Monday, May 29, 2006

இஸ்லாத்தின் மூன்று அடிப்படை விஷயங்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்லாஹ் உன்மீது அருள்புரிவானாக!

நான்கு விஷயங்களை அறிவது நம்மீது கடமையாகும் என்பதை நீ அறிந்து கொள்.

ஒன்றாவது: அறிவு, அதாவது அல்லாஹ்வையும், அவன் நபியையும், இஸ்லாமிய மார்க்கத்தையும் ஆதாரபூர்வமாக அறியத்தேவையான அறிவு.

இரண்டாவது: அந்த அறிவின்படி அமல் செய்வது.

மூன்றாவது: அதன்பால் மக்களை அழைப்பது.

நான்காவது: இவ்வாறு அழைப்புக் கொடுக்கும் போது ஏற்படுகின்ற இன்னல்கள் மீது பொறுமை செய்வது.

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

"காலத்தின் மீது ஆணையாக மனிதன் (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக நஷ்டத்தி(ன் வழியி)லிருக்கின்றான். ஆயினும், எவர்கள் விசுவாசம் கொண்டு நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும், நன்மைகளை செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொள்ளுமாறு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, இவர்களைத் தவிர (மற்றவர்கள் நஷ்டவாளிகளாவார்கள்) (103:1,2,3)

இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்:-

அல்லாஹ் 'அஸ்ர்' என்ற இந்த அத்தியாயத்தை மட்டும் இறக்கியிருந்தாலும், இந்த ஒரு அத்தியாயம் மட்டுமே தன் படைப்புகள் மீது (அவர்கள் செய்த தவறுகளுக்காக) ஆதாரம் எடுத்துக் கொள்வதற்கு போதுமானதாகும். (அந்த அளவிற்கு மிக முக்கியமான கருத்துக்களை இவ்வத்தியாயம் உள்ளடக்கியுள்ளது)

(அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கு அறிவு மிக அவசியம் என்பதைக் குறிக்கும் வண்ணம்) இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், 'சொல், செயலிற்கு முன் அதுபற்றிய அறிவு அவசியம்' என்ற ஒரு பாடத்தை ஒதுக்கி அப்பாடத்தில் அறிவின் முக்கியத்துவத்தைக் குறிக்கின்ற ஹதீஸ்களை கூறியுள்ளார்கள்.

அறிவு எந்த அளவிற்கு அவசியம் என்பதை கீழ்காணும் இறைவசனம் தெளிவுபடுத்துகின்றது.

"(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்ல என்பதை நீர் (உறுதியாக) அறிந்து கொண்டு உமக்காக பாபமன்னிப்பு கோருவீராக!" (47:19)

சொல், செயலுக்கு முன் அறிவைக் கொண்டு அல்லாஹ் ஆரம்பித்துள்ளான். (சொல், செயலுக்கு முன் அதைப்பற்றிய அறிவு மிக அவசியமாகும்)

அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக! கீழ்காணும் மூன்று விஷயங்களை அறிந்து அதன்படி அமல் செய்வது முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையானதாகும் என்று நீ அறிந்து கொள்.

1. நிச்சயமாக அல்லாஹ் நம்மைப் படைத்து நமக்கு உணவும் அளித்தான். அவன் நம்மை வீணாக விட்டுவிடவில்லை. மாறாக, நமக்கு அவனுடைய தூதரையும் அனுப்பி வைத்தான். யார் அவர்களுக்கு வழிபடுகின்றானோ அவன் சுவர்க்கம் செல்வான். யார் அவர்களுக்கு மாறு செய்வானோ அவன் நரகம் புகுவான்.

அதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

"(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் (நம்முடைய) ஒரு தூதரை அனுப்பி வைத்தோம்; (மறுமையில்) அவர் உங்களுக்கு சாட்சியாக வருவார். இவ்வாறே பிர்அவ்னிடமும் முன்னர் ஒரு தூதரை நாம் அனுப்பி வைத்தோம். எனினும் பிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான். ஆகவே, நாம் அவனை பலமாகப் பிடித்துக் கொண்டோம். (73:16)

2. இறைவனால் அனுப்பப்பட்ட நபியாக இருந்தாலும் சரி, அல்லது அவனோடு நெருங்கிய மலக்காக இருந்தாலும் சரி, இறைவனுக்கு செலுத்த வேண்டிய வணக்க வழிபாடுகளில் , அவனோடு யாரையும் இணைவைப்பதை அல்லாஹ் நிச்சயமாக விரும்பமாட்டான்.

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

"நிச்சயமாக மஸ்ஜிதுகளெல்லாம் அல்லாஹ்வி(ன் வணக்கத்தி)ற்காகவே உள்ளன. ஆகவே (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (வணங்க, பெயர்கூறி) அழைக்காதீர்கள்" (72:18)

3. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்கு தகுதியானவன் என நம்பி, அவனது தூதருக்கு வழிபடுபவன், தனது நெருங்கிய குடும்பத்தினர்களாக இருப்பினும் சரி, அல்லாஹ், அவனது தூதரின் விரோதிகள் யாரையும் தனது காரிய பரிபாலராக ஆக்கிக் கொள்வது கூடாது.

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

"(நபியே!) எந்த ஜனங்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) விசுவாசம் கொண்டுள்ளார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றவர்களை நேசிக்க மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய மூதாதையர்களாக இருந்த போதிலும், அல்லது தங்களுடைய சகோதரர்களாக இருந்த போதிலும், அல்லது தங்களுடைய பந்துக்களாக இருந்த போதிலும், அவர்களுடன் இவர்கள் உறவாடுவதை நீர் காண மாட்டீர். இத்தகையோர் தான் இவர்களுடைய இருதயங்களில் அல்லாஹ் விசுவாசத்தைப் பதியவைத்துத் தன்னுடைய சக்தியைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கிறான். சதா நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளில் இவர்களைப் புகுத்தி விடுவான். அவற்றில் என்றென்றும் இவர்கள் தங்கி விடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களும் அவனைப்பற்றி திருப்தியடைந்தார்கள். இவர்கள் தான் அல்லாஹ்வின் கூட்டத்தினர்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்கள் தாம் சித்தியடைந்தோர்கள் என்பதை (நபியே!) நீர் அறிந்து கொள்ளும்" (58:22)

அல்லாஹ்வை வணங்க உனக்கு அவன் நேர்வழி காட்டுவானாக!

(மில்லத்தே ஹனீபிய்யா) (1) என்ற இப்றாஹீம் (அலை) அவர்களுடைய தூய்மையான மார்க்கம் என்பது, அல்லாஹ் ஒருவனை மட்டும் தூய்மையாக, கலங்கமற வணங்குவதாகும். (வணக்க வழிபாட்டில் எதையும் அல்லாஹ் அல்லாதவருக்கு செய்தல் கூடாது) இதையே அல்லாஹ் உலக மனிதர்கள் அனைவர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான். இதற்காகவே மனிதர்களையும் படைத்தான் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

இதுபற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

"(எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் சிருஷ்டிக்கவில்லை" (51:56)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள 'இறைவனை வணங்குவதற்காக' என்பதின் பொருள் என்னவெனில், அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி, வணக்கத்தால் அவனை ஒருமைப் படுத்துவதாகும்.

'தவ்ஹீத்' என்னும் ஏக தெய்வக் கொள்கையே அல்லாஹ்வின் கட்டளைகளில் மிகப் பெரியதும் முக்கியமானதுமாகும். அதாவது, அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்கு தகுதியானவன், என்று வணக்கத்தால் அவனை ஒருமைப்படுத்துவதாகும். அல்லாஹ் விலக்கியவற்றில் மிகப் பெரியதென்னவெனில், 'ஷிர்க்' என்னும் இணை வைத்தலாகும். அதாவது அல்லாஹ்வுடன் அவன் அல்லாதவர்களை அழைத்து உதவி தேடுவதாகும்.

இதற்கு கீழ்காணும் இறைவசனம் ஆதாரமாகும்.

"அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள்" (4:36)

(1) உலகிலுள்ள எல்லா மதங்களையும் விட்டு விட்டு ஏக தெய்வக் கொள்கை என்னும் 'தவ்ஹீதை' மெய்ப்பிக்கின்ற இஸ்லாமிய மார்க்கத்திற்கே 'மில்லத் ஹனீபிய்யா' எனக் கூறப்படும்

இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் இஸ்லாத்தின் மூன்று அடிப்படை விஷயங்கள் என்ற நூலிலிருந்து. (தமிழாக்கம்: மௌலவி எஸ். கமாலுத்தீன்.)

இன்னும் வரும்

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }