Thursday, May 24, 2007

ஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-1)

(இறை)தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள். 2:285 (காண்க:2:177,136,3:84)

1. அல்லாஹ்வை நம்புவது 2. வானவர்களை நம்புவது 3. வேதங்களை நம்புவது 4. நபிமார்களை நம்புவது 5. மறுமையை நம்புவது 6. விதியை நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியே நடக்கிறது என்று நம்புவது ...(ஹதீஸின் கருத்து) உமர் (ரலி) புகாரி.

அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களையும், அவர்களின் மனைவி ஹவ்வா (அலை) அவர்களையும் பூமிக்கு அனுப்பும்போதே என்னிடமிருந்து வழிகாட்டுதல் வரும் அதை முறையாகப் பின்பற்றுபவருக்கு பயமோ, கவலையோ தேவையில்லை என்று கூறியனுப்பியதாக வல்ல இறைவன் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.
(பின்பு, நாம் சொன்னோம்; ''நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' 2:38

அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர். 2:39

தூதர்கள் வருகையின் அவசியம்

ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் முதல் ஜோடி என்பதோடு அவர்களை சுவர்க்கத்திலிருந்து பூமிக்கு முதன்முதலில் இறக்கியதால் அவர்களிடமே தனது வழிகாட்டுதலைக் கூறியது போல் அவர்களுக்கு ஏற்படும் சந்ததியிலிருந்து உலக முடிவு நாள் வரை வரவுள்ள அனைத்து மனிதர்களிடமும் அல்லாஹ்வே பேசுவதோ, தன் வழிகாட்டுதலை வழங்குவதோ சாத்தியமற்றது என்பதோடு அவ்வழி காட்டுதலை நடைமுறைப் படுத்திக்காட்ட ஒரு மனிதர் தேவை. அப்படி ஒரு முன் மாதிரி இருந்தால்தான் மனிதன் எந்தவித சாக்குப்போக்கும் கூறித் தப்பிக்க முடியாது.

தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்). மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான். 4:165

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். 16:44

தூதர்கள் வருகையின் நோக்கம்

மனிதர்கள் தங்களைப் படைத்த அகிலங்களின் இரட்சகனாம் அல்லாஹ்வை மறந்து, மறுத்து அவனை விடுத்து தங்களைப் போன்ற மனிதர்களையும், மரம், செடி, கொடிகள், சூரியன், சந்திரன், வானம், பூமி, நீர், நெருப்பு போன்ற ஏனைய இறைவனின் படைப்புகளை வணங்குவதைத் தடுத்து வணக்கத்திற்குரியவன் வல்ல இறைவன் ஒருவன் மட்டும் தான் என்பதை எடுத்துச் சொல்லி அவர்களை ஏக இறைக் கொள்கையில் நிலைத்திருக்கச் செய்யவும், மக்களிடம் காணப்பட்ட மூட நம்பிக்கைகள், ஒழுக்கக் கேடுகள், மனித உரிமை மீறல்கள் போன்ற மனித குலத்திற்குத் தீமை பயக்கும் அனைத்தையும் போக்கவும் நரகத்தைப் பற்றி அச்சமூட்டி, எச்சரிக்கைச் செய்யவும், சுவர்க்கத்தைப் பற்றி நன்மாராயம் கூறவும் அவர்கள் எப்படி வாழ்ந்தால் (இம்மை, மறுமை) ஈருலக வெற்றியையும் பெற முடியும் என்பதைப் போதிப்பதற்கு தான் நபிமார்கள் வந்தார்கள். எனினும் நபிமார்கள் வருகையின் அடிப்படை ஏகத்துவத்தை போதிப்பதற்கு தான். அனைத்து நபிமார்களுக்கும் இடப்பட்ட பொதுவான கட்டளை எகத்துவ வணக்கத்தை நிலை நாட்டுவது தான் என்பதை கீழ் காணும் திருமறை வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.

நீர் கூறும்; ''மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். 6:162

''அவனுக்கு யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லீம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்). 6:163

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். 16:36

(நபியே!) நீர் சொல்வீராக ''நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.'' 18:110

இன்னும், நாம் தூதர்களை நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர். 18:56

தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்). மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான். 4:165

முதல் தூதர் நூஹ் (அலை)

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்;. இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். 4:163

ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதராக இருந்ததாலும், சுவர்க்கத்திலிருந்து பூமிக்கு முதன் முதலில் இறக்கப்பட்டதாலும் ஆதம் (அலை) அவர்களுக்கும், அவர்களது துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களுக்கும், அவர்களின் சந்ததிகளுக்கும் அல்லாஹ் தனது வழிகாட்டுதலை அனுப்பியிருந்தாலும் ஏற்கனவே வாழ்ந்துக் கொண்டிருந்த மக்களுக்குத் தூதராக (முதன்முதலில்) நூஹ் (அலை) அவர்களையே அல்லாஹ் அனுப்பியுள்ளான் என்பதையே மேற்காணும் திருமறை வசனம் தெளிவுபடுத்துகிறது.

இறுதித் தூதுர் முஹம்மத் (ஸல்)

முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கு எல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். 33:40 (காண்க:7:158,6:19,34:28)

ஒரு சில தூதர்கள் பற்றி தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்;. இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்;. ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். 4:164

திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள். 40:78

தூதர்களை அல்லாஹ்வே தேர்வு செய்கிறான்

பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வி;ன அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும். 35:32

அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன். 22:75

மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (தூதராகத் தான் நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (எனவே இத்தகு) தேர்ந்தெடுத்தல் இவர்களு(க்கு உரிமையு)டைய தல்ல அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; இவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன். 28:68

அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் சிறந்த மனிதர்களைத் தனது தூதர்களாகத் தேர்ந்தெடுத்து அனுப்பிய போதெல்லாம் அச்சமுதாய மக்கள் நம்மைப் போன்ற ஒரு மனிதரா நமக்கு நேர் வழி காட்டுவது நம்மை விட சிறப்புப் பெற விரும்பி பொய் சொல்கிறார். அல்லாஹ் நாடியிருந்தால் ஒரு மலக்கை தூதராக அனுப்பி இருப்பான். மேலும் இவர் நம்மைப் போன்றே உண்கிறார், பருகுகிறார், கடை வீதிகளில் சுற்றவும் செய்கிறார் நம்மைவிட எந்த விதத்திலும் வித்தியாசப் படவில்லையே என்று கூறி மறுத்தார்கள்.

ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்; ''இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார் மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை'' என்று கூறினார்கள். 23:24

ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும், இன்னும், இறுதித் தீர்ப்பு நாளைச் சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சுகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) ''இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார். 23:33

எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே! 23:34

(அதற்கு அம்மக்கள்;) ''நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை'' என்று கூறினார்கள். 36:15

இதற்குக் காரணம், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டுதாமிருந்தனர், ஆனால் அப்போது அவர்களோ, (நம் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்?'' என்று கூறி (அவர்களைப் பின்பற்றுவதை) நிராகரித்துப் பின் வாங்கிக் கொண்டார்கள், அல்லாஹ்வோ அவர்களிலிருந்து எந்தத் தேவையுமற்றவன், அன்றியும் அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்; புகழ் மிக்கவன். 64:6

தூதர்கள் மனிதர்கள் தான் என்றாலும்...

தூதர்கள் அனைவரும் தாங்கள் மனிதர்கள் தான் என்று கூறியதோடு மற்ற மனிதர்களுக்கும் தங்களுக்கம் இடையில் உள்ள மிகப் பெரிய வேறுபாடு அவர்களுக்கு இறைவனின் புறத்திலிருந்து வஹி (இறைச் செய்தி) வருவதுதான் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் வாயாலேயே கூறச்செய்வதை திருமறையில் காண்கிறோம்.

(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே ''(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்'' (என்று நபியே! அவர்களிடம் கூறும்). 21:7

மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, 'ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்'' என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை. 17:94

(நபியே!) நீர் சொல்வீராக் ''நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.'' 18:10

''நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக! இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்'' என்று (நபியே!) நீர் கூறும். 41:6 (காண்க: 14:11,17:93,23:24,34)

தூதர்கள் மலக்குகளல்ல ஏன்?

பூமியில் மலக்குகள் வசித்திருந்தால் அவர்களுக்கு மலக்குகளை தூதர்களாக அனுப்பியிருப்பேன். உங்(மனிதர்)களுக்கு மலக்குகளைத் தூதர்களாக அனுப்பியிருந்தாலும் குழப்பத்தில் தான் ஆழ்ந்திருப்பீர்கள் என்றும் இறைவன் கூறுகிறான்.

(நபியே!) நீர் கூறும்; ''பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்''... 17:95

நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணுஞ் சக்தியில்லாதவர்கள்; ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி (அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம். 6:9

மேலும் மலக்குகளை தூதராக அனுப்பியிருந்தால் அ(ம்மலக்கான)வர் மனித இயல்புக்கு அப்பாற்பட்டவர் ஆசை, கோபம், பசி, காமம்... போன்ற எந்த வித உணர்வுகளுக்கும் ஆட்படாதவர் ஆகையால் அவர் தவறு செய்யாமல் வாழ முடியும். நாங்கள் (மனிதர்கள்) அனைத்து உணர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளோம் என சாக்கு போக்குக் கூறித் தப்பித்துக் கொள்ளாத வகையிலும், முழு மனித உணர்வுகளும் கொடுக்கப்பட்ட மனிதர்களையே தூதர்களாக அனுப்பி அவர்கள் வாழ்ந்து காட்டுவதுதான் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கும். மனிதன் எந்த காரணமும் சொல்ல முடியாத வகையில் மனிதர்களையே தூதர்களாக அனுப்பினான்

தூதர்கள் ஆண்களே!

(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா? 12:109

(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறெல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) ''நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்'' (என்று கூறுவீராக). 16:43

(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே ''(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்'' (என்று நபியே! அவர்களிடம் கூறும்). 21:7

அனைத்து சமுதாயத்திற்கும் நபிமார்கள்...

நபிமார்கள் வராத சமுதாயம் பூமியில் இல்லை என்று வல்ல நாயன் தனது திருமறையில் கூறுகிறான்.

ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். 10:47

இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் ''அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு. 13:7

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம். 15:10

நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை. 35:24

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்... 16:36

சமுதாயத்தின் மொழியிலேயே தூதர்கள்...

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 14:4

தொடர்ந்து பல தூதர்களை அனுப்பக் காரணம்...

அந்தந்த சமுதாய மக்கள் அல்லாஹ் அனுப்பிய தூதர்களைப் பொய்ப்படுத்தினர், கொலை செய்தனர், தூதர்கள் மரணிக்கக் கூடியவர்களாகவும் இருந்தார்கள், மேலும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதங்களை கூட்டிக் குறைத்து தங்கள் கைவரிசையைக் காட்டினர் என்பதால் தொடர்ந்து பல தூதர்களை அல்லாஹ் அனுப்பினான்.

நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்;. எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைக் கொலை செய்தும் வந்தார்கள். 5:70

''இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்'' (எனவும் கூறினர்). 23:25

''என் இறைவா! இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!'' என்று கூறினார். 23:26

பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்க முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக ஆக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும். 23:44

(நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக. 36:13

நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, ''நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்'' என்று அவர்கள் கூறினார்கள். 36:14

ஒரே கால கட்டத்தில் இரு சமுதாயத்திற்கு இரு தூதர்கள்...

இப்றாஹிம்(அலை) அவர்களும், லூத்(அலை) அவர்களும் தனித்தனி சமுதாயத்திற்கு தூதர்களாக இருந்ததை கீழ் காணும் திருமறை வசனங்கள் விளக்குகின்றன.

நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) 'ஸலாம்' (சொன்னார்கள்; இப்றாஹீமும் ''ஸலாம்'' (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை. 11:69

ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) ''பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள். 11:70

(இது கேட்டு) இப்றாஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார். 11:74

நிச்சயமாக இப்றாஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார். 11:75

நம் தூதர்கள் (வானவர்கள்) லுத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக ''இது நெருக்கடி மிக்க நாளாகும்'' என்று கூறினார். 11:77

(விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்; ''மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?'' 11:81

ஒரு சமூகத்துக்கு இரு தூதர்கள்...

மூஸா (அலை) அவர்களும், ஹாரூன்(அலை)அவர்களும் ஃபிர்அவ்னுக்கும், அங்கு வாழ்ந்த சமூகத்துக்கும் தூதர்களாக அனுப்பப்பட்டார்கள்.

'ஆகவே, நீரும் உம் சகோதரரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்வீர்களாக! மேலும் என்னைத் தியானிப்பதில் (நீங்களிருவரும்) சளைக்காதீர்கள். 20:42

''நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான். 20:43

''நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள், அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம், அல்லது அச்சம் கொள்ளலாம்.'' 20:44

''எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்'' என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள். 20:45

(அதற்கு அல்லாஹ்) ''நீங்களிருவரும் அஞ்ச வேண்டாம்; நிச்சயமாக நான் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் உங்களிருவருடனும் இருக்கிறேன்'' என்று கூறினான். 20:46

''ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: 'நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள், பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும் அவர்களை வேதனை படுத்தாதே, திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், இன்னும் எவர் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்'' (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்). 20:47

''எவன் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து, புறக்கணிக்கிறானோ அவன் மீது நிச்சயமாக வேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது'' (என்று நீங்கள் இருவரும் அவனுக்குக் கூறுங்கள்). 20:48

(இதற்கு ஃபிர்அவ்ன்) ''மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?'' என்று கேட்டான். 20:49

''ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்'' என்று கூறினார். 20:50

பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்-. 23:45

ஃபிர்அவ்னிடத்திலும், அவனுடைய பிரமுகர்களிடத்திலும் - அவர்கள் ஆணவங்கொண்டு பெருமையடிக்கும் சமூகத்தாராக இருந்தார்கள். 23:46

எனவே; ''நம்மைப் போன்ற இவ்விரு மனிதர்கள் மீதுமா நாம் ஈமான் கொள்வது? (அதிலும்) இவ்விருவரின் சமூகத்தாரும் நமக்கு அடிபணிந்து (தொண்டூழியம் செய்து) கொண்டிருக்கும் நிலையில்!'' எனக் கூறினர். 23:47

ஆகவே இவ்விருவரையும் அவர்கள் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; (அதன் விளைவாய்) அவர்கள் அழிந்தோராயினர். 23:48 (மேலும் காண்க :19:51-53,25:35,36,28:34,35)

ஒரே பரம்பரையி(குடும்பத்தி)ல் பல தூதர்கள்...

பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்-. 23:45

ஃபிர்அவ்னிடத்திலும், அவனுடைய பிரமுகர்களிடத்திலும் - அவர்கள் ஆணவங்கொண்டு பெருமையடிக்கும் சமூகத்தாராக இருந்தார்கள். 23:46

எனவே; ''நம்மைப் போன்ற இவ்விரு மனிதர்கள் மீதுமா நாம் ஈமான் கொள்வது? (அதிலும்) இவ்விருவரின் சமூகத்தாரும் நமக்கு அடிபணிந்து (தொண்டூழியம் செய்து) கொண்டிருக்கும் நிலையில்!'' எனக் கூறினர். 23:47

இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர். 38:30

பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்; ''மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும். 26:16

அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து ''நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்;. அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்'' எனக் கூறினர். 3:39

''ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை'' (என்று இறைவன் கூறினான்). 19:7

(அதன் பின்னர்) ''யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்'' (எனக் கூறினோம்) இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம். 19:12

இப்ராஹிம் (அலை) அவர்களின் மகன்கள் இஸ்மாயில் (அலை), இஸ்ஹாக் (அலை), நபிமார்கள் ஆவர். இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகன் யஃகூப் (அலை) அவர்களும், அவர்களின் மகன் யூசூப் (அலை) அவர்களும், தாவூத் (அலை) அவர்களும், அவர்களின் மகன் ஸூலைமான் (அலை) அவர்களும் ஜக்கரியா (அலை) அவர்களும், அவர்களின் மகன் யஹ்யா (அலை) அவர்களும், மூஸா (அலை )அவர்களும், அவர்களின் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களும் ஆகிய அனைவருமே நபிமார்களாவர்.

யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; ''எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?'' எனக் கேட்டதற்கு, ''உங்கள் நாயனை - உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை - ஒரே நாயனையே - வணங்குவோம்; அவனுக்கே (முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்'' எனக் கூறினர். 2:133

''இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே'' என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக ''(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பாராமுகமாக இல்லை.'' 2:140

''அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக. 3:84

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்;. இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். 4:163

''நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை. 12:38

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன். 14:39

(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம். 19:49

மேலும் காண்க: (6:84,11:71,21:72,29:27,37:101---113)

தூதர் (ரஸூல்) நபி (செய்தியாளர்) வித்தியாசம் என்ன?

ஒரு சில அறிஞர்கள் தூதர்கள் மற்றும் செய்தியை அறிவிப்பவர்க(அதாவது ரஸூல்மார்கள், நபிமார்க)ளுக்கிடையில் வித்தியாசப் படுத்திக் கூறுகின்றனர். அதற்கு விளக்கமாக வேதத்தைக் கொண்டு வந்தவர்கள் ரஸூல் மார்கள் என்றும் நபி என்பவர் ரஸூல் கொண்டு வந்த வேதத்தின் அடிப்படையில் பிரச்சாரம் செய்பவர் என்றும் சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் நபி என்பவர் மக்கள் அல்லாஹ்வின் வழி காட்டுதலை முற்றிலுமாக மறந்து, மறுத்து வாழும் நிலையில் புதிதாக தனி மார்க்கத்தைக் கொண்டு வருபவர். ரஸூல் என்பவர் அந்த நபி கொண்டுவந்த மார்க்கத்தை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டுபவர், போதிப்பவர் என்றும் கூறுகிறார்கள். மேற்காணும் இரண்டு கருத்துகளுக்கும் திருமறையிலோ, நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலோ ஒரு சிறு ஆதாரத்தையும் காட்ட (காண) முடியவில்லை. இதில் வேதனையான விஷயம் என்னவெனில் திருமறைக்கும், நபி(ஸல்)அவர்களின் பொன் மொழிகளுக்கும் மாற்றமாகவும் தங்கள் கருத்துக்கு சாதகமாகவும் தான் இந்தக் கருத்தக்களை எடுத்து வைக்கின்றனர்.

வல்ல இறைவன் தன் திருமறையில் ஒருவரையே நபி என்றும், ரசூல் என்றும் ஒரே வசனத்திலேயே கூறுகிறான். ஒருவரையே தூதர் என்று ஒரு வசனத்திலும், நபி என்று வேறு ஒரு வசனத்திலும் கூறுகிறான்.

நபி மற்றும் ரசூல்

(நபியே!) நீர் கூறுவீராக ''மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும் படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.'' 7:158

(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார். 19:51

(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார். 19:54

தூதருக்கு வேதம்.

''எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.'' 2:129

இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம். 2:151

(நபியே!) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்;. நிச்சயமாக நீர் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களில் ஒருவர் தாம். 2:152

எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர். 3:184

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்;. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். 5:67 (மேலும் காண்க: 6:130,7:35,35:25,57,25)

No comments:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }