ஆனால் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் இப்னு அப்பாஸைப் பற்றி ஒரு ஹதீஸை ரிவாயத் செய்கிறார்.
அதில் இப்னு அப்பாஸ் 'கைபரில் உள்ள யூதர்கள் கத்பான் கோத்திரத்தாருடன் போராடி யுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் இந்த யூதர்கள் கத்பான்களுடன் மோதும் போதெல்லாம் தோல்வி அடைந்து விடுவது வழக்கம். எனவே கீழ்வரும் துஆவைக் கொண்டு யூதர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்களாம். 'இறைவா! எழுதப்படிக்கத் தெரியாத நபியான முஹம்மத் (ஸல்) அவர்களின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறோம். இந்த நபியைக் கடைசி காலத்தில் அனுப்புவதாக நீ எங்களுக்கு வாக்களிதுள்ளாய். எனவே அந்நபியின் பொருட்டால் எங்களுக்குச் சாதகமாக நீ உதவி செய்தருள்' என்று கூறி அவர்கள் பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் கத்பான் கோத்திரத்தாரை முறியடித்து விடுவார்கள்.
ஆனால் அந்த நபி திருத்தூதராக அனுப்பப்பட்டபோது அவர்கள் நிராகரித்து விட்டனர். எனவே அல்லாஹ் இந்த 2:89 ஆயத்தை இறக்கினான்.
ஹாக்கிம் 'முஸ்தத்ரக்' என்னும் தமது நூலில் இதை ரிவாயத் செய்து விட்டு தேவைகள் ஏற்பட்டதனால் இந்த ஹதீஸை ரிவாயத் செய்ததாகக் குறிப்பிடுகிறார். ஆனால் இதை அறிஞர்கள் மறுத்து இன்கார் செய்துள்ளனர். ஏனெனில் இது அப்துல் மலிக் பின் ஹாரூன் அறிவிக்கும் ஹதீஸ் ஆகும். ஹதீஸ் அறிவிப்பாளர்களில் இந்த அப்துல் மலிக் பின் ஹாரூன் மிகவும் வலுவில்லாதவர், பொய்யர், ஒதுக்கப்பட்டவர் என்பது எல்லா அறிஞர்களும் அறிந்த உண்மை. யஹ்யா பின் மயீனும், மற்ற இமாம்களும் அப்துல் மலிக் பின் ஹாரூனைப் பற்றிக் கூறியதை நாம் முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அவருடைய பொய்களில் இந்த ஹதீஸும் ஒன்றாகும்.
திருமறை வியாக்கியானிகள், வரலாற்று ஆசிரியர்கள் ஆகியோரின் ஒருமுகமான தீர்மானத்தின்படி மேற்குறித்த 2:89 திருமறை வசனம் மதீனாவை அடுத்து வாழ்ந்திருந்த பனூ கைனுகா, பனூ குரைளா, பனூ நளீர் வம்சத்திலுள்ள யூதர்கள் விஷயத்தில் இறக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. மேற்படி யூதர்கள் அவ்ஸ், கஸ்ரஜ் வம்சத்தினருடன் ஒப்பந்தம் செய்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோதும் அவர்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் பனூ கைனுகாவும், பனூ நளீரும் நபியுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை மீறி நடக்க முற்பட்டபோது அவர்களோடு நபி (ஸல்) அவர்கள் போர் தொடுத்தார்கள்.
முதலில் பனூ கைனுகாவுடனும், பிறகு பனூ நளீருடனும் சண்டை செய்தார்கள். திருமறையின் ஸூரத்துல் ஹஸ்ரும் இவர்கள் விஷயத்தில் தான் இறங்கியது. பின்னர் கந்தக் யுத்தம் நடந்த ஆண்டு பனூ குரைளாவுடன் போர் தொடுத்தார்கள். மேற்படி ஆயத்துக்கு இது உண்மையான காரணமாக இருக்க, அப்துல் மலிக் பின் ஹாரூன் தமது ஹதீஸில் இந்த ஆயத்தைப் பற்றி அது கைபரில் உள்ள யூதர்கள் விஷத்திலும், கத்பான் வம்சத்தார்கள் விஷயத்திலும் தான் இறங்கியது என்று எப்படிக் கூற முடியும்?
மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ் பொய்யை எப்படி சொல்ல வேண்டுமென்று கூடத் தெரியாத ஜாஹிலான ஒரு மனிதர் அறிவித்த ஹதீஸாகும். இது பொய் என்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இந்த துஆவைக் கொண்டு பிரார்த்தித்த வேளையில் கத்பான் படையினர் தோற்கடிக்கப்பட்டு யூதர்கள் வெற்றிப் பெற்றார்களாம். இந்த சம்பவத்தை இவரைத்தவிர எவரும் சொன்னதில்லை. இத்தகைய சம்பவங்கள் மற்ற அறிவிப்பாளர்களுக்கு எல்லாம் தெரியாத மறைவான ஒன்றல்ல. உண்மையாக ஹதீஸைக் கூறக்கூடியவர்கள் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பின் அதை உள்ளபடி எடுத்துக் கூறியிருப்பார்கள்.
இவ்வாறான ஆதாரங்களைக் காட்டி நபியைக் கொண்டு சத்தியம் செய்வதற்கும், அவர்களைப் பொருட்டாகக் கொண்டு கேட்பதற்கும் அனுமதியுண்டு என்று எப்படி சட்டம் விதிக்க முடியும்? ஒருபோதும் இது ஆதாரமாக எடுக்கப்பட மாட்டாது. ஏனெனில் முதல் காரணம் இது ஹதீஸ் என நிரூபிக்கப்படவில்லை. இரண்டாவது இதில் 2:89 ஆயத்திலும் இவர் கூறியதற்குச் சான்றுகள் இல்லை.
அன்றி இது ஹதீஸ் என்று நிரூபிக்கப்பட்டால் கூட யூதர்களுக்குரிய ஷரீஅத்தின் சட்டமாக இருக்கலாம். நமது இஸ்லாமிய ஷரீஅத்தில் இதை ஆதாரமாக எடுக்க முடியாதல்லவா? சிருஷ்டியைப் பொருட்டாக வைத்து பிரார்த்திப்பதற்கு யூதர்களுக்கு அனுமதி இருப்பதால் முஸ்லிம்களுக்கு அனுமதி ஒன்றும் இல்லை. நபி யூஸுப் (அலை) அவர்களின் பெற்றோரும், சகோதரர்களும் ஸுஜூது செய்தார்கள் என்று இறைவன் கூறியுள்ளான். இது முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்படிருக்கிறதா? இல்லையே. குகை வாசிகளைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது: "இவர்கள் விஷயத்தில் எவருடைய அபிப்பிராயம் மிகைத்ததோ அவர்கள், இவர்களது தங்குமிடத்தில் ஒரு பள்ளியை நாங்கள் அமைத்து விடுவோம் என்று கூறினார்கள்" என இறைவன் குறிப்பிடுகிறான். (18:21)
இவை முன்னர் தோன்றிய சமூகங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் முஸ்லிம்களாகிய நாம் கப்றுகளில் மசூதிகள் கட்டுவதை விட்டும் தடுக்கப்பட்டிருக்கிறோம். எனவே மேற்படி ஹதீஸை நாம் ஆதாரமாக எடுக்க முடியாது. திருமறையில் 2:89ம் வசனத்தில் 'யஸ்தஃப்திஹுன' என்று வருகிறது. அதனால் நபியைக் கொண்டு வஸீலா தேடினார்கள் என்று கருத்தல்ல. இந்த வார்த்தைக்கு 'தலபுல்ஃபதஹு' வெற்றியைத் தேடல் என்பது கருத்தாகும். நபி (ஸல்) அவர்கள் கூட முஹாஜிரீன்களில் மிக ஏழ்மையானவர்களைக் கொண்டு வெற்றியைத் தேடியுள்ளார்கள். அதாவது அவர்களின் பிரார்த்தனையைக் கொண்டு வெற்றிக் கிடைப்பதைத் தேடினார்கள்.
மற்றொரு இடத்தில் உங்களுக்கு வெற்றியும், உணவும், அருளும் யாவுமே உங்களில் ஏழ்மையானவர்களின் தொழுகைகள், கலப்பற்ற செய்கைகள், பிரார்த்தனைகள் ஆகியவற்றால் கிடைக்கின்றன என்று கூறினார்கள்.
"நீங்கள் வெற்றியைத் தேடி இருந்தால் வெற்றி உங்களுக்கு வந்து விடும்" என்றும் திருமறை கூறுகிறது. (8:19) இங்கு 'யஸ்தஃப்திஹு' என்ற வார்த்தைக்கு திருமறையும் 'வெற்றியைத் தேடுதல்' என்ற கருத்தையே வழங்குகிறது. ஆகவே இந்த ஆயத்தில் நபியைக் கொண்டு வஸீலா தேடுதல் என்ற கருத்தை நாடும் சான்றுகள் இல்லவேயில்லை. இதனால் அத்தகைய கருத்துகளை இந்த ஆயத்தில் சுமத்துவது கூடாது. வெற்றியைத் தேடுதல் என்ற கருத்து தெளிவாக இதற்கு உறுதிப் பட்டிருக்கிறது மட்டுமல்ல. மேற்படி ஹதீஸில் காணப்பட்ட யூதர்கள் அரபிகளை முறியடித்தார்கள், வென்றார்கள் என்பவை அனைத்தும் பொய்யானவை. ஏனெனில் யூதர்களின் பழைய வரலாற்றில் இருந்து அரபிகளை வென்றார்கள், முறியடித்தார்கள் என்பதைக் காண முடியாது. என்றுமே யூதர்கள் தாம் அரபிகளுக்கு இரையாக இருந்திருக்கிறார்கள். அரபிகளிடம் வந்து அபயம் தேடி ஒப்பந்தம் செய்து கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இதை திருமறையும் விளக்குகிறது: "அவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் உடன்படிக்கையைக் கொண்டும், (விசுவாசம் கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயம்) என்னும் உடன்படிக்கையைக் கொண்டுமே அன்றி அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். இழிவும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இதன் காரணம் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை எப்பொழுதுமே நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டுமிருந்ததுதான். மேலும் அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததும், அதிலும் வரம்பு மீறி வந்ததும் இதற்குக் காரணமாகும்". (3:112)
தொன்றுதொட்டு யூதர்கள் வீழ்ச்சி, இழிவு இவற்றை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் விசுவாசம் கொண்டவர்களும் அபயம் அளிக்கா விட்டால் அன்றே அவர்கள் தொலைந்திருப்பார்கள். இத்தகைய இழிவுக்கு ஆளான சமூகம் அரபிகளையோ, மற்றவர்களையோ வீழ்த்த முடியுமா? இஸ்லாம் பரவுவதற்கு முன்னரே யுத்தம் செய்யக் கூடாதென ஒப்பந்தம் செய்து கொண்டவர்களுடன் போர் தொடுத்தார்கள். ஈஸா (அலை) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டதிலிருந்தே யூதர்கள் அபிமானத்தை இழந்தார்கள். ஈஸா நபியைப் பொய்பிக்க முனைந்தார்கள். இதை இறைவன் குறிப்பிடும் போது: "ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மை (உம்முடைய ஆயுளைப்) பூர்த்தி செய்வேன். உம்மை என் பக்கம் உயர்த்திக் கொள்வேன். நிராகரிப்போரின் அவதூறுகளிலிருந்து உம்மைத் தூய்மைப் படுத்துவேன். உம்மைப் பின்பற்றுவோரை நிராகரிப்பவர்களை விட மறுமைநாள் வரை மேலாக்கியும் வைப்பேன்" என்று கூறினான். (3:55)
மேலும் ஒரு திருவசனத்தில் "விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிவோராகி விடுங்கள். மர்யமுடைய மகன் ஈஸா (தம்) சிஷ்யர்களை நோக்கி அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுபவர் யார்? என்று கேட்ட சமயத்தில் நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம் என்று அந்த சிஷ்யர்கள் கூறினார்கள். ஆயினும் இஸ்ராயீலின் சந்ததிகளின் ஒரு கூட்டத்தினர் தாம் அவரை விசுவாசித்தனர். மற்றொரு கூட்டத்தார் நிராகரித்தனர். விரோதிகளை வெல்ல நாம் தாம் உதவி புரிந்தோம். அதனால் அவர்கள் வெற்றி அடைந்தனர்" (61:14) என்று இறைவன் கூறினான்.
மேலும் யூதர்களான இவர்கள் நபி ஜக்கரிய்யா (அலை) அவர்களின் மகன் நபி யஹ்யா (அலை), மற்றும் இறைத்தூதர்களை கொலை செய்து விட்டனர். அல்லாஹ் இதை திருமறையில் விளக்கும்போது "வீழ்ச்சியும், இழிவும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சார்ந்து விட்டார்கள். மெய்யாகவே அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்தும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்தும் வந்தது இதற்குக் காரணமாகும். இவ்வளவு பெரிய குற்றங்களை அவர்கள் செய்(யும்படி நேர்ந்)ததற்கு காரணம் அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை அடிக்கடி) மீறி பாவம் செய்துக் கொண்டிருந்ததுதான்" என்று கூறினான். (2:61)
உமர் (ரலி) அவர்கள் போன்ற பெரும் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருக்கையிலும், அவர்கள் இறந்த பின்னரும் அவர்களைக் கொண்டு வஸீலா தேடாமல் நபிக்கு வழிபட்டும், அவர்களின் பிரார்த்தனை, சிபாரிசு ஆகியவற்றைக் கொண்டும் இறைவனோடு சமீபிப்பதை (வஸீலாவை) தேடி இருக்கிறார்கள். இப்படி இருக்க தரத்தில் குறைந்த சிருஷ்டிகளையும், இறந்து போனவர்களையும், கண்பார்வைக்கு அப்பால் மறைந்து இருப்பவர்களையும், மலக்குகளையும், மற்றும் சிருஷ்டிகளில் யார் யாரைக் கொண்டெல்லாமோ வஸீலா தேடப்படுவது பற்றி என்ன சொல்லப்படும்? நிச்சயமாக இவை ஷிர்க்காகும்.
இறைவன் இதை வன்மையாக கண்டித்திருக்கிறான்: "நபியே! (இணை வைத்து வணங்குவோரை நோக்கி) நீர் கூறும். அல்லாஹ்வையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவற்றை நீங்கள் (உங்கள் கஷ்டங்களை போக்க) அழையுங்கள். (அவ்வறு அழைத்தால்) அவை உங்களுடைய யாதொரு கஷ்டத்தை நீக்கி விடவோ, தட்டி விடவோ சக்தியற்றவை என்பதை அறிந்து கொள்வீர்கள். இவர்கள் இறைனென்று அழைப்பவையும் தங்களுக்காக தம் இறைவனிடம் வணக்கங்களால் சமீபிப்பதைத் தேடிக் கொண்டு 'அவர்களில் இறைவனோடு மிக்க நெருங்கியவர் யார்?' என்பதையும் வேண்டிக் கொண்டு அவனுடைய அருளை எதிபார்த்து அவனுடைய வேதனைக்கு பயப்படுகின்றனர். திட்டமாக உம் இறைவனின் வேதனையோ மிக மிகப் பயப்படக் கூடியது". (17:56-57)
ஸலபுஸ்ஸாலிஹீன்களில் ஒரு சாரார் 'முன்னர் தோன்றிய சமூகங்களிலுள்ள சிலர் மலக்குகளையும், ஈஸா, உஸைர் போன்ற நபிமார்களையும் அழைத்துப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில் அல்லாஹ் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கூறினான். நீங்கள் அழைக்கின்ற இந்த மலக்குகளும், நபிமார்களுமெல்லாம் என்னையே பயந்து என் வேதனைக்கு அஞ்சி ஒடுங்குகின்றனர். என் பக்கம் சமீபிப்பதற்கு ஆசைப்படுகின்றனர். அவர்களை நோக்கிப் பிரார்த்திக்கின்ற உங்களுக்கு ஏற்படும் தீமைகளில் அணுவளவைக் கூட அவர்களால் தட்டி விட முடியாது' என்று குறிப்பிடுகிறார்கள்.
இதைத் திருமறையும் விளக்குகிறது: "ஒருமனிதருக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் (ஞானத்தையும்), நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின்னர் அவர் மனிதர்களை நோக்கி 'என்னையே வணங்குங்கள் என்று (அவர்) கூறுவதற்கில்லை. ஆயினும் (மனிதர்களை நோக்கி) நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக் கொண்டும் இருப்பதன் காரணமாக இறையடியார்களாக மாறி விடுங்கள் கூற வேண்டும். தவிர மலக்குகளையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் உங்களுக்கு கட்டளையிட மாட்டார். எனவே நீங்கள் முற்றிலும் இறைவனுக்கு வழிபட்டதன் பின்னர் நிராகரிக்கும்படி அவர் உங்களை ஏவுவாரா?" (3:79-80).
இன்ஷா அல்லாஹ் தொடரும்..