Thursday, December 29, 2005

ஷபாஅத்தின் வகைகள்


ஷபாஅத் என்னும் பரிந்துரைத்தல் இரு வகைப்படும். ஒன்று: முஷ்ரிக்குகளிடையிலும், இவர்களைப் போன்ற அறிவீனமான மக்களிடையிலும் அறியப்பட்டிருந்த ஷபாஅத். இதை இறைவன் அடியோடு ஒழித்துக்கட்டி இல்லாமலாக்கி விட்டான். இரண்டு: அல்லாஹ்வின் அனுமதி பெற்றதன் பின்னர் கோரப்படும் ஷபாஅத். இதை அல்லாஹ் உறுதிப்படுத்தி கூறியிருக்கிறான். இந்த ஷபாஅத் அல்லாஹ்வுடைய அன்பியாக்களுக்கும், ஸாலிஹீன்களுக்கும் வழங்கப்படும். மறுமையில் சிருஷ்டிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஷபாஅத்தைக் கேட்கும்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சமூகத்தில் வந்து அவன் முன்னிலையில் ஸுஜுதில் விழுந்து விடுவார்கள். அவர்களுக்கு அல்லாஹ் திறந்து கொடுக்கின்ற பாராட்டுரைகளால் அல்லாஹ்வைத் துதிப்பார்கள். பின்னர் தலையை ஸிஜுதிலிருந்து உயர்த்த, அல்லாஹ் அறிவிப்புக் கொடுத்து ஷபாஅத்துக்கு அனுமதி வழங்குவான். அதற்கொப்ப நபியவர்கள் ஷபாஅத் செய்வார்கள். (இது பற்றிய முழு விளக்கமும் முன்னர் வந்துள்ளது. ஹயாத்தாக இருக்கும் போது பெருமானாரிடம் பிரார்த்தனையை வேண்டுவதில் ஷிர்க் வந்து விடும் என்று பயப்படுவதற்கில்லை). மாறாக நபியவர்கள் மரணமடைந்ததற்கப்பால் அவர்களிடம் வஸீலா வேண்டுவதில், ஷிர்க்கையும், பித்னாவையும் பயப்பட வேண்டிய நிலைமை வருகிறது. ஏனெனில் நபிமார்களின் வாழ்நாளில் அவர்களின் முன்னிலையில் வைத்து யாரும் அவர்களுக்கு ஸுஜுது செய்வதை அனுமதிக்க மாட்டார்கள். வாழ்ந்திருக்கையில் நபிமார்கள் வணங்கப்பட்டார்கள் என்று வரலாறுகளிலும் அறியப்படவில்லை. இத்தகைய அசம்பாவிதங்கள் நேர்ந்தால் கூட நபியாக இருப்பவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்களல்லவா? உடனே தடுத்து நிறுத்துவார்கள். அது சிறிதளவு ஷிர்க்காயினும் சரியே. நபிகள் வாழ்ந்திருக்கும் போது ஒரு போதிலும் இது நடைபெறாது. ஒரு சமயம், நபியவர்களுக்கு ஒருவர் ஸுஜுது செய்ய முற்பட்ட போது உடனே பெருமானார் அவரைத் தடுத்து நிறுத்தி 'அல்லாஹ்வும், முஹம்மதும் நாடியது நடந்தது என்று சொல்லாதீர்கள். அல்லாஹ் நாடியது நடந்தது. பிறகு தான் முஹம்மத் நாட முடியும்' என்று கூறி அம்மனிதருக்கு விளக்கம் கொடுத்தார்கள்.

ஆனால் நபிமார்கள் மரணமடைந்த பின் அவர்களைக் கொண்டு ஷிர்க் வைப்பதை அஞ்ச வேண்டும். நபிமார்களான ஈஸாவைக் கொண்டும், உஸைரைக் கொண்டும், மற்றவர்களைக் கொண்டும் மேலும் அவர்களின் கப்றுகளிலும் ஷிர்க் வைக்கப்பட்டது. இவற்றை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏனெனில் அவர்கள் மரணமடைததற்கப்பால் தலைதூக்கிய ஷிர்க்கை ஒழித்துக் கட்ட அவர்களால் முடியாதல்லவா? இதைக் கருத்தில் கொண்ட நபி (ஸல்) அவர்கள் 'கிறிஸ்தவர்கள் ஈஸாவை அளவு மீறித் துதித்தது போல என்னை அளவு மீறி துதித்து விடாதீர்கள்' என்று எச்சரித்துக் கூறினார்கள். 'நான் ஒரு அடிமை. என்னைப் பற்றி அல்லாஹ்வின் அடிமை என்றும், தூதர் என்றும் கூறுங்கள்' என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

இறைவா! என்னுடைய கப்றை வணங்கும் பிம்பமாக ஆக்கி விடாதே என்றும் கூறி நபி (ஸல்) தொடர்ந்தும் சொன்னார்கள்: 'கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ஏனெனில் இவர்கள் தங்கள் நபிமார்களின் கப்றில் பள்ளிவாசல்களை அமைத்து விட்டார்கள்'. இதை அறிவித்தவர் குறிப்பிடுகிறார்: நபியவர்கள் இவர்களின் இச்செய்கையை பற்றி எச்சரிப்பதற்காக இதைக் கூறினார்கள். அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவன் திருத்தூதரை மட்டுமே பின்பற்றி நடக்க வேண்டும். பித்அத்தான வணக்கங்களைக் கொண்டு நாம் அவனை வணங்கக் கூடாது. அப்படியானால் தான் ஷஹாதத் கலிமாவின் இலக்கை அடைய முடியும்.

அறிஞர் புளைள் பின் இயாழ் அல்லாஹ்வின் திருவசனமான "உங்களில் நற்கருமங்களை நன்றாகச் செய்வோர் யாரென்று பரிசோதிப்பதற்காக" (11:7) என்பதின் பொருள் 'நன்றாகச் செய்தல்' என்பதற்கு கலப்பில்லாமல், முறையாகச் செய்தல் என்று விளக்கம் கருதுகிறார்கள். இதை அவர்கள் கூறியதும் 'அபூ அலியே, கலப்பில்லாமலும், முறையோடும் செய்தல்' என்றால் என்ன? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'அனுஷ்டானங்கள் கலப்பற்றும், சரியான முறையிலும் இல்லையென்றால், அல்லாஹ் அதை ஏற்க மாட்டான். கலப்பற்றிருத்தல் என்பது அல்லாஹ்வை நாடிச் செய்தலாகும். முறையோடிருத்தல் என்பது நபி(ஸல்) அவர்கள் காட்டியதற்கொப்ப செய்தலாகும். இதனால் அல்லாஹ்வின் இவ்வசனத்தை மெய்ப்பித்தவர்களாக வாழ முடியும். "எவன் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறானோ அவன் நற்கருமங்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது வணங்கி வருவானாக!" (18:110)

அமீருல் மூமினீன் உமர் (ரலி) அவர்கள் தமது துஆவில் 'இறைவா! என்னுடைய அனைத்து அமல்களையும் நல்ல ஸாலிஹான அமல்களாகவும், உன்னுடைய முகத்தையே நாடி தூய்மையான முறையில் செய்யப்பெற்ற அமல்களாகவும் ஆக்கியருள்வாயாக! இந்த அமலில் யாருக்கும் பங்கை நீ ஆக்கி விடாதே!' என்று கூறிப் பிரார்த்திப்பார்கள்.

இறைவன் கூறினான்: "அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்கு மார்க்க விதியாக விதிக்கக் கூடிய இணைகளும் இருக்கின்றனவா?" (42:21)

நபி (ஸல்) அவர்கள் காட்டியதற்கொப்பச் செய்வதென்றால், நூதன அனுஷ்டானங்களைத் தவிர்ந்து நடக்க வேண்டும். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் 'நமது இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒரு (நூதன) அனுஷ்டானத்தை எவர் செய்தாலும் அது புறக்கணிக்கப்பட வேண்டியதே'. (புகாரி, முஸ்லிம்)

நம் விதிகளுக்கு உட்படாத எந்த அமலை ஒருவர் செய்தாலும் அது புறக்கணிக்கப்படும்.

இறைவன் ஹதீஸ் குத்ஸியில் 'நான் இணைதுணைகளை விட்டும் தேவையற்றவன். ஆகவே ஒருவன் என் அனுஷ்டானத்தைப் புரிந்து அதில் மற்றவரையும் என்னுடன் பங்கு சேர்த்தால் நான் அவனை விட்டும் பிரிந்து விடுவேன். அந்த அனுஷ்டானம் முழுவதும் இணை வைக்கப்பட்டவனுக்கே சேரும்' என்று கூறுகிறான்.

ஆகவே இந்த ஹதீஸின் வெளிச்சத்தில் பெருமக்கள் 'இஸ்லாம் போதிக்கின்ற அனைத்து அமல்களும் அவற்றின் அடிப்படை குர்ஆன் ஹதீஸின் அடிப்படைகளாகும்' என்று கூறுகின்றனர். அதாவது இஸ்லாத்தின் சட்டங்கள் அனைத்தும் (தவ்கீஃபீய்யுன்) குர்ஆன் ஹதீஸின் உரைகளால் அமைக்கப்பட்டிருக்கின்றன. அன்றி தனியாரின் அபிப்பிராயத்தைக் கொண்டல்ல. உமர் (ரலி) அவர்களின் வரலாறும் இதைக் காட்டுகிறது. அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்ட வேளையில் 'சத்தியமாக நீ நன்மை, தீமைகள் செய்ய சக்தியற்ற ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னை நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்திராவிட்டால் நானும் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களை பின்பற்றி நடக்கும்படி அல்லாஹ் நம்மை ஏவினான். அவர்களுக்கு வழிபட்டு, அவர்களை விரும்பி, அல்லாஹ்வையும் ரஸூலையும் எல்லோரையும் விட உகந்தோராக நாம் எடுத்துக் கொள்வதற்கும் பணித்தான். "(நபியே!) நீர் கூறும். நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். (அதனால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான்" (3:31) மேலும், "நீங்கள் அவருக்கு வழிபட்டால் நீங்கள் நேரான வழியில் சென்றவர்களாகி விடுவீர்கள்" (24:54)

"எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிபட்டு நடக்கின்றார்களோ அவர்களை சுவனபதியில் சேர்க்கின்றான். அவற்றிலே நீரருவிகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். இது மகத்தான பெரு பாக்கியமாகும்" (4:13)

திருமறையும், நபிமொழியும் எவற்றையெல்லாம் போதிக்கின்றனவோ அவற்றை விட்டும் பிறழாது வாழ வேண்டும். ஸஹாபக்கள், ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் அப்படித்தான் வாழ்ந்தார்கள். மார்க்க விஷயங்களில் தெரிந்த சட்டங்களைக் கொண்டு விதிகள் கூற வேண்டும். தெரியாத சட்டங்களைக் கொண்டு பிறருக்குத் தீர்ப்பு வழங்காமல் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். தெரியாமல் தீர்ப்பு வழங்குவதை அல்லாஹ் விலக்கியிருக்கிறான். மனம் விரும்பியதற்கொப்ப சட்டங்கள், விதிமுறைகள் சொல்லுகின்றவனுக்கு மார்க்கத்தில் இடமில்லை. நபி (ஸல்) அவர்கள் எதைக் கொண்டு பிரார்த்தித்தார்கள் என்பதைக் காட்டுகின்ற பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன. அவற்றுள் ஒரு ஹதீஸில் 'நபி (ஸல்) அவர்கள் துஆவின் போது 'இறைவா! நீ புகழுக்குரியவன். புகழனைத்தும் உனக்கே உரியது. அதனைக் கொண்டு உன்னிடம் பிரார்த்திக்கிறேன். நீ அன்றி வேறு இறைவனே இல்லை. நீயே பேருபகாரி. ஆகாயங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றியே நூதனமாய்ப் படைத்தாய். கம்பீரத்துக்கும், கண்ணியத்துக்கும் உரியவனே, உயிருள்ளவனே நித்தியமாக என்றென்றும் இருப்பவனே!' என்று பிரார்த்திப்பார்கள். (அபூதாவூத், நஸாயீ, இப்னு மாஜா) இவ்வாறுதான் நபியவர்களின் துஆக்கள் ரிவாயத்துச் செய்யப்பட்டுள்ளன.

எனவே அவர்களைப் பின்பற்றியே நாமும் துஆச் செய்ய வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }