Monday, January 23, 2006

ஓதிப்பார்த்தல்


ஷிர்க் இடம்பெற வில்லையானால் ஓதி பார்ப்பதில் குற்றமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். இணை வைத்தலின் ஏதாவதொரு அம்சம் கலந்து விட்டால் கூட அத்தகைய ஓதிப்பார்த்தல் தடுக்கப்பட்டுள்ளது. ஜின்களைக் கொண்டு காவல் தேடி ஓதிப்பார்த்தலும் விலக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வும் இதை விளக்கிக் காட்டுகிறான்: "மக்கள் இனத்தைச் சார்ந்த ஆண்களில் சிலர், ஜின் இனத்தைச் சார்ந்த சில ஆண்களைக் கொண்டு பாதுகாவல் கோருகின்றனர். இதனால் அவர்களுடைய கர்வம் அதிகரித்து விட்டது" (72:6) இந்த ஆயத்தை அடிப்படையாக கொண்டு 'மயக்கமுற்று போதையில் இருப்பவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஷிர்க்கை உட்கொள்கிற மந்திரம் ஜபித்தல் கூடாது. பொருள் தெரியாத எந்த வார்த்தைகளையும் உபயோகித்தல் கூடாது. ஏனெனில் அவற்றில் ஷிர்க்குடைய வாக்கியங்கள் சேர்ந்து விடக்கூடும். அனுமதிக்கப்பட்ட ஒரு சிலவற்றைச் செய்யலாம். அப்படியானால் அல்லாஹ்வைத் தவிர மற்றும் யாரைக் கொண்டும் சத்தியம் செய்யக் கூடாது' என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

வாழ்ந்திருந்த ஸாலிஹீன்களிடமும், நாதாக்களிடமும் சென்று அவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டுமென்று கோரி அதற்கொப்ப அவர்கள் பிரார்த்திப்பதும் நம் கருமங்களை எடுத்துக்கூறி நாமாகவே அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் அனுமதிக்கப்படும். ஸாலிஹீன்களின் துஆக்கள் நமக்கு நன்மைகளை அல்லாஹ் தருவதற்குரிய ஒரு காரணமாகும். இவர்களின் துஆக்களும், நமது அமல்களாளும் அல்லாஹ்விடம் வஸீலா தேடினால் அது அனுமதிக்கப்பட்ட வஸீலாவாகும். இத்தகைய வஸீலாவைத்தான் தேட வேண்டுமென்று அல்லாஹ்வும் பணித்திருக்கிறான். "மூமின்களே! அல்லாஹ்விற்குப் பயந்து அவனிடம் செல்வதற்குரிய வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்" (5:35). இங்கு வஸீலா என்பதற்கு நல்லமல்கள் என்பது கருத்தாகும்.

மேலும் ஒரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்: "இவர்கள் கடவுள் என்று மதித்து அழைப்பவை தங்களுக்கு தங்கள் இறைவனிடம் (வஸீலாவை) வணக்கங்களால் சமீபிப்பதைத் தேடுகின்றன" (17:57)

நாம் நல்லமல்களைக் கொண்டும், நபிமார்களின் துஆக்களைப் பெற்றும் வஸீலா தேடாமல் நபிகளை மட்டும் பொருட்டாக வைத்து வஸீலா தேடப்பட்டால் நம் துஆக்கள் அங்கீகரிக்கப் படுவதற்குரிய ஒரு காரணமாக அது இருக்க முடியாது. ஆகவே வஸீலாவுக்குப் பொருந்தாத ஒன்றைக் கொண்டு வஸீலா தேடியவர்களாக நாம் ஆகி விடுவோம். இவையெல்லாம் நபிகளைப் பற்றியோ, ஸலஃபுஸ்ஸாலிஹீன்களைப் பற்றியோ கூறப்படும் பிரபலமான துஆக்கள் ஒன்றுமல்ல. இமாம் அஹ்மத் அவர்களைப் பற்றி சொல்லப்படும் போது நபிகளைக் கொண்டு கேட்பதை அவர்கள் அனுமதித்தார்கள் என்று 'மன்ஸக்குல் மர்வதீ' என்ற நூலில் வருவதைப் பற்றி அது நபிகளைக் கொண்டு சத்தியம் செய்வது ஜாயிஸாகும் என்றுள்ள இமாம் அவர்களின் இரு ரிவாயத்துகளில் ஒன்று என்றே கருதப்பட வேண்டும். ஆனால் அனைத்து அறிஞர்களும் இவ்விரண்டையும் மறுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

நபிமார்களுக்கு நிரம்பவும் மதிப்புண்டு என்று அல்லாஹ்வே குறிப்பிடுகிறான். நபிமார்களான மூஸா, ஈஸா (அலை) அவர்களைப் பற்றி முன்னர் கூறப்பட்டு விட்டது. இதை எவராலும் மறுக்க இயலாது. இந்த மதிப்பினாலும், பதவியினாலும் மக்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது? இப்பதவிகளின் பலாபலன்கள் நபிமார்களுக்கே பலனளிக்கும். மனிதர்கள் நபிமார்களைப் பற்றி நேசித்து அவர்கள் வாழ்ந்ததற்கொப்ப தம் வாழ்க்கைகளை அமைத்தாலே தவிர வேறு எந்த வழியிலும் மனிதர்கள் பலன்பெற மாட்டார்கள். அவர்களை நம்பி வழிபட்டு நேசித்து அவர்களுக்கு உதவி புரிந்து அவர்களின் ஸுன்னத்தைப் பின்பற்றி வாழ்ந்து இவற்றையெல்லாம் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலா தேடினால் அது மிகப்பெரிய வஸீலாவாகக் கருதப்படும்.

நபிமார்களை மட்டும் எடுத்துரைத்து ஒருவர் பிரார்த்தித்தால் அவர்களைக் காரணம் காட்டி பிரார்த்திக்கிறார் என்பது தாத்பரியமாகும். எனவே நபியை மட்டும் காரணம் காட்டி கேட்பதினால் தம் தேவைகள் ஒருபோதும் நிறைவேறாது. ஒருமனிதன் மற்றவனிடத்தில் வஸீலா தேடினால் இந்த வஸீலாவைக் கொண்டு அவனுக்கு ஷபாஅத் செய்வதும் கருதப்பட்டால் இது அனுமதிக்கப்பட்டதாகும். ஆனால் இந்த வஸீலாவைக் கொண்டு ஆணையிடுவது நாடப்பட்டால் அது அனுமதிக்கப்படாததாகி விடும். சிருஷ்டிகளைக் கொண்டு மற்றொரு சிருஷ்டியின் மீது ஆணையிடக் கூடாதல்லவா. இனி இந்த வஸீலாவைக் கொண்டு நம் தேட்டம் நிறைவேறக்கூடிய ஒரு காரணம் என்று மட்டும் நாடப்பட்டால் அதன் விளக்கம் பின்னால் வருகிறது. அல்லாஹ்விடம் பிறரைக் கொண்டு ஆணையிடக் கூடாது. அனுமதிக்கப்பட்டவர்களின் ஷபாஅத்தைக் கொண்டு மட்டுமே அவனிடத்தில் வஸீலா தேடப்படும். அதற்கு அனுமதியும் உண்டு. கண்பார்வை இழந்த ஸஹாபியின் ஹதீஸும் இதைத்தான் காட்டுகிறது.

மேலும் இறைவன் கூறினான்: "அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (வேண்டியவற்றைக்) கேட்கிறீர்கள். மேலும் இரத்த பந்தத்தில் ஏற்பட்ட உறவையும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) பேணிக் கொள்ளுங்கள்" (4:1). அதிகமான அறிஞர்கள் 'அல்-அர்ஹாமி' என உச்சரித்து அல்லாஹ்வைக் கொண்டு மட்டும் கேட்க வேண்டும். சத்தியம் செய்ய வேண்டும். உறவினர்களைக் கொண்டு கேட்கப்பட மாட்டாது. மேலும் சத்தியம் செய்யப்பட மாட்டாது என்று கூறி இருக்கின்றனர். ஆனால் சிலர் 'அல்-அர்ஹாம்' என்று ஓதி உறவினர்களைப் பொருட்டாகக் கொண்டு கேட்கலாம் என்பதை அனுமதித்தார்கள்.

ஆனால் இந்த ஆயத்தில் இவர்கள் அனுமதிப்பதற்கு ஆதாரமே இல்லை. ஏனெனில் உறவினர்களைப் பொருட்டாகக் கொண்டும், அவர்களைக் கொண்டு சத்தியம் செய்தும் கேட்கப்பட மாட்டாதல்லவா? ஆனால் இந்த உறவினர்களை ஒருசிறு காரணமாக மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இக்காரணத்தை எடுத்துக் கூறிக் கேட்க அனுமதியுண்டு. ஏனெனில் இரத்தபாசம் அதை உடையவர்களுக்கிடையில் சில கடமைகளைச் சுமத்தி விடுகிறது. மேலும் குகையில் சிக்கிய மூவர் தத்தம் நல்லமல்களைக் காரணம் காட்டிப் பிரார்த்தித்து ஈடேற்றம் அடைந்தார்கள். நபியவர்களின் துஆவையும், ஷபாஅத்தையும் காரணமாகக் கொண்டுதான் அன்று ஸஹாபிகள் வேண்டிக் கொண்டார்கள். கலீஃபா அலீ பின் அபூதாலிப் அவர்கள் பற்றி அறிவிக்கப்பட்ட சம்பவமும் இப்படித்தான். அலீ (ரலி) அவர்களின் சகோதரர் ஜஃபரின் மகன் தம் தந்தை ஜஃபரைக் காரணம் காட்டி ஏதேனும் ஒன்றைக் கேட்டால் அலீ (ரலி) அவர்கள் அதைக் கொடுத்து விடுவார்களாம். இவையெல்லாம் இரத்த பாசத்தின் (ஹுகூக்குகள்) கடமைகள் எனக் கூறலாம்.

முன்னர் கூறப்பட்ட ஹதீஸான தொழுகைக்குப் புறப்படுகிறவரின் துஆ விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் மூலமாக இப்னு மாஜா ரிவாயத் செய்த ஹதீஸையும் இப்படித்தான் கூற வேண்டும். இந்த ஹதீஸின் இஸ்னத் (ஆதார தொடரில்) அதீய்யத் பின் ஊஃபி இடம் பெற்றிருப்பதால் அது ளயீஃபானது (பலவீனமானது) எனக் கூறினோம். நபிகள் தாம் அதைக் கூறியதாக நினைத்தால் கூட அந்த ஹதீஸை இப்படித்தான் விளக்க முடியும். இவ்விளக்கத்திற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று: அந்த ஹதீஸில் பிரார்த்திப்பவர்களின் பொருட்டைக் கொண்டும் அல்லாஹ்வுக்கு வழிபடுவதற்காக நடந்து செல்பவர்களின் பொருட்டாலும் கேட்கப்படுகிறது. அல்லாஹ்விடத்தில் கேட்பவர்களுக்குரிய ஹக்கு அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாகும். இறைவழிபாட்டிற்கு நடந்து செல்பவர்களுக்குரிய ஹக்கு அவர்களுக்குக் கூலி கொடுப்பதாகும். இந்த ஹக்குகளை அல்லாஹ் தன் மீது ஏற்படுத்தி வைத்திருக்கிறான். ஆனால் படைப்புகள் இறைவன் மீது எதையும் சுமத்தி விடக் கூடாது. இதை இறைவன் குறிப்பிடுகிறான்: "உன்னுடைய இறைவன் அருள் புரிவதை தன் மீது கடமையாக்கிக் கொண்டான்" (6:54)

இன்னும் கூறினான்: "மூமின்களுக்கு உதவி செய்தல் நம்மீது கடமையாகி விட்டது" (30:47). மேலும் கூறினான்: "தௌராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் அல்லாஹ் வாக்களித்துத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான். அல்லாஹ்வை விடத் தன் வாக்குறுதிகளை பூரணமாக நிறைவேற்றுபவன் யார்? (9:111)

முஆத் (ரலி) பற்றி ஸஹீஹான ஹதீஸில் வருகிறது. 'அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள கடமையாவது அவனை அவர்கள் இணை வைக்காமல் வணங்குவது. அடியார்களுக்கு வேண்டி அல்லாஹ்வின் மீதுள்ள ஹக்கு என்பது மேற்கூறப்பட்டவாறு அவர்கள் வணங்கினால் அவர்களை வேதனைப் படுத்தாமலிருப்பது.

ஹதீஸ் குத்ஸியில் வருகிறது. அல்லாஹ் கூறினான்: 'அடியார்களே! அக்கிரமம் செய்வதை நான் என்மீது ஹராமாக்கிக் கொண்டேன். உங்களுக்கும் நான் அதை ஹராமாக்கி விட்டேன். ஆகவே நிங்கள் ஒருவருக்கொருவர் அக்கிரமம் செய்யாதீர்கள்'.

அல்லாஹ்வை வணங்கக் கூடியவர்களுடையவும், அவனை பிரார்த்திக்க கூடியவர்களுடையவும் ஹக்குகள் அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கூலி கொடுத்தல் என்றிருக்குமானால் இவையெல்லாம் அல்லாஹ்வுடைய செயல்களைக் கொண்டு கேட்டல் என்று கருதப்படும். எனவே இதிலும் குற்றமில்லை. இது நபிகளின் சொல்லில் வந்திருக்கின்ற இஸ்திகாதா(காவல் தேடுதல்) என்பதற்கு ஒப்பானது. அதிலே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இறைவா! உன்னுடைய கோபத்திலிருந்து தப்பிக்க உன்னுடைய திருப்தியைக் கொண்டு காவல் தேடுகிறேன். உனது தண்டனையிலிருந்து தப்பிக்க உன்ன் மன்னிப்பைக் கொண்டு காவல் தேடுகிறேன். உனக்குரிய புகழ் இவ்வளவுதான் என்று என்னால் மட்டுப்படுத்திக் கூற முடியாது'. இங்கே அல்லாஹ்வின் மன்னிப்பைக் கொண்டு காவல் தேடல் என்பது கூலிக் கொடுப்பதைக் கொண்டு பிரார்த்திப்பதைப் போல் இருக்கிறது. மன்னித்தலும், கூலி கொடுத்தலுமெல்லாம் அல்லாஹ்வுடைய செய்கைகளாகும்.

இரண்டு: இறைவனைப் பிரார்த்திப்பதும், அவனுக்கு நற்கிரியைகள் புரிவதுமெல்லாம் அடியானின் இலட்சியம் நிறைவேறுவதற்குரிய ஒரு காரணமாகும். இக்காரணம் நபிகளுடையவும், ஸாலிஹீன்களுடையவும் துஆவைக் கொண்டு வஸீலா தேடுவதைப் போன்றிருக்கிறது. நபியையும், ஸாலிஹீன்களையும் கொண்டு துஆச் செய்தல் என்பதின் கருத்து அவர்களைக் கொண்டு அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதாக இருக்குமானால் அது கூடாததாகும். ஏனெனில் அல்லாஹ்வின் மீது அவனைக் கொண்டல்லாமல் வேறு யாரைக் கொண்டும் சத்தியம் செய்யப்பட மாட்டாது. நபியையும், ஸாலிஹீன்களையும் கொண்டு துஆச் செய்தல் என்பதின் கருத்து அவர்களைக் காரணமாகக் காட்டி அல்லாஹ்விடத்தில் பிரார்த்தித்தல் என்றிருக்குமானால் அல்லாஹ் காரணமாக ஆக்கியதைக் கொண்டு கேட்டான் என்பது தாத்பரியமாகும்.

வணக்கமும், பிரார்த்தனையுமெல்லாம் மனிதனின் இலட்சியங்கள் நிறைவேறுவதற்குரிய காரணங்கள் தாம். இதைப் போன்று ஒரு காரணம்தான் நபியுடையவும், ஸாலிஹீன்களுடையவும்துஆக்கள் (இவர்கள் வாழ்ந்திருக்கையில்). ஆனால் இவர்களின் பிரார்த்தனைகள் உண்டாகாமலும், நாம் நற்கருமங்கள் புரியாமலும் இந்த சிருஷ்டிகளைக் கொண்டு மட்டும் வஸீலா தேடினால் அது கூடாத வஸீலாவாகும்.

ஒருவன் மற்றவனிடம் அன்பியாக்கள், மலக்குகள், ஸாலிஹீன்கள் ஆகியோரின் பொருட்டைக் கொண்டு கேட்கிறேன் என்று கூறி, அதனால் அவர்களைக் கொண்டு சத்தியம் செய்வதைக் கருதினான் என்றால் இது கூடாததாகும். இத்தகைய சத்தியங்கள் சிருஷ்டிகளுக்கிடையில் (செய்தல்) கூடாது. அப்படியானால் இவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தல் எப்படிக் கூடும்? ஒருபோதும் கூடாது. மேலும் இக்கூற்றினால் சத்தியத்தைக் கருதாமல் நபிமார்களையும், மலக்குகளையும், ஸாலிஹீன்களையும் தம் துஆக்கள் அங்கீகரிக்கப்பட ஒரு காரணமாக மட்டும் எடுக்கப்பட்டால் இந்நிலையிலும் இவர்களைக் காரணமாக காட்டி மட்டும் பிரார்த்திப்பதில் எந்த நாட்டத்தையும் பெற்றுக் கொள்ள மாட்டான். மாறாக தம் நாட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அன்பியாக்களையும், மலக்குகளையும் ஈமான் கொள்ளுதல் போன்ற காரணங்கள் தம்மிடமிருந்தும் (பிரார்த்திப்பவனிடமிருந்தே) ஏற்பட வேண்டும். அன்பியாக்களின் துஆக்கள் (என்ற காரணமாவது) இவனுக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

இது ஒன்றுமில்லாது வெறும் அன்பியாக்களையும், மலக்குகளையும் வைத்து பிரார்த்திப்பதில் பயனேதுமில்லை. ஆனால் மக்களில் பலர் இவர்களைக் கொண்டு சத்தியம் செய்து அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப் பழகிக் கொண்டார்கள். இந்த பெரியார் மீது சத்தியமாக என்று கூறுவதையும் சர்வ சாதாரணமாக ஆக்கிக் கொண்டார்கள். மனிதர்கள் செய்த நலன்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கூறினால் துஆக்கள் அங்கீகரிக்கப்பட வாய்ப்பு உண்டு. இப்படியாக அல்லாஹ்விடம் கெஞ்சுதல் மிக ஏற்றமான பிரார்த்தனையாகும். இதற்கு குர்ஆனிலும், ஹதீஸிலும் பற்பல சான்றுகளைக் காண முடியும். முன்னர் கூறப்பட்ட இப்னு மஸ்வூதுடைய துஆவும், குகையில் சிக்கிய மூவர்களின் வரலாறும் இதற்கு எடுத்துக் காட்டாகும்.

கீழ்வரும் திருமறை வசனங்களையும் இதற்குச் சான்றாக எடுத்துக் கொள்ள முடியும். இறைவன் கூறினான்: "எங்கள் இறைவா! உங்கள் இறைவனை விசுவாசியுங்கள் என்று விசுவாசத்தளவில் எங்களை அழைத்தோரின் அழைப்பை நிச்சயமாக நாங்கள் செவியுற்று நாங்கள் விசுவாசம் கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவா! நீ எங்கள் குற்றங்களை மன்னித்து எங்கள் பாவங்களிலிருந்து (எங்களை) விடுவித்து முடிவில் நல்லோர்களுடன் எங்களை மரிக்கும்படிச் செய்வாயாக!" (3:193)

மேலும் கூறினான்: "இத்தகையோர் (தங்களிறைவனை நோக்கி) இறைவா! நிச்சயமாக நாங்கள் உன்னை விசுவாசிக்கிறோம். ஆதலால் நீ எங்களுடைய பாவங்களை மன்னித்து நெருப்பின் வேதனையிலிருந்தும் நீ எங்களை இரட்சிப்பாயாக! என்றும் (சதா) பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்" (3:16)

மேலும் கூறினான்: "எங்கள் இறைவனே! நீ அருள் செய்ததை நாங்கள் விசுவாசிக்கின்றோம். (உன்னுடைய) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கின்றோம். ஆதலால் (அவரை) உண்மைப் படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! (என்றும் இச்சிஷ்யர்கள் பிரார்த்தித்தனர்)". (3:53)

மேலும் கூறினான்: "நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை) விசுவாசிக்கிறோம். நீ எங்கள் குற்றங்களை மன்னித்து எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிவோர்களிலெல்லாம் நீ மிக்க மேலானவன் என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்". (23:109)

கீழ்வரும் ஹதீஸும் இதை உண்மைப் படுத்துகிறது. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. அன்ஸாரிகளில் ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போது நோய் விசாரிக்க நாங்கள் சென்றிருந்தோம். இறந்து விடுவாரென்று எங்களுக்குத் தெரிந்ததினால் அவருடைய உயிர் பிரியும்வரை நாங்கள் விலகவில்லை. பின்னர் மய்யித்தைத் துணியால் போர்த்தினோம். வயது முதிர்ந்த தாயார் அமர்ந்திருந்தார். அம்மூதாட்டியிடம் 'உனக்கு ஏற்பட்ட இந்தச் சங்கடத்தின் கூலியை அல்லாஹ்விடமிருந்து நீ தேடிக் கொள்!' என்று கூறப்பட்டது.

இதைச் செவியுற்ற அக்கிழவி ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என் மகன் இறந்து விட்டாரா? என்று ஆச்சரியமாக வினவினார்.

நாங்கள் 'ஆம்' என்று பதிலளித்ததும், உண்மையைத்தான் சொல்கிறீர்களா? என்று அம்மூதாட்டி வினவினார். நாங்கள் மீண்டும் ஆம் என்றோம்.

உடனே தம் இரு கரங்களையும் அல்லாஹ்வின் பால் உயர்த்தி பிரார்த்திக்கலானார். இறைவா! நான் இஸ்லாத்தைத் தழுவி உன் திருத்தூதரின் பால் ஹிஜ்ரத்துச் செய்து வந்திருக்கிறேன். இவையெல்லாம் என்ன சங்கடங்கள் நேர்ந்தாலும் அடுத்தாற்போல் மகிழ்ச்சியை நீ எனக்குத் தர வேண்டும் என்பதற்காகத்தான். இந்த உண்மையை நீயும் அறிந்திருக்கிறாய். எனவே இந்த சங்கடத்தை என்மீது பெரிய பாரமாக்கி விடாதே! எனக் கூறிவிட்டு மய்யித்தின் முகத்தைத் திறந்து பார்த்தார். நாங்கள் அங்கேயே இருந்தோம். கடைசியில் இறந்தவருடன் (அவரின் உயிரை மீட்கப்பட்டதினால்) நாங்கள் உணவருந்தினோம். இந்த சம்பவத்தை நாம் சிந்தித்தாலும் இந்த பெண்மணி தான் நன்மைகளை எடுத்துக் கூறி (ஈமான் கொண்டு, ஹிஜ்ரத்துச் செய்து வந்தேன் எனச் சொல்லி அதற்கப்பால்) தன் பிரார்த்தனையைத் துவங்கி இருக்கிறாள் என்பதைக் காணலாம்.

அபூ நயீம் எழுதிய 'கிதாபுல் ஹில்யா' என்ற நூலில் கீழ்வரும் சம்பவம் கூறப்படுகிறது: தாவூத் நபியவர்கள் தம் பிரார்த்தனையின் போது 'இறைவா! என் பிதாக்களான நபி இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் (அலை) இவர்களின் உரிமையால் (ஹக்கால்) கேட்கிறேன்' என்றார்களாம். உடனே அல்லாஹ் அவர்களுக்கு வஹீ அறிவித்து 'தாவூதே! உம் பிதாக்களுக்கு என்மீது என்ன உரிமை இருக்கிறது?' என்று வினவினானாம். இது (இஸ்ராயீலிய்யாத்) யூதர்களுடன் சேர்க்கப்படும் நம்பமுடியாத சம்பவமாயினும் முன்னர் கூறியதை வலுப்படுத்துகிறது என்பதற்காகக் குறிப்பிடுகிறேனே தவிர இதன் மீது (ஆதாரத்துக்காக) ஊன்றிக் கொள்வதற்காக அல்ல. வாழ்ந்திருக்கும் மனிதனிடம் துஆ வேண்டி நிற்க அனுமதியுண்டு. மனிதனால் நிறைவேற்ற முடியுமானதைக் கேட்கலாம். காலம் சென்றவரிடமும், கண் மறைவில் இருப்பவரிடமும் கேட்கப்பட மாட்டாது.

சுருங்கக் கூறின் 'நபியைக் கொண்டு வஸீலா தேடல்' என்பதில் பற்பல கூட்டுக் கருத்துகளுக்கும், பிசகுதல்களும் இருப்பதைக் கண்டோம். ஸஹாபாக்களின் பிரயோகத்தில் நபியின் துஆ, ஷபாஅத் இவற்றைப் பெற்று வஸீலா தேடுவதுதான் கருதப்பட்டது. நபியின் துஆவும், ஷபாஅத்தும் மாபெரும் வஸீலா என்றுதான் கருத வேண்டும். அல்லாஹ்விடம் கேட்கும் போது அவன் திருநாமங்களையும், இலட்சணங்களையும் எடுத்துக் கூறி அவற்றின் பொருட்டால் பிரார்த்திக்க வேண்டும். இதல்லாது அவன் சிருஷ்டிகளின் எதைக் கொண்டும் சத்தியம் செய்து கேட்கக் கூடாது.

உதாரணமாக, 'இறைவா! நீ புகழுக்குரியவன். இப்புகழின் பொருட்டால் கேட்கிறேன். நீ மிகப்பெரிய பேருபகாரி. உன்னையன்றி இறைவன் வேறில்லை. வானங்களையும், பூமியையும் நூதனமாக சிருஷ்டித்தாய். கண்ணியத்துக்கும், கம்பீரத்துக்கும் உரியவன் நீயே. நீ என்றும் இருப்பவன். நித்திய ஜீவனுடன் இருப்பவனே! ஏகனே! தனித்தவனே! நீ எவரிடமும் தேவை இல்லாதவனாக இருக்கிறாய். இத்தன்மை எல்லாவற்றையும் வைத்து கேட்கிறேன். இறைவா! நீ யாரையும் பெறவில்லை. பெற்றெடுக்கப்பட்டவனும் இல்லை. உனக்கு நிகர் யாருமில்லை'. இத்தகைய துஆக்களைக் கொண்டு பிரார்த்திக்க வேண்டும்.

மேலும் 'இறைவா! உன் அர்ஷ் இஸ்ஸத்துகளால் (மதிப்புகளால்) சூழப்பட்டிருக்கிறது. அத்தகைய அர்ஷை சூழ்ந்திருக்கும் இஸ்ஸத்துகளின் பொருட்டால் உன்னிடம் இறைஞ்சுகிறேன். அளவற்ற உன் அருளால் மகத்தான திருநாமத்தால், மேலான அனுக்கிரகங்களால் கேட்கிறேன். உன் நிரப்பமான கலிமாத் என்னும் உரைகளின் பொருட்டாலும் கேட்கிறேன்' என்று கூறிப் பிரார்த்திப்பதிலும் குற்றமில்லை.

இருப்பினும் இந்த கடைசி துஆவைக் கொண்டு பிரார்த்திப்பதில் அறிஞர்கள் இரு கருத்துகளைக் கூறுகின்றனர். இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் இந்த துஆவைத் தடுத்திருப்பதாக இமாம் அபூ யூஸுப் கூறுகிறார்கள். 'அர்ஷை சூழ்ந்திருக்கும் இஸ்ஸத்துகளின் பொருட்டால் இறைஞ்சுகிறேன். உன் சிருஷ்டிகளின் பொருட்டால் கேட்கிறேன்' என்றெல்லாம் கூறுவதை வெறுக்கிறேன் என்றார்கள். 'இறைவா! உன்னைக் கொண்டு பிரார்த்திக்கிறேன்' என இறைவனை வேண்டி துஆச் செய்வதை விட வேறு அமைப்புகள் வேண்டியதில்லை என்கிறார்கள்.

'ஆனால் மேற்கூறப்பட்ட அர்ஷை சூழ்ந்திருக்கும் மதிப்புகள் என்பதின் தாத்பரியமே அல்லாஹ்வைக் கொண்டு கேட்பதுதான். எனவே இத்தகைய துஆக்களில் குற்றம் ஒன்றும் ஏற்படாது' என்று அபூ யூஸுப் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 'ஆனால் நபிமார்கள், ரஸூல்மார்கள், கஃபத்துல்லாஹ், மஷ்ஹருல் ஹராம் என்பவற்றின் பொருட்டால் கேட்பதை நான் வெறுக்கிறேன்' என்று கூறினார்கள். இரட்சகன் மீது சிருஷ்டிகளுக்கு எந்த உரிமையும், பாத்தியதையும் கிடையாது. எனவே சிருஷ்டிகளைப் பொருட்டாகக் கொண்டு பிரார்த்தித்தாலும் ஜாயிஸாகாது. இது இமாம் அபூஹனீபாவும், அபூயூஸுப்பும் மற்றவர்களும் ஏகோபித்துக் கூறிய கருத்தாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }