல்களில் மட்டுமே அல்லாஹ்வுடன் ரஸூலையும் சேர்த்துக் கூற முடியும். பயபக்திக்குரியவனும், அஞ்சி பயந்து நடக்க அருகதையுள்ளவனும், ஆதரவு வைக்கப் பட வேண்டியவனும் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான் இதில் நபிமார்களைச் சேர்க்க முடியாது.

இதுபற்றிப் பிறிதொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்: "எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து அவனுக்கு மாறு செய்வதை அஞ்சிக் கொண்டிருக்கின்றாரோ அத்தகையவர்தாம் நிச்சயமாக மறுமையிலும் பாக்கியசாலிகள்" (24:52) இந்த ஆயத்தில் வழிப்படுவதை அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் சேர்க்கப் பட்டுள்ளது. பயப்படுவதையும், அஞ்சுவதையும் அல்லாஹ்வுடன் மட்டும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை அழைத்துக் கூறினார்கள்:

'சிறுவரே! சில வார்த்தைகளை நான் உமக்குச் சொல்லித் தருகிறேன். அவற்றை நீர் செவி தாழ்த்திக் கேளும். அல்லாஹ்வை நீர் பேணிக் கொள்ளும். அவ்வாறெனின் அல்லாஹ் உமக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறான். அல்லாஹ்வை நீர் பயந்து நடந்தால் அவனை நீர் உமது சமீபத்தில் பெற முடியும். நீர் செழிப்பாக வாழும் காலங்களில் அல்லாஹ்வுக்கு உம்மை (உமது தாராள மனதை)க் காட்டி விடும். அப்படியென்றால் உமக்கு ஏற்படும் இக்கட்டான நிலைகளில் அவன் உமக்கு தனது தாராள குணத்தைக் காட்டித் தருவான். நீர் ஒன்றைத் தேவைப்பட்டு அதைப் பெற்றுக் கொள்ள நாடினால் அல்லாஹ்விடமே அதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும். உதவி தேடினால் அல்லாஹ்விடம் மட்டும் உதவி தேடும். நீர் வாழ்நாளில் அனுபவிக்கப் போகும் அனைத்துக் காரியங்களைப் பற்றியும் திட்டவட்டமாக முன்னரே அல்லாஹ் எழுதி முடித்து விட்டான். ஆகவே உலகமே அணி திரண்டெழுந்து உமக்கு தீங்கிழைக்க முனைந்தாலும் இன்பம், துன்பம், நன்மை, தீமை இவ்விரு விதிகளில் அல்லாஹ் உமக்கு எழுதி நிர்ணயித்துள்ளானே அதைத் தவிர வேறு எதுவும் உமக்கு அனுகாது. ஆகவே உம்மால் அல்லாஹ்வைத் திருப்திப் படுத்தும் வண்ணம் ஏதேனும் வழிபாடுகளை தீர்க்கமான இறை விசுவாசத்துடன் செய்ய முடியுமானால் செய்யும். உம்மால் அவற்றைச் செய்ய முடியாவிட்டால் பரவாயில்லை. நிலை குழைந்து விடாதீர். மனம் வெறுக்கின்ற செயல்கள் மீது நீர் பொறுமையை மேற்கொள்ளும். அப்பொறுமையில் பற்பல நன்மைகள் இருக்கின்றன. இது இப்னு அப்பாஸ் அவர்களைப் பற்றி நன்கறியப்பட்ட பிரபலமான ஹதீஸாகும். சமயங்களில் சுருக்கமான முறையில் அறிவிக்கப் படுவதுண்டு.

நபியவர்கள் இந்த ஹதீஸில் இப்னு அப்பாஸை நோக்கி 'தேவைகளை நீர் அல்லாஹ்விடமே கேட்டுப் பெற வேண்டும். உதவி தேடினால் அல்லாஹ்விடம் மட்டும் உதவி தேடும்' என்று ஏவியிருப்பது இப்னு அப்பாஸைப் பற்றி அறிவிக்கப்படுகின்ற ஹதீஸ்களிலே மிகத் தெளிவாக பலம் குன்றாத (ஸஹீஹான) ஹதீஸாக அறிவிக்கப்படுகிறது. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் முஸ்னத் என்ற ஹதீஸ் தொகுப்பில் ஒரு சம்பவம் வருகிறது: கலீபா அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களின் கரத்திலிருந்த சாட்டை ஒருமுறை கீழே விழுந்து விடுகிறது. இத்தருணத்தில் அந்தச் சாட்டையை எடுத்து தாருங்கள் என்று கூட யாரிடத்திலும் அவர் கெஞ்சி நிற்கவில்லை. அவர்களாகவே அதை எடுத்தார்கள். அது மட்டுமல்ல, என் ஆருயிர்த் தோழர் நபி (ஸல்) அவர்கள் 'எதையும் மனிதர்களிடம் கேட்காதே' என்று என்னைப் பணித்துள்ளார்கள் என்றும் இதற்கு விளக்கம் கொடுத்தார்கள்.

இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களுடைய ஸஹீஹான ஹதீஸுத் தொகுப்பில் அவ்ஃப் பின் மாலிக் என்பார் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸில் அவ்ஃப் பின் மாலிக் அவர்கள் கூறுகிறார்கள்: 'நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் ஒரு சாராரிடம் ஒப்பந்தம் செய்து கொண்ட பொழுது கீழ்வருகிற சில வாக்கியங்களையும் ஸஹாபாக்களிடம் மறைமுகமாகச் சொல்லிக் கொடுத்தார்கள். அது 'மக்களிடம் எதையும் கேட்க வேண்டாம்' என்பதுதான். மேலும் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஸஹாபாக்களில் சிலர் சாட்டை போன்றவை தம் கையை விட்டும் கீழே விழுந்தால் கூட பிறரிடம் 'அதை எடுத்துத் தாரும்' என்று கேட்டதில்லை.

இமாம் புகாரியுடையவும், முஸ்லிமுடையவும் ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களில் வருகின்ற ஒரு ஹதீஸில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் சமுதாயத்திலுள்ளவர்களில் எழுபதினாயிரம் மக்கள் கேள்வி கணக்கின்றி சுவனத்தில் புகுவார்கள்'. இது பற்றி மேலும் நபிகள் விளக்கம் தருகையில் கூறினார்கள்: 'அவர்கள் ஓதிப் பார்க்க பிறரிடம் வேண்டிக் கொள்ளாதவர்கள். சூடுபோட்டு சிகிச்சை செய்யாதவர்கள். அவர்கள் துர்ச்சகுனம் பார்ப்பவர்களாகவும் இருந்ததில்லை. தம் இரட்சகன் அல்லாஹ்வின் மீது தன் காரியங்களை பாரம் சாட்டி ஒப்படைத்திருந்தனர்' என்று கூறினார்கள். கேள்வி-கணக்கின்றி சுவர்க்கத்தில் நுழைபவர்களின் தன்மைகளைப் பற்றிப் பாராட்டி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் பொழுது 'அவர்கள் ஓதிப் பார்க்க யாரிடமும் வேண்டிக் கொள்ள மாட்டார்கள்' என்று விளக்கம் தருகிறார்கள். திருமறையைக் கொண்டும், அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களைக் கொண்டும் ஓதிப் பார்த்தல் என்பது அனுமதிக்கப்பட்ட பிரார்த்தனைகளின் இனத்தைச் சார்ந்ததாக இருந்தும் அவர்கள் அதைக் கூட பிறரிடம் கெஞ்சிச் செய்ய மாட்டார்கள் என்று பாராட்டப் படுகிறார்கள். மனிதன் பிறரிடம் ஒதிப் பார்க்க போவதைக் காட்டிலும் தனக்குத் தானாவே ஒதிப் பார்ப்பதும், மற்றவர்கள் சொல்லாமல் தாமாக உணர்ந்து பிறருக்கு ஓதிப் பார்ப்பதும் மார்க்கத்தில் விரும்பத்தக்க செயலாகும். நபி (ஸல்) அவர்கள் தமக்குத் தாமாக ஓதிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் யாரிடத்திலும் தமக்கு ஓதிப் பார்க்க வேண்டிக் கொள்ளவில்லை.

நபிகள் (ஸல்) தமக்காகவும், பிறருக்காகவும் ஓதிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் யார் தமக்கு ஓதிப் பார்க்க வேண்டிக் கொள்ளவில்லை.

மனிதர்கள் தமக்காகவும் பிறருக்காகவும் ஓதிப் பார்ப்பதெல்லாம் பிரார்த்தனைப் புரிவதற்குச் சமமாகும். தமக்கும், பிறருக்கும் பிரார்த்திப்பது போன்றொரு அமல்தான் ஓதிப் பார்ப்பதும். அத்துடன் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஓதிப்பார்த்தல் திருமறையைக் கொண்டும், இறைவனின் அழகிய திருநாமங்களைக் கொண்டும் இருத்தல் வேண்டும். வேறுஏதேனும் (மந்திரித்தல்) செய்தால் அது முழு ஹறாமான செயலாக மதிக்கப்படுகிறது. நபியவர்கள் தமக்காக ஓதிப்பார்த்தல் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதற்குச் சமம். இதைப் பிறருக்காகச் செய்தால் பிறருக்காகப் பிரார்த்தித்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். நபிகள் மட்டுமல்ல, அனைத்து நபிமார்களுமே அல்லாஹ்விடத்தில் தமக்காகவும், பிறருக்காகவும் பிரார்த்தனைகள் நடத்திப் பற்பல தேவைகளை அவனிடம் கேட்டிருக்கிறார்கள். பல தேவைகளை அவனிடமிருந்து பிறருக்காகச் சாதித்துக் கொடுத்துமிருக்கிறார்கள். நபிமார்களான ஆதம், இப்ராஹீம், மூஸா (அலை) போன்ற மற்றும் இறை தூதர்களின் வரலாற்றில் அல்லாஹ் இதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

இப்னு அப்பாஸ் அறிவிக்கும் ஸஹீஹான ஹதீஸில் கூறப்படுகிறது: 'நம்ரூத் இப்ராஹீம் நபியைத் தூக்கி நெருப்புக் கிடங்கில் எறிந்தபோது உடனே ஜிப்ரீல் வருகைத் தந்து கூறினார்கள். 'இப்ராஹீமே! உம் தேவையைக் கேளும்' உடனே இப்ராஹீம் நபியவர்கள் 'அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனிடம் நான் எல்லாக் காரியங்களையும் ஒப்படைத்து விட்டேன். பாரம்சாட்டி ஒப்படைக்கக் கூடியவர்களில் அவனே சிறந்தவன் -ஹஸ்பியல்லாஹு வ நிஃமல் வகீல்- என கூறினார்கள். சிலர் பெருமானாரிடம் வந்து 'நபியே! தாங்களுக்கெதிராக யுத்தம் புரிய சகல மனிதர்களும் நிச்சயமாகத் திரண்டு நிற்கின்றனர். ஆகவே அவர்களை பயப்படுங்கள்' என்று கூறியபோது, நபியவர்களும் 'ஹஸ்பியல்லாஹு வ நிஃமல் வகீல்' எனக் கூறித்தான் தமக்குத் தாமே பாதுகாப்புத் தேடிக் கொண்டார்கள்.

இப்படியாகவே அனைத்து நபிமார்களும் தமக்காக அல்லாஹ்விடம் மட்டும் பாதுகாப்புக் கேட்டு நின்றார்கள். வேறு யாரிடமும் எதையும் கேட்கவில்லை. கஷ்டங்களை விட்டு நீங்கவும், துன்பங்களிலிருந்து விடுபடவும் தாமாகவே துஆக்களை இறைஞ்சி துன்பங்களிலிருந்து விலகிக் கொண்டனர். யாரிடமும் அவர்கள் எதைப் பற்றியும் முறையிடவில்லை. ஜிப்ரீலிடம் கூட எதையும் வேண்டிக் கொள்ளவில்லையென்றால் வேறு எந்தப் படைப்புகளிடம்தான் கேட்கப் போகிறார்கள். ஒரு நாள் ஜிப்ரீல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'நபியே! தாங்களுக்கு ஏதாவது தேவைகள் இருக்கின்றனவா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலை நோக்கி 'உங்களிடம் எனக்கு எத்தேவையுமில்லை' என்று பதில் கொடுத்தார்கள். இச்சம்பவத்தை இமாம் அஹ்மதும் மற்றவர்களும் அறிவிக்கிறார்கள்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட வேளையில் அல்லாஹ்விடம் பிரார்த்தித்து அதிலிருந்து விடுதலைப் பெற்ற சம்பவத்தை வேறு இடங்களில் திருமறை குறிப்பிடுகிறது. அவர்கள் நெருப்பில் எறியப்பட்டபோது ஜிப்ரீல் விஜயம் செய்தார்கள். 'இப்ராஹீமே! உமக்கு இப்பொழுது என்ன தேவையோ அதை அல்லாஹ்விடம் கேளும் என்று பணித்தார்கள். அதற்கு இப்ராஹீம் நபியவர்கள் 'நான் ஏன் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். என்னைப் பற்றி அல்லாஹ் தெரிந்திருப்பதே எனக்குப் போதுமானது. நான் ஒன்றும் அவனிடம் கேட்கத் தேவையில்லை' (ஹஸ்பீ மின் ஸுஆலி இல்முஹு பி ஹாலி) என்று நபி இப்ராஹீம் (அலை) ஜிப்ரீலிடம் கூறியதாகச் சொல்லப்படும் சம்பவம் ஆதாரமற்றதாகும். இதை மெய்யான சம்பவம் என்று குறிப்பிட முடியாது. மாறாக இப்ராஹீம் (அலை) அவர்கள் இவ்வேளையில் ஹஸ்பியல்லாஹு வ நிஃமல் வகீல் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இது இப்னு அப்பாஸ் மூலம் அறிவிக்கப்படும் ஸஹீஹான ஹதீஸில் காணப்படுகிறது. நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஜிப்ரீலிடம் 'நான் ஏன் இறைவனிடம் கேட்க வேண்டும்?' என்று எப்படிப் புறக்கணித்துக் கூறுவார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறான். சிருஷ்டிகளின் ஒவ்வொரு நிலைமையையும் அறிந்திருக்கிறான். அத்துடன் தன்னை வணங்க வேண்டுமென்றும் அவற்றைப் பணித்திருக்கிறான். தன்மீது எல்லா அடிமைகளும் தத்தம் காரியங்களைப் பாரம் சாட்டி ஒப்படைத்து விட்டுத் தேவைகள் அனைத்தையும் அவனிடமே கேட்க வேண்டுமென்றும் பணித்திருக்கிறான்.

ஆம்! இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம். இக்காரணங்களினால் சகல காரியங்களும் உண்டாகின்றன. காரணங்களைக் கொண்டு காரியங்கள் நிறைவேறும் அமைப்பில் விஷயங்களை அல்லாஹ் அமைத்திருக்கிறான். எனவே வணங்கி வழிபடும் நன்மைகளுக்குரிய கூலி கொடுத்தல் என்று ஒருகாரியம் உண்டாவதற்கு வணங்க வேண்டுமென்ற காரணத்தை அமைத்துள்ளான். ஆக வணக்கம், வழிபாடு என்ற காரணங்களிருந்தால் கூலி கொடுக்கப்படும் என்ற காரியம் நிறைவேறுகிறது. இதைப் போன்றுதான் துஆக்களின் நிலைமையும். அங்கீகரிக்கப்படல் என்ற காரியம் உண்டாவதற்கு இறைவனிடம் கெஞ்சிக் கேட்டல் என்ற காரணம் இருக்க வேண்டும். அல்லாஹ் அனைத்தையும் முறைபோல் அறிந்திருக்கிறான் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. யார் என்ன தேவைக்குரியவன்? எது யாருக்கு வேண்டும்? பாவி யார்? கொடிய பாவி யார்? என்பன போன்றவற்றை விளக்கமாகவும், துல்லியமாகவும் அறிந்திருக்கிறான். இத்தகைய அல்லாஹ்வுக்கு மனிதன் தன்னிடம் துஆக் கேட்க வேண்டுமென்று பணிப்பதில் என்ன குறைபாடு வரப்போகிறது? பாவம் செய்கிறவனை நன்றாக அறிந்திருந்தும் அவனை நோக்கி 'நீ பிரார்த்தித்து என்னிடம் பாவமன்னிப்பை வேண்டு' என்று பணிப்பதில் எந்தக் குறையும் அல்லாஹ்வுக்கு இல்லை.

இதைப் போன்றுதான் நபி இப்ராஹீமின் நிலைமையும். நெருப்புக் குண்டத்தில் தூக்கி வீசப்பட்ட போது அவர்களின் நிலைமைகளை அல்லாஹ் நன்றாக தெரிந்திருந்தான். இதனால் அவர்கள அல்லாஹ்விடம் பிரார்த்திக்காமலிருக்க என்ன வந்து விட்டது? எனவே நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படும் வார்த்தைகள் ஆதாரமற்றவையாகும். ஆனால் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். துஆக்களை விட சிலவேளை சில திக்ருகளுக்கு (தியானங்களுக்கு) அதிகமான மதிப்புகள் கொடுக்கப்படுகின்றன. மனிதன் இதுபோன்ற திக்ருகளை ஓதினால் துஆக் கேட்பவனுக்குக் கிடைக்கும் ஆதாயத்தை விட அதிகமான ஆதாயத்தையும், வெகுமதிகளையும் இந்த திக்ருகளை மொழிந்ததினால் பெறுகிறான். ஆனால் திக்ருகள் ஓதி துஆவின் பலனைப் பெறுவதெல்லாம் மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் மட்டும்தான். ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதை நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்: 'அல்லாஹ் கூறினான்: 'என்னிடம் எதையும் கேட்காது என்னைத் தியானிப்பதிலேயே ஒருவன் நேரத்தைக் கழித்தால் துஆக் கேட்பவர்களுக்கு அளிக்கப்படும் ஆதாயத்தை விட சிறந்த ஆதாயத்தையும், வெகுமதியையும் அளித்து அவனைக் கௌரவிப்பேன்'. இன்னுமோர் ஹதீஸ் குத்ஸியில் நபியவர்கள் கூறினார்கள்:

'அல்லாஹ் சொல்கிறான்: 'என்னிடம் பிரார்த்திக்காமலும், என்னை திக்ரு செய்யாமலும் எவர் திருமறை ஓதுவதில் மட்டும் பராக்காயிருக்கிறாரோ அவருக்கு துஆக் கேட்பவர்களுக்குக் கொடுக்கப்படும் வெகுமதியைக் காட்டிலும் சிறந்த வெகுமதியையும், ஆதாயத்தையும் நான் கொடுப்பேன்'. இதை இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தமது ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இன்சா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }