இந்த ஹதீஸை இமாம் திர்மிதியும், நஸாயீயும் அறிவிக்கிறார்கள். 'நபிகளின் துஆவை வைத்து பிரார்த்தித்தல்' என்ற இனத்தைச் சார்ந்த ஹதீஸாக இந்த ஹதீஸ் அமைந்திருக்கிறது. கண்பார்வை இழந்த ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து தமக்காகப் பிரார்த்தித்து தமது பார்வையை மீட்டுத்தர அல்லாஹ்வை வேண்டும்படி கேட்டுக்கொண்டார். இதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரை நோக்கி 'நீர் விரும்பினால் கொஞ்சம் பொறுமையுடன் இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் நீர் நினைப்பதுபோல நான் பிரார்த்திக்கிறேன்' என்றார்கள். இதைக் கேட்ட அம்மனிதர் 'பிரார்த்தியுங்கள்' என்றார்.
உடனே பெருமானார் (ஸல்) அவர்கள் 'ஒளு செய்து இரண்டு ரக்அத் தொழுது கீழ்வருவதைப்போல சொல்ல வேண்டும்' என்று பணித்தார்கள். 'இறைவா! அருள் மிக்க உன் நபியைக் கொண்டு பிரார்த்திக்கிறேன். முஹம்மதே! ரஸூலுல்லாஹ்வே! உம்மைக் கொண்டு நான் என் இரட்சகனின் பக்கம் எனது இத்தேவையை (கண் பார்வை திரும்புதலை) நிறைவேற்றுவதற்காக முன்னோக்குகிறேன். இறைவா! என் விஷயத்தில் நபியின் சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக!' என்று சொல்லிக் கொடுத்தார்கள். இந்த ஹதீஸ் நபியவர்களின் துஆவினாலும், சிபாரிசினாலும் வஸீலா தேடலாம் என்று காட்டுகிறது. பெருமானார் (ஸல்) அவர்கள் இம்மனிதருக்காக பிரார்த்தித்தார்கள். எனவேதான் 'நபியின் சிபாரிசை என் விஷயத்தில் ஏற்றுக் கொள்வாயாக!' என்றுக் கூறி சொல்லிக் கொடுத்தார்கள்.
தமக்காக தம் ரஸூல் கேட்கின்ற பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் கேட்க வேண்டுமென்று அம்மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.
நபியவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனைகளிலும், அவர்களுக்கென்று அருளப்பட்ட அற்புத சக்திகளிலும் (முஃஜிஸாக்களிலும்) இந்த ஹதீஸை அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். பெருமானார் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையின் பரக்கத்தால் எண்ணற்ற அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தீராத வியாதிகள் குணப்பட்டிருக்கின்றன. கண்பார்வை இல்லாத இம்மனிதரின் பார்வை மீட்டிக் கிடைப்பதற்காக நபியவர்கள் பிரார்த்தித்தார்கள். உடனே அவரின் பார்வை திரும்பி விட்டது.
நுபுவ்வத்தின் அத்தாட்சிகள் (தலாயிலுன் நுபுவ்வத்) குறித்து நூற்கள் இயற்றிய பைஹகீ போன்றவர்கள் இதை ரிவாயத் செய்திருக்கிறார்கள். பைஹகீயின் இன்னுமொரு ரிவாயத்தில் இடம்பெற்ற ஸஹாபி உஸ்மான் பின் ஹனீப் 'இறைவன் மீது சத்தியமாக நாம் அந்த மஜ்லிஸிலே தான் இருந்தோம். நெடுநேரம் நாங்கள் பேசவும் இல்லை. அதற்கிடையில் இம்மனிதர் அங்கே வந்தார். இயற்கையில் பார்வையுள்ள மனிதரைப் போலவே இருந்தார்' என்று கூறுகிறார்.
இந்த ஹதீஸை இமாம் திர்மிதியும் ரிவாயத் செய்திருக்கிறார்கள். இதன் தரத்தைப் பற்றி ஹஸன், ஸஹீஹ், கரீப் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். மேலும் இமாம் நஸயீயும், இப்னு மாஜாவும் இதை ரிவாயத் செய்திருக்கிறார்கள். ஆனால் இமாம் திர்மிதியும், மற்றவர்களும் இந்த ஹதீஸின் வார்த்தையை இதர அறிஞர்களைப் போன்று நிரப்பமாகச் சொல்லவில்லை. ('அல்லாஹும்ம ஷஃப்பிஃஹு பிய்ய' இதுவரைதான் கூறியிருக்கிறார்கள்). பைஹகீ கூறியதைப்போல் இமாம் அஹ்மதும் தனது முஸ்னதில் ரூஹ் இப்னு உபைதாவைப் பற்றி இந்த ஹதீஸை ரிவாயத் செய்திருக்கிறார்கள். மேலும் இமாம் பைஹகீ, அபூ உமாமத்திப்னு ஸஹ்லிப்னு ஹனீபைப் பற்றி கீழ்வரும் ஒரு கதையையும் அறிவிக்கிறார்கள். நபியவர்கள் இறந்ததற்கப்பால் அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுகிறவரைப் பற்றி இதையும் ஒரு சான்றாக எடுக்க முடியும்.
ஒரு மனிதர் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களிடம் தம்முடைய தேவையின் நிமித்தம் வந்து போய் கொண்டிருந்தாராம். கலீஃபா அவர்கள் அம்மனிதரைக் கவனிக்காமலும், அவருடைய தேவையைப் பொருட்படுத்தாமலும் இருந்தார்களாம். இதற்கிடையில் அம்மனிதர் உஸ்மான் பின் ஹனீப் ஸஹாபியை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் தன் பிரச்சினையைப் பற்றி முறையிட்டார்.
இதை கேட்டதும் உஸ்மான் பின் ஹனீப் அம்மனிதரை ஒளுச் செய்துவர பணித்தார்கள். பிறகு பள்ளிவாசலில் சென்று இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டு, 'இறைவா! அருள் நிறைந்த உன் நபி முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொண்டு நான் பிரார்த்திக்கிறேன். முஹம்மதே! உம்மைக் கொண்டு எனது இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்காக என்னுடைய இரட்சகனின் பக்கம் முகம் திருப்புகிறேன்' என்று பிரார்த்தித்துப் பின்னர் தம் தேவைகளை எடுத்துக் கூற வேண்டும். அதன் பின்னர் கலீஃபாவிடம் நீர் செல்லும் என்றும், உம்முடன் நானும் வருவேன் என்றும் கூறினார்.
இதைச் செவியுற்ற அம்மனிதர் தாம் கேட்டு விளங்கியதன்படி செய்தார். பின்னர் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்றார். கலீஃபா உஸ்மானின் காவலர்கள் அம்மனிதரின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்துநேராகக் கலீஃபாவிடம் சேர்ப்பித்தனர். கலீஃபா அவர்கள் அவரை விரிப்பில் தம்முடன் உட்காரவைத்து அவருக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார்கள். அவர் தம் தேவைகளை எடுத்துக் கூற அவற்றையெல்லாம் கலீஃபா நிறைவேற்றிக் கொடுக்கவும் செய்தார்கள்.
கலீஃபாவிடமிருந்து வெளியான அம்மனிதர் வழியில் உஸ்மானிப்னு ஹனீபை சந்திக்கிறார். 'அல்லாஹ் உங்களுக்கு நல்ல பல கூலிகளை அருளட்டும்' என பிரார்த்தித்துப் பின்னர் கூறினார். 'நீங்கள் என்னிடம் மேற்படி விஷயங்களைச் சொல்லித் தருவதற்கு முன்னர் நான் கலீஃபாவிடம் சென்றிருந்தபோது, என்னை யாரும் ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை' என மீண்டும் உஸ்மான் பின் ஹனீபிற்காகப் பிரார்த்தித்தார்கள்.
இவற்றை நானாகக் கூறவில்லை. பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒரு பார்வையிழந்த மனிதர் வந்து பார்வையின்மைப் பற்றி முறையிட்டபோது பெருமானார்தான் இதைக் கற்றுக் கொடுத்தார்கள் என்று கூறி முன்னர் நான் குறிப்பிட்டதுபோல இமாம்களான திர்மிதியும், நஸாயீயும் பதிவு செய்த ஹதீஸை கடைசி வரையிலும் உஸ்மான் பின் ஹனீப் கூறி முடித்தார்.
இதே ஹதீஸை வைத்து நபியவர்கள் மரணமடைந்த பின்னரும் அவர்களைக் கொண்டு வஸீலா தேடலாம் என்று கூறுகிறவர்கள் ஆதாரம் காட்டுகின்றனர். ஆனால் இந்த சம்பவம் சரிதானா, இல்லையா என்பதை நாம் ஆராய்ந்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். உஸ்மான் பின் ஹனீப் மேற்படி மனிதருக்கு நபியவர்களின் துஆவைச் சொல்லிக் கொடுக்கையில் நபியவர்களின் கூற்றிலுள்ள (பஷஃப்பிஃ ஹுஃபிய்ய) 'என் விஷயத்தில் நபியின் ஷபாஅத்தை ஏற்றருள்' என்ற நபியுரையைக் கூறாமல் விட்டு விட்டார். இப்படி உஸ்மானுடைய ஹதீஸில் குறைபாடுகள் காணப்படுகின்றன.
சுருங்கக் கூறின் இந்த உஸ்மான் பின் ஹனீப் என்பவர்கள் நபியவர்கள் கற்றுக் கொடுத்த துஆவில் சிலவற்றைப் போக்கியும், குறைத்தும் பிரார்த்திப்பதற்கு அனுமதியுண்டு என்று நினைத்துக் கொண்டார்கள் போலும். ஆகவேதான் பெருமானார் (ஸல்) அவர்கள் பார்வையிழந்த ஸஹாபிக்குக் கற்றுக் கொடுத்ததைப் போல சொல்லிக் கொடுக்கவில்லை. அத்துடன் நபி (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்னரும் அவர்களைக் கொண்டு பிரார்த்திக்கலாம் என்றும் எண்ணிக் கொண்டார்கள் போலும்.
உண்மையில் பெருமானார் (ஸல்) அவர்கள் கண் பார்வையிழந்த மனிதருக்குக் கற்றுக் கொடுத்த துஆவின் வசனத்தில் உஸ்மான் பின் ஹனீப் நினைப்பது போல் ஏதும் காணப்படவில்லை. இந்த ஹதீஸில் வரும் சம்பவம் என்னவென்றால் பார்வையிழந்த மனிதர் தமக்காகப் பிரார்த்திக்க வேண்டுமென்று நபியிடம் வந்து கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரை நோக்கி 'இறைவா! என் விஷயத்தில் நபியவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!' என கூற வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள் 'என்ற விஷயத்தில் நபியின் சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக!' என்று கூறிப் பிரார்த்திக்க வேண்டுமானால் நபிகள் அம்மனிதருக்குப் பரிந்துபேசி அல்லாஹ்விடம் பிரார்த்தித்திருந்தால்தான் இதைச் சொல்லிக் கொடுக்க முடியும். நபியவர்கள் அம்மனிதருக்கு ஷபாஅத் செய்யாமலிருந்தால் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள். எனவே இத்தகைய துஆக்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் உலகில் வாழ்ந்திருந்த காலத்திலும், மறுமையில் அவர்கள் ஷபாஅத் செய்கிற நாளிலும் தான் பொருந்துமே தவிர எல்லாக்காலங்களிலும் இதைக் கொண்டு பிரார்த்திக்க முடியாது என்றுதான் விளங்க வேண்டும்.
இதே ஹதீஸின் மற்றொரு அறிவிப்பில் (ரிவாயத்தில்) 'இறைவா! என் விஷயத்தில் நபியின் பரிந்துரையை ஏற்றருள்வாயாக!' என்ற வாக்கியங்களுக்கு அடுத்தாற்போல 'நபிக்காக என்னுடைய சிபாரிசை ஏற்றருள்வாயாக' என்று காணப்படுகிறது. இங்கே நாம் சிந்திக்க வேண்டும். நபியின் விஷயத்தில் மனிதன் எப்படி சிபாரிசு செய்ய முடியும். பெருமானார் (ஸல்) அவர்களின் தேவைகள் நிறைவேறுவதற்கு மனிதனால் பிரார்த்திக்க முடியுமா? இந்த கேள்விக்கு பதிலளிக்கையில் 'ஆம்! மனிதனின் பரிந்துரையாக (சிபாரிசாக) நபிக்காக அவன் செய்கின்ற பிரார்த்தனைகள் கருதப்படுகின்றன' என்று கூறலாம். பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஸலவாத்தும், ஸலாமும் சொல்ல வேண்டுமென்றும், வஸீலா என்னும் சுவனத்தில் உள்ள ஒரு பதவியை அவர்கள் பெற இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமென்றும் மனிதன் பணிக்கப்பட்டிருக்கிறான். அதன் காரணத்தினால் பெருமானாரின் சிபாரிசு (ஷபாஅத்) மறுமையில் அவசியம் கிடைப்பதாகவும் வாக்களிக்கப் பட்டிருக்கின்றன.*
எனவே பெருமானாரின் உம்மத்தினர் தன் நபிக்காக வஸீலா என்ற சுவனலோகத்திலுள்ள பதவியை அல்லாஹ்விடம் கேட்டல் அவர்களுக்காகப் பிரார்த்திப்பது போன்றதாகும். இப்பிரார்த்தனையைத் தான் 'நபியின் விஷயத்தில் பரிந்துரைத்தல்' என்னும் சொற்றொடர் இங்கு குறிப்பிடுகிறது. நபிக்காக நாம் பிரார்த்திக்கும்போது நபியவர்கள் நமக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். ஷபாஅத்தும் (சிபாரிசும்) பிரார்த்தனையின் இனத்தைச் சேர்ந்ததல்லவா! எனவேதான் அன்று முன்னோர்கள் அமலைப் போன்றதுதான் கூலியும் எனக் கூறினார்கள். நாம் நபிக்காக புரிந்த செயல் துஆவாகும். இந்த துஆவுக்கு நபியவர்கள் நமக்கு அளிக்கும் உதவி துஆவேதான். ஆனால் துஆவுக்கு ஷபாஅத் என்ற பதம் பிரயோகிக்கப் பட்டுள்ளது என்பதுதான் வித்தியாசம். நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்கிறவனுக்கு அல்லாஹ்வும் அவன்மீது ஸலவாத்து சொல்கிறான். இங்கும் அமலும், கூலியும் ஒன்றுபோல இருக்கிறதல்லவா!
கண்பார்வை இல்லாத மனிதர் நபியிடம் ஷபாஅத் வேண்டினார். அதற்கு நபியவர்கள் அவரிடமும் ஷபாஅத் (துஆ) செய்யச் சொன்னார்கள். இதனடிப்படையில் நபியவர்கள் அம்மனிதருக்காகச் செய்த வேலையும், அம்மனிதர் நபிக்காகச் செய்த வேலையும்-ஒவ்வொன்றையும் குறிப்பதற்காக ஷபாஅத் என்ற சொல்தான் பிரயோகிக்கப்பட்டுள்ளது. நபியவர்களின் துஆவை இறைவன் ஏற்றுக் கொண்டான். அம்மனிதரின் பார்வையைத் திருப்பிக் கொடுத்தான். இதனால் இப்படிப்பட்ட அபூர்வமான சம்பவங்களை அல்லாஹ் நபியவர்களுக்கு அளித்த அற்புதம் (முஃஜிஸாத்) என்று கருதல் வேண்டும். இது நுவுவ்வத்தின் (நபித்துவத்தின்) அத்தாட்சிகளில் ஒன்றாகக் கணிக்கப் படுகிறது.
இன்னொரு ரிவாயத்தில் 'நான் எனக்காகச் செய்யும் சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக!' என்றும் காணப்படுகிறது. அவருக்கு நபியவர்கள் செய்யும் துஆவுடன் தமக்காகத் தம்மையே சிபாரிசுக்காரராக ஆக்கிக் கொண்டார் போலும். ஏனெனில் நபியவர்களின் துஆ கிடைக்காவிட்டால் தமது துஆவாகிலும் பயன்படட்டும் என்று நினைத்தார். ஆனால் தமக்காக ஒருவர் கேட்கும் துஆ (ஷபாஅத்) என்று கூறுவது அரிது. ஏனெனில் சிபாரிசுக்கு இருவர் வேண்டும். ஒருவர் மட்டும் தமக்காகப் பிரார்த்தித்துக் கொண்டால் அதற்கு சிபாரிசு செய்தார் என்று கூறுவதில்லையல்லவா?
அத்துடன் (ப ஷஃப்பிஃஹு...பி நப்ஸீ என்ற) ரிவாயத்தைப் பற்றி அபிப்பிராய பேதங்கள் பல சொல்லப்படுகின்றன. மேற்சொன்ன வார்த்தைகளைச் சேர்த்து ரிவாயத் செய்தவர்கள் எவரும் பிரபலமான அறிஞர்கள் இல்லை. ஸுனன் தொகுப்பாளர்கள் இதனைப் புறக்கணித்திருக்கின்றனர். இதன் உரைநடையிலும் பற்பல குழப்பங்கள் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. மேலும் இதன் ராவி வெறுக்கத்தக்க ஹதீஸ்களை அறிவித்தவராகவும் தெரிய வருகிறது.
எனவே இந்த ரிவாயத்தில் சந்தேகங்களும், ஐயப்பாடுகளும் இடம் பெற்றிருப்பதனால் இதுவும் சான்றாக எடுத்துச் சொல்ல முடியாத ஹதீஸ்கள் கூட்டத்தில் ஒதுக்கப்பட வேண்டும். எந்த ஹதீஸ்களிலிருந்து சந்தேகங்களும், ஐயப்பாடுகளும் பிறக்கின்றனவோ அவை ஷரீஅத் விதிகளுக்கு ஆதாரமாக்கப்பட மாட்டாது. இதைப்போன்ற இடங்களில் ஸஹாபியின் ரிவாயத்தைக் கவனிக்க வேண்டும். அவர்களுடைய விளக்கம் கவனிக்கப்பட மாட்டாது. ஏதாவதொரு மனிதர் நபிகள் இறந்த பின்னர் தமது துஆவில் (அல்லாஹும்ம பஷஃப்பிஃஹு பிய்ய, வ ஷஃப்பிஃனீ பீஹி) 'இறைவா! என் விஷயத்தில் நபியின் சிபாரிசை ஏற்றருள்வாயாக! நபிக்காக என்னுடைய சிபாரிசையும் ஏற்றருள்வாயாக!' என்று கூறிப் பிரார்த்தித்தால், பெருமானார் அவர்கள் இம்மனிதருக்கு வேண்டித் தாம் வாழ்ந்திருக்கும்போது துஆச் செய்யவும் இல்லையென்றால், இந்நிலையில் இவரது பிரார்த்தனை வீண் பேச்சாக மாறி விடுகிறது. எனவேதான் முன்னர் நாம் கூறிய உஸ்மான் பின் ஹனீப் என்பவர் பெருமானாரிடம் எதையும் கேட்க வேண்டுமென்று அம்மனிதரை நோக்கிப் பணிக்காமல், 'என் விஷயத்தில் நபியின் சிபாரிசை ஏற்றருள்வாயாக!' என்றுள்ள வசனத்தையும் சொல்லிக் கொடுக்காமல், நபிகளைப் பற்றி அறியப்பட்ட துஆக்களை நிரப்பமாக அவருக்குச் சொல்லிக் காட்டாமல், அவற்றில் சிலவற்றை மட்டும் கூறிவிட்டு நிறுத்தி விட்டார்கள். இதனால் நபியின் இபாதத்தோ, மற்றும் துஆக்களோ ஒன்றும் ஏற்படவில்லை.
ஆனால் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் மேற்படி மனிதரின் தேவைகளை நிறைவேற்றியதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. மேலும் உஸ்மான் பின் ஹனீப் சொல்லிக் காட்டியப் பிரார்த்தனையும் நபியவர்கள் வழியாக வந்த பிரார்த்தனை அல்ல. ஏனெனில் 'என் விஷயத்தில் நபியின் சிபாரிசை ஏற்றருள்வாயாக!' என்ற நபியின் உரையை இவர் சொல்லிக் காட்டியிருந்தால் தானே நபியிடமிருந்து அது அறியப்பட்ட பிரார்த்தனை எனலாம். ஆனால் துஆவின் முக்கியமான அப்பகுதி இடம்பெற வில்லையானால் அதை பெருமானாரின் பிரார்த்தனை என எவ்வாறு சொல்ல முடியும்? ஒருபோதும் சொல்ல முடியாது. நபியவர்கள் மரணமடைந்த பின்னர் அந்த துஆவைக் கொண்டு ஒருவர் பிரார்த்தித்த்தாலும் அப்பிரார்த்தனை கருத்தற்ற பிரார்த்தனையாக இருக்குமே தவிர அர்த்தமுள்ள பிரார்த்தனையாக இருக்க முடியாது.
அதுமட்டுமல்லாது உஸ்மான் பின் ஹனீபுடைய இந்த ஹதீஸின் இறுதியில் ஒருசில வித்தியாசங்களும் காணப்படுகின்றன. பெருமானார் அவர்கள் இறந்து விட்டால் அதன் பின்னரும் அவர்களைப் பொருட்டாகவைத்து பிரார்த்திக்கலாம். அதற்கு ஷரீஅத்தில் அனுமதியுண்டு என்று விளங்கி இருந்திருப்பார்கள். தாம் விளங்கி இருந்ததற்கொப்ப ரிவாயத் செய்திருப்பார்கள்.
*ஆசிரியர் இது விஷயத்தில் பற்பல ஹதீஸ்களை முன்னர் கூறி இருக்கிறார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...