Thursday, May 24, 2007

ஈமானின் நிலைகள்-அல்லாஹ்வை நம்புதல். பகுதி (2)

பெயர் மற்றும் தன்மைகளில் ஏகத்துவம்
(அஸ்மாவு வஸிஃபாத்)

பெயரில் ஏகத்துவம்:


அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் :

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள். (7:180)

அல்லாஹ்வுக்கு தொண்ணூற்று ஒன்பது -நூற்றுக்கு ஒன்று குறைவான- பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கைக் கொண்டு) மனனமிட்ட யாரும் சுவர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. மேலும்
அல்லாஹ் ஒற்றையானவன் , ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.
அபூஹூரைரா (ரலி) புகாரி.

மேற்காணும் திருமறை வசனமும், நபிமொழியும் அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன என்று கூறுகின்றன. அவற்றைக் கொண்டே அவனை அழையுங்கள் என்றும் கூறுகின்றன. அல்லாஹ்வுடைய
பெயரைக் கொண்டு மனிதர்களை அழைக்கக் கூடாது.

உதாரணமாக அல்லாஹ்வுடைய பெயர்களில் ஒன்றான அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்ற பெயரைச் சூட்டிக்கொள்ள நாடினால், அர்ரஹ்மானுடன், அப்துன் என்பதையும் இணைத்து அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்றே பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் மலிக்குல் அம்லாக் (அரசர்களின் அரசன்) என்று பெயர் சூட்டிக் கொண்டவனின் பெயர் தான் மிக மிகக் கெட்ட பெயராகும். அபூஹூரைரா (ரலி) புகாரி.

அகிலங்களின் இரட்சகனும், அதிபதியுமான வல்ல அல்லாஹ்வின் பெயருக்கு நிகராக யாரும் பெயர் சூட்டிக் கொள்ளவோ, தன்னைத் தானே அழைத்துக் கொள்ளவோ, பிறரை அழைக்கவோ கூடாது
என்பதோடு அல்லாஹ் அல்லாத யாருடைய அல்லது எதனுடைய பெயருடனும் அப்துன் (அடிமை) என்பதை இணைத்து அழைக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.

தன்மைகளில் ஏகத்துவம்:

அளவற்ற அருளாளன்:

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (1:2)

அன்பு, கருணை எனும் பண்புகள் மனிதனிடத்திலும் இருக்கின்றன என்றாலும் அல்லாஹ்வின் அன்பு, கருணைப் போன்று விசாலமானதாக, அவன் தன்னுடைய, தன் மார்க்கத்தின் எதிரிகளுக்குக்கூட கருணை புரிந்து இவ்வுலகில் உணவளித்து வாழச் செய்வது போல் மனிதனின் கருணை இல்லை.

நித்திய ஜீவன் (என்றென்றும் நிலைத்திருப்பவன்):

அல்லாஹ் - அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;... (2:255)

இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான். (20:111)

(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக்கூடியவரே - (55:26)

மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். (55:27)

என்றென்றும் நிலைத்திருப்பவன் அல்லாஹ் மட்டும் தான், அவனுடைய படைப்புகள் அனைத்தும் மரணித்தே ஆக வேண்டும். மனிதர்களில் நல்லடியாராக இருந்தாலும் சரி, நபிமார்களாகவே இருந்தாலும் சரி அவர்கள் உயிருடன் இருப்பதாக கருதினால் அல்லாஹ்வின் நித்திய ஜிவன் என்ற தன்மையில் இணைவைத்தவர்களாக ஆவோம்.

சூழ்ந்து அறிபவன்:

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான். (4:126)

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம்
அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (
50:16)

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன். (58:7)

அல்லாஹ் மனிதன் தன் மனதிற்குள் எண்ணுவதையும், நாம் மட்டுமே அறிவோம் என்று நினைத்து இரகசியமாக பேசிக் கொள்வதையும், எங்கிருந்தாலும் அனைத்தையும், உள்ளும், புறமும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.

செவியுறுபவன், பார்ப்பவன்:

எவரேனும் இவ்வுலகின் பலனை (மட்டும்) அடைய விரும்பினால், ''அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.'' (4:134)

அல்லாஹ்வும் பார்க்கிறான், செவியுறுகிறான், மனிதனும் செவியுறுகிறான், பார்க்கிறான் எனினும் இரண்டுக்குமிடையில் பெரும் வித்தியாசம் உள்ளது.

மனிதனுடைய பார்வை குறிப்பிட்ட தூரம், அதுவும் திரையின்றி இருந்தால் தான் பார்க்க முடியும். குறிப்பிட்ட காட்சியை, குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் பார்க்க முடியும், மனிதனுடைய செவிப்புலன் குறிப்பிட்ட தூரம், குறிப்பட்ட நபர் பேசினால், குறிப்பிட்ட சப்தத்தை, குறிப்பிட்ட நேரம் மட்டுமே செவியுற முடியும் அதுவும் மனிதன் உயிர் வாழும் வரையில் தான் என்ற அளவுகோலிலேயே உள்ளது.

அல்லாஹ்வோ உலகின் எந்த மூலையிலிருந்தாலும், எத்தனை திரைகளிடப்பட்டிருந்தாலும், எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், இருளிலும், வெளிச்சத்திலும் பார்க்கிறான், பார்க்க முடியும். அதைப் போலவே உலகின் எந்த மூலையிலிருந்து, எத்தனை
பேர், எவ்வளவு நேரம்; அழைத்தாலும் செவியுறுகிறான், என்றென்றும் செவியுறுவான்.

மறைவான ஞானம்:

அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய)
பதிவேட்டில் இல்லாமலில்லை.
(6:59)

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான்
நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
(31:34)

கடந்த காலங்களில் நடந்து முடிந்தவற்றையும், நிகழ் காலங்களில் நடந்து கொண்டிருப்பவற்றையும், எதிர் காலத்தில் நடக்கவிருப்பவற்றையும், வானங்கள், பூமியில்உள்ள அனைத்தையும், ஒவ்வொன்றின் விதியையும் அல்லாஹ் மட்டுமே அறிவான்.

அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான இத்தன்மைகளில் ஏதாவது ஒன்று யாருக்காவது இருப்பதாகக் கருதினால் (அவர்கள் உயிருடன் இருந்தாலும் சரி, மரணித்தவர்களாக இருந்தாலும் சரி )அல்லாஹ்வின் கூற்றுக்கு மாறு செய்கிறோம். அல்லாஹ்வின் தன்மையை வேறு ஒருவர் பெற்றிருப்பதாகக் கருதி அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்களாகிறோம்.

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.(112:1)

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.(112:2)

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (112:3)

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:4)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல
இடங்களிலும்) பல்கிப் பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.
(42:11)

இணைவைத்தல் பெரும் வழிகேடாகும். அதற்கு கூலி நரகம் தான் என்பதை நாம் அறிந்து அதிலிருந்து விலகுவோம்.

இணைவைத்தல் (ஷிர்க்)

ஏகத்துவத்திற்கு எதிர்மறையானது இணைவைத்தல் (ஷிர்க்) ஆகும். இது இருவகைப்படும்

1)பெரிய ஷிர்க் 2) சிறிய ஷிர்க்

1. பெரிய இணைவைத்தல் (ஷிர்க்) மன்னிக்கப்படாத குற்றம்

(4:48.) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.

(4:116.) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;. இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.

(5:72.) ''நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்'' என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; ''இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்'' என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு ''என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,'' என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (31:13)

பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! ஆம் அறிவியுங்கள் என்று கூறினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு
இணைவைத்தல்...என்று கூறினார்கள்.
அபூபக்ரா (ரலி) புகாரி,
முஸ்லிம்.


2. செய்த நல்லறங்கள் அனைத்தும் அழிந்துவிடும்

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (6:88) 3) சுவனம் ஹராம்எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும்.
(5:72)

4) அல்லாஹ் தடுத்ததை செய்த குற்றம்

...''வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள. (6:151)

நிச்சயமாக அல்லாஹ் ரோஷமடைகிறான். அவனின் ரோஷமாகிறது அவன் எதனை தடுத்துள்ளானோ அதை மனிதன் செய்யும் போது ஏற்படுகிறது.- புகாரி, முஸ்லிம்: அபுஹூரைரா (ரலி)

2. சிறிய இணைவைத்தல்( ஷிர்க் )

பிறர் பார்க்க வேண்டும், போற்ற வேண்டும் என்பதற்காக அமல் செய்வது (முகஸ்துதி) இதன் விளைவு

1) அமல்களுக்குநன்மை கிடையாது.

2) மறுமையில் தண்டனை கிடைக்கும் (நிரந்தரநரகம் கிடையாது).

கியாமத் நாளில் முதல்முதலாக தீர்ப்பு வழங்கப்படுபவர் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதான மனிதராவார். அவர் கொண்டுவரப்பட்டு அவருக்கு அருளப்பட்ட அருட்கொடைகளைப் பற்றி கேட்கப்படுவார். அதற்கவர் நான் உன் பாதையில் போர் செய்து ஷஹீதானேன். என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் நீ பொய் கூறுகிறாய். சிறந்த மாவீரன் என மக்களால் புகழப்பட நீ போர் புரிந்தாய் அதன் புகழை உலகிலேயே நீ பெற்றுவிட்டாய் என்று கூறி நரகிற்கு இழுத்துச் செல்ல உத்தரவிடுவான் பிறகு குர்ஆனை கற்றறிந்த மார்க்க அறிஞர் விஷயத்தில் தீர்ப்புக் கூறப்படும். அவர் அழைத்துவரப்பட்டு அல்லாஹ் அவருக்கு வழங்கிய அருட்கொடைகள் பற்றி விசாரிக்கப்படுவார். அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தேன். உனக்காக குர்ஆன் ஓதினேன் என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் நீ பொய் கூறி விட்டாய் மக்கள் உன்னைக் காரீ (குர்ஆன் ஓதுபவர்) எனப் புகழப்படுவதற்காக குர்ஆனை ஓதினாய் என்று கூறுவான். அவரை நரகிற்கு இழுத்துச் செல்ல உத்தரவிடுவான். பின்னர் தீர்ப்பளிக்கப்படுபவர் அல்லாஹ்வால் சிறந்த செல்வங்கள் வழங்கப்பட்ட மனிதராவார். அவர் கொண்டுவரப்பட்டு அவருக்கு அருளப்பட்ட அருட்கொடைகளைப் பற்றி விசாரிக்கப்படுவார். அவர் என் செல்வத்தை உன்பாதையில் செலவிட்டேன் என்று கூற அல்லாஹ் நீ பொய்யுரைத்து விட்டாய். உன்னை கொடையாளி என்று மக்கள் புகழ்வதற்காக நீ செலவு செய்தாய். அவ்வாறே உலகில் புகழ்ந்து விட்டனர். என்று கூறிவிட்டு அவரையும் நரகிற்கு இழுத்துச் செல்ல உத்தரவிடுவான். - முஸ்லிம்: அபூஹூரைரா (ரலி)

பகலில் பாவம் செய்தவர் தவ்பாச் செய்து மீளுவதற்காக இரவில் நிச்சயமாக அல்லாஹ் தன் கரத்தை விரிக்கிறான். (தவ்பாவை ஏற்றுக்கொள்கிறான்)இரவில் சூரியன் மறைந்ததிலிருந்து உதயமாகும் வரை பாவம் செய்தவர் தவ்பாச் செய்து மீளுவதற்காக பகலில் நிச்சயமாக அல்லாஹ் தன் கரத்தை விரிக்கிறான் (தவ்பாவை ஏற்றுக்கொள்கிறான்) - முஸ்லிம்: அபுமூஸா அல் அஸ்அரி (ரலி)

நாம் அறியாமல் இணைவைத்திருந்தால், வேறு பாவங்கள் செய்திருப்பின் வல்ல அல்லாஹ்விடமே தவ்பா செய்து மீட்சி பெறுவோம்.

ஈமானின் நிலைகள் தொடரும்

No comments:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }