படைப்பினங்களைக் கொண்டு ஆணையிடுவது விலக்கப்படுவது போல அவர்களைக் கொண்டு பாதுகாவல் தேடுவதும் விலக்கப்பட்டுள்ளது. பாதுகாவல் தேடுவதற்கு அல்லாஹ்வையும், அவன் திருநாமங்களையும் இலட்சணங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும். சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களால் பாதுகாவல் தேட மாட்டாது. சிருஷ்டிக்கப்படாத நிரப்பமான வாக்கியங்களைக் (உரைகளை) கொண்டு நபியவர்கள் பாதுகாவல் தேடியுள்ளார்கள். 'அவூது பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி' என்று கூறியிருக்கிறார்கள். இறைவனின் திருவசனங்கள் சிருஷ்டிக்கப்பட்டவையல்ல என்பதற்கு நபிகளின் இந்த ஹதீஸ் சான்றாக எடுத்துக் கொள்ளப்படும். எனவே தான் நபி (ஸல்) அவற்றை பாதுகாப்பு தேடுவதற்காக எடுத்துக் கொண்டார்கள். இதை ஆதாரமாக வைத்து இமாம் அஹ்மதும், ஸலஃபுஸ்ஸாலிஹீன்களில் உள்ள அறிஞர்களும் அல்லாஹ்வின் உரைகளை (கலாமுல்லாஹ்) சிருஷ்டிக்கப்பட்டவையல்ல (ஃகைர் மக்லூக்) என்று உறுதியாக உரைத்தார்கள். அல்லாஹ்வின் உரைகள் சிருஷ்டிக்கப்பட்டவையாக இருப்பின் அவற்றைக் கொண்டு நபியவர்கள் பாதுகாப்பு தேடியிருக்க மாட்டார்கள் என்பது இவர்களின் கொள்கையாகும்.