Tuesday, January 10, 2006

சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்யலாமா?


படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யக் கூடாது. அப்படி சத்தியம் செய்தாலும், அது நிறைவேறாது. இது அறிஞர்களின் ஏகமனதான தீர்ப்பாகும். மலக்குகள், ஷெய்குமார்கள், மன்னர்கள், கஃபா ஷரீஃப் இவர்களைக் கொண்டெல்லாம் ஆணையிட்டால் அந்த ஆணை நிறைவேறாமலாகி விடும். ஷரீஅத்தும் இத்தகைய சத்தியங்களை விலக்குகிறது. இவ்விலக்கல் 'தஹ்ரீமுடையவும், அல்லது தன்ஸீஹுடையவும்' அதாவது கடுமையான விலக்கலாக இருக்க இடம்பாடுண்டு.

ஹதீஸ் ஒன்றில் நபியவர்கள் 'மனிதன் ஆணையிட விரும்பினால் அல்லாஹ்வைக் கொண்டு ஆணையிட வேண்டும். இல்லையென்றால் வாய்மூடி பேசாமல் இருந்து கொள்ள வேண்டும்' என்றும் 'அல்லாஹ் அல்லாதவைகளைக் கொண்டு சத்தியம் செய்கிறவன் நிச்சயமாக இணை வைத்து விட்டான்' என்று மற்றொரு ஹதீஸிலும் கூறினார்கள்.

சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிட்டால் நிறைவேறும் என்று முன்னுள்ள அறிஞர்கள் எவரும் சொல்லவில்லை. ஆனால் இமாம் அஹ்மதுடைய இரு அபிப்பிராயங்களில் ஒன்றில் நபி (ஸல்) அவர்களைக் கொண்டு மட்டும் ஆணையிட்டால் நிறைவேறும் என்று காணப்படுகிறது. இமாம் அஹ்மதின் தோழர்களில் இப்னு அகீல் என்பவர் இந்த அபிப்பிராயத்தை எல்லா நபிகளுடனும் சேர்த்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவ்வபிப்பிராயம் பலவீனமானது.

பொதுவாக நபியைக் கொண்டு சத்தியம் செய்தல் கூடும் என்ற சொல்லின் அடிப்படை பலமற்றதும், ஆதாரமில்லாததும் ஆகும். மற்ற எந்த அறிஞர்களும் இப்படி சொல்லவே இல்லை என்பதைத்தான் நாம் அறிந்திருக்கிறோம். இமாம் அபூஹனீபா, இமாம் ஷாஃபீஈ, இமாம் மாலிக் (ரஹ்) ஆகியோரின் அபிப்பிராயமும் இதை விளக்குகிறது. மேலும் இமாம் அஹ்மதின் இன்னுமோர் அபிப்பிராயமும் நபியைக் கொண்டு ஆணையிட்டால் நிறைவேறாது என்பதுதான். இந்த விஷயத்தில் அதிகமான அறிஞர்கள் கூறியதே சரியானதாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }