Saturday, May 14, 2005

இறை நேசர்கள்.(1)


மெய்யான இறை நேசச்செல்வர்கள் இறை நம்பிக்கையிலும், பக்தியிலும் தீர்க்கமானவர்களாக இருப்பார்கள். அல்லாஹ்வின் பயம் என்றும் அவர்களின் இதயங்களில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும். அல்லாஹ் அல்லாத எவரையும் (அவர் நபியாகட்டும், வலியாகட்டும், ஜின்னாகட்டும்) அவர்கள் அஞ்ச மாட்டார்கள். அல்லாஹ்வின் பக்கம் மாத்திரமே இவர்கள் பக்தி செலுத்துவார்கள். உண்மைக்கு மாறாக ஷிர்க்வாத கருத்துகளுக்கு ஒருபோதும் இவர்கள் இசைய மாட்டார்கள். திருக்குர்ஆனையும், ஹதீஸையும் வைத்து துருவி ஆராய்ந்து இஸ்லாத்தில் உள்ளவற்றை மட்டும் எடுத்துச் செயல்படுவார்கள். இவர்களிடமிருந்து வெளிப்படுகின்ற (கராமத்) அற்புதச் செய்கை என்பது இறை நம்பிக்கை, இறைபக்தி போன்ற நல்ல குணங்களின் விளைவாகும். அன்றி பித்அத், ஷிர்க் போன்ற தீய குணங்களில் தம்மை ஈடுபடுத்துகிறவர்கள் எவரும் ஒருபோதும் கராமத்தை (அற்புதச் சாதனைகளை) வெளிப்படுத்த மாட்டார்கள். மக்கள் தமது இஷ்டப்படி மார்க்க விஷயத்தில் நடந்து கொள்ள முடியாதல்லவா? மாபெரும் அவ்லியாக்களின் வரலாறுகளைப் படித்தால் கண்ட மாதிரி, கண்ட இடங்களிலெல்லாம் தம் அற்புதச் செய்கைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் இன்று வரை குறிப்பிட்டதில்லை.

மதச் சட்டங்களுக்குத் தகுந்த மேற்கோள் காட்டி எண்பிக்கப் படுவதற்கும், மதப் போதனைகளை நிரூபிக்க வேண்டிய நிலைகளும் உருவானால் மட்டுமே தம் கராமத்தினால் அவற்றை உறுதியான முறையில் விளக்கி மதத்தைக் கண்ணியப்படுத்திக் காட்டுவார்கள். முஸ்லிம்களுக்கு ஏதாவது தேவைகள் ஏற்பட்டாலும் கராமத்தைக் கொண்டு அவற்றைப் பூர்த்தி செய்து கொடுப்பவர்களும் உண்டு. சில வலிமார்கள் கராமத்தை ஹலால் (ஆகுமாக்கப்பட்ட வினை)களில் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆக எப்படியிருப்பினும் அனுமதியில்லா ஹறாமான பாவச் செயல்கள் புரிவதற்கு சாதகமாக ஒரு வலியுல்லாஹ் கூட தம் கராமத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. விலக்கப்பட்ட செயல்களில் கராமத்துகள் உபயோகிக்கப்பட்டால் அவை கராமத் என்றும் சொல்லப்பட மாட்டாது. மாறாக அவன் துரோகியாவான். அவனே அல்லாஹ்வின் பாவியுமாவான். தனக்கும், தன்னைச் சூழ்ந்திருப்பவர்களுக்கும் அநீதி இழைத்துக் கொண்டான். இஸ்லாத்தில் அத்துமீறியவன் என்றும், பாவியென இவனைப் பற்றிச் சொல்லப்பட வேண்டும். இஸ்லாமியரின் சமூகத்தில் வாழ்ந்து தன்னை மூமின் என்றும், ஈமானுக்குப் பாடுபடுகிறவன் என்றும் காட்டிக் கொண்டிருந்தாலும் இவனை விடக் கொடியவன் இருக்க முடியாது. அவ்லியாக்கள் தூய ஈமானிலும், தீர்க்க பக்தியாலும் அல்லாஹ்விடமிருந்து வெகுமதியாக கராமத்தைப் பெறுகின்றனர். எனவே இக் கராமத்தை ஒருபோதும் தீமைகளுக்கு பயன்படுத்த மாட்டார்கள். தீய செயல்களில் கராமத்தை உபயோகித்ததினால் அவை நன்மையாகத் திரும்பிவிடப் போவதுமில்லை.

ஒரு முஸ்லிம் மத எதிரியோடு போராடினான் என்று வைத்துக் கொள்வோம். போராடியவன் வென்றான். எதிரியிடமிருந்து ஏராளம் கொள்ளைப் பொருட்கள் கிடைத்தது. அவற்றால் தன் பையை நிறைத்துக் கொண்டான். இப்போது மத எதிரியோடு போரடியவன் என்ற வகையில் இவன் சிறந்தவனென்பதில் ஐயமில்லை. இவன் பாராட்டி ஊக்குவிக்கப்பட வேண்டியவன். இவனுடைய செய்கையும் கௌரவிக்கத் தக்கதல்லவா? ஆனால் பின்னொரு முறை இந்த சூறைப் பொருட்களை வீணடித்து விட்டான். ஷைத்தானுக்குத் துணை செய்யும் காரியங்களில் இச்செல்வங்கள் அத்தனையையும் போக்கடித்தான். தன்னிஷ்டப்படி தீய நடவடிக்கைகளில் வினியோகித்தான். போராடிக் கிடைத்தப் பொருள் அத்தனையும் இவனுக்குக் கெடுதியாக அமைந்து விடுகிறது. பயனெதையுமே நல்கவில்லை. இப்படித்தான் கராமத்தும். அது கிடைக்க வேண்டுமானால் திடமான ஈமான் வேண்டும். இறையச்சம் மிகுதியாக உள்ளத்தில் குடிகொள்ள வேண்டும். மற்றும் எத்தனையெத்தனையோ நற்பண்புகள் வேண்டும். இவை நிரம்பிய ஜெயசீலர்கள் மட்டும் இந்தக் கராமத்துக்கு உரியவர்களாக ஆகிறார்கள். இப்படிக்கிடைத்த கராமத்தை ஒழுக்கக் கேடான செய்கைகளினால் இறைவனை நிராகரிக்கிற, மேலும் அவனுக்குக் குற்றம் புரிகிற, இன்னும் அவனுக்கு விருப்பமில்லாப் பாதைகளில் செலுத்தி பாவச் செயல்கள் புரிகிற செயல்களில் ஈடுபடுத்தினால் இவற்றைக் கராமத் என்று கூற முடியுமா? இதனால் வலிப்பட்டம் உள்ளதாகச் சொல்லப்படுபவன் பெரும் பாவியாக மாறிவிட வேண்டியது தானே வருகிறது.

ஆகவே இம்மாதிரி முறைகேடான கராமத்தைப் பயன்படுத்தியவர்களில் பலர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாகவும், காஃபிர்களாக இறந்திருப்பதாகவும் அவர்களைச் சார்ந்தவர்களே ஏற்றிருக்கிறார்கள். இதைப்பற்றி விளக்கமாக வேறோரிடத்தில் பேசலாம். இணைவைத்த முஷ்ரிக்குகள் வழிகெட்டுப் போனதற்கான காரணங்களில் மிக முக்கியமானவை எவை என்றால் அவர்களின் பிம்பங்களின் அருகில் அவர்கள் கண்ட காட்சிகளும், கேட்ட குரல்களும் தான். இவையே இவர்களை ஷிர்க்கில்-இணைவைப்பில் உறைந்திருக்கத் தூண்டின. தர்ஹாக்களில் ஏதோதோ தொலைவிலுள்ள சம்பவங்கள் விளக்கப்படுகின்றன. சிறு சிறு தேவைகள் நிறைவேற்றப்படுவதும் உண்டு. கப்று வெடித்து பயங்கரமான அழகிய வடிவத்திலுள்ள ஒரு ஷைகு உதயமாகி, ஸியாரத்துக்குச் சென்றவனைக் கட்டியணைத்து ஸலாம் கொடுத்து ஏதோ அவனுக்கு விருப்பமான பேச்சுகளைப் பேசிவிட்டு மறைந்து விடுகிறார். இதனால் ஸியாரத்துக்குச் சென்றவனுக்கு நல்ல உறுதியாகி விட்டது. அதாவது: 'கப்றில் அடக்கப்பட்டிருந்த நபி அல்லது அவ்லியாதான் வந்து வரம் கொடுத்து (முரீது வியாபாரம் நடத்தி) விட்டுப் போகிறார்' என்று இதை நினைத்து நிம்மதியடைகிறான்.

பின்பு இச்சம்பவத்தின் வெளிச்சத்தில், திடமான ஷிர்க் வாழ்க்கையைத் தொடர்கிறான். கப்று மெய்யாக வெடிக்கவுமில்லை, பிளக்கவுமில்லை. தன் கண்களில் அப்படியொரு கண்கட்டு வித்தைக் காட்சியை ஷைத்தான் ஏற்படுத்தி விட்டு, இவனை நிலை குலையச் செய்தான். கப்று வெடித்து மனிதன் உதயமாகுவது போல சுவர்கள், பூமிகள் போன்றவையும் வெடிப்பதுண்டு. குறிப்பிட்ட சில இடங்களில் இந்தமாதிரி சம்பவங்கள் ஏராளம் நடந்திருக்கின்றன.

இதைவிட ஆச்சரியமான செய்தி என்னவென்றால் சமாதியிலிருந்து ஊடுருவிப் பாய்கிற அவ்லியாக்கள், ஷைகுமார்கள் ஸியாரத்துக்கு வந்தவனிடம் 'நாங்கள் இந்த சமாதிகளில் ஸ்திரப் பட்டிருப்பதில்லை' என்று கூறுகிறார்கள். எந்த வேளையில் நாங்கள் புதைக்கப்பட்டோமோ அந்த வேளையிலிருந்தே நாங்கள் கப்றை விட்டு வெளியேறி விடுகிறோம். உயிருள்ள மக்கள் சமூகங்களுக்கிடையில் தான் நாங்கள் சுற்றித் திரிகிறோம். உங்களின் அன்றாடக் காரியங்கள் எல்லாவற்றிலும் நாங்கள் பங்கு பெறுவதுண்டு' என்று கூறுவார்களாம். சிலர் மய்யித்தைப் புதைப்பதற்காகத் தூக்கிச் செல்லும் வழியில் இறந்த மய்யித்தும் சேர்ந்து தன் ஜனாஸாவை தூக்கிச் செல்வது போல் ஒரு கண்கட்டுக் காட்சியை கண்டிருக்கின்றனர்.

இதுபோல் எத்தனையோ சம்பவங்களைக் கூறிக்கொண்டே இருக்கலாம். வழிதவறிய சமூகம் இவற்றைக் கண்டதும் சிந்தனையின்றி அவ்லியாக்களின் கராமத்துகள் என்று பொய்யை எடுத்துக் கூறி மெய்பித்து விடுகிறது. என்றும் உயிருடனுள்ள அல்லாஹ்வை பயப்படுவதை விட்டும் நீங்கி, எப்போதோ இறந்து மடிந்த வலியைப் பயந்து நடக்கின்றனர். கப்றில் உதயமான மனிதனைப் பற்றி நபியென்றும், அவ்லியாவென்றும், ஷைகு என்றும் தீர்மானித்து விடுகின்றனர். மனித உருவத்தில் தோற்றமளித்தது மலக்கு என்றும் கூட சிலர் கூறக் கேட்டிருக்கிறோம். இதனால் இவர்களுக்குப் பயந்தும் நடக்கின்றனர். பயப்படாவிட்டால் தண்டனை கிடைக்குமென்ற நடுக்கம்! தாம் கண்டதைப் பற்றி கப்றாளியின் ரூஹானிய்யத் என்றும், அவருடைய சோற்றுச் சட்டி பிச்சைக் குடுக்கை என்றும், அவருடைய 'ஸிர்ரு' அந்தரங்க இரகசியங்கள் விஜயம் செய்திருக்கின்றன என்றெல்லாம் கூறி நம்பி விடுகின்றனர். ஒரே நேரத்தில் ஒரே தோற்றத்தில் இரண்டு இடங்களில் ஷைத்தான் காண்பித்துக் கொடுக்கிறான். பார்ப்பவர்கள் ஒரு வலியுல்லாஹ்வுக்கு ஒரே நேரத்தில் பற்பல இடங்களில் பிரதிபலிக்கும் சக்தியுண்டு என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

மலக்குகளையும், காலஞ்சென்ற நபிமார்களையும் அழைப்பதற்காவும், இவர்களின் தர்ஹாக்களில் சென்று தம் தேவைகளை வேண்டுவதற்காகவும் புறப்படுபவர்கள் நிச்சயமாக முஷ்ரிக்குகளாவர். இத்தீவினையால் தம் ஈமானை வீணாக்கி விடுகிறார்கள். இவர்களும், கிரகங்களை வணங்கி வழிபடுகிறவர்களும், நட்சத்திரங்களையும் இதர கோளங்களையும் நோக்கிப் பிரார்த்திக்கின்ற மூட நம்பிக்கைக்காரர்களும் ஒரே சமத்துவத்தில் உள்ளவர்கள் என்று கூறலாம். அல்லாஹ் கூறுகின்றான்: "ஒரு மனிதனுக்கு வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் அருளிய பின்னர் அவர் மனிதர்களை நோக்கி அல்லாஹ்வையன்றி என்னையே வணங்குங்கள் என்று கூறுவதற்கில்லை. ஆனால் மனிதர்களை நோக்கி நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக்கொண்டும் இருப்பதன் காரணமாக (அதிலுள்ளவாறு) இறை (வன் ஒருவனையே வணங்கும்) அடியார்களாகி விடுங்கள் (என்றுதான் கூறுவார்). தவிர மலக்குகளையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்களென்றும் அவர் கட்டளையிட மாட்டார். நீங்கள் முஸ்லிமானதின் பின்னர் நிராகரிக்கும்படி உங்களை ஏவுவாரா?" (3:79-80)

இன்னும் அல்லாஹ் கூறுகிறான்: (17"(நபியே!) நீர் கூறும். அல்லாஹ்வையன்றி (வேறு தெய்வங்களிருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவற்றை (உங்கள் கஷ்டங்களை நீக்க) அழையுங்கள். அவ்வாறு அழைத்தால் அவை உங்களுடைய யாதொரு கஷ்டத்தையும் நீக்கி வைக்கவோ அல்லது அதனை தட்டி விடவோ சக்தியற்றவை (என்பதை அறிவீர்கள்). இவர்கள் (ஆண்டவன் என) அழைப்பவையும், தங்களை இறைவனிடம் சேர்த்து வைக்கும் அமல்களைத் தேடுவதுடன் அவ்வமல்களைக் கொண்டு அல்லாஹ்வோடு மிக நெருங்கியவர் யார்? என்பதையும் தேடிக் கொண்டு அவனுடைய அருளை எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்கும் பயப்படுகின்றனர். ஏனென்றால் உம் இறைவனின் வேதனை நிச்சயமாகப் பயப்படக் கூடியதே". (17:56-57)

இன்னும் அல்லாஹ் கூறுகிறான்: "(நபியே!) நீர் கூறும். அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் தெய்வங்களென எண்ணிக் கொண்டீர்களோ அவற்றை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ பூமியிலோ அவற்றுக்கு அணுவளவும் அதிகாரம் இல்லை. அன்றி அ(வ்விரண்டில் எதிலும் அவற்றைப் படைப்ப)தில் இவற்றுக்கு எத்தகைய பங்குமில்லை. அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் ஒருவரும் இல்லை. அவனுடைய அனுமதி பெற்றவர்களைத் தவிர மற்றெந்த மலக்கும் அவனிடம் பரிந்து பேசுவதும் பலனளிக்காது". (34:22-23)

இதைப்போன்ற கருத்துள்ள பல ஆயத்துகளை திருமறையில் காணமுடியும். அத்தனையுமே அல்லாஹ் அல்லாத இதர படைப்புகளிடம் பிரார்த்திப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. நாதாக்களானாலும் சரி, அவ்லியாக்களானாலும் சரி, யாரானாலும் அவர்கள் காலஞ்சென்று விட்டால் அவர்களிடம் சென்று துஆக்கள் வேண்டப்பட மாட்டாது. படைப்புகள் எவராயினும் அவர்களிடம் ஷபாஅத்துகள் தேடுவதும் தடுக்கப்பட்டுள்ளது. இவை ஷிர்க்கான அமல்களாகும். ஷிர்க்கின்பால் மனிதனை வேகமாகத் திருப்புகின்ற அபாயகரமான செயல்கள். ஆனால் பெரியோர்கள் வாழ்ந்திருக்கும் போது அவர்களிடம் சென்று ஷபாஅத்துக் கேட்கலாம். பிரார்த்தனை கேட்கலாம். இதற்கு அனுமதியுண்டு. இவர்கள் உயிரோடிருக்கையில் தேவைகள் எதுவானாலும் சரி அவற்றை நிறைவேற்றித் தரச் சொல்வது அனுமதிக்கப்பட்டதின் காரணம் என்னவென்றால், வாழ்ந்திருக்கும் நபியிடமும், வலியிடமும், ஒரு தேவையைக் கேட்டால் அது ஷிர்க்கில் மனிதனைச் சேர்த்து விடாது. இத்தகைய வேண்டுதலில் ஷிர்க் நுழைவதற்குரிய வாய்ப்புகளும் இல்லை. ஏனெனில் நபிமார்களின் வாழ்நாளில் அவர்களில் ஒருவர் கூட அல்லாஹ்வை வணங்குவது போலத் தம் கண்முன்னிலையில் வைத்துத் தன்னை வணங்கி வழிபடுவதை அனுமதிக்க வில்லையென்பது வரலாறு கூறும் உண்மை. அப்படி வேறு எவராகிலும் தம்மைக் கடவுளாக்க முனைந்தால் கூட நபிமார்கள் உடனே அதைத் தடுத்து விடுவார்கள். இது நபிமார்களின் குணங்களில் ஒன்று. ஸாலிஹான நன்மக்களில் எவரும் தான் வணங்கப்படுவதற்கு வாய்ப்புகள் அளிக்கவில்லை என்பதுவே உண்மை.

இந்த ஆதாரங்களினால் உயிரோடு நடமாடும் ஒரு நபியையோ, வலியையோ, குருவையோ அணுகி அவரிடம் சிபாரிசைக் கேட்கலாம். உதவித் தேடி நிற்கலாம். அல்லாஹ்விடம் பிரார்த்திக்கச் சொல்லலாம். இதற்கெல்லாம் ஷரீஅத்தில் அனுமதி உண்டு. ஆனால் இவர்கள் காலஞ்சென்றதற்கப்பால் இவற்றுள் எதுவுமே அனுமதிக்கப்பட மாட்டாது. எந்த முஸ்லிமுக்கும் காலஞ் சென்ற நபியிடம் அவருடைய கப்றில் சென்று முறையிடுவதற்கும், பிரார்த்தனைகள் வேண்டுவதற்கும், உரிமை வழங்கப்படவில்லை. ஏனெனில் தவறான செயலில் மனிதன் மூழ்கினால் அல்லது நபியின் சமாதியில் அவர்களை கண்ணியப்படுத்தி வணங்கி பித்அத்தான வேலைகள் அச்சமாதியில் நடத்தப்பட்டால் இவற்றைத் தடுத்து நிறுத்துகின்ற ஆற்றலும், வல்லமையும் இறந்துப் போன நபிமார்களுக்குக் கிடையாது. இதனால் மனிதன் ஷிர்க்கின் பக்கம் போய்ச்சேர்ந்து தன் ஈமானை வீணாக்கிக் கொள்கிறான். இறந்துபோன நபியிடம் சென்று பிரார்த்திப்பதால் இம்மாதிரியான நிலைமைகள் இவனுக்கு உருவாயின. இங்கேதான் இறந்தவர்களைப் பிரார்த்திக்கக் கூடாது என்ற அனுமதியின்மையின் மர்மம் வெளிப்படுகிறது.

காலஞ்சென்ற ஒருவரைப் பிரார்த்தித்து தம் தேவைகளை முறையிடுவதும், எங்கோ தூரத் தொலைவில் இருப்பவரைக் கூப்பிட்டுத் தேவைகளை வேண்டுவதும் கூடாது என்பது என்ற விஷயத்தில் சமம்தான். மனிதன் ஒரு நபியை நேராகப் பார்த்தான் என்று வைத்துக் கொள்வோம். அல்லது ஒரு மலக்கை சந்தித்தான். எனக்காக துஆ செய்யுங்கள் என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தான். இந்நேரம் இச்சொல் அவனை ஷிர்க்கில் சேர்த்து விடாது. ஆனால் எங்கோ ஒரு நல்ல மனிதர் அல்லது ஒரு நபி இருப்பதாக கேள்விப்பட்டதும் அவரை மனதில் நினைத்து தூரத்திலிருக்கின்ற அவரிடம் உரையாடுவது போல் நினைத்து எனக்காக துஆச் செய்யுங்கள் என்று தன் வேண்டுகோளை தெரிவித்தானென்றால் இச்செயல் கண்டிப்பாக அவனை ஷிர்க்கில் சேர்த்து வைக்கிறது. ஏனெனில் மய்யித்தாக இருப்பவரும், மறைமுகமாக இருப்பவரும் ஷிர்க்கான செயல்களை காணவும், கேட்கவும் முடியாதவர்களாக இருப்பதனால் இவற்றைச் செய்கிறவனைத் தடுக்க மாட்டார்கள். இத்தீய செயல் விலக்கப் படாமலேயே செய்யப்படுகிறது. இதனால் ஷிர்க்குகள் நாளொரு மேனியாக வளர்ந்து கொண்டே செல்கிறது.

உயிருடனிருக்கையில் எந்த நபியும் தாம் வணங்கப்பட்டு தமக்காக சிரம் சாய்ப்பதை ஒருபோதும் விரும்பமாட்டார். ஷிர்க்கைக் கண்டால் உடனே அதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று பணிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே வாழும் காலங்களில் மனிதன் நபியிடம் தம் தேவைகளைச் சொல்லிப் பிரார்த்திக்கும்படி வேண்டலாம். அதனால் தப்புகள் தலைதூக்கி விடுமோ என்ற ஐயப்பாடுகள் உண்டாக வழியில்லை. மய்யித்துகளிடம் தம் தேவைகளை வேண்டி நின்று இருகரமேந்திக் கெஞ்சிக் கேட்டு துஆக்களை அங்கீகரிக்கும் சக்தி அவற்றிற்கு உண்டு என இதயத்தால் விசுவாசித்து அவ்வாறு செயல்பட்டால் அதேவினாடியில் மனிதன் ஷிர்க்கின்பால் சேர்ந்து விடுகிறான். முஷ்ரிக்குகளும், வேதம் அருளப் பெற்ற வழிகெட்ட கூட்டத்தார்களும், அவர்களைப் பின்பற்றி பித்அத்துக்காரர்களான முஸ்லிம்களில் சிலரும் மார்க்கம் அனுமதிக்காத புதுமைச் செயல்களைச் செய்து தங்களை நேர்மையான நம்பிக்கையிலிருந்து திருப்பிக் கொண்டார்கள்.

நமக்கு துஆக் கேட்கும்படி நாமாகச் சென்று மலக்குகளிடம் முறையிடத் தேவைதான் என்ன? நன்மையை நாடி அவர்களாகவே சத்திய விசுவாசிகளுக்காக வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துப் பிழைபொறுக்கத் தேடுகிறார்கள். இவ்வுண்மையைத் திருமறை விளக்குகிறது: 'அர்ஷைச் சுமந்திருப்பவர்களும், அதனைச் சூழ இருப்பவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் துதிச் செய்கிறார்கள், அவனை விசுவாசிக்கிறார்கள் விசுவாசம் கொண்டோரின் குற்றங்களை மன்னிக்கும் படியும் கோருகிறார்கள். "எங்கள் இறைவனே! நீ உன் ஞானத்தாலும், கருணையாலும் யாவற்றையும் சூழ்ந்தறிகிறாய். ஆகவே பாவங்களை விட்டு விலகி உனது வழியைப் பின்பற்றுவோருக்கு நீ மன்னிப்பளித்து, அவர்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக! இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சுவனபதிகளில் அவர்களையும், அவர்களுடைய மூதாதையர்களிலும், மனைவியரிலும்,சந்ததிகளிலுமுள்ள நல்லோர்களையும் புகுத்துவாயாக. நிச்சயமாக நீயே யாவரையும் மிகைத்தோனும், யாவரையும் அறிந்த ஞானமுடையோனுமாயிருக்கிறாய். சகல தீங்குகளிலிருந்தும் அவர்களைக் காத்துக் கொள்வாயாக. அன்றையதினம் எவரை நீ சகல தீங்குகளிலிருந்தும் காத்துக் கொண்டாயோ அவர்மீது நிச்சயமாக நீ பேரருள் புரிந்து விட்டாய். இதுவே மகத்தான பெரும் பாக்கியமாகும்! (என்று பிரார்த்திக்கின்றனர்). (40:7-9)

"மேலுள்ள வானங்கள் வெடித்து (விழுந்து) விடவும் கூடும். (ஆனால்) மலக்குகள் (பயந்து) தங்களிறைவனைப் புகழ்ந்து துதிச் செய்து பூமியிலுள்ளவர்களின் குற்றங்களை மன்னிக்குமாறு கோரிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மன்னிப்போனும், கிருபையுடையோனுமாயிருக்கிறான் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். யார் அவனையன்றிப் (பிறரைத் தம்) பாதுகாவலராக எடுத்துக் கொண்டார்களோ அவர்களை அல்லாஹ் கவனித்தவனாக இருக்கிறான். (நபியே!) அவர்கள் மீது நீர் பொறுப்பாளரல்லர். (42:5-6)

இத்திருமறை வசனங்களின் அடிப்படையில் பார்க்கும் போது மலக்குகள் மூமின்களுக்காகப் பிழைபொறுக்கத் தேடுகிறார்கள் என்பதை விளங்க முடிகிறது. விசுவாசிகள் மலக்குகளிடம் சென்று தம் தேவைகளை முறையிடாமல், மலக்குகள் தாமாக விசுவாசிகளுக்குப் பிரார்த்தனை செய்து வேண்டுகிறார்கள். ஆகவே நபியவர்களும், இதரநபிமார்கள், வலிமார்கள், நாதாக்கள் இவர்களைப் போன்ற பொதுநலம் கருதுகின்றவர்கள் அனைவரும் தம் சமூகத்தில் வாழும் நல்ல மக்களின் நலனை நாடிப் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ்விடம் சிபாரிசும் செய்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? நபிமார்களெல்லாம் தங்களுக்கு கட்டளையிடப் பட்டதையே செய்கிறவர்கள். செய்யக் கூடாதென்று விலக்கப்பட்ட எதையும் செய்ய மாட்டார்கள். இது நபித்துவத்தின் அடிப்படையாகும்.

இரண்டாவதாக: இன்னதைச் செய்ய வேண்டும். இன்னதைச் செய்யக் கூடாது என்று அவர்களைத் திருத்த மனித சமூகத்தால் முடியுமா? நபிமார்கள் தவறான செய்கையில் விழாமல் பாதுகாப்பளிக்கப் பட்டுள்ளார்கள். தமது சமூகத்துக்கு எப்போதும் நலவை நாடி அவர்களுக்கு எப்போதும் ஒத்தாசை புரிவார்கள். சமூகத்தை ஆதரிக்கும் எந்த மனிதனும் இது விஷயத்தில் நபிமார்களைப் போலிருக்க முடியாது. நபிமார்களிடம் தம் தேவைகளை முறையிட்டுப் பிரார்த்திக்கக் கோருவது ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட ஸுன்னத்தான செயல் என்றோ, வாஜிபான செயல் என்றோ யாரும் சொல்ல மாட்டார்கள். அது விலக்கப்பட்ட வினை.

நபிமார்களும், வலிமார்களும் வாழ்ந்திருக்கையில் சமூக நலனை நாடி அவர்கள் துஆச் செய்தாலும், செய்யாமலிருந்தாலும் மனிதர்கள் அதைப்பற்றி சிந்திக்கத் தேவையில்லை. அல்லாஹ் அவர்களை நோக்கி எதைப் பணித்தானோ அதைத் தவிர இம்மியளவு கூட கூட்டியோ குறைத்தோ அவர்கள் செய்ய மாட்டார்கள். இதுவே அவர்களைப் பற்றிய நமது விசுவாசம்.

நபிமார்களிடம் (திடீரென்று) நமக்கு துஆச் செய்யக் கூறினால் நமது வேண்டுதலுக்கிணங்க உடனே துஆக் கேட்பார்கள் என்று என்ன நம்பிக்கை இருக்கிறது? நாம் துஆச் செய்ய வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் இது விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளை எதுவோ அதைத்தான் செய்வார்கள். துஆச் செய்யுங்கள் என்று நாம் வேண்டிய நேரத்தில் அவர்கள் மீதுள்ள அல்லாஹ்வின் விதி யாருக்கும் துஆ கேட்கக் கூடாது என்றிருக்குமானால் நமது வேண்டுதல் பலனளிக்காது. மாறாக நமக்குப் பிரார்த்திக்க அல்லாஹ் அவர்களைப் பணித்துள்ளான் என்று வைத்துக் கொள்வோம். நாம் நபியிடம் எதையும் முறையிட்டுக் கேட்கவுமில்லை என்றாலும் நமக்குத் தெரியாமல் நம் நாட்டங்கள் நிறைவேற்றப்படும். ஏனெனில் நபியவர்கள் அதற்காகப் பாடுபட்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறியவில்லை.

சுருங்கக் கூறினால் காலஞ்சென்ற நபிமார்களிடமும், வலிமார்களிடமும் நமது எத்தேவையை வேண்டினாலும் அணுவளவும் பயனளிக்காது. மாறாக அது தீங்கான செய்கையின் பால் மனிதனை இழுத்துச் செல்லும். நபிமார்கள் உலகில் வாழும் போது அவர்களிடம் நம் தேவைகளை முறையிட்டு நமக்காகப் பிரார்த்திப்பதற்கும், சிபாரிசு செய்வதற்கும் வேண்டுவது கூட வாஜிபான அல்லது ஸுன்னத்தான அமல்களொன்றுமில்லை. ஆனால் அது ஷிர்க்கின் பக்கம் மனிதனைச் சேர்த்து விடாது. நபியிடம் நேராக ஆஜராகித் தேவைகளைக் கேட்கும் போது ஷிர்க் வருமென்று பயமேயில்லை. நன்மைகள் சில வேளைகளில் இரு தரப்பாருக்கும் கிடைக்கின்றன. நபிமார்கள் கூலி கொடுக்கப் படுவார்கள். நபியின் துஆவினால் தம் சமூகத்தின் தேவைகள் நிறைவேற்றப் படும்போது சமூகமும் துஆவினால் பயன் பெறுகிறது. ஆக இருதரப்பாரும் (மனிதனும், நபியும்) பலனடைகிறார்கள்.

ஆனால் முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். அசலில் படைப்புகளிடம் கேட்டல் என்பது தடுக்கப்பட்டுள்ளது. நபிமார்களின் பிரார்த்தனைகள் பலன் நல்கினாலும், நல்காவிட்டாலும் பொதுவாக சிருஷ்டிகளிடம் பிரார்த்தனை வேண்டுவது, உலகத் தேவைகளைக்கூறி துஆச் செய்யும்படி அவர்களைக் கேட்பது ஆகியவையெல்லாம் வாஜிப், ஸுன்னத் என்ற ஷரீஅத் சட்டங்களுக்கு உட்பட்டதல்ல. இது போற்றுவதற்குரியதும் அல்ல. நல்ல தரமான வேலையென்றும் சொல்லப்பட மாட்டாது. மனிதன் எந்நேரமும் எத்தேவைகளையும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டுமென்று தானே பணிக்கப்பட்டிருக்கிறான். ஹாஜத்துக்களையும் அல்லாஹ் ஒருவனிடமே முறையிட்டுக் கெஞ்ச வேண்டும். நம் முழு ஆதரவுகளையும் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் ஆதரவு வைக்க வேண்டும். எல்லாக் காரியங்களையும் அல்லாவிடம் பாரம்சாட்டி ஒப்படைத்து அவன் மீது 'தவக்குல்' வைக்க வேண்டும். சிருஷ்டிகளை நோக்கிக் கெஞ்சுவது அசலில் தடுக்கப்பட்டதும், விரும்பத்தகாததும், ஒழுக்கக் கேடானதுமான செயலாகும்.

இருப்பினும் கடும் சிக்கலான தேவைகள் நேர்ந்தால் மட்டும் உயிருடனிருக்கும் படைப்புகளிடம் அப்பிரச்சனைகளை முறையிடுவதற்கு ஒரு அனுமதியிருக்கிறது. ஆயினும் அதுபோற்றத் தகுந்த அனுமதியென்று கூறுவதற்கில்லை. மனிதனுக்கு எந்தச் சிக்கலான நிலைகள் உருவானாலும் அச்சிக்கல்களை சமாளித்து ஏதேனும் தக்க வழிகளில் அதை நிவர்த்தி செய்து அல்லாஹ்விடம் முறையிட்டு அவனிடமிருந்தே சர்வ பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இதுவே சிலாகிக்கத் தக்க மதிப்பான நடத்தையாகும். அல்லாஹ் கூறுகிறான்: "(உலக வேலைகளிலிருந்து) நீர் ஓய்வு பெற்றதும் வணக்கத்திற்குரிய தயாரிப்பை எடுத்துக் கொள்ளும். அன்றி (துன்பத்திலும், இன்பத்திலும்) உம் இறைவனை (ஆதரவு வைத்து அவனை) யே நோக்கி நிற்பீராக!" (94:7-8)

இன்சா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }