Thursday, October 13, 2005

மறுமை நாளையின் பரிந்துரைகள் (ஷபாஅத்துகள்)


இறுதி நாளில் பரிந்துரை செய்வது பற்றி ஸஹீஹான சில ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அன்று மக்கள் அனைவரும் ஆதம் நபி அவர்களிடமும், (உலுல் அஸ்ம்) திடகாத்திர, உறுதிபாடுள்ள நபிமார்களான நூஹ், இப்றாஹீம், மூஸா, ஈஸா (அலை) ஆகியோரிடமும் வந்து தமக்காக ஷபாஅத் செய்ய வேண்டுமென்று கெஞ்சுவார்கள். அந்த நபிமார்களில் ஒவ்வொருவரும் மற்றவரிடம் மக்களைத் திருப்பி அனுப்பி வைப்பார்கள். இறுதியில் நபி ஈஸா (அலை) அவர்களிடம் மக்கள் திரண்டெழுவார்கள். அப்போது ஈஸா (அலை) அவர்கள் 'நபி முஹம்மதை நோக்கிச் செல்லுங்கள். அவர்கள் முன்பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவர்கள்' என்று கூறுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எல்லா மக்களும் என்னை நோக்கி வருவார்கள். நான் அல்லாஹ்வை நோக்கிச் செல்வேன். அவனைக் கண்டதும் ஸுஜூதில் விழுந்து விடுவேன். ஒரு சில துதிகளைக் கூறி அல்லாஹ்வை நான் புகழ்ந்து கொண்டே இருப்பேன். அந்த துதிகள் எவை என்பதை இப்போது நான் சரியாக அறியாவிட்டாலும் அந்நாளில் எனக்கு அல்லாஹ் தன் அருளைத் திறந்து தருகையில் அறிந்து கொள்வேன். நான் ஸுஜூதில் இருப்பதைக் காணும்போது 'முஹம்மதே! தலை உயர்த்திச் சொல்லும். நீர் சொல்வதைக் கேட்கப்படும். உமக்கு வேண்டிய தேவைகளை கேளும் கொடுக்கப்படும். சிபாரிசு செய்யும். ஏற்றுக் கொள்ளப்படும்' என்று சொல்லப்படும். பின்னர் சிபாரிசுக்கான சில குறிப்பிட்ட வரம்புகளை விதித்து அது விஷயத்தில் வரையறுத்துக் கூறப்படும். நான் அவர்களுக்காக சிபாரிசு செய்து சுவனலோகத்தில் பிரவேசிக்கச் செய்வேன்' என்று கூறி முழு ஹதீஸையும் நபிகள் (ஸல்) அவர்கள் கூறி முடித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (அஷ்ஷாஃபிஉல் முஷஃப்பிஉ) சிபாரிசு செய்பவர்களும், அவர்களின் சிபாரிசு ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களும் ஆவார்கள் என்பதை நபி ஈஸா (அலை) அவர்கள் விளக்கினார்கள்.

ஏனெனில் அவர்கள் அல்லாஹ்விடத்தில் மேன்மைக்குரிய சிருஷ்டியாவார்கள். முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். சிபாரிசு செய்பவர்களில் மிக உத்தமமானவர்கள். தமது இறைவனின் சமூகத்தில் வந்து அவனை துதித்து ஸுஜூது செய்து கொண்டிருப்பார்கள். தமக்கு அனுமதி அளிக்கப்படும் வரை சிபாரிசை ஆரம்பிக்க மாட்டார்கள் என்பது போன்றவற்றை எல்லாம் நபி ஈஸா (அலை) அவர்கள் மறுமையில் சொல்வதாக நபி (ஸல்) விளக்கம் தருகிறார்கள்.

இந்த விளக்கத்தில் இருந்து அல்லாஹ்விற்கு தான் அனைத்து உரிமைகளும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அவன் அனுமதி வழங்காவிட்டால் எவரும் அங்கு வாய் திறக்க முடியாது. அத்துடன் ஷபாஅத்துக்கு அனுமதியை அல்லாஹ் வழங்கினாலும் அதற்குகூட ஒரு எல்லையும் வரம்பும் இருக்கிறது. அங்கு இஷ்டம்போல நபி (ஸல்) அவர்களுக்கு எதையும் சாதிக்க முடியாது. அல்லாஹ்வின் நாட்டமும், ஆற்றலும், விருப்பமும் தான் அங்கு மிகைத்து நிற்கும்.

அல்லாஹ்விடத்தில் ஷபாஅத்துச் செய்பவர்களில் மேன்மைக்கு உரியவராக நபி (ஸல்) அவர்களை மட்டும் அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். ஏனெனில் உபூதிய்யத்தின் (அடிமைத்தனத்தின்) நிறைவையும், இன்னும் பூரண வழிபடுதலையும், வழிபாட்டையும், இறைவனின் இசைவுக்கும், திருப்பொருத்தத்துக்கும், பிரியத்துக்கும் ஒப்ப நடப்பதும் அவர்களிடம் காணப்படுவது போல வேறு எவரிடமும் காண முடியாது.

சரி இங்கே நாம் விஷயத்துக்கு வருவோம். சிருஷ்டிகளைக் கொண்டு பிரார்த்திக்கலாம் என்று அனுமதித்தவர்கள் கீழ்வருமாறு கூறுகிறார்கள்: 'எல்லாப் படைப்புகளைக் கொண்டும் பிரார்த்திக்கலாம் என நாங்கள் கூறவில்லை. சில சிருஷ்டிகளைக் கொண்டு ஈமான் கொள்ளுதல் கடமையாகிறது. அவர்கள் தாம் நபிமார்களும், மலக்குகளும். மேலும் நபிமார்களையும், மலக்குகளையும் விசுவாசிக்காதவன் மூமின் என்று சொல்லப்பட மாட்டான். எனவே ஈமான் கொண்டு விசுவாசிக்கப்பட வேண்டிய சில படைப்புகளை மட்டும் பொருட்டாக வைத்து பிரார்த்திப்பதையும், சத்தியம் செய்வதையும் நாங்கள் அனுமதிக்கிறோமே தவிர எல்லாச் சிருஷ்டிகளைக் கொண்டும், அவற்றின் பொருட்டாலும் பிரார்த்திப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லை. இவை மேற்குறிப்பிட்டவர்கள் கூறுகின்ற நியாயங்களாகும்.

இவர்களின் இக்கூற்று கவனிக்கப்பட்டால் இக்கூற்றிற்கொப்ப முன்கர், நகீர், ஹூருல் ஈன்கள், சுவனம், நரகம், இவற்றின் அதிபதிகள் போன்ற அனைவரையும் பொருட்டாகக் கொண்டும் பிரார்த்தித்தல் கூடும் என்பது விளங்கப்படும். ஏனெனில் நபியவர்கள் தாம் இவற்றை அறிவித்துள்ளார்கள். நபியை விசுவாசித்தல் கடமையாவது போல நபியால் அறிவிக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் விசுவாசித்தல் கடமையாகும். இதன் அடிப்படையில் மேற்கூறிய சிருஷ்டிகளைப் பொருட்டாகக் கொண்டும் பிரார்த்திக்கலாம், சத்தியம் செய்யலாம் என்றெல்லாம் அனுமதிக்க வேண்டியது ஏற்படுகிறது.

இவை அனைத்தும் படைப்பினங்களை வைத்து வஸீலா தேடலாம் என்ற தீய அனுமதியிலிருந்து பிறந்த தீய விளைவுகளாகும். பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதற்கு ஷரீஅத்தில் அனுமதிக்கப்படாத எந்தக் காரணத்தையும் பொருட்டாக வைத்துப் பிரார்த்திப்பது ஹராமாகும். சிருஷ்டிகளுக்கு இடையில் தரம் பிரித்தும், ஏற்றத்தாழ்வு கூறியும் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் சிருஷ்டிகளிலிருந்து தேர்வு செய்து வஸீலாவின் கருவிகளாக அமைத்துக் கொள்வதெல்லாம் விலக்கப்பட்டிருக்கிறது.

கீழ்வரும் இந்த ஆயத்தைக் கொண்டும் சிருஷ்டிகளைப் பொருட்டாக வைத்து வஸீலா தேடலாம் என்று அதை அனுமதித்தவர்கள் ஆதாரம் கூறுகிறார்கள். அல்லாஹ் கூறுகிறான்: "இதற்கு முன்னரெல்லாம் அவர்கள் நிராகரிப்பவர்கள் மீது தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி (இந்த நபியின் இறைவனிடம்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்" (2:89). இத்திருமறை வசனத்தைப் பார்த்த யூதர்கள் அரபிகளில் உள்ள முஷ்ரிகீன்களுக்கு 'இந்த நபியை இறைவன் அனுப்புவான். இந்நபியோடு சேர்ந்து உங்களோடு நாங்கள் சண்டை போடுவோம்' என்று கூறினார்களாம். இக்கூற்றில் அவர்கள் நபியைக் கொண்டு சத்தியம் செய்யவுமில்லை. பிரார்த்திக்கவும் இல்லை. மேலும் யூதர்கள் 'இறைவா! எழுத படிக்கத் தெரியாத இந்நபியை அனுப்பி வைப்பாயாக. நாங்கள் அவர்களைப் பின்பற்றுவோம். அவர்களுடன் சேர்ந்து முஷ்ரிக்குகளோடு போராடுவோம்' என்று கூறினார்களாம். இதுவே திருமறை வியாக்கியானிகளிடத்தில் ஸ்திரமான விளக்கமாகும். குர்ஆனும் இப்படித்தான் கூறுகிறது.

ஆனால் சில வியாக்கியானிகள் யூதர்களைப் பற்றி 'அவர்கள் எதிர்காலத்தில் அனுப்பப்பட இருக்கும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பொருட்டாக வைத்தும், அவர்களைக் கொண்டு சத்தியம் செய்தும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருந்தனர் என்று விளக்கம் தருகின்றார்கள். ஆனால் இந்த விளக்கம் நேர்மையான விளக்கமல்ல. தவறான விளக்கமாகும். அனைத்து ஆதாரங்களுக்கும் மேற்படி விளக்கம் முரண்பட்டிருக்கிறது.
நபியவர்களின் சரித்திர நூற்களும், நபித்துவத்தின் சான்றுகளைப் போதிக்கின்ற இலக்கியங்களும், மற்றும் திருமறை வியாக்கியானங்களும் இந்த சம்பவத்தை நன்றாக விளக்கியுள்ளன. அறிஞர் அபுல் ஆலியாவும், மற்றும் அறிஞர் சிலரும் 'அரபிகளுள் முஷ்ரிக்குகளாக இருந்தோர் மீது வெற்றிபெற வேண்டுமென்று யூதர்கள் நினைத்தபோது நபி முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொண்டு உதவிதேடி வெற்றி பெறுவதற்காக பின்வரும் துஆவை ஓதுவார்கள். 'இறைவா! எங்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த முஹம்மத் (ஸல்) அவர்களை நீ விரைவில் அனுப்பி வை. அவர்களுடன் நாங்களும் சேர்ந்து முஷ்ரிக்குகளுடன் போராடி வெற்றி பெறுவோம்' என்று கூறுகின்றனர்.

ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் நபியாக அனுப்பியபோது அவர்கள் தம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்று தெரிந்ததும் அரபிகள் மீதுள்ள பொறாமையினால் யூதர்கள் நபிகளைப் புறக்கணித்தனர். எனினும் நிச்சயமாக நபியவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்தான் என்று இவர்கள் அறிந்திருந்தார்கள். இதுபற்றி அல்லாஹ் கூறுகின்றான்: "அவர்கள் நன்றாக அறிந்திருந்தும் அவர்களிடம் வருவதை எதிபார்த்திருந்த அதே நபி வந்த சமயத்தில் நிராகரித்தார்கள். எனவே நிராகரிப்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்". (2:89)

இதுவே அனைத்து அறிஞர்களின் விளக்கமாகும். அன்றி அந்நபியைக் கொண்டு பிரார்த்திப்பார்கள் என்றோ, சத்தியம் செய்வார்கள் என்றோ அறிவிக்கின்ற எது சான்றும் அறிஞர்கள் வழியாக அறிவிக்கப்படவில்லை. 'யஸ்தஃப்திஹூன்' என்று திருமறையில் காணப்படும் வார்த்தைக்கு 'வெற்றியைத் தேடுவார்கள்' என்பது பொருளாகும். முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு அவர்களையும் சேர்த்து முஷ்ரிக்குகளோடு போராடி வெற்றி பெறுதல் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி நபியவர்கள் அனுப்பப்பட்ட பிறகு இவர்கள் வெற்றி பெறவும் இல்லை. அந்த நபி தம் சமூகத்தைச் சார்ந்தவர் அல்லர் என்று தெரிந்து கொண்ட போது அரபிகள் மீதுள்ள பொறாமையினால் பெருமானாரை நிராகரித்து விட்டார்கள். இதனால் தோல்விதான் அவர்களைச் சந்தித்தது. நபியை ஈமான் கொண்டு அவர்களுடன் சேர்ந்து போராடிய ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற்றனர். மற்றவர்கள் காஃபிராகி தோல்வி அடைந்தனர். இந்த சம்பவத்தைப் பற்றி இன்னும் அதிகமாக எமது 'தலாயிலுன் நுபுவ்வத்' என்ற நூலிலும், 'அல்-இஸ்திகாஸத்துல் கபீர்' என்ற நூலிலும் விளக்கியுள்ளோம்.

இப்னு இஸ்ஹாக் அறிவிக்கிறார்கள். உமர் பின் கதாத்துல் அன்சாரி என்பவர்கள் தமது சமூகத்தில் சில மக்கள் இஸ்லாத்தை தழுவியது குறித்து விளக்கும்போது சொன்னார்களாம் 'எங்களுக்கு அல்லாஹ்வின் அருளும், ஹிதாயத்தும் (நேர்வழியும்) இருந்தும் கூட இஸ்லாத்தின் பக்கம் எங்களை ஈர்த்தது என்னவென்றால் வேறு சில யூதர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்த சில செய்திகள் தான். அன்று நாங்கள் முஷ்ரிக்குகளாக இருந்தோம். யூதர்கள் வேதமுடையவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் அறிவும் இருந்தது. எங்களிடம் அதுவும் இல்லை. எங்களுக்கு மத்தியில் பற்பல சண்டைகளும், சச்சரவுகளும் ஏற்படுவதுமுண்டு. அவர்கள் விரும்பாத எதையும் நாங்கள் செய்தால் சீக்கிரம் நபி ஒருவர் வரப்போகிறார். முற்கால சமூகத்தார்களான ஆது, இரம் கூட்டத்தார்கள் வெட்டிக் கொல்லப்பட்டதுபோல அந்த நபியுடன் சேர்ந்து உங்களையும் நாங்கள் வெட்டிக் கொன்று விடுவோம் என்று கூறி எங்களை எச்சரிப்பார்கள். நாங்கள் அவர்களிடமிருந்து இவ்வாறு பலதடவை கேட்டிருக்கிறோம்.

ஆனால் நபி முஹம்மத் (ஸல்) அவர்களைத் திருத்தூதராக அல்லாஹ் அனுப்பி வைத்தபோது அந்த நபி எங்களை அல்லாஹ்வின்பால் அழைத்தார்கள். நாங்கள் அவ்வழைப்பை ஏற்று இஸ்லாத்தை தழுவினோம். இந்த யூதர்கள் எதனால் எங்களை எச்சரித்து கொண்டிருந்தனர் என்பதையும் புரிந்து கொண்டோம். நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்ட உடனே விரைந்து சென்று நாங்கள் அவர்களை ஈமான் கொண்டோம். ஆனால் யூதர்கள் அந்த நபியை நிராகரித்தார்கள். ஸூரத்துல் பகராவின் கீழ்வரும் வசனங்கள் எங்கள் இருசாராரிலும் இறங்கின.

"தம்மிடம் உள்ள வேதத்தை மெய்ப்பித்துக் காட்டுகின்ற வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தது. அதற்கு முன்னெரெல்லாம் அவர்கள் நிராகரிப்பவர்கள் மீது தங்களுக்கு (நபியைக் கொண்டு) வெற்றி அளிக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் நன்றாக அறிந்தும் நிச்சயமாக வருமென்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நபி வந்த சமயத்தில் நிராகரித்தார்கள். எனவே நிராகரிப்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்". (2:89)

ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் இந்த ஆயத்தின் காரணத்தில் இதைக் கூறுகிறார்கள். இத்தகைய ரிவாயத்துகளில் நபிகளைப் பொருட்டாக வைத்துப் பிரார்த்தித்ததாக ஒன்றும் காணப்படவில்லை. மாறாக இதில் நபியை அனுப்ப வேண்டுமென்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்திருக்கிறார்கள்.

இந்த ஆயத்து இறங்குவதற்குக் காரணங்கள் வேறு மாதிரியாகவும் சொல்லப்படுகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். 'நபிகள் (ஸல்) அவர்கள் அனுப்பப்படுவதற்கு முன்னர் அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இரு கோத்திரத்தாருக்கும் எதிராக நபியவர்களைக் கொண்டு வெற்றி பெறலாம் என்று யூதர்கள் ஆசித்துக் கொண்டிருந்தனர். அதே நபியவர்கள் அரபிகளின் வம்சத்திலிருந்து அனுப்பப்பட்டதனால் அவர்களை நிராகரித்தனர்.

அந்த நபியின் விஷயத்தில் அவர்கள் முன்னர் கூறியவை அனைத்தையும் புறக்கணித்தனர். முஆத் பின் ஜபலும், பிஷ்ர் பின் பர்ராவும், தாவூத் பின் ஸலமாவும் 'யூதர்களே! இஸ்லாத்தைத் தழுவுங்கள். அல்லாஹ்வை அஞ்சி பயந்து நடந்து கொள்ளுங்கள். மேலும் நாங்கள் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்த கட்டத்தில் எங்களுக்கு எதிராக உதவி தேடிக் கொண்டிருந்தீர்கள். நபியவர்கள் அனுப்பப்பட இருப்பதாகக் கூறி அவர்களின் தன்மைகளை எங்களுக்கு விளக்கிக் காட்டித் தந்த நீங்கள் இன்று அந்த நபி வந்தபோது மறுக்கிறீர்களா?' என்று கூறினார்கள்.

அதற்கு பனூ நுளைருடைய சகோதரரான ஸலாம் பின் மிஷ்கம் என்பவர் 'நாங்கள் உங்களிடம் கூறிக் கொண்டிருந்த நபி இவரல்லர். இவர் எங்களுக்கு புதிதாக எதையும் கொண்டு வரவில்லை' என்று கூறியதும் மேற்கூறிய ஆயத்தை அல்லாஹ் இறக்கினான். மேலும் இதே கருத்திற்குரிய ஹதீஸை அபுல் ஆலியா கூறியதாக ரபீவு பின் அனஸைப் பற்றி மற்றொரு வழியாகவும் ரிவாயத் செய்யப்படுகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }