Thursday, May 12, 2005

கஃபா மனிதனைத் தாவஃப் செய்கிறதா?


புனித மக்கமாநகரில் இருக்கின்ற ஆதி இறையில்லமான கஃபத்துல்லாஹ் அப்படியே எழுந்து வந்து தன்னை (தவாஃப்) சுற்றுவது போல சில காட்சிகள், மாபெரும் அர்ஷும், அதன் மீது பெரியதொரு உருவமும் இருப்பது போலக் காணும் இன்னொரு காட்சி, யார் யாரோ வானத்தில் பறந்து செல்கிறார்கள், சிலர் அணிவகுத்து வானத்திலிருந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர், இத்தகைய இன்னுமொரு காட்சி இத்தகைய காட்சிகளைச் சிலர் காணுகின்றனர்.

இவற்றைக் கண்டதிலிருந்து தாம் அல்லாஹ்வைக் கண்டதாகப் பிரகடனப்படுத்தி விடுகின்றனர். இப்படி நடந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஏராளமான வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்தி சமூகத்தில் வணக்கசாலி என தன்னை விளம்பரம் செய்து கொள்கின்ற வணக்க அபிமானிகளுக்கு இது அடிக்கடி சம்பவிப்பதுண்டு. இவர்கள் இதில் நல்ல நம்பிக்கையும், ஆதரவும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வாறான செய்கைகள் அத்தனையும் ஷைத்தானின் சூழ்ச்சியும், பரிகசிப்பும் என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர். பகுத்துணரும் ஆற்றலையும், போதிய மார்க்க ஞானத்தையும், தன் தீர்க்கமான பாதுகாப்பையும் எவருக்கு அல்லாஹ் வழங்கவில்லையோ, அவர்கள் இத்தகைய சூழ்ச்சியில் அகப்பட்டுத் தத்தளிக்கிறார்கள். சரியான மார்க்கஞானம் கொடுக்கப்பட்ட உத்தமர்கள் ஒருபோதிலும் இத்தகைய இருட்படலத்தில் சிக்கிவிட மாட்டார்கள்.

மாமேதை அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் பிரபலமான ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அவர்கள் கூறுகிறார்கள்: 'நான் வணக்கத்தில் மூழ்கியிருந்தேன். அந்நேரம் அதிபயங்கரமான ஒரு சிம்மாசனத்தைக் கண்டேன். ஓர் ஒளி அதன்மீது மின்னிக் கொண்டிருந்தது. அந்த சிம்மாசனம் என்னை நோக்கி 'அப்துல் காதிரே!' என்று கூப்பிட்டு 'நான் உம் இரட்சகன்' எனக் கூறியது. அதன் பின்னர் 'பிறருக்கு (ஹறாமென்று) விலக்கிய அனைத்தையும் உமக்கு மட்டும் (ஹலால்) ஆகுமானதாக்கியிருக்கிறேன்' என்று கூறியது. இதைக்கண்ட நான் 'என்ன நீ அல்லாஹ்வா? உன்னைத் தவிர வேறு அல்லாஹ் இல்லையா? எனக் கேட்டு விட்டு 'அல்லாஹ்வின் கொடிய பகைவனே! சீக்கிரமாக இதைவிட்டு ஓடிவிடு' என்று அதட்டினேன். அந்தச் சிம்மாசனத்தின் மீதிருந்த வெளிச்சம் தூள்தூளாகிச் சிதறி அது இருள்கணமாகத் திரும்பி விட்டது.

பிறகு சிம்மாசனமாக ஆள்மாறாட்டம் செய்த ஷைத்தான் கூறினான்: 'அப்துல் காதிரே! உமக்கிருக்கிற மார்க்கக்கலை ஞானத்தாலும், மதிப்பாலும், அபிமானத்தாலும் எனது சூழ்ச்சியை விட்டு தப்பித்து வெற்றியடைந்தீர். எழுபதுக்கும் அதிகமான மக்களை இத்தகைய உபாயத்தால் வஞ்சித்து, ஏமாற்றி அவர்களின் அமல்களை வீணாக்கியிருக்கிறேன்.

ஞான மேதை அப்துல் காதிரிடம் வினவப் பட்டது 'இது ஷைத்தானின் வித்தையென்று எப்படித் தாங்கள் அறிந்து கொண்டீர்கள்?' அதற்கு அவர்கள் 'பிறருக்கு அனுமதியளிக்காத அனைத்தையும் உனக்கு மட்டும் ஆகுமாக்கினேன்' என்ற அந்த ஷைத்தானின் கூற்றிலிருந்து கிரகித்துக் கொண்டேன். நபிகள் பெருமானாரின் ஷரீஅத் சட்டத்தின் கீழ் எல்லோரும் சமமானவர்கள். நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாமிய நியதிகளை ஒருபோது மாற்றவோ, மறுக்கவோ முடியாது என்ற உண்மைகளை நான் துல்லியமாக அறிந்திருந்தேன். இதனால் என்னில் ஆதிக்கம் செலுத்த ஷைத்தானால் இயலாது போயிற்று. அன்றி, 'நான் உன்னுடைய இரட்சகன்' என்று கூறினானே தவிர 'நான்தான் உன்னுடைய அல்லாஹ்' என்று கூற அவனால் முடியவில்லை. அல்லாஹ் என்ற ஜலாலத்துடைய நாமத்தை கூறி அது நான்தான் என்று பொய்வாதாட்டம் செய்ய யாராலும் முடியாதல்லவா? ஆகவே இந்த மேற்கோள்களை வைத்து ஷைத்தானென்று புரிந்துகொண்டேன்' என்பதாக மாமேதை அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்.

மக்கள் பொதுவாக தாம் ஷைத்தான்களிடமிருந்து கன்கூடாகக் கண்டதைச் சான்றாக வைத்து அல்லாஹ்வை விழிப்பிலே நேராகக் கண்டார்களென்று எண்ணி பிரகடனப்படுத்துகின்றனர். 'கண்ணால் கண்டதை விட சக்தியான மேற்கோளுக்கு இனி அவசியமில்லையே' என்று நினைக்கின்றனர். அவர்கள் கண்டதும் உண்மைதான், சொல்வதும் உண்மைதான். ஆனால் அது ஷைத்தானின் நடிப்பு என்பதை மட்டும் புரியாமலிருந்து விட்டனர். தாம்கண்ட ஷைத்தானைப் பற்றி அல்லாஹ்வென்றும், நபியென்றும், வலியென்றும், ஹில்ர் நபி என்றும், உத்தம மனிதரென்றும் கருதித் தமது இறை விசுவாசத்துக்கு இழுக்கு ஏற்படுத்திக் கொள்கின்றனர். மார்க்கத்தை சரிவரப் புரியாத மௌட்டீக ஆபித்(வணங்கி)கள் இது விஷயத்தில் அதிகமாக நெறி தவறி ஏமாந்து விடுகின்றனர்.

நபிகள் (ஸல்) அவர்களைப் பற்றி ஸஹீஹான ஹதீஸில்: 'என்னைக் கனவுலகில் எவர்கள் பார்க்கிறார்களோ அவர்கள் என்னை மெய்யாகவே பார்த்தவருக்கு ஒப்பாகிறார். ஏனெனில் ஷைத்தான் எனது தோற்றத்தில் வந்து நடிக்க மாட்டான்' என்று கூறியிருக்கிறார்கள். இந்த ஹதீஸை வைத்துக் கூட நபிகள் (ஸல்) அவர்களை நேரடியாக விழிப்பில் பார்க்க எவருக்கும் சக்தியில்லை என்று விளங்க முடிகிறது. நபியின் உருவத்தில் ஆள்மாறாட்டம் பண்ணுவதை விட்டும் ஷைத்தான் தடுக்கப் பட்டுள்ளானென்றால் விழிப்பில் நபிகளைப் பார்த்தேன் என்று கூறுகிறவனின் பொய் எவ்வளவு சக்தியானது என்பதை குறிப்பிடத் தேவையில்லை. தூக்கத்தின் போது மட்டும் அவர்களைக் காண முடியுமென்று விளங்க முடிகிறது.

மனிதன் கனவுலகில் பற்பல காட்சிகளைக் காண்கிறான். அவற்றில் சில மெய்யான காட்சிகள், மற்றும் சில ஷைத்தானின் ஊசலாட்டத்தால் விளையும் தவறான தோற்றங்கள். பிந்தியவை முழுக்கமுழுக்க பொய்யாகவே அனுபவமாகின்றன. ஆனால் நபியவர்களை எவரேனும் கனவில் கண்டார்களெனின் அக்காட்சி ஒருபோதும் பொய்யாக ஷைத்தானின் ஊசலாட்டங்களினால் நடந்ததாகச் சொல்வதற்கில்லை. ஏனெனில் ஷைத்தான் நபியின் தோற்றத்தை எடுத்து எக்காரணத்தாலும் அபிநயிக்க முடியாது. அதைவிட்டும் அல்லாஹ் அவனைத் தடுக்கிறான். இதிலிருந்து நபிகளை இவ்வுலகில் வைத்து எவராலும் விழிப்பில் பார்க்க முடியாது என்பதே முடிவு. இதுவே சத்திய விசுவாசிகளின் வழியாகும். ஆகவே அல்லாஹ்வை நான் கண்கூடாகப் பார்த்தேன் என்று யாராவது வாதாடினால் அவனைப் பொய்யன் என்று விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். ஸஹாபாக்கள், தாபியீன்கள் எவருமே இம்மாதிரி வாதாட்டங்களைக் கூறியதில்லை. அவர்களைப் பற்றி இத்தகைய ஒரு சம்பவம் கூட நூற்களிலும் இடம் பெறவில்லை.

அக்கிரமங்கள், கொடுமைகள் மற்றும் இணை வைத்தல் போன்ற தீயசெயல்களை எவர் அதிகமாகச் செய்ய துணிச்சல் உள்ளவராயிருப்பாரோ அவரை ஷைத்தான் எப்போதும் உற்ற தோழராக எடுத்துக் கொள்கிறான். கண் மறைவில் நடக்கும் சில சங்கதிகளை இவருக்கு விளக்கிக் காட்டுகிறான். இரகசியங்கள் சிலவற்றை தெரிவித்துக் கொடுப்பான்.

மாறாக எவர் அவனுக்கு முரண்பட்டிருக்கிறாரோ அவருக்கு இடையூறுகள், தீங்குகள் இவற்றையெல்லாம் செய்ய துணிகிறான். சில நேரங்களில் நோய்-நொடிகள், பிரச்சனைகள், மனநிம்மதியின்மை போன்ற சில சிக்கல்களில் கொண்டு போய் மாட்டி விடுகிறான். இதனால் சிலர் தம் உயிரையும், செல்வத்தையும், குடும்பம், சொத்து, சுகம் அனைத்தையும் இழக்க வேண்டி நேரிடுகிறது. நோயால் அவதிபடுவோரும் உண்டு. ஒருவரது சொத்தை அபகரித்துப் பிறருக்கு கொண்டு சேர்த்து விடுதல், ஒரு வீட்டின் சாமான்களைத் திருடிப் பிறர் வீடுகளில் கொண்டு வைத்து சமூகப் குழப்படிகளும், பிரச்சனைகளும் தலைதூக்க ஊக்கமளித்து அதனால் ஒரு சமூகத்துக்கு வாழ்வும், மற்றொரு சமூகத்துக்குத் தாழ்வும் உண்டாக்கி விடுவதுடன் மக்களிடையே தூய்மையான நல்லொழுக்கமும், நல்லெண்ணமும் குன்றச் செய்து வாழ்க்கையில் தோல்வியை ஏற்படுத்துவதுமுண்டு.

விண்வெளி மார்க்கமாக ஷைத்தான் சிலர்களை வழி மறித்து தூரத்தொலைவில் செலுத்து விடுகிறான். சிலரை வழி மறித்து மக்காவில் அரபா நாளில் கொண்டு வந்து, திருப்பி அவர்களை மீண்டும் ஊரிலேயே மீட்டிக் கொண்டுபோய் விட்ட வரலாறும் உண்டு. ஹஜ் செய்வதற்கென்று நினைக்கிறீர்களா? அப்படியொன்றுமில்லை. அதற்கெல்லாம் ஷைத்தான் எங்கே துணியப் போகிறான். ஹஜ்ஜைச் செய்ய வைக்கும் நோக்கமிருந்தால் அவனை இஹ்ராம் கட்டச் செய்யாது ஏமாற்ற வேண்டுமா? தவாஃப், ஸயீ போன்றவற்றைச் செய்ய விடாது தொடர்ந்து தல்பியா ஓதிக்கொண்டிருக்கும் வாய்ப்புகள் ஏதும் அளிக்காமல் ஒரேடியாகத் தூக்கி அரபாவில் தான் கொண்டு சேர்க்க வேண்டுமா? இல்லவேயில்லை. ஷைத்தானுடைய கருத்து ஹஜ் செய்ய வைப்பதல்ல என்பதனை விளங்குதல் வேண்டும். ஷைத்தான் இத்தகைய சம்பவங்கள் ஏராளம் செய்து கொண்டிருக்கிறான். (திடீரென்று) நினையாப் புறமாக புனித மக்கா நகரின் ஹரம் ஷரீஃபில் எந்த ஒரு அமலைச் செய்ய வேண்டுமென்று நாடினாலும் இஹ்ராம் எல்லையைத் தாண்டுவதற்கு முன் இஹ்ராம் கட்டியாக வேண்டும். இது இஸ்லாமிய சட்டம். எல்லா அறிஞர்களின் தீர்ப்பும் இதுவே. இது இப்படியிருக்க சிலரை வழி மறித்துக் கொண்டு வந்து கஃபாவின் பக்கத்தில் தவாஃப் மட்டும் செய்யும் வாய்ப்பை அமைத்துக் கொடுக்கிறான். மக்களில் கல்வித் தேடி வருகிறவர்கள், வியாபார நோக்கோடும் உறவினர்களை சந்தித்துச் செல்லும் நோக்கோடு வருகிறவர்களும் கூட கண்டிப்பாக மக்கா எல்லையினுள் நுழையும் முன்னர் இஹ்ராம் கட்டியாக வேண்டும். இது (வாஜிப்) கடமை என்று கூடச் சொல்லும் இமாம்கள் இருக்கிறார்கள். இப்படியிருக்க இஹ்ராம் இல்லாது வேறு எதுவும் செய்ய விடாது ஒருவனை வழி மறித்து கொண்டு வந்து தவாஃபை மட்டும் செய்ய வைக்கும் ஷைத்தானின் நோக்கம் என்னவென்பதை ஒவ்வொருவரும் கிரகித்துக் கொள்ள வேண்டும்.

சிலை வணங்கிகள், அவர்களுக்கு ஒத்த கிறிஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லிம்களில் ஷிர்க், பித்அத்காரர்கள் இவர்களிடமே இது விஷயமாகப் பற்பல கதைகளைக் கேட்க முடிகிறது.

இவற்றையெல்லாம் இங்கு குறிப்பிட்டு இப்புத்தகத்தை நீட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை. சுருங்கக் கூறுமிடத்து, அல்லாஹ்வின் அடிமைகளான நபிமார்களையும், அவ்லியாக்களையும் மற்றும் நன்மக்களைப் பொருட்டாக வைத்துப் பிரார்த்தனை செய்து சிந்தனையில்லாத மார்க்க அனுஷ்டானங்களில் எவர் திரிகிறாரோ அவருக்கு இக்கதியே உலகில் கிடைத்து விடுகிறது. (ஷைத்தானுக்கு தம் வாழ்க்கையைப் பறிகொடுத்து அனாச்சாரத்திலும், ஐயுறவாதத்திலும், வழிகேட்டிலும் அலைவார்கள். சன்மார்க்கமின்றி குருத்துவத்தை ஆதரிப்பார்கள். இவர்கள் பின்பற்றும் இஸ்லாம் ஒருபோதும் இஸ்லாமல்ல. இவர்கள் இஸ்லாத்திலிருந்து வெகுதூரம் அப்பாற்பட்டவர்கள்) தாம் கண்கூடாகக் கண்டதும், நேர்முக சம்பாஷனை நடத்தியதும், இவர்களின் சிலபல தேவைகள் நிறைவேறியதும் எல்லாமே மய்யித்தைப் பொருட்டாக வைத்துப் பிரார்த்தனை புரிந்ததினால்தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள். மய்யித் நேராக உதயமாகி வந்து விட்டார் என மனதில் கருதிக் கொண்டு திரிவார்கள். எல்லாமே ஜின்-ஷைத்தான்கள் துணையினால் இவரையும், மற்றவர்களையும் வஞ்சிப்பதற்கு அவை புரிந்த வித்தைகள் என்பதை புரிய மாட்டார்கள்.

அறியாமைக்கால அரபிகளில் ஒருசாரார் ஜின்-ஷைத்தான்களின் இத்தகைய குறும்புத்தனங்களைப் பற்றி அது வெறும் பொய்யானதென்றும், மனிதனின் கற்பனையால் விளைந்த ஏமாற்றங்களைத் தவிர இதற்கு உண்மையே இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள். இதனால் இதைப் போன்ற சம்பவங்களை அவர்கள் மெய்ப்பிக்கவில்லை. ஷைத்தான், ஜின்களின் விளையாட்டுகள் என்று தகுந்த சான்றுகள் கூறி இவற்றைப் பொய்ப்பித்தனர். இது விஷயத்தில் நிலை பிறழாது நின்றனர். பின்னர் எந்த வகுப்பார் இவற்றை வலிமார்களின் அற்புதச் செய்கைகளென்று மதித்துப் பாராட்டி பிரகடனப்படுத்தி வந்தனரோ இவர்களின் வீண் பிரச்சாரத்தால் முந்திய சாராரும் வழிகேட்டிலாயினர். ஷைத்தானின் விளையாட்டுகளை வலியின் கராமத் என்று கருதித் தமது முந்திய கொள்கைக்குத் துரோகம் விளைவித்தனர். இதனால் பொதுவாக அறியாமைக்கால அரபிகளிடையே கப்றுகளிலும், இதர இடங்களிலும் நடக்கின்ற ஜின், ஷைத்தான்களின் பரிகசிப்புகள் யாவும் காலஞ்சென்றவர்களின் அற்புதச் செயல்களாக மதிக்கப் படலாயின. அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்றி அவன் விலக்கல்களை தவிர்த்து, அநீதி, அட்டூழியம், அக்கிரமங்களில் வாழ்நாளைக் கழிக்காது இறை விசுவாசம், பக்தி என்பன போன்ற பற்பல ஒழுக்கங்கள் இதயத்தில் ஒருங்கிணைந்து அல்லாஹ்வை மட்டும் பயப்படுகிறவர்களைப் பற்றி மட்டுமே அல்லாஹ் இறைநேசச் செல்வர் (வலியுள்ளாஹ்) என்று கூறியுள்ளான். "விசுவாசிகளே! அல்லாஹ்வின் நேசர்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் இறைவனை மெய்யாகவே நம்பி அவனுக்குப் பயந்து நடந்துக் கொள்கின்றனர் என்பதை (நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்)". (10:62-63)

இந்த ஆயத்துக்கு நேர்மாறாக நடந்தவர்களைப் பற்றி அவ்லியாக்கள் என்று ஜாஹிலிய்யர்கள் கூறினார்கள். *இறைவிசுவாசம், பக்தி இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு வாழ்ந்தவர்களுக்கு (கராமத்துகள்) அற்புத செய்கைகள் செய்யும் சக்தியிருக்கிறது எனக்கூறி தூய இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறி 'முர்தத்' ஆகியும் விடுகின்றனர். இறைவன் திருமறையில் கூறும் உண்மையைப் பாருங்கள்: "(விசுவாசிகளே!) எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றன என்று நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் ஷைத்தான்கள் இறங்குகின்றன". (26:221-222).

பொய்யர்கள், பாவிகள், மாறு செய்கிறவர்கள் இவர்களைப் போன்றவர்களுக்கு ஷைத்தான்கள் துணையாக நிற்கின்றனரென்றால் காஃபிர்களுக்கும், முஷ்ரிக்குகளுக்கும் ஷைத்தான்கள் எவ்வளவு ஒத்தாசை புரிவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். என்று முதல் அல்லாஹ்வையும், ரஸூலையும் பொய்யாக்கி அவர்களின் ஏவல் - விலக்கல்களுக்கு மாறுசெய்து எல்லாக்காலமும் நிராகரிப்பிலும், புறக்கணிப்பிலும் வாழத் தொடங்கினார்களோ அன்றுமுதலே காஃபிர்களுக்கு ஷைத்தான்கள் பெரிதும் துணையாக நின்று வழிகெடுக்க உதவினார்கள். ஆகவே ஷைத்தானுக்கு வழிபட்ட பாவிகள் புரிகின்ற வித்தைகளைப் பார்த்து வலிமார்களின் கராமத்துகள் என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. இவ்வாறான பரிகசிப்புகள், சிறுமைத்தனங்கள் எதுவுமே சமாதியில் புதையுண்டு கிடக்கும் வலியுனுடைய அல்லது நபியுனுடைய திறமை என்றோ, அவருடைய ஈமானின் சக்தி என்றோ கூறி முடிவுக்கு வந்து விடுதல் அறிவுடைமை அல்ல. அல்லாஹ்வுக்கு உள்ளது போல ஷைத்தான்களுக்கும் அவ்லியாக்கள் (நேசர்கள்) இருக்கின்றனர். இவ்விருவர்களின் அவ்லியாக்களையும் அவர்களின் குண ஒழுக்கங்களையும் பிரித்தறிவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும். இதைப் பற்றி அதிகமாக விளங்க விழைபவர்கள் எமது 'ரஹ்மானுடையவும் ஷைத்தானுடையவும் தோழர்களின் வித்தியாசங்கள்' என்ற நூலைப் படித்துக் கொள்வார்களாக!


*இறை விசுவாசமில்லாத காஃபிரை இவர்கள் அவ்லியாவாக்கினார்கள். தொழாதவனையும் அவ்லியாவாக்கினர். இறைத்தூதர்களைத் திட்டி, அவர்களைச் சபித்து மதத்தைப் புறக்கணித்து நடந்தவனும் வலிப்பட்டத்தைப் பெற்றான். ஷிர்க், பித்அத், மூடநம்பிக்கை அத்தனையிலும் வாழ்ந்தவனை அவ்லியாவாக்கப்பட்டது. மதத்தின் ஐயுறவாதி, விதண்டாவாதி, நெறியில்லாமல் வாழ்ந்தவன் எல்லோருக்கும் அவ்லியாப் பட்டம் கிடைத்தது. இறந்த பின்னர் இவர்களுக்கெல்லாம் சக்தி உண்டென்று நம்பினர். காரணம் இவர்களின் தர்ஹாக்களில் அற்புதங்களைக் கண்டார்கள் போலும். ஷைத்தானின் வழிமறிப்பு என்று யூகித்துக் கொள்ளும் ஆற்றல்தான் இவர்களுக்கில்லையே! சூனியமும், மந்திரமும் செய்து உலகை ஏமாற்றுகிறவர்கள், சோதிடர்கள், காஃபிர்கள், முஷ்ரிக்குகள் இவர்களிடம் எத்தனையோ ஷைத்தான்கள் நின்று விதவிதமான வியப்புக்குரிய செயல்களை செய்து கொண்டிருக்கின்றன. இச்சூனியங்களையும், கண்கட்டு வித்தைகளையும் பார்க்கிற நாம் கராமத் என்று சொல்லி அதைச் செய்கிறவர்களை அவ்லியாவாக்கி விடுவோமானால் நம்மை பகுத்தறிவுள்ள முஸ்லிம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

இன்சா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }