Monday, October 31, 2005

சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிடுதல்


ஒருவன் மற்றவனிடம் 'சிருஷ்டிகளின் மீது சத்தியமாக என்று கூறி ஆணையிட்டால் இந்த சத்தியம் நிறைவேறாது. சிருஷ்டிகள் என்ற விஷயத்தில் நபிமார்கள், மலக்குகள் அனைத்து படைப்பினங்களும் ஒரே நிலைதான். அல்லாஹ்வுக்கு சில ஹக்குகள் (உரிமைகள்) இருக்கின்றன. அவற்றில் தம் படைப்புகளில் எவரும் பங்காளிகள் அல்ல. நபிமார்களுக்கும் சில ஹக்குகள் உண்டு. மூமின்களுக்கும் சில ஹக்குகள் உண்டு. மக்களில் சிலருக்கு மற்றவர்கள் மீது சில உரிமைகள், கடமைகள் இருக்கின்றன. அல்லாஹ்வுக்குரிய ஹக்கு என்னவென்றால் சிருஷ்டிகளால் அவன் வணங்கப்பட்டு, அவர்களால் அவன் இணைவைக்கப்படாமல் இருப்பதாகும். இதை விளக்கிக் காட்டுகின்ற முஆத் (ரலி) அவர்களின் ஹதீஸை முன்னர் நாம் கூறியுள்ளோம்.

மத அனுஷ்டானங்கள் அல்லாஹ்வுக்கு மட்டும் கருதி கலப்பற்ற தூய எண்ணத்துடன் செயல்படுவதும், மூமின்கள் தமது வாழ்வை அவன் மீது பாரம்சாட்டி ஒப்படைத்து, அவன் மீதே ஆசை வைத்து வாழ்வதும் வணக்கத்தின் முக்கிய அம்சங்களாகும். அவனை நேசிப்பதிலும், அஞ்சுவதிலும், பிரார்த்திப்பதிலும், உதவி தேடுவதிலும் அவனுடன் யாரையும் பங்கு சேர்க்கப்பட மாட்டாது. ஒரு ஹதீஸில் 'அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த வண்ணம் ஒருவன் இறந்து விட்டால் அவன் நரகத்திற்கே சென்று விடுவான்' என்று வருகிறது. (புகாரி, முஸ்லிம்)

'பாவங்களில் எது மிக பயங்கரமானது என்று கேட்கப்பட்டபோது உன்னைப் படைத்த இறைவனுக்கு இணை - துணை வைப்பது என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்'.

இணை வைத்தலை திருமறை வன்மையாகக் கண்டிக்கிறது: "நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்". (4:48-116) "ஆகவே இவற்றையெல்லாம் தெளிவாக நீங்கள் அறிந்து கொண்டு அல்லாஹ்வுக்கு (எத்தகைய) இணைகளையும் ஏற்படுத்தாதீர்கள்" (2:22)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: "(மனிதர்களே! ஒன்றுக்குப் பதிலாக) இரு தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக இறைவன் ஒரே ஒருவன் தான். ஆகவே என்னையே நீங்கள் பயப்படுங்கள்". (16:51)

"என்னையே நீங்கள் வணங்குங்கள்". (29:56)

"உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவித் தேடுகிறோம்" என்று திருமறையில் தோற்றுவாயில் ஸூரா பாத்திஹாவில் இறைவன் கூறியிருக்கிறான்.

"மனிதர்கள் பலர் அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாக எடுத்துக் கொண்டு அல்லாஹ்வை நேசிப்பது போல் அவற்றை நேசித்துக் கொண்டு வாழ்கின்றனர். ஆனால் விசுவாசிகள் அல்லாஹ்வையே அதிகமாக நேசிப்பார்கள்". (2:165)

"மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சுங்கள்". (5:44)

"அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள். அவனுக்கு பயப்படுவார்கள். அல்லாஹ்வைத் தவிர மற்ற எவருக்கும் பயப்பட மாட்டார்கள்". (33:39)

முஷ்ரிக்கீன்கள் அன்று இப்ராஹீம் நபியவர்களை அச்சுறுத்தி மிரட்டிக் கொண்டிருந்தார்கள். திருமறை கூறுகிறது: "(நபி இப்ராஹீமுடன்) அவருடைய சமூகத்தார் தர்க்கம் செய்தனர். அதற்கு அவர் கூறினார். நீங்கள் அல்லாஹ்வைப் பற்றிய - நிச்சயமாக அவன் எனக்கு நேர்வழி காட்டியிருக்கிற நிலையில் என்னுடன் தர்க்கம் செய்கிறீர்கள்.

என் இறைவன் எதையாவது விரும்பினாலன்றி நீங்கள் இணை வைத்து வணங்குபவற்றுக்கு நான் பயப்பட மாட்டேன். என் இறைவன் யாவற்றையும் (தன்) ஞானத்தால் சூழ்ந்தறிகின்றான். இதைக்கூட நீங்கள் சிந்திக்க வேண்டாமா? உங்களுக்கு யாதொரு அத்தாட்சியும் அவன் அளிக்காமல் இருந்தும் நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருப்பதைப் பற்றி நீங்கள் பயப்படாதிருக்க நான் எப்படி நீங்கள் இணை வைத்தவற்றுக்கு பயப்படுவேன். நம் இரு பிரிவினரில் அச்சமின்றி நிம்மதியாக வாழத் தகுதியுடையோர் யார்? என்பதை நீங்கள் அறிவுடையோர்களாக இருந்தால் கூறுங்கள். எவர் மெய்யாக ஈமான் கொண்டு தங்கள் விசுவாசத்துடன் யாதொரு அக்கிரமத்தையும் கலந்து விடாமல் இருப்போருக்கு நிச்சயமாக நிம்மதியுண்டு. அவர்கள் தாம் நேரான வழியிலும் இருக்கின்றனர்" (6:80-82).

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் 'விசுவாசத்துடன் அக்கிரமத்தைக் கலவாமல் இருப்போருக்கு' என்ற குர்ஆன் வசனம் இறங்கியதும் நபித்தோழர்களுக்கு பெரும் சங்கடங்கள் ஏற்பட்டன. இதனால் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'எங்களில் எவர்தாம் தமக்குத் தாமே அக்கிரமம் செய்யாதவராக இருக்க முடியும் நாயகமே!' என்று முறையிட்டனர். அப்போது இங்கே அக்கிரமம் என்ற வார்த்தை ஷிர்க் என்னும் கருத்தை வழங்குகிறது என்று கூறி தம் ஸஹாபிகளுக்கு நபியவர்கள் விளக்கம் கொடுத்தார்கள்' என்று அறிவிக்கிறார்கள்.

லுக்மான் தன் குமாரனுக்கு நல்லுபதேசம் செய்தபோது: "என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே. நிச்சயமாக இணை வைப்பது மகத்தான ஒரு அக்கிரமமாகும்" (31:13) என்ற லுக்மானின் போதனையையும் உதாரணத்துக்காக நபியவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.

மேலும் இறைவன் கூறுகிறான்: "எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிபட்டு, அல்லாஹ்வுக்கு அஞ்சி பயந்து (மாறு செய்யாமல் இருக்கிறார்களோ) அத்தகையோர் வெற்றி பெற்றவர்களே!" (24:52)

"நீங்கள் மனிதர்களுக்குப் பயப்படாதீர்கள். என்னையே பயந்துக் கொள்ளுங்கள். என் வசனங்களை ஒரு சொற்ப கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்". (3:44)

"நீங்கள் உண்மையான விசுவாசிகள் என்றால் எனக்கு பயப்படுங்கள். அவர்களுக்கு பயப்படாதீர்கள்". (3:175)

"அல்லாஹ்வும், அவனது தூதரும் அவர்களுக்கு கொடுத்தது பற்றி திருப்தி அடைந்து அல்லாஹ் நமக்கு போதுமானவன். அவன் தன் அருளைக் கொண்டு பின்னும் அருள் புரிவான். அவனுடைய தூதரும் அருள் புரிவார்கள். நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பி இருக்கின்றோம் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டாமா?" (9:59).

"(நம்முடைய) தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தடுத்ததிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்". (59:7)

இத்திருவசனங்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். வழிபாடு, அனுஷ்டானம் ஆகியவை அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் செய்ய வேண்டும். எவர் ரஸூலுக்கு வழிபட்டாரோ அவர் அல்லாஹ்வுக்கு வழிபட்டவராகிறார். ஆனால் அச்சம், பயம், பக்தி போன்றவற்றை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டும். மனிதன் அல்லாஹ்வையன்றி வேறெவரையும், எதையும் அஞ்சக் கூடாது என்பதை விளங்க முடியும்.

மேலும் சில ஆயத்துக்களில் 'கொடுத்தல்' என்பது அல்லாஹ்வுடனும், ரஸூலுடனும் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளதைக் காண்கிறோம். ஆனால் 'அருள்' என்பது அல்லாஹ்வுடன் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. இதைப்போன்று 'ஆசைவைத்தல்', 'ஆதரவு தேடல்' போன்றவற்றையும் அல்லாஹ்வுடன் மட்டுமே சேர்க்கப்படுள்ளதைக் காண முடிகிறது. 'போதுமாக்கிக் கொள்ளல்' இதுவும் அல்லாஹ்வைக் கொண்டு மட்டும் ஆக வேண்டும். நபி இப்ராஹீமை நெருப்புக் கிடங்கில் தூக்கி எறியப்பட்ட போதும் 'அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். பாரம் சாட்டப்படக் கூடியவர்களில் அவன் மேன்மைக்குரியவன்' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் இதைக் கூறியதாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். "நபியே! உமக்கும், உம்மை பின்பற்றிய விசுவாசிகளுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்" (8:64).

அல்லாஹ்வைக் கொண்டு சிருஷ்டிகள் போதுமாக்கிக் கொள்வதில் நபியவர்களும், மற்ற மூமின்களூம் அனைவரும் சமமானவர்கள். ஆனால் நபிமார்கள் இறைவனிடமிருந்து விதிவிலக்குகளை சிருஷ்டிகளுக்கிடையில் சேர்த்து வைக்கின்ற ஒரு நடுவர் என்றல்லாது வேறொன்றுமில்லை. இதுவே ஸலஃபுஸ்ஸாலிஹீன்களில் அதிகமானவர்களின் அபிப்பிராயமாகும். விளக்கமாக இது முன்னர் கூறப்பட்டு விட்டது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }