Thursday, May 24, 2007

ஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-3)

நபிமார்களின் பணி:

1. சமூகத்தைச் சீர்படுத்துவதற்காக:

அல்லாஹ்வின் செய்தியைப் பெற்று அதைக் கூட்டாமல் குறைக்காமல் அப்படியே கூறுவது.

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள் ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (16:36).
2. வஹீ பெற்று அறிவிப்பது:

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ''நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. (21:25)

3. நல்வழிபடுத்துவது

''நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சுகிறேன்'' (என்று கூறினார்). (11:26)

4. நன்மாராயம் கூறுபவர், அச்சமூட்டி எச்சரிக்கை செய்தல்:

மேலும், நாம் உம்மை நன்மாரயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே தவிர அனுப்பவில்லை. (18:56)

பணியின்-விளைவு:

செய்தியை சொன்னவுடன் ஏற்றுக் கொள்ளவில்லை பரிகாசம் செய்தார்கள், பொய் என்று கூறினார்கள், சூனியம் என்று கூறினார்கள், கவிஞன் என்று கூறினார்கள், துன்புறுத்தினார்கள், கொலையும் செய்தார்கள்.

இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப்ப பட்டார்கள் - ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களைச் சூழ்ந்து கொண்டது. (21:41)

நபிமார்கள் பணி எத்திவைப்பது மட்டுமல்ல (பரிகாசம், பொய்பித்தல், விரட்டி அடித்தல், கொலை செய்தல் போன்ற) இன்னல்களை சகித்து பொறுத்துக் கொள்ளுதல்.

நபிமார்களை ஏற்றுக்கொண்ட மற்றும் ஏற்றுக்கொள்ளாதவர்களின் நிலை:

ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கைக் கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம். (7:72)

அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரென்றே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டத்தாராகவே இருந்தனர். (7:64)

ஹதீஸ்: தாயிஃப் சம்பவம் மற்றும் சமூக பகிஷ்காரம்.

அல்லாஹ் தூதர்களுடன் பேசும் முறை:

1. வஹீ மூலம் 2. திரைக்கு அப்பால் 3. தூதர் அனுப்பி அவர் மூலம் (ஜீப்ரயீல் (அலை)).

அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன். (42:51)

அனைத்து நபிமார்களின் பெயர்களையும் குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை.

திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்... (40:78)

மறுமையில் நபிமார்கள் சமுதாயத்தார்க்கு சாட்சியாக

எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும் போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்? (4:41)

மறுமையில் நூஹ் (அலை) அவர்களும் அவர்களின் சமுதாயத்தினரும் வருவார்கள் அப்போது அல்லாஹ் (நூஹ் (அலை) நோக்கி), ''(எனது செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்து விட்டீர்களா?'' என்று கேட்பான் அதற்கு நூஹ் (அலை) அவர்கள் ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்) என்று பதிலளிப்பார்கள். பிறகு அல்லாஹ் நூஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தினரிடம், இவர் உங்களுக்கு (என் செய்தியை) எடுத்துரைத்து விட்டாரா? என்று கேட்பான் அதற்கு அவர்கள், இல்லை எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை, என்று பதில் கூறுவார்கள். உடனே அல்லாஹ் நூஹ் அவர்களிடம், உங்களுக்கு சாட்சியம் சொல்பவர்கள் யார்? என்று கேட்பான் அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்களும், அவர்களுடைய சமுதாயத்தினரும் என்று பதிலளிப்பார்கள். (புகாரி எண் 3339 : அபூஸயீத் அல் குத்ரீ(ரலி))

நபிமார்களின் உடலை மண்தீண்டாது (சுருக்கம்)

வெள்ளிக்கிழமை எனக்கு அதிகமாக ஸலவாத்து சொல்லுங்கள் அது எனக்கு எடுத்துக்காட்டப்படும் என்று சொன்னவுடன், மண்ணோடு மண்ணாக நீங்கள் ஆனபிறகுமா? என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நபிமார்களின் உடலை மண் தீண்டாது.

நாம் அனைத்து நபிமார்களையும் அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர்கள் தான் என நம்பிக்கை; கொண்டாலும் நாம் முழுமையாகப் பின்பற்ற வேண்டியது நமக்குத் தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது நபி (ஸல்)அவர்களை மட்டும்தான்.

உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தௌராத்தின் ஒரு பகுதியைக் கொண்டு வந்து இறைத்தூதர் அவர்களே! இது தௌராத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் பேசாதிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களோ அதைப் படிக்கத் துவங்கினார்கள். நபி (ஸல்) அவர்களின் முகமோ (கோபத்தால்) மாறத் தொடங்கியது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் உம்மைக் கஷ்டங்கள் (வந்து) அடையட்டும் நீர் நபி (ஸல்) அவர்களின் முகத்தைப் பார்க்க வில்லையா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனுடைய தூதரின் கோபத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் நான் ஒப்புக் கொண்டேன் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இந்த முஹம்மதின் உயிரை கையில் வைத்திருப்பவனின் மீது சத்தியமாக மூஸா (அலை) உங்களிடையே வந்து என்னை விட்டு விட்டு அவரை நீங்கள் பின்பற்றினால் நீங்கள் நேர் வழியை விட்டும் (விலகிப்) போய்விடுவீர்கள். மூஸா (அலை) உயிருடன் இருந்து என்னை நபியாக அவர் அடைந்தால் அவர் என்னைத்தான் நிச்சயமாகப் பின் பற்றியிருப்பார் என்று நபி( ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர் (ரலி) தாரமி.

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்களித்த தனிச்சிறப்பு:

உலக மக்கள் அனைவருக்கும் நபி:

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். 34:28

(நபியே!) நீர் கூறுவீராக ''மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.'' 7:158

காண்க (6:19,61:3)

இறுதி நாள் வரை வரும் அனைவருக்கும் நபி:

முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். 33:40

அகிலத்தின் அருட்கொடை:

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. 21:107

முன் பின் பாவங்கள் மன்னிக்கப் பட்டுள்ளார்கள்:

உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும். 48:2

அவர்களின் புகழை அல்லாஹ் மேலோங்கச் செய்துள்ளான்:

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். 94:4

எனக்கு முன்னர் (நபிமார்கள்) யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப் பட்டுள்ளன எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் அளவு தூரம் இடை வெளியிருக்கும் போதே அவர்களுடைய உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்துவதன் மூலம உதவி செய்யப்பட்டுள்ளேன், பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும், தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது, என்னுடைய உம்மத்தில் யாருக்காவது தொழுகை நேரம் வந்து விட்டால் அவர் (எந்த இடத்திலிருக்கிறாரோ அந்த இடத்திலேயே) தொழுது கொள்ளட்டும். போரில் கிடைக்கின்ற பொருட்கள் எனக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஆகுமாக்கப்பட்டதில்லை. (மறுமையில் எனது உம்மத்துக் காக) சிபாரிசு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளேன், ஒவ்வொரு நபியும் தமது (காலத்தில், பகுதியில் வாழும்) சமுதாயத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்ட்டார்கள். ஆனால் நான் மனித சமுதாயம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) புகாரி, நஸாயி.

நபி (ஸல்) அவர்கள் மூலம் நமக்குக் கிடைத்த நன்மைகள்

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,(கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். 7:157.

(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். 9:128

(இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத் துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; ''(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; முஃமின்களையும் நம்புகிறார்; அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்.'' எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு. 9:61

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. 21:107

அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டு வருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டு வருவீராக!).14:1

'ஒருவன் நெருப்பு மூட்டுகிறான். அது சுற்றுப் புறங்களில் பிரகாசத்தை ஏற்படுத்துகிறது. ஈசல்களும் வண்டுகளும் அந்நெருப்பில் விழ முனைகின்றன. இவனோ அவற்றை (நெருப்பில் விழாமல்) தடுத்துக் கொண்டிருக்கின்றான். எனினும் அவை அவனையும் மீறி நெருப்பில் விழுகின்றன. இம்மனிதன் எனக்கு உவமையாவான். நான் உங்களின் மடியைப் பிடித்து உங்களை நரகிற்குச் செல்ல விடாமல் தடுக்கிறேன். எனினும் நீங்கள் (எனது கட்டளைகளை மீறி) அதன் பக்கம் விழப்பார்க்கிறீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) : புகாரி, முஸ்லிம்.

அல்லாஹ் என்னை நேர்வழியில், மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையானது, நிலத்தில் விழுந்த பெரு மழை போன்றதாகும். அவற்றில், சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு, ஏராளமான புற்களையும், செடி கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரை தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை, இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை, மக்கள் அருந்தினர். தமது (கால்நடைகளுக்கும்) புகட்டினர். விவசாயமும் செய்தனர். அந்தப் பெரு மழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது, ஒன்றுக்கும் உதவாத (வெறும் கட்டாந்தரை). அது, தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகளை முளைக்க விடவும் இல்லை. இதுதான், அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டு வந்த தூதினால், பயனடைந்து, கற்றுத் தெரிந்து, பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும், நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களோடு நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்.

(நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். 3:31

(நபியே! இன்னும்) நீர் கூறும்; ''அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்.'' ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. 3:32

இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும். 4:13

எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. 4:14

எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. 4:80

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். 5:92

(நபியே!) நீர் கூறுவீராக ''மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரிய நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.'' 7:158

போரில் கிடைத்த வெற்றிப்பொருள் (அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள். 8:1

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். 8:24

(முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். 24:53

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. 33:21

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். 33:36

(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார். 33:71

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள் - என்னும் உங்கள் செயல்களை பாழாக்கி விடாதீர்கள். 47:33

சொற்களில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நேர்வழியில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்களின் நேர்வழியே, காரியங்களில் மிகக் கெட்டது (மார்க்கத்தில்) புதிதாக உண்டாக்கப்பட்டதாகும், புதிதாக உண்டாக்கப்பட்ட ஒவ்வொன்றும் வழி கேடாகும், வழி கேடுகளைனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர் (ரலி) நஸயீ.

நபி (ஸல்) அவர்களின் (பிறப்பு முதல் இறப்பு வரை சுருக்கமான) வாழ்க்கை வரலாறு

அறியாமை கால இருள்:- வல்ல அல்லாஹ்வுக்கு இணையாக்கி தங்களின் இஷ்டதெய்வங்களை வணக்கவழிபாடுகள் புரிதல் அவைகளிடம் தங்களின் தேவைகளைக் கேட்டுப் பிரார்த்தித்தல், அவைகளுக்கு நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல், அதன் விக்ரங்களை வலம் வருதல் ஆகியவை அந்நாளின் மக்களிடம் காணப்பட்ட செயல்களாகும்.

எதன்மீது, (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள். (6:121)

1. சகுனம் பார்த்தல் அன்றைய மக்களின் மரபாய் இருந்தது. பீடை நாட்களில் பிறந்த கால்நடைகளின் காதுகளை அறுத்து அதன் கோலத்தை மாற்றிடும் கொடிய நிலை இருந்தது.

இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்'' என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான். (4:119).

ஒரு கோத்திரத்தில் கொல்லப்பட்ட ஒருவனின் வாரிசுகள் கொலை செய்த கோத்திரத்துக்காரனையோ; பழி தீர்க்க சபதம் செய்வர் - அவனைக் கொல்லவியலாத பட்சத்தில் அவனது உறவினர்களையோ, வாரிசு களையோ, கொல்வது என்ற நிலை, மேலும் பரம்பரை பரம்பரையாக குரோத நெருப்பு பற்றி எரிந்தது என்பது ஹதீஸ்களில் கிடைக்கும் ஆதாரம்.

2. தந்தை இறந்தபின் அவரது மனைவியை மகன் திருமணம் செய்து கொள்ளும் விகாரநிலையும் அன்றைய நாட்களில் இருந்தது

முன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும். (4:22)

நபி (ஸல்) அவர்களின் பிறப்பு:- இப்படி அறியாமைக்கால இருளில் சுழன்று கொண்டிருந்த மக்களின் மத்தியில் தான் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் திங்கள் கிழமையன்று ரபீஉல் அவ்வல் 9ம் தேதியில் பனிஹாஷிம் கோத்திரத்தில் குறைஷி குலத்தில் 22-4-571-ல் பிறந்தார்கள்.

அல்லாஹ் இப்றாஹீம் நபியின் சந்ததியரில் இஸ்மாயீலைத் தேர்ந்தெடுத்தான். இஸ்மாயிலின் சந்ததியரில் கினானாவைத் தேர்வுசெய்தான். கினானாவின் சந்ததியரில் குறைஷையும், குறைஷியரின் குலத்தில் ஹாஷிமையும், ஹாஷிமில் என்னையும் தேர்வுசெய்தான். (முஸ்லீம்)

பெற்றோர்கள்:- அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ்வுக்கும் வஹப்பின் மகள் ஆமீனாவுக்கும் திருமணம் நடந்தேறியது. அப்துல்லாஹ், ஆமீனா தம்பதியர்களின் மணவாழ்வு நெடுநாள் நீடிக்கவில்லை. சிரியாவுக்கு வர்த்தக நிமித்தமாக சென்றிருந்த பயணத்தில் திரும்பும் போது மதீனாவில் சுகவீனமுற்று அப்துல்லாஹ் இயற்கை எய்தினார். அப்பொழுது அப்துல்லாஹ்வின் வயது 25. நபிகள் (ஸல்) பிறப்புக்கு 2 மாதங்கள் முன்பு அப்துல்லாஹ் மரணம். விட்டுசென்ற சொத்து 5 ஒட்டகம் சில ஆடுகள் உம்முஅய்மன் என்ற அடிமை.

(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால்(உமக்குப்)புகலிடமளிக்கவில்லையா? (93:6)

தந்தை அப்துல்லாஹ்வின் மரணத்துக்குப் பின் நபிகளாரை (ஸல்) அவர்களை வளர்க்கும் பொறுப்பை பாட்டனார் அப்துல் முத்தலிப்பு ஏற்றார். அதிக அன்புடனும் வாஞ்சையுடனும் நபிகளாரை (ஸல்) வளர்த்து வந்தார். அப்துல் முத்தலிப்பு நபிகளாருக்கு (ஸல்) முஹம்மது எனப் பெயரிட்டார்.

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மதும் அஹம்மதும் ஆவேன். அல்மாஹி (இறை நிராகரிப்பை நீக்குபவன்), அல்ஹாஸிர் (முதலில் உயீர் மீட்சி பெற்று திரும்ப எழுப்பபடுபவர்), அல்ஆகிப் (இறுதி நபி) ஆகியவை என் பிறபெயர்கள். (புகாரி)

அன்றைய வழக்கப்படி நபி (ஸல்) அவர்களை ஹலீமா என்ற பெண்னிடம் பால் குடிப்புக்கும் பராமரிப்புக்கும்; விடப்பட்டார். ஆறு வயதில் ஹலீமாவிடமிருந்து தன்னிடம் வந்தடைந்த நபிகளாரை (ஸல்) எடுத்துக் கொண்டு தாயார் ஆமினா தம் கணவரின் சமாதியைக் கண்டுவர நாடி மதீனா புறப்பட்டார். திரும்பி வரும் வழியில் அப்வா என்ற இடத்தில் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். நபிகளாரின் (ஸல்) எட்டுவயதில் பாட்டனார் அப்துல் முத்தலிப்பு இயற்கை எய்தினார். பெரிய தந்தை அபூதாலிப் நபிகளாரின் (ஸல்) வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில் நபி (ஸல்) அவர்கள் குறைந்த கூலிக்கு அன்றைய அரபுகளின் ஆடுகளை மேய்த்திருக்கின்றார்கள். தமது 12வது வயதில் நபி (ஸல்) பெரிய தந்தை அபூதாலிப்புடன் வியாபார நிமித்தம்மாக சிரியா பயணம் மேற்கொண்டிருந்தார்கள். மிகப்பழைமைவாய்ந்த கட்டிடமாகிய கஃபா ஆலயத்தில் வெடிப்பு விழுந்து மிக பலவினமாக காட்சியளித்ததைக் கண்ட குறைஷியர் அதனை புனர் நிர்மானம் செய்ய முனைந்தனர். கஃபாவின் புனர் நிர்மாணப் பணியில் நபி (ஸல்) கல்சுமந்து குறைஷியர்களுக்கு துணைபுரிந்தனர். நேர்மையாளராகவும், வாய்மையாளராகவும் திகழ்ந்த நபி (ஸல்) அவர்களை அன்றைய மக்கள் அஸ்ஸாதிக் அல் அமீன் என்னும் சிறப்புப் பெயர்களை சூட்டி மகிழ்ந்தனர். சிரியா வாணிபத்தினால் நபிகளாரின் (ஸல்) திறமையையும் நேர்மையையும் அறிந்த கதீஜா (ரலி) நபிகளை மணமுடிக்க முடிவெடுக்கிறார்கள் நபிகளாரின் (ஸல்) சம்மதத்துக்குப்பின் 20 ஒட்டகங்களை மஹராக வழங்கி நபிகள் (ஸல்) கதீஜாவை (ரலி) மணமுடித்துக் கொண்டார்கள். அல்காஸிம், தைய்யிப், தாஹிர் என்ற 3 ஆண் குழந்தைகளும், ஜைனப், ருக்கையா, உம்முகுல்தூம், பாத்திமா (ரலி) என்ற 4 பெண் குழந்தைகளும் பிறந்தன. ஆண்குழந்தைகள் சிறு வயதிலேயே மரணித்துவிட்டனர், பெண்குழந்தைகளில் பாத்திமாவை (ரலி) தவிர மற்ற மூவரும் நபிகளின் வாழ்நாளிலேயே மரணித்து விட்டனர். பாத்திமா (ரலி) நபிகள் இறந்த 6 மாததுக்கு பின் இறந்தார். நபிகளின் (ஸல்) மகள்கள் நால்வரும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் வஹீ: ஹிரா மலைக் குகையில் தவமிருந்த நபிகளிடம் (ஸல்) ஒரு நாள் வானவர் ஜிப்ரயீல் (அலை) மனித உருவில் வந்து இருக்ககட்டியணைத்து ஓதுவீராக! எனக்கூற நபிகளார் எனக்கு ஓதத் தெரியாது என பதில் கூறினார்கள். பின்னரும் ஜிப்ரீல் (அலை) இவ்வாரே கூற நபிகள் ஓதத் தெரியாது எனப் பதில் கூறினார்கள். மூன்றாவதாக ஜிப்ரயீல் (அலை)

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. (96:1)

மனிதனை (அட்டை பூச்சி போன்று ஒட்டிக் கொண்டிருக்கும் இரத்த கட்டியிலிருந்து) அவன் படைத்தான். (96:2)

நீர் ஓதுவீராக: உம் இறைவன் மிக்க சங்கையானவன். (96:3)

என்ற இறைவசனத்தை வஹீ வரப் பெற்ற நபிகளார் (ஸல்) பயந்து வியர்த்தவராக விறைந்தவராக வீட்டுக்கு வந்து கதிஜா (ரலி) யிடம் என்னைப் போர்த்துங்கள் என்னைப் போர்த்துங்கள் எனக்கூற கதிஜா (ரலி) அவர்கள் அல்லாஹ் உங்களை ஒரு போதும் கைவிடமாட்டான். ஏனெனில் நீங்கள் உறவினர்களை ஆதரிக்கிறீர்கள், வறியோர்க்கும் தேவையுடையோர்க்கும் உதவுகிறீர்கள், விருந்தினரை உபசரிக்கிறீர்கள் நலிந்தோரின் சுமைகளை சுமக்கிறீர்கள் என ஆறுதலும் தேறுதலும் கூறி தம் உறவினரான வரகா பின் நவ்ஃபல் என்ற கிறிஸ்தவ அறிஞரிடம் அழைத்துச் சென்று நபிகளுக்கு நேர்ந்ததை கூற அவர் நபிகளை நோக்கி 'அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடம் அனுப்பிய அதே ஜிப்ரீல் (அலை) அவர்களைத்தான் உம்மிடமும் அனுப்பியிருக்கிறான்'. நீர் அல்லாஹ்வின் தூதரே! என உறுதிப்படுத்தினார். (புகாரி)

இதன் பின்னர் சிலகாலம் வஹீ வருவது நின்றுபோனது. இரண்டாவது இறங்கிய வஹீயின் வசனங்கள்

(போர்வை)போர்த்திக் கொண்டு இருப்பவரே! (74:1)

நீர் எழுந்து (மக்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. (74:2)

மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக. (74:3)

உம் ஆடைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்வீராக. (74:4)

அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி)விடுவீராக. (74:5)

இதன் பின்னர் வஹீ வருவது தொடர்ச்சியாய் அடிக்கடி வந்துகொண்டிருந்தது.

ரகசியமான அழைப்பு பணி:- அல்லாஹ்வின் கட்டனையின்படி அழைப்பு பணி ஆரம்பமானது. ரகசியமாய் நடந்த இவ்வழைப்புபணி ஏறத்தாழ 3 ஆண்டுகள் நடந்தது. இதன் பயனாய் ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும், அபுபக்கரும் இரு பெண்களுமே (புகாரி)

நபிகளுடன் அபுபக்கர் அடிமைகள் ஜைது, பிலால், அம்மார், யாசிர், சுமைய்யா நபிகளாரின் மனைவி கதிஜா ஆகிய இவர்கள் தான். இதன் பின்னர்

இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! (26:214)

என்ற இறைவசனம் வஹீயாக இறங்கிய நபிகளார் (ஸல்) தம் உறவினர்களை ஸஃபா மலையில் ஒன்று திரட்டி ஏகத்துவத்தை எடுத்துரைக்க சினங் கொண்ட அபூலஹப் நபிகளாரின் (ஸல்) மீது மண்ணை வாரி வீசி இறைத்தான். இதன் பின்ணணியில் தான் அருள் மறையின் 111 வது அத்தியாயம் இறங்கியது.

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமாடைக அவனும் நாசமாகட்டும். (111:1)

அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. (111:2)

விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். (111:3)

விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, (111:4)

அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). (111:5)

இதன் பின்னர் அருள் மறையின் கீழ்கண்ட வசனம் இறங்கியது

ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக! (15:94)

இதன் படி அழைப்புப் பணி மீண்டும் தொடர்ந்தது.

குறைஷியக் குறைமதியாளர்கள் குணசீலர் நபிகளாரைக் (ஸல்) கவிஞர், சூனியக்காரர், பைத்தியக்காரர் என்றெல்லாம் பறைசாற்றினர். அபூதாலிப்பின் பாதுகாப்பிலிருந்ததால் குறைஷியரின் தாக்குதலிலிருந்து தப்பினார்கள் ஏகத்துவத்தை ஏற்றிருந்த முஸ்லீம்கள் சொல்ல முடியாத பெரும் சிரம்மதுக்குள்ளானர்கள். பிலால், அம்மார், கப்பாப்(ரலி) ஆகியோர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சுமையா, யாசிர் (ரலி) தம்பதியர் இஸ்லாத்தினை ஏற்று ஏகத்துவத்துக்காக உயிர்நீத்த உத்தமர்களின் பட்டியலைத் துவக்கிவைத்தனர்.

அபீஷீனிய ஹிஜ்ரத்:- முஸ்லீம்களின் மீது இழைக்கப்படும் தொல்லைகளிலிருந்து மீட்சி பெற நபிகளார் அபீஷீனிய தேசம் ஹிஜ்ரத் செய்ய அனுமதியளித்திருந்தனர். இரு பிரிவினராக முதலில் 16 பேரும் பின்னர் 101 பேரும் ஹிஜ்ரத் செய்தனர். அவர்களில் உஸ்மான் (ரலி) தம்பதியினர், ஜாபீர் பின் அபூதாலிப் (ரலி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் அபீஷீனியா சென்றடைந்த முஸ்லீம்களைத் திரும்பவும் மக்கா கொண்டுவரும் குறைஹியரின் திட்டமும் நஜ்ஜாஜி மன்னரிடம் ஜாபிர் (ரலி) யின் தீர்க்கமான தெளிவான பதிலால் தவிடு பொடியானது.

இந்நிலையில் இஸ்லாத்தின் எதிரிகளாய் இருந்த ஹம்ஸா (ரலி) உமர் (ரலி) ஆகியோர் இஸ்லாத்தைத்தழுவினர். அழைப்புப் பணி மிகத் தீவிரமடைந்தது. முஸ்லீம்களின் வணக்க வழிபாடுகள் கஃபாவில் தொடரலாயிற்று.

சமூகப்பகிஷ்காரம்:- வெறுப்புற்று வெகுண்டெழுந்த குறைஷியர்கள் முஸ்லீம்களை குறிப்பாக முஹம்மத் (ஸல்) அவர்களைப் பழிவாங்க ஏங்கினர். குறைஷியர்கள் குழுவின் கோரிக்கையான நபிகளைப் பழிவாங்கும் திட்டத்துக்கு பனிஹாஷிம், முத்தலிப்பு கோத்திரத்தார் அபூலஹப்பை தவிர ஒத்துழைக்க மறுத்தனர். விளைவு நபிகளை அரவணைக்கும் இக்கோத்திரத்தாரை சமூகப் பகிஷ்காரம் செய்யும் முடிவு கஃபாவின் சுவரில் எழுதி தொங்கவிடப்பட்டது. அண்ணலாரை அரவணைத்தோர் அபூதாலிப் உட்பட மூன்றாண்டு காலம் பசியோடும், வறுமையோடும் வாடிய நிலை தொடர்ந்தது. குறைஷியரின் சில பிரிவினரின் எதிர்ப்புகளால் இப்பகிஷ்காரம் 3 ஆண்டுகளில் முற்றுப்பெற்று நபிகளை அரவணைத்தோர் தத்தம் இல்லம் திரும்பினர்.

கவலை ஆண்டு (ஆமுல் ஹுஸ்ன்) :- சமூகப்பகிஷ்காரத்துக்குப் பின் உடல் நலமின்றி நோய்வாய்ப்பட்டிருந்த நபி (ஸல்) அவர்களின் பெரிய தகப்பனார் அபூதாலிப் அவர்கள் இறுதிவரை இஸ்லாத்தை தழுவாமலேயே இயற்கை எய்தினார்கள் அண்ணலாரின் அறிவுரைகள் அவரிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான். (28:56)

என்ற திருமறை வசனம் உணர்த்துகின்றது. அபூதாலிப்பின் மரணத்தையடுத்து இரண்டு மாதங்களுக்குப் பின் மனைவி கதீஜா (ரலி) இயற்கை எய்தினார்கள். வரலாற்று ஆசிரியர் இவ்வாண்டை (ஆமுல் ஹுஸ்ன்) கவலை ஆண்டு எனக் கூறுவர்.

மக்காவின் புறப் பகுதிகளில் அழைப்புப்பணி:- நபித்துவம் பெற்ற 10 ஆண்டுகள் கழிந்த பின்னர் நபி (ஸல்) அவர்கள் மக்காவை அடுத்துள்ள தாயிஃபுக்குச் சென்று ஏகத்துவத்தை எடுத்துக் கூறக் கிளம்பினார்கள். தகீக் கோத்திரத்தார்க்கு நபிகளாரின் (ஸல்) உபதேசம் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்த சிரமங்களை நோக்கும் போது உஹதுப் போரில் நபிகளார் பட்ட வேதனையைக் காட்டிலும் மிகுதியாய் தாயிஃப் நகர மக்கள் இழைத்தகொடுமைகள் திகழ்ந்தன என்பதனை ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன. தாயிஃபிலிருந்து திரும்பிய நபிகளார் ஓய்ந்து விடவில்லை. 11ம் ஆண்டில் ஹஜ் யாத்ரீகர்களிடம் தம் அழைப்புப்பணியைத் துவங்கினார். மினாவையடுத்த அகபா என்ற இடத்தில் ரகசியமாக மதீனாவாசிகளிடம் மாநபிகள் ஆற்றிய உரை ஆறு பேர்கள் இஸ்லாத்தைத் தழுவ அடிகோலியது. அவுஸ் கஸ்ரஜ் கோத்திரத்தாரின் வெறுப்புகள் நீங்கி சகோதரத்துவம் மலரவும் மதீனாவில் இஸ்லாம் காலூன்றவும் உதவியது.

மிஃராஜ் நிகழ்ச்சி:- ஹிஜ்ரத்துக்கு ஏறத்தாழ ஒரு வருடத்துக்கு மக்காவில் கஃபாவில் இருந்து ஒரு இரவில் நபி (ஸல்) அவர்களை வானவர் ஜிப்ரயீல் (அலை) 'அல்புராக்' என்னும் வாகனத்தில்(குதிரை) ஜெருஸலத்தில் உள்ள பைத்துல் முகத்தஸுக்கும் பின்னர் அங்கிருந்து 7 வானங்களைக் கடந்து ஸித்ரத்துல் முன்தஹா என்ற மரத்துக்கு எடுத்துச் சென்றனர். அங்கு நபிகளாருக்கு (ஸல்) அல்லாஹ்வினால் அவரின் உம்மத்தார்களுக்கு 5 வேளை தொழுகை கடமையாக்கப்பட்டது. மிஃராஜ் சம்பவத்தை வல்ல அல்லாஹ்வும் தன் அருள் மறையில் கீழ்கண்ட வசனத்தில் குறிப்பிடுகிறான்.

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (17:1)

இவ்அற்புதத்தை அன்றைய மக்களிடம் நபிகளார் (ஸல்) எடுத்துக் கூறிய போது நம்பமறுத்த குறைஷியர்களின் பைத்துல் முகத்தஸ் தோற்றம் பற்றிய கேள்விக்கு நபிகள் (ஸல்) பதிலிறுப்பதற்கு ஏதுவாக வல்ல அல்லாஹ் நபிகளாருக்கு (ஸல்) முன்பு பைத்துல் முகத்தஸை எடுத்துக் காட்டினான். அதன் தோற்ற வடிவ வர்ணணைகளை குறைஷியர்களுக்கு அதைப் பார்த்து நபிகளார் (ஸல்) விளக்கினார்கள்.

முதலாம் அகபா:- நபித்துவம் கிடைத்த 12வது ஆண்டில் ஹஜ் யாத்திரைக்கு வந்த மதீனா வாசிகள் முன்பு வந்து நபிகளாரின் (ஸல்) அறிவுரைகளைக் கேட்டு இஸ்லாத்ததை தழுவிய அறுவரில் ஐவர் இம்முறையும் வந்திருந்தனர். இவர்கள் ஏழு புதிய நபர்களை அகபாவுக்கு அழைத்து வந்திருந்தனர். இவர்கள் இஸ்லாத்தை ஏற்று நபிகளாரின் (ஸல்) முன்பு 'அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கமாட்டோம், திருட மாட்டோம் விபச்சாரம், கொலை, சிசுவதை, கோள், பொய் பேசுதல், அவதூறு இவைகளில் எதையும் செய்யமாட்டோம்' என உறுதி மொழியளித்தனர். இதனை முதலாம் அகபா எனக்கூறுவர். இப்போது 12 பேர்களுடன் மதீனாவில் அழைப்புப்பணி புரிய முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களை நபி (ஸல்) மதீனா அனுப்பி வைத்தார்கள்.

இரண்டாம் அகபா:- நபித்துவம் கிடைத்த 13வது ஆண்டில் ஹஜ் யாத்ரீகளிடம் நபிகளாரின் (ஸல்) அழைப்புப்பணி தொடர்ந்தது. இவ்வாண்டு முஸ்அப்(ரலி)யின் அழைப்புப்பணியின் எதிரொலியாய் இஸ்லாம் மதீனாவில் வெகு விரைவில் காலூன்றத் தொடங்கியது. மக்கள் கோத்திரம் கோத்திரமாய் இஸ்லாத்தில் இணைந்தனர். விளைவு 70க்கு மேற்பட்டடோர் இரண்டாம் அகபாவில் பங்கெடுத்துக் கொண்டனர். எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் தூதருடைய கட்டளைக்கு அடிபணியவும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யவும். நல்லதை ஏவி தீயதைத் தடுக்கவும். அல்லாஹ்வையன்றி எவருக்கும் பயப்படுவதில்லை என்றும் தங்களின் மனைவிகளை, குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்கிறோமோ அவ்வாறு நபிகளாருக்கு (ஸல்) பாதுகாப்பு தேவைப்பட்டால் பாதுகாப்பு வழங்கவும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

ஹிஜ்ரத்:- நபி (ஸல்) தம் கனவில் ஈச்சமரங்கள் அடர்ந்த சோலைகளுள்ள இருமலைகளுக்கிடையேயான ஒரு பிரதேசம் ஹிஜ்ரத் செய்வதற்குறிய இடமாகக் காண்பிக்கப்பட்டதாகவும் அவ்விடம் மதீனா என்றும் கூறினார்கள் (புகாரி)

குறைஷியர்களின் கொடுமையிலிருந்து நீங்கவும் ஏகத்துவத்தைப் பேணிக் கொள்வதற்கும் தம் சொத்து சுகங்களை, இருப்பிடங்களை, உடமைகளை, மனைவி மக்களைத் துறந்து அநேக முஸ்லீம்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தனர். அபீஷினியா சென்ற முஸ்லீம்களும் மதீனாவுக்கு குடியேறத் துவங்கினர். குறைஷியர்கள் நபிகளாரைக் (ஸல்) கொல்லத் திட்டமிட்டு கோத்திரத்துக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தனர் (கொலைப் பழியிலிருந்து நீங்க). வஹீ மூலம் இச் செய்தி நபிகளை (ஸல்) எட்ட நபி (ஸல்) அபூபக்கர் (ரலி)யுடன் குறைஷியர்களின் கண்ணில் படாமல் சவுர் குகையில் சென்று ஒளிந்து கொண்டனர்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில்:- சவுர் குகையில் ஒளிந்திருந்த நபிகளார் (ஸல்) மூன்று தினங்களுக்கு பின் கடற்கரையோரப் பாதையாய் மதீனா நோக்கிப் பிரயாணமானார்கள் குறைஷியர்கள் நபிகளை (ஸல்), அபூபக்கரைப் (ரலி) பற்றியத் தகவல் தருவோர்க்கு தலா 100 ஒட்டகங்கள் பரிசு வழங்குவதாக பிரகடனம் செய்தனர். நபிகளாரைத் (ஸல்) துரத்திச் சென்ற சுரக்காவின் முயற்சியும் அல்லாஹ்வின் அருளால் பயனற்றுப் போனது சிரியாவிலிருந்து வாணிபத்துக்குச் சென்று விட்டு திரும்பி வந்த ஸுபைர் (ரலி) அவர்கள் வழியில் நபிகளாரைச் (ஸல்) சந்தித்து கூபாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மஸ்ஜிதுல் கூபாவை நிர்மானிக்க அடித்தளமிட்டு விட்டு மதீனா வந்தடைந்தார்கள். நபிகளார் (ஸல்) மதீனா வந்து சேர்ந்த நாள் ரபீஉல் அவ்வல் 12 ம் தேதி வெள்ளிக் கிழமை 27-9-622. மஸ்ஜிதுந் நபவிக்குறிய இடத்தை விலை கொடுத்து நபி (ஸல்) அவர்கள் வாங்கி அதனை நிர்மாணிக்கும் பணியில் தம்மையும் ஈடுபடுத்திக் கொண்டார்கள். அண்ணலார்க்கு அடைக்கலம் தந்து உதவிய மதீனாவாசிகளை அன்ஸார்கள் (உதவியாளர்கள்) என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஹிஜ்ரத் செய்து சென்றவர்கள் முஹாஜிர்கள் ஆவர். அன்ஸாரிகளையும், முஹாஜிர்களையும் இணைத்து நபிகளார் (ஸல்) ஏற்படுத்திய சகோதரத்துவம் இஸ்லாம் தழைக் தோங்க அடிக்கல்லாய் அமைந்தது. மதீனாவில் உள்ள யூதக் கோத்திரத்தாருடன் நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தங்கள் செய்து கொண்டனர். பிற மதத்தவரிடம் எவ்வாறு நடந்து கொள்வது எனத் தம் தோழர்களுக்குப் போதித்தனர். இஸ்லாமிய அரசை மதீனாவில் நிறுவுவதில் வெற்றியும் கண்டனர். இந்நிலையில்தான் நபிகளாருக்கு (ஸல்) இணைவைப்பாளர்களை எதிர்த்துப் போரிடும் அல்லாஹ்வின் அனுமதி கீழ்கண்ட வசனம் மூலம் கிட்டியது.

போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன். (22:39)

இதனடிப்பமையில் குறைஷிய வணிகக் கூட்டங்களை முற்றுகையிடும் முஸ்லீம்களின் முயற்சி தொடர்ந்தது.

கிப்லா திசை மாற்றம்:- ஹிஜ்ரி 2ல் ஷஃபான் மாதத்தில் நபி (ஸல்) தொழுது கொண்டிருந்த திசை மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து கிப்லா மாற்றப்பட்டு புனித கஃபாவை நோக்கி தொழ வல்ல அல்லாஹ்வினால் நபிகளாருக்கு(ஸல்) கட்டளையிடப்பட்டது.

பத்ர் போர்:- சிரியா வாணிபம் சென்ற அபூஸுப்யான் தலைமையிலான வாணிபக்குழு தம் வணிகப் பொருட்களுடன் திரும்பும் வழியில் முஸ்லீம்களின் கையில் சிக்கி விடாமலிருக்க உதவிகோரி மக்காவுக்கு தூதனுப்ப வணிகக் கூட்டத்தைப் பாதுகாக்கவும், முஸ்லீம்களைப் பழி தீர்க்கவும் குறைஷியப்படை 1000 பேர்கள் மதீனாவை நோக்கிப் புறப்பட்டனர். வணிகக் கூட்டம் கடலோரப் பாதையாய் மக்கா பாதுகாப்புடன் சென்றடைந்து விட்டபோதிலும் குரோதத்தில் குமுறிய குறைஷியர்கள் போரிட முனைந்தனர். விளைவு பத்ர் என்னுமிடத்தில் 1000 பேர் கொண்ட குறைஷியப் படையை முன்னூறுக்கு சற்று அதிகமான முஸ்லீம் படையினர் எதிர் கொண்டனர். மலக்குகள் முஸ்லீம்களின் ஆதரவாக போரிட்டனர் எனக் ஹதீஸ்கள் கூறுகின்றன. முடிவு முஸ்லீம்கள் வெற்றியும் குறைஷியர்கள் தோல்வியும் இழிவும் அடைந்தனர். 24 குறைஷியத் தலைவர்கள் வேரற்ற மரங்களாய் வெட்டி வீழ்த்தப்பட்டனர். அநேகக் குறைஷியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு பிணைத் தொகை பெற்றுக் கொண்டு விடுவிக்கப் பட்டனர். இப்போரில் 14 முஸ்லீம்கள் ஷஹீதானார்கள் 70 இணைவைப்பாளர்கள் கொல்லப்பட்டனர். யூதர்கள் சிலர் உடன்படிக்கையை மீறி கலகமிழைக்க முற்பட்டனர். அல்குதர், பனுகைனூகா போன்ற முஸ்லீம்களின் முற்றுகை யூதர்களுக்கு தக்கப்படமாய் அமைந்தது. நஜ்த் மார்க்கமாக ஈராக் சென்று வாணிபம் செய்யும் குறைஷியரின் திட்டம் ஜைதுபின் ஹாரிதா (ரலி) தலைமையிலான முற்றுகையில் வணிகப் பொருட்கள் முஸ்லீம்கள் கைவசமாயின. இப்பொருளாதார வீழ்ச்சியும் முஸ்லீம்கள் மீது கொண்ட குரோத உணர்வும் குறைஷியரை மீண்டும் படையெடுக்கத் தூண்டியது.

உஹதுப்போர்:- பத்ருப் போரின் வீழ்ச்சியும் பொருளாதார சிக்கலும் உஹதுப் போருக்கு முக்கிய காரணங்கள். குறைஷியர்கள் அபூஸுப்யான் தலைமையில் 15 பெண்கள் உள்பட 3000 பேர் கொண்ட படை மதீனாவை நோக்கி முன்னேறியது. குறைஷியரை எதிர்கொள்ளும் முஸ்லீம் படையில் 1000 பேர் இருந்தனர். அப்துல்லாஹ் பின் உபை என்ற நயவஞ்சகன் தன்னுடன் 300 பேரை அழைத்துக் கொண்டு மதீனா திரும்பியதால் எஞ்சியுள்ள 700 பேர்கள் குறைஷியரை உஹதில் சந்தித்தனர். போர் துவங்கியது முஸ்லீம்கள் வெற்றியின் விளிம்பில் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் ''அப்துல்லாஹ பின் ஜுபைர்'' தலைமையில் நிறுத்தியிருந்த 50 பேர் கொண்ட வில் வித்தை வீரர்கள் போர் கனீமத்துப் பொருட்களைப் பொறுக்க வேண்டும் என்ற ஆசையில் நபிகளாரின் (ஸல்) கட்டளையை மறந்து அவ்விடத்திலிருந்து அகன்றதால் குறைஷியரின் கோரத்தாக்குதலில் முஸ்லீம் படை சின்னா பின்னமானது. நபி (ஸல்) அவர்கள் மீதும் குறைஷியரின் கோரத்தாக்குதல் தொடர்ந்தது. அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஸா (ரலி) முஸ்அப் பின் உமைர் (ரலி) அப்துல்லாஹ் பின் ஜஹ்ஸ் (ரலி), அனஸ் பின் நள்ர் (ரலி) போன்ற உத்தம சஹாபாக்கள் உயிர்நீக்க நேரிட்டது. உஹதுப்போரில் முஸ்லீம்களில் 70 பேர் ஷஹீதானார்கள். குறைஷியரில் 37 பேர் கொல்லப்பட்டனர், என்று ஒரு அறிவிப்பிலும் 22 பேர் என்று மற்றொரு அறிவிப்பிலும் காணமுடிகின்றது. உஹதுப்போர் சம்மந்தமான குர்ஆனிய வசனங்கள்

(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக. (3:128)

(நபியே!) நினைவு கூர்வீராக்) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்; அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (3:121)

(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு. (3:179)

அழைப்புப்பணியில் ஷஹீதானோர்:- மதீனாவையடுத்து வாழ்ந்து கொண்டிருந்த உடால், கரா கோத்திரத்தாரிடம் அழைப்பு பணி செய்யச் சென்ற அருமை நபித்தோழர்கள் 10 பேர் கொண்ட குழு அர்ராஜி என்ற இடத்தில் பனிலிஹ்யான் கோத்திரத்தாரால் தாக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய இருவர் குறைஷியரிடம் விற்கப்பட்டு மக்காவில் தன்யீமல் மரண தண்டனை பெற்றனர். நஜ்தில் சென்று அழைப்புப்பணி செய்யச் சென்ற 70 குர்ஆன் கற்றறிந்த மனனம் செய்திருந்த ஹாபிழ்களின் குழு அமீர்பின் துபைல் என்ற கொடியவனால் முளர் கூட்டத்தாரால் கொல்லப்பட்டனர். உள்ளத்தை உருக்கும் இச்சம்பவங்கள் உஹதுக்குப்பின் ஹிஜ்ரி 4ல் நடந்தது. இதனைத் தொடர்ந்து முஸ்லீம் படையினர் நிகழ்த்திய பனுஅந்நாதிர் படையெடுப்பு நஜ்த் படையெடுப்பு தாத்துர்ரிகா படை எடுப்பு ஆகியவை முஸ்லீம்களின் முயற்சிக்கு வெற்றியளித்தன.

அல்அஹ்ஜாப் (அகழ்) போர்:- குறைஷியர்களுடன் குரோத நெருப்பில் யூதர்களும் முஸ்லீம்களுக் கெதிராய் உழன்று கொண்டிருந்தனர். வலுவான இஸ்லாமியப் பேரரசு மதீனாவில் காலூன்றி வருவதைக் காணச் சகிக்காத யூதர்கள் குறைஷியர்களுடன் உறவு கொள்ள ஆரம்பித்தனர். விளைவு 10,000 பேர் கொண்ட குறைஷியப்படை முஸ்லீம்களுடன் போரிட மதீனா நோக்கி கிளம்பியது. இப்பெரும் படையை எதிர் கொள்ள நபி (ஸல்) அவர்கள் ஸல்மான் அல்பாரிஸி (ரலி) என்னும் நபித்தோழரின் ஆலோசனைப் பிரகாரம் நீண்ட அகழ்கள் தேண்டி குறைஷியப் படை முன்னேறாதவாறு செய்தனர். அகழ்களைத் தாண்ட எத்தனிக்கும் குறைஷியக் குதிரைப் படையினரை முஸ்லீம் வில் வித்தை வீரர்கள் தங்கள் வீரத்துக்கு விருந்தாக்கினர். ஒரு மாத காலம் கடுங்குளிரிலும் வாடைக் காற்றிலும் வதங்கிய குறைஷியப்படை இழிவடைந் தோராய் மக்கா திரும்பினர் போர்காலத்தில் தொழும் ஜம்ஊ கஷ்ர் தொழுகை இந்நேரத்தில்தான் நபிகளாரால் (ஸல்) தொழப்பட்டது. குழப்பம் விளைவிக்கும் யூதர்களுக்குப் பாடம் புகட்டும் விதமாக பனூ குறைஷா, பனீ அல்முஸ்தலிக், முற்றுகைகள் அமைந்தது.

நயவஞ்சகர்களின் சதி:- உஹதுப் போரில் 300 பேர் கொண்ட படையுடன் திரும்பியது, ஜைத் பின் ஹாரிதா (ரலி) மணமுடித்திருந்த ஜைனப் (ரலி) அவர்களை விவாகரத்து செய்த பின் நபிகளார் (ஸல்) மணமுடித்தததைக் கொச்சைப் படுத்தியதும், அன்ஸாரிகள் முஹாஜிர்கள் மத்தியில் சண்டை மூட்டிவிடும் பணியிலும் ஈடுபட்டது, அண்ணலாரின் ஆருயிர் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களின் மேல் அபாண்டமான அவதூறு சுமத்தியதும், யூதர்களிடமும் குறைஷியர்களிடமும் கூடிக் குலாவி முஸ்லீம்களைக் கருவறுப்பதிலும் அப்துல்லாஹ் பின் உபை என்ற நயவஞ்சகனைச் சார்ந்தோர் சிலர் இருந்தனர். இஸ்லாத்தின் வளர்ச்சியினைத் ஜீரணிக்கவியலாத இக்கூட்டம் மஸ்ஜித் ஒன்றை நிறுவி அதில் ஒன்று கூடி முஸ்லீம்களைக் கருவறுக்கும் திட்டத்தை அலசி ஆராய முனைந்தது, இத்திட்டமும் தவிடு பொடியானது. ஆக நயவஞ்சகர்களின் நாசகாரத் திட்டங்கள் செயல் வடிவம் பெறும் போதெல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லீம்களுக்கு இவர்களை அடையாளம் காட்டத் தவறவில்லை.

ஹுதைபிய்யா உடன் படிக்கை:- ஹிஜ்ரி 6ல் நபி (ஸல்) தம் தோழர்கள் 1500 பேருடன் உம்ராச் செய்யும் நோக்குடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கிப் புறப்பட்டனர். மக்காவையடுத்துள்ள ஹுதைபிய்யா என்ற இடத்தில் இளைப்பாறிய முஸ்லீம்களை உம்ராச் செய்யவிடாது தடுக்கும் முனைப்பில் குறைஷியர்கள் திட்டம் தீட்டினர். உம்ராச் செய்வதில் தடையேதும் ஏற்பட்டால் போரிடுவது என்ற முடிவில் முஸ்லீம்கள் இருந்தனர். இந்நிலையில் முஸ்லீம்களுக்கும் குறைஷியக் குழுவுக்கும் ஹுதைபிய்யாவில் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. அதன் சரத்துக்களாவன ( இப் பொழுது முஸ்லீம்கள் உம்ராச் செய்யமுடியாது. மதீனா திரும்பிவிட வேண்டும் ( வரும் ஆண்டில் உம்ரா செய்ய வரலாம் 3 நாட்கள் மேல் மக்காவில் தங்கக்கூடாது ( உம்ராச் செய்ய வரும் போது பாதுகாப்பு ஆயுதங்களை உறையிலிட்டு உணவு உடைப் பொட்டலங்களுடன் கட்டியிருக்க வேண்டும் 10 வருடங்களுக்கு இருதரப்பினரும் போரிக் கூடாது ( மக்காவாசிகள் எவரேனும் மதீனா வந்தால் முஸ்லீம்கள் திருப்பியனுப்பி விட வேண்டும். மதீனா வாசிகள் மக்கா வந்தால் குறைஷியர்கள் திருப்பியனுப்ப வேண்டியதில்லை போன்ற சரத்துக்கள் உடன்படிக்கையில் இருந்தன. சுஹைல் பின் அம்ர் என்ற குறைஷ் தரப்பு பிரதிநிதி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம் என்று எழுதியதை ஆட்சேபித்து அன்று நடப்பில் இருந்த பி இஸ்மிக்க அல்லாஹும்ம என்றும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் என்பதை ஆட்சேபித்து அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்றும் எழுதக் கோரியதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்து இவ்வுடன் படிக்கையில் காட்டிய சகிப்புத்தன்மை இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு அடிக்கல்லாய் அமைந்தது. ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் எந்தப் பிரச்சனையும் போர் வடிவில் சிலகாலம் தலைதூக்கவில்லை.

பிறநாட்டவர்களிடம் அண்ணலாரின் அழைப்புப்பணி:- ஏகத்துவ அழைப்பைத் தம் தூதுவர்கள் மூலமாக அண்டை நாடுகளில் உள்ள அரசர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தூதுச்செய்தியாக அனுப்பியிருந்தார்கள். அபீஸீனிய மன்னர் நஜ்ஜாஸி, எகிப்திய ஆளுநர் ஜுரைஜ் பின் மத்தா என்ற முகாவ்காஸ், பாரசீகப் பேரரசின் சக்கரவர்த்தி கிஸ்ரா, ரோமப் பேரரசின் மன்னர் சீஸர் பஹ்ரைனின் ஆளுநர் சாவா, யமாமாவின் ஆளுநர் ஹவ்தாபின் அலி, டமாஸ்கஸ், ஓமன் நாட்டு மன்னர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் அபீஸீனியா மன்னர் இஸ்லாத்தை தழுவினார். எகிப்திய மன்னர் நபிகளாரைக் (ஸல்) கண்ணியப்படுத்த முயன்றார். பாரசீகச் சக்கரவர்த்தி பெருமை தலைக்கேறி நபிகளைக் (ஸல்) கைது செய்ய முயன்றார். ரோமானியப் பேரரசின் ஆளுகைக் குட்பட்ட சிரியாவின் மன்னர் ஹெர்குலில்லா அந்நாளின் இணைவைப்பாளர் அபூஸுப்யானின் பதில்களால் ஈர்க்கப்பட்டு நபிகளார் (ஸல்) போதிக்கும் ஏகத்துவம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறியதுடன் முஸ்லீம் தூதுவர்களிடம் நிறைய வெகுமதிகளை வழங்கினார்.

கைபர் போர்:- ஹுதைபிய்யா உடன் படிக்கைக்குப் பிறகு குறைஷிய, யூத, நஜ்த் கோத்திரத்தாரின் மத்தியில் சுமுக உறவில்லாமல் இருந்தது. இத்தருணத்தைப் பயன்படுத்தி 1400 படை வீரர்களுடன் யூதர்களின் கோத்திரமாகிய கைபர் என்ற இடத்தை நோக்கி நபிகளார் (ஸல்) முன்னேறினார்கள். கைபரில் 5 கோட்டைகள் அடங்கிய ஒரு பகுதியும் 3 கோட்டைகள் அடங்கிய மற்றெரு பகுதியும் இருந்தன. முதல் பிரிவின் 5 கோட்டைகளைக் காத்துக் கொள்ள யூதர்கள் போரிட்டனர். ஆனால் முஸ்லீம்களின் அசுரவேகத்தாக்குதலை சமாளிக்கவியலாமல் யூதர்கள் புறமுதுகிட்டனர். எஞ்சிய 3 கோட்டையில் உள்ள யூதர்கள் போரின்றி சமாதான உடன் படிக்கைக்கு முன்வந்தனர். தங்கம் வெள்ளி போன்ற ஆபரணங்களை அப்படியே விட்டு விட்டு கைபரை விட்டு வெளியேறுவது தான் உடன்படிக்கையின் சரத்து. இவ்வாறு முஸ்லீம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. கைபரின் சுற்றுப்புறங்களும் கைபரைப் போல் முஸ்லீம்களின் கைவசமாகியது. அங்குள்ள விளைச்சலில் பாதியை இஸ்லாமிய அரசுக்கு வழங்கவேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் யூதர்கள் அங்கு தங்க அனுமதிக்கப் பட்டனர். இதைத் தொடர்ந்து தாத்துரிகா போர் முஸ்லீம்களுக்கு வெற்றியை அளித்தது.

உம்ரா:- ஹிஜ்ரி 7ன் இறுதியில் நபிகளார் (ஸல்) ஹுதைபிய்யா உடன்படிக்கை கலந்து கொண்டோரை ஏறத்தாழ 2000 பேருடன் சென்று உம்ரா நிறைவேற்றி வந்தனர். பலிப் பிராணிகளை அறுத்துப் பலியிட்டு தலைமுடியைச் சிரைத்துக் கொண்டனர்.

முஅத்தா போர்:- ஏகத்துவ அழைப்புத்தூதை எடுத்துச் சென்ற நபித்தோழர் அல்ஹாரித் பின் அல் அஜ்தி (ரலி)யை ரோமானியப் பேரரசின் ஆளுகைக்குட்பட்ட பல்காவின் ஆளுநர் கொன்றதால் ஜைத்பின் ஹாரிதா (ரலி) தலைமையிலான 3000 பேர்கொண்ட முஸ்லீம்படை ஏறத்தாழ 2 இலட்சம் பேர் கொண்ட பைஸாந்தியப்படையை எதிர் கொண்டது, முஅத்தா என்ற இடத்தில் நிகழ்ந்த இப்போரில் ஜைதுபின் ஹாரிதா (ரலி), ஜாபிர் பின் அபூதாலிப் (ரலி) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் தலைமையிலான முஸ்லீம் வீரர்கள் திரத்துடன் போரிட்டு ஷஹீதாயினர். இப்போரில் முஸ்லீம்கள் தோற்கடிக்கப்பட்டாலும் முஸ்லீம் வீரர்களின் போர்த்திறனையைக் கண்ட பைஸாந்தியப் படைககள் பயந்து பீதிக்குள்ளாயின.

மக்கா வெற்றி:- ஹுதைபிய்யா உடன் படிக்கைப் பிரகாரம் முஸ்லீம்களுடன் உறவு கொண்டிருந்த ஒரு கோத்திரத்தாரை குறைஷியர்கள் தாக்கியதால் உடன் படிக்கையை மீறியவராயினர். இதன் எதிர்த்து முஸ்லீம்களின் படை ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் நபி (ஸல்) அவர்கள் தலைமையில் ஹிஜ்ரி 8ல் ரமலான் 10ம் தேதி மக்கா நோக்கிப் புறப்பட்டனர். குறைஷியர்கள் எதிர்ப்புகள் முஸ்லீம்களின் படையினால் துச்சமாக மதிக்கப்பட்டது. எளிதாக மக்காவினுள் நுழைந்த நபிகளார் (ஸல்) கஃபாவிலிருந்து 360 விக்ரகங்களை அப்புறப்படுத்தக் கோரினர். அதன் பின்னர் அதனுள் பிரவேசித்த நபி (ஸல்) அவர்கள் மக்களிடம், ''அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை, அவனுக்கு இணைதுணை இல்லை, அவன் அடியானுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டான், இணைவைப்பாளர்களுக்கு தோல்வியை வழங்கினான்'' என்று கூறி கீழ்கண்ட அருள் மறையின் வசனத்தை ஒதினார்கள்.

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (49:13)

ஹுனைன் யுத்தம்:- மக்காவைச் சுற்றியுள்ள சில பலம் பொருந்திய கோத்திரத்தார் முஸ்லீம்களுக்கெதிராய் ஹுனைனில் ஒன்று திரண்டிருந்தனர். இவர்களை முஸ்லீம் படைகள் அம்பு வீச்சுக்கு ஆளானாலும் இறுதியில் முஸ்லீம் படைகள் வெற்றி பெற்றன. தப்பியோடிய படையினர் சிலர் தாயிஃபில் தஞ்சம் புகுந்தனர். தாயிஃப் மீது எடுத்த படையெடுப்பும் முற்றுகையும் முஸ்லீம்களுக்கு வெற்றியளித்தன.

தபூக் யுத்தம்:- முஅத்தாப் போரில் முஸ்லீம்களுடன் போரிட்ட பைஸாந்தியப் படை மீண்டும் மதீனாவைத் தாக்க ஆயத்தமாய் இருந்ததை அறிந்து அண்ணல் நபி (ஸல்) அவர்களை தமது எல்லையில் சென்று முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்துவதைக் கருதி ஏறத்தாழ 30,000 பேர் படையுடன் புறப்பட்டனர். மன உறுதிமிக்க முஸ்லீம் படையினரின் வருகையைக் கண்ட பைஸாந்தியப் படை பீதிக்குள்ளாகி போரிடும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டது. ஆக தபூக் யுத்தம்மும் முஸ்லீம்கள் வெற்றியைச் சுவைக்க உதவியது. இப்போருக்குப் பின் பல நாடுகளிலிருந்தும் வந்த தூதுக் குழுக்கள் அண்ணலாரைக் கண்டு அவர்களின் ஆலோசனைகள் பெற்றன. சிலர் ஏகத்துவத்தை ஏற்றனர். சிலர் உடன் படிக்கைகள் செய்து கொண்டனர். இஸ்லாம் உலகின் பலபாகங்களிலும் பரவ ஆரம்பித்தது.

இறுதி ஹஜ்:- ஹிஜ்ரி 10ல் துல்காயிதாவின் இறுதி நாட்களில் நபி (ஸல்) அவர்கள் தலைமையில் ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் ஹஜ் யாத்திரையில் கலந்து கொண்டனர். ஹஜ் பேருரையில் நபி (ஸல்) அவர்கள் அறியாமைக் கால மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கும் முகமாய், கொலைக்குப் பழி தீர்த்தல், வட்டி வாங்குதல் சம்மந்தமான தம் குடும்பத்தினரின் பங்கிலிருந்தும் தடைசெய்தார்கள். இங்கு நபிகளார் (ஸல்) ஆற்றிய பேருரைகளை ஹஜ்ஜத்துல் விதாப் பேருரைகள் எனக்கூறுவர்.

இறுதியும் நல்லடக்கமும்:- ஹிஜ்ரி 11ல் நோய்வாய்ப்பட்டிருந்த நபிகளார் (ஸல்) தலையில் கட்டுக் கட்டியவர்களாக இருவர் தொழுகைக்கு கைத்தாங்கலாய் அழைத்துச் செல்ல கால்களை நிலத்தில் உரசியவாறு பள்ளிக்குச் சென்று அமர்ந்து தொழுகையை நிறைவேற்றினார்கள். தமது 63 வது வயதில் நபி (ஸல்) அவர்கள் ரபீஉல்அவ்வல் மாதத்தில் 12ம் தேதி திங்கட் கிழமை மதிய தொழுகைக்கு முன்பு இயற்கை எய்தினார்கள் அவர்கள் உடல் எங்கு இறந்தார்களோ அவ்விடத்திலேயே (ஆயிஷாவின் இல்லத்தில்) அடக்கம் செய்யப்பட்டது.

நபிகளின் மனைவியர்:- கதீஜா (ரலி), ஸவ்தா (ரலி), ஆயிஷா (ரலி), ஹப்ஸா (ரலி), ஜைனப் பின்த குஸைமா (ரலி), உம்மு ஹபீபா (ரலி), ஸஃபிய்யா பின்த் ஹுயய் (ரலி), மைமுனா பின்த் அல் ஹாரித் (ரலி) (மரியமுத்துல் கிப்திய்யா (ரலி), இஹானா பின்த் ஜைத் (ரலி)

No comments:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }