Friday, May 11, 2007

ஈமானின் நிலைகள் - அல்லாஹ்வை நம்புதல். பகுதி (1)

நெல்லை இப்னு கலாம் ரசூல்


நபி (ஸல்) அவர்களிடம் குறைஷியர்கள் அல்லாஹ்வின் பரம்பரையைப் பற்றிக் கேட்டதற்கு பதிலாக அத்தியாயம் (112) சூரத்துல் இக்லாஸை அல்லாஹ் இறக்கி வைத்தான்.

(நபியே?!) நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:1-4)

இறைவன் அகில உலகுக்கும் ஒருவன் தான், இறைவன் பெற்று, பெறப்பட்டு பலவீனமுடையவனாக, சந்ததி உடையவனாக இருக்க முடியாது. இறைவனுக்குத் தேவை என்பதே இல்லாமல் தன்னிறைவு உடையோனாகவும், இறைவனுக்கு நிகராக யாருமே, எதுவுமே இருக்க முடியாது போன்ற கருத்துக்களை உள்ளடக்கி ஏகத்துவத்தை முழுமையாக பறைசாற்றும் விதமாக இஹ்லாஸ் என்ற அத்தியாயம் அமைந்துள்ளது.

அல்லாஹ் எங்கு இருக்கிறான்?


நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான் (10:3)

அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான். (20:5)

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் (7:54)

மேலும் நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தில் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா சென்று அங்கிருந்து ஜிப்ரயீல் (அலை) அவர்களுடன் 'புராக்' என்னும் வாகனத்தின் மூலம் ஒவ்வொன்றாக ஏழு வானத்தையும் கடந்து சென்று ';சித்ரத்துல் முன்தஹா' என்ற இலந்தை மரத்தை (அது தான் எல்லை) அடைந்து அல்லாஹ்விடம் உரையாடி ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாகக் குறைத்து அல்லாஹ் இந்த சமுதாயத்தின் மீது கடமையாக்கியதையும், மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் (2:285,286) பெற்றுத் திரும்பினார்கள். (ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் கருத்து - நூல்: முஸ்லிம்).

பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானத்தில் உள்ள அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் காட்டுவான். இப்னு உமர் (ரலி) திர்மிதி, அஹ்மத்

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு அடிமைப் பெண்ணைக் கொண்டு வரப்பட்டது. அவளிடம் அல்லாஹ் எங்கே?(இருக்கிறான்) என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவள் வானத்தில் என்றாள், நான் யார்? எனக் கேட்டபோது நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என விடையளித்தாள். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களைப் பார்த்து அவளை விடுதலைச் செய்து விடுங்கள் ஏனெனில் அவள் ஈமான் கொண்டவளாக இருக்கிறாள் என்றனர். (முஸ்லிம்)

திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் சிந்தித்தோமானால் அல்லாஹ் ஏழு வானத்திற்கும் மேல் அர்ஷில் உள்ளான் என்பதை அறிந்து கொள்ள முடியும். திருமறை மற்றும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளபடி அப்படியே அர்ஷில் அமைந்தான் என்பதை நம்ப வேண்டும். நாம் ஏதும் கற்பனை செய்தல் கூடாது. அப்படி கற்பனை செய்தால் அது பித்அத் ஆகும். இமாம் மாலிக் (ரஹ்) தாரமி.

பெரும்பான்மையான மக்கள் இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறான், காணும் இடத்திலெல்லாம் உள்ளான், தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்றெல்லாம் கூறுவர். இக்கருத்துகள் அனைத்தும் இஸ்லாமியக் கொள்கையில் கோளாறு செய்வதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட கொள்கையாகும். இதை ஒரு உதாரணம் மூலம் மிகச் சுலபமாக விளங்கலாம்.

ஒரு சாப்பாட்டுப் பொருள் இருக்கிறது, தூணிலும், துரும்பிலும் இருந்தால் அந்த சாப்பாட்டிலும் இருக்க வேண்டும். அதை நாம் சாப்பிட்டு விடுகிறோம் மேலும் அதைக் கழித்தும் விடுகிறோம் தூணிலும், துரும்பிலும் இறைவன் இருந்தால் அப் பொருளிலும் இறைவன் இருக்க வேண்டும் இது எவ்வளவு விபரீதமான பொருளைக் கொடுக்கிறது என்பதைச் சிந்தித்து அக்கருத்திலிருந்து விடுபடுவதோடு திருமறையும், நபி மொழியும் போதித்தபடி நாம் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். தவறான கருத்திலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!

அல்லாஹ் அர்ஷில் இருந்தாலும் அவனுடைய கண்காணிப்பால், ஞானத்தால் அகில உலகையும் சூழ்ந்துள்ளான் என்பதையும் திருமறை மற்றும் நபிமொழிகள் உணர்த்துகின்றன.

அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன.அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. (6:59)

கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (40:19)

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (50:16)

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை. அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன். (58:7)

அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.(57:4)

ஒரு முறை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணத்தில் இருந்தோம் நாங்கள் உயரமான இடத்தில் ஏறினால் லாயிலாஹ இல்லல்லாஹ் என்னும் திருக்கலிமாவைக் கூறுவோம். பிறகு அல்லாஹூ அக்பர் எனத் தக்பீர் கூறுவோம். அப்பொழுது எங்கள் சப்தங்கள் உயர்ந்தன. உடனே நபி (ஸல்) அவர்கள் மென்மையை கடைபிடியுங்கள் நீங்கள் செவிடனையோ, மறைவானவனையோ அழைக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் கேட்பவனாகவும், உங்களுக்கு நெருக்கமானவனாகவும், உங்களுடனேயே இருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்: அபூமூஸா அல் அஸ்அரீ (ரலி).


அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா?


''அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது'' என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன... (5:64)

மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். (55:27)

உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது... (89:22)

கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள். (68:42)

மேற்காணும் 68:42 வசனத்திற்கு விளக்கமாக நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் அமைந்துள்ளது

...மறுமையில் அல்லாஹ் முஃமின்களுக்குக் காட்சி தர நாடி தன் கணுக்காலின் திரையை விலக்குவான். அப்போது இம்மையில் அவனுக்கு மட்டுமே சிரம் பணிந்தவர் அனைவரும் சிரம் பணிவர், மற்றவர்கள் அனைவரும் சிரம் பணிய முடியாத அளவுக்கு அவர்கள் முதுகெலும்பு வளையாது நின்றுவிடும். அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி): புகாரி.

திருமறை மற்றும் நபிமொழி மூலம் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை அறிகிறோம். எனினும் திருமறை, நபிமொழியில் உள்ளதை அப்படியே நம்ப வேண்டும். மேல்மிச்சமான கற்பனைக்கோ, நம் சொந்த யூகத்திற்கோ சிறிதும் இடமளிக்கக் கூடாது. அல்லாஹ் தனது திருமறையில் (42:11, 112:4 ஆகிய வசனங்களில்) அவனைப் போன்று எப்பொருளும் இல்லை, அவனுக்கு நிகராக யாருமில்லை என்று கூறுகிறான் ஆகவே நம் அறிவைப் பயன் படுத்தாமல் அப்படியே ஏற்க வேண்டும்.

அல்லாஹ்வைக் காண முடியுமா?


திருமறை மற்றும் நபி மொழிகளின் ஒளியில் சிந்தித்தோமானால் இவ்வுலக (இம்மை) வாழ்வில் இது நாள் வரை (நபிமார்கள் உட்பட) யாருமே பார்த்ததில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

பார்வைகள் அவனை அடைய முடியா, ஆனால் அவனோ எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (6:103)

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா ''என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், ''மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!'' என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், ''(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்'' என்று கூறினார். (7:143)

அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன். (42:51)

மூன்று விசயங்களைக் கூறுபவர் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டிக் கூறிவிட்டார் என்று கூறிவிட்டு அதில் ஒன்றாக நபி (ஸல்) அவர்கள் மிஃராஜில் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று கூறுவது என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் சுருக்கம் - நூல்: முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் கூட அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்பதை இந்த ஹதீஸின் மூலம் மிகத் தெளிவாக அறிகிறோம்.

அல்லாஹ்வை மறுமையில் காண முடியும்


அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும். (75:22,23)

அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது. (50:35)

50:35 வசனத்திற்கு விளக்கமளித்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதிகம் என்பது அல்லாஹ்வை காண்பதையே குறிக்கும் என்று கூறினார்கள்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம் அப்பொழுது நபியவர்கள் முழு நிலவைப் பார்த்தார்கள். பிறகு கூறினார்கள் நிச்சயமாக நீங்கள் இச்சந்திரனைப் பார்ப்பதுபோல உங்கள் இரட்சகனை மறுமையில் பார்ப்பீர்கள். அவனைப் பார்ப்பதில் எந்தத்தடையும் இருக்காது. நீங்கள் சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள (ஃபஜ்ர்) தொழுகையையும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள (அஸர்) தொழுகையையும் பேணி வாருங்கள். ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.


அல்லாஹ்வை நம்ப வேண்டிய முறைகள்


அல்லாஹ்வை மூன்று வகையில் ஏகத்துவப் படுத்த வேண்டும்

1.படைப்பில் ஏகத்துவம் (ருபூபிய்யா)


மூலமின்றி படைப்பவன்


(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் 'குன்' - ஆகுக - என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (2:117)

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன்... (6:101)

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகளாம். (2:21)

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்) படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.(7:54)

மேலும் ஆதாரங்களுக்கு அல்குர்ஆன் 3:59, 6:73, 16:40, 37:96, 28:68, 40:68, 36:82 பார்வையிடுக.

மேற்காணும் வசனங்களில் அல்லாஹ் தன் படைப்பாற்றலை, படைக்கும் விதத்தைச் சொல்லிக் காட்டுகிறான். இதன் மூலம் நாம் அறிவது படைப்புக்குச் சொந்தக்காரன், படைக்கும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ் மட்டுமே என்பதுதான். மாறாக மனிதர்களும் இவ்வுலகில் புதிது புதிதாக படைக்கிறார்களே (கண்டுபிடித்தல்) அதுவும் படைப்புதானே! என்று வினவத் தோன்றும். அல்லாஹ்வோ தான் நாடியதை, நாடிய நேரத்தில், நாடிய விதத்தில் படைக்கிறான். அல்லாஹ்வுக்கு எதையும் படைக்க மூலப் பொருள் என்று எதுவும் தேவைப்படுவதில்லை. ஆனால் மனிதர்கள் ஒரு பொருளை படைக்க மூலப் பொருள் தேவை என்பதோடு படைக்க நீண்ட காலம் தேவை. ஒரே முறையில் தான் நாடியதை, நாடிய விதத்தில் படைக்க முடியாது. வல்ல அல்லாஹ்வுக்கும், மனிதனுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது என்பதை உணரவேண்டும். ஆகவே படைத்தல் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

2. வணக்கவழிபாடுகளில் ஏகத்துவம் (உளூஹிய்யா)


சகல அதிகாரங்களையும் தன்னுள் அடக்கியவன், வானங்கள் பூமியைப் படைத்தவன், ஒவ்வொரு பொருளின் ஆட்சியையும் தன் வசம் வைத்திருப்பவன் அல்லாஹ் தான் என்பதை மக்கத்து காஃபிர்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகிறான்.

நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்? என்று (நபியே!) நீர் கேட்பீராக! (23:84)

''அல்லாஹ்வுக்கே'' என்று அவர்கள் கூறுவார்கள்; ''(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?'' என்று கூறுவீராக! (23:85)

''ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?'' என்றும் கேட்பீராக. (23:86)

''அல்லாஹ்வுக்கே'' என்று அவர்கள் சொல்வார்கள்; ''(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?'' என்று கூறுவீராக! (23:87)

''எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)'' என்று கேட்பீராக. (23:88)

அதற்கவர்கள் ''(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)'' என்று கூறுவார்கள். (''உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?'' என்று கேட்பீராக. (23:89)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; ''அல்லாஹ் தான்!'' என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்... (39:38)

அல்லாஹ்வை அவன் வல்லமையை மக்கா காஃபிர்களும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை மேற்காணும் வசனங்கள் சந்தேகமின்றி நிரூபிக்கின்றன. அப்படியானால் அவர்களுக்கும், நம(முஸ்லிம்களு)க்கும் என்ன வித்தியாசம்.

வணக்க வழிபாட்டில் தான் அவர்களுக்கும், ந(முஸ்லிம்களு)க்கும் வித்தியாசம் அவர்கள் தங்கள் வணக்கங்களை அல்லாஹ் அல்லாதவர்களுக்குச் செலுத்தியதோடு அதற்குக் காரணமும் சொன்னார்கள்.
அதைத் தன் திருமறையில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ''அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை'' (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (39:3)

வணக்கங்கள் யாவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது, அல்லாஹ்வுக்காக செய்யப்படும் எதுவும் பிறருக்காக, பிறவற்றிற்க்காகச் செய்யக் கூடாது என்பதைக் கீழ் காணும் வசனங்கள் பறைசாற்றுகின்றன.

நீர் கூறும்; ''மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (6:162)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

பிரார்த்தனை அது தான் வணக்கம். நுஃமான் இப்னு பஷீர் (ரலி): திர்மிதி.

பிரார்த்தனையும் வணக்கம் தான், பிரார்த்தித்து நம் தேவைகளைக் கேட்பது, நம் குறைகளை போக்கவும், நோயை நீக்கவும் கோருவது அனைத்தையும் அல்லாஹ்விடம் மட்டும்தான் கேட்க வேண்டும்.

என்னை அழைப்பவருக்கு நான் பதிலளிக்கிறேன் நேர் வழி பெற என்னையே அழைக்க வேண்டும் என்றும் அல்லாஹ் தன் திருமறையில் மிகத் தெளிவாகக் கூறுகிறான்.

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்'' என்று கூறுவீராக. (2:186)

அல்லாஹ்வைத் தவிர பிறரை அழைப்பவர்களை வழிகேடர்கள் என்றும், அப்படி அழைக்கப்படுபவர்களும் நம்மைப் போன்றவர்கள் தான் அவர்களை மறுமை நாள் வரை அழைத்தாலும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (7:194)

அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்'' என்று. (7:195)

''நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான். 7:196
அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள். (
7:197)

கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழை;ப்பவர்களை விட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. (46:5)

அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர். (46:6) மேலும் காண்க (22:73,35:13,14,39:38) மேற்காணும் வசனங்கள் அல்லாஹ்
அல்லாதாருக்கு துளியும் அதிகாரம் இல்லை. அவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் சரியே! வணக்கங்களுக்கு முழுச்சொந்தக்காரன் அல்லாஹ் மட்டும் தான் என்பதை தெளிவு படுத்துகின்றன.

இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் வளரும்.

No comments:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }