Monday, August 22, 2005

ஹதீஸ்களின் தராதரங்கள்


இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தமது ஜாமிஉ என்ற ஹதீஸ் தொகுப்பில் ஹதீஸ்களை மூன்றாகத் தரம் பிரித்தார்கள். அவை: ஸஹீஹ், ஹஸன், ளயீஃப் என்பன. இமாம் திர்மிதி அவர்கள்தாம் முதன் முதலாக ஹதீஸ்களை இப்படி பிரித்துக் காட்டியவர்கள். ஒரே ஹதீஸ் பல வழிகளில் அறிவிக்கப்படும் போதும், அறிவிப்பாளர்கள் பட்டியலில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், ஒற்றையாக நிற்பவர்களும் இல்லாமல் இருக்கும்போதும் தான் அந்த ஹதீஸுக்கு 'ஹஸன்' என்று பெயரிட்டார்கள். இமாம் திர்மிதி ஹஸன் என்று கருதிய ஹதீஸ்களை இமாம் அஹ்மத், ளயீஃப் (பலவீனமானவை) என்ற தரத்திலுள்ள ஹதீஸ்களோடு இணைத்து, இத்தகைய பலவீனமான ஹதீஸ்களை இஸ்லாமிய சட்ட விதிகளுக்குப் பயன்படுத்தியும் இருக்கிறார்கள்.

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்தும், அவர்களைப் பொருட்டாக வைத்தும் தேவைகளைக் கேட்டால் அனுமதிக்கப்படும் என்று கூறக்கூடியவர்கள் தமது வாதத்திற்கு ஸஹீஹ், ஹஸன் என்ற தரத்திலுள்ள ஹதீஸ்கள் கிடைக்காமையினால், மூன்றாம் வகையைச் சார்ந்த ளயீஃபானதும், நபிகள் மீது இட்டுக்கட்டிப் புனைந்து சொல்லப்பட்ட (மவ்ளூஃ ஆனவையுமான) சில ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்தார்கள். இஸ்லாமிய அறிஞர்களோ, மத்ஹபுடைய இமாம்களோ யாருமே இத்தகைய ஹதீஸ்களை சரியெனக் காணவில்லை. அவற்றிலிருந்து மார்க்கச் சட்டங்களையும் வெளிப்படுத்தவில்லை. மேற்படி ஹதீஸ்களின் உதாரணத்திற்காக அப்துல் மலிக் பின் ஹாருன் பின் அன்தரா மூலமாக அறிவிக்கப்படும் ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம். இந்த ஹதீஸின்படி: அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் பெருமானாரிடம் வந்து 'நாயகமே! நான் குர்ஆனைக் கற்கிறேன். ஆனால் அது என்னை விட்டு நழுவுகிறது' என்று முறையிட்டபோது நபி (ஸல்) அவர்கள் கீழ்வரும் துஆவை ஓத வேண்டுமென்று கற்றுக் கொடுத்தார்களாம். 'இறைவா! உன்னுடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பொருட்டால் கேட்கிறேன். மேலும் உன்னுடைய தோழர் நபி இப்ராஹீம் பொருட்டாலும், நபிகள் மூஸா, ஈஸா (அலை) அவர்களின் பொருட்டாலும், தவ்ராத், இன்ஜீல், ஸபூர், புர்கான் ஆகியவற்றின் பொருட்டாலும், நீ அறிவிக்கின்ற அனைத்து வஹியின் பொருட்டாலும், நீ விதித்துள்ள எல்லா நீதிகளின் பொருட்டாலும் கேட்கின்றேன்'. இந்த ஹதீஸை அப்துல் மலிக் பின் ஹாரூன் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்பொழுது இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் பட்டியலுக்கு வருவோம். அப்துல் மலிக் பின் ஹாரூன் நேர்மையான அறிவிப்பாளர் அல்ல. பொய்யர்களில் இவர் பிரபலமானவர் என்பதைக் கீழ்வரும் அபிப்பிராயங்கள் தெளிவு படுத்துகின்றன. மிஹ்ரஸ் பின் ஹிஸாம் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்: 'இந்த அப்துல் மலிக்கை பற்றி யஹ்யா பின் மயீன் என்ற ஹதீஸ் கலை அறிஞர் பொய்யர் என்று கூறியுள்ளார். அறிஞர் அஸ்அதீ இவரைப்பற்றி தஜ்ஜால் (வஞ்சகர், ஏமாற்றுக்காரர்) என்றும், பொய்யர் என்றும் கூறியுள்ளார். அறிஞர் அபூஹாதிம் பின் ஹிப்பான் இவரைப்பற்றி ஹதீஸ்களைப் புனைந்து சொல்கிறவர் என்று கூறினார். இமாம் நஸயீ ஹதீஸ் தொகுப்பாளர் பட்டியலிலிருந்து இவர் 'மத்ரூக்' (தூக்கி எறியப்பட்டவர்) என்று கூறினார். இமாம் புகாரி இவர் வெறுக்கப்பட்ட ஹதீஸ்களை கூறியவர் என உரைத்தார். பலவீனமானவர் என்று இவரைப்பற்றி இமாம் அஹ்மத் பின் ஹன்பல் கூறியுள்ளார். இப்னு அதீ என்பவர் யாரும் பின்பற்ற முடியாத பல ஹதீஸ்கள் இவரிடம் இருப்பதாக கூறுகிறார். இவரும், அவரது தந்தையும் பலவீனமானவர்கள் என்று தாரகுத்னீ குறிப்பிடுகிறார். இன்னும் பற்பல ஹதீஸ் கலை அறிஞர்கள் இந்த அப்துல் மலிக்கைப் பற்றி எத்தனையோ குறைபாடுகளை கூறியிருக்கிறார்கள். அறிஞர் அபுல் பரஜ் பின் ஜவ்ஸீ இந்த ஹதீஸை இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பற்றி எழுதிய நூலில் சேர்த்திருக்கிறார். இதே ஹதீஸை இப்னு ரஸீன் தமது ஜாமீஉ என்ற நூலில் குறிப்பிடும் போதும், இப்னு அதீர் தமது ஜாமீஉ உஸூல் என்ற நூலில் இதை நகல் செய்தபோதும் இதை அறிவித்தவர் யார் என்பதையோ, முஸ்லிம்களுடைய எந்த நூலிலிருந்து இந்த ஹதீஸ் நகல் செய்யப்பட்டது என்பதையோ குறிப்பிடவில்லை.

இரவு பகலின் அமல்கள் பற்றி நூல்கள் தொகுத்தவர்களான இப்னுல் ஸன்னி, அபூநயீம் போன்றவர்கள் தாம் இதை அறிவிக்கிறார்கள். இதைப்போன்ற நூல்களில் பல மவ்ளூஃ ஆன ஹதீஸ்களை காண முடியும். இஸ்லாமிய ஷரீஅத் சட்ட விதிகளுக்கு இத்தகைய பயன்படுத்தக் கூடாது என்று அறிஞர்கள் ஏகமனதாக தீர்ப்புகள் வழங்கியிருக்கிறார்கள். இதே ஹதீஸை அபுஷ் ஷைகுல் இஸ்பஹானி தமது 'பளாயிலுல் அஃமால்' என்ற நூலில் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் இந்நூலைப் பொறுத்தவரையில் இதில் எத்தனையோ பொய் ஹதீஸ்களும், நபிகள் மீது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த அப்துல் மலிக் என்பவர் இதைப் போன்ற இன்னொரு ஹதீஸையும் கூறியிருக்கிறார். இதில் வேதம் அருளப்பெற்ற யூதர்கள், கிறிஸ்தவர்கள் அனைவருமே அவ்வேதங்களைப் பொருட்டாக வைத்து தம் தேவைகளை வேண்ட ஆரம்பிப்பார்கள் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த விளக்கத்தை திருமறை வியாக்கியானிகளுக்கும், திருக்குர்ஆன் உரைகளுக்கும், வரலாற்று ஆசிரியர்களின் அபிப்பிராயங்களுக்கும் மாறாகச் சொல்லியிருக்கிறார்.

எனவே இத்தகைய ஆதாரங்களை வைத்து அப்துல் மலிக் பின் ஹாரூன் நேர்மையான அறிவிப்பாளர் அல்ல என விளங்கிக் கொண்டோம். ஏனெனில் இவர் வேண்டுமென்றே பொய்யுரைப்பவர், நினைவாற்றலும் குன்றியவர். எனவே இவர் அறிவிக்கும் ஹதீஸிலும் நேர்மையிருக்க முடியாதல்லவா? எனவே அதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }