Saturday, November 05, 2005

இறைவன் அனுமதித்தவை


எதை அல்லாஹ்வும், அவன் ரஸூலும் விலக்கினார்களோ அது ஹராம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் அனுமதித்தவை அனைத்தும் ஹலாலானவை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்குத்தான் இஸ்லாம் மார்க்கம் என்று சொல்லப்படுகிறது. மனிதர்கள் அல்லாஹ், ரஸூலை நேசித்து, வழிபட்டு அவர்களுக்கு பணிந்து நடக்க வேண்டும். அவர்கள் கொடுத்தவற்றைக் கொண்டு திருப்திப்பட வேண்டும். இதை திருமறையும் விளக்குகிறது: "அவர்கள் (மெய்யாகவே) விசுவாசிகளாக இருந்தால் அவர்களைத் திருப்திப் படுவதற்கு அல்லாஹ்வும், ரஸூலும் மிகவும் தகுதியுடையவர்கள் (என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்)". (9:62)

மேலும் கூறுகிறான்: "மூமின்களே! அல்லாஹ்வுக்கும், அவன் திருத்தூதருக்கும் வழிபடுங்கள்". (4:80)

"(நபியே!) நீர் கூறும். உங்களுடைய தந்தையர்களும், உங்களுடைய புதல்வர்களும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய துணைவர்களும், உங்களுடைய குடும்பத்தினரும், நீங்கள் சம்பாதித்து வைத்துள்ள பொருட்களும் நஷ்டமாகி விடுமோ என்று பயந்து (எச்சரிக்கையுடன்) நீங்கள் செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக உவந்த வீடுகளும் அவை அனைத்தும் அல்லாஹ்வையும், ரஸூலையும் விரும்புவதை விடவும், மேலும் அவனுடைய பாதையில் யுத்தம் புரிவதை விடவும் உங்களுக்கு மிக்க விருப்பமானவையாக இருந்தால் (நீங்கள்) உண்மை விசுவாசிகளல்லர். நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப்பற்றி அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் காத்து எதிர்ப்பார்த்திருங்கள்" (9:24).

ஒரு ஹதீஸில் 'மூன்று விஷயங்கள் எவரிடம் ஒடுங்கே அமைந்திருக்கின்றனவோ, அவர் மெய்யாகவே விசுவாசத்தின் (ஈமானின்) சுவையை ருசிப்பார். இம்மூன்று விஷயங்களாவன: எல்லா சிருஷ்டிகளையும் விட அல்லாஹ்வும், ரஸூலும் தனக்கு உவப்பாக இருத்தல், அல்லாஹ்வுக்காகவே ஒரு மனிதன் மற்றவனைப் பிரியம் வைத்தல், தன்னை நெருப்பில் தூக்கிப் போடப்படுவதை மனிதன் வெறுப்பதுபோல அல்லாஹ் மனிதனுக்கு ஈமானைக் கொடுத்து காப்பாற்றியதற்கப்பால் (குஃப்ரின்) நிராகரிப்பின்பால் மீள்வதை வெறுத்தல்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இறைவன் கூறினான்: "நிச்சயமாக (நபியே!) உம்மை (விசுவாசிகளின் விசுவாசத்தப் பற்றி) சாட்சிக் கூறி அவர்களுக்கு நன்மாராயம் கூறுவதற்காகவும் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் அனுப்பி வைத்தோம். ஆகவே (விசுவாசிகளே!) நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசித்து அவருக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்து, அவரை கண்ணியப்படுத்தி, காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வை துதி செய்து வாருங்கள்'. (48:8-9)

மேலுள்ள திருவசனம் அல்லாஹ்வின் மீதும், ரஸூலின் மீதும் ஈமான் கொள்ள வேண்டுமென்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அத்துடன் உதவி, ஒத்தாசைகள் செய்தல், கண்ணியமளித்தல் போன்றவை ரஸூலுக்குச் செய்ய வேண்டுமென்பதையும் காட்டுகிறது. காலையிலும், மாலையிலும் துதி செய்தல் அல்லாஹ்வுக்கு மட்டும் செலுத்தப்பட வேண்டிய வணக்கமாகும். ஆம்! வழிபாடுகள், அனுஷ்டானங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. அல்லாஹ்வை தான் தொழ வேண்டும். அவனுக்காகவே நோன்பு நோற்க வேண்டும். ஹஜ் செய்வதும் அவனுக்கே. நேர்ச்சைகளும் அல்லாஹ்வுக்காகச் செய்ய வேண்டும். அவனைக் கொண்டு மட்டும் ஆணையிடுதல் வேண்டும். பிரார்த்தனைகளை அவனிடமே கேட்க வேண்டும். அவனைக் கொண்டு மட்டுமே உதவித் தேட வேண்டும். குறிப்பிடத்தக்க மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே ரிஹ்லத் - பிரயாணம் போக அனுமதியுண்டு. ஏனெனில் அல்லாஹ்வின் அனுமதி பெற்ற பின்னர் இப்பள்ளிகளை நபிமார்கள் நிர்மாணித்தார்கள். ஆகவே அவற்றில் வணக்க வழிபாடுகள் செய்வதை நாடிப் போக அனுமதி உண்டு.

உயிர் பிராணிகள், செடி, கொடிகள், மழை, மேகம் போன்ற எந்த சிருஷ்டியையும் சிருஷ்டிப்பதில் எதையும் அல்லாஹ் துணையாக்கவோ அல்லது அவற்றைத் தன் ஒத்தாசைக்கு ஏற்படுத்திக் கொள்ளவோ இல்லை. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தை மக்களுக்குப் போதிப்பதற்கு மாத்திரம் திருத்தூதர்களை இடையாளர்களாக ஏற்படுத்திக் கொண்டான். எந்தக் காரணத்தைக் கொண்டு எந்தப் பொருளையும் படைக்க விரும்புகிறானோ அதைக் கொண்டு அதனைப் படைத்து விடுகிறான். இதில் சிருஷ்டிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. காரணங்களையும் அவன் தான் படைக்கிறான். காரணங்களைப் படைப்பதற்கும் சில காரணங்கள் உண்டு. அதன் மர்மம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்கும் இந்த விஷயங்களில் தலையிட உரிமையில்லை. நடக்க வேண்டுமென்று அவன் நாடியவை அனைத்தும் நடந்தே தீரும். நடக்க வேண்டாம் என்றுள்ள அவனுடைய நாட்டங்கள் எங்கே நடக்கப் போகின்றன?

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }